பேராசிரியர் டாக்டர்.மி.நோயல்
ஒரு நாள், ‘கல்வி வேலைவாய்ப்பு’ பற்றிய பள்ளி மாணவர்களுக்கான ஓர் அறிமுக நிகழ்ச்சிக்குப் பார்வையாளனாகச் சென்றிருந்தேன். வருங்கால வேலை வாய்ப்புகள் பற்றி அங்கே ஒருவர் காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
இந்த வருடம் +2 முடிப்பவர்கள் மெக்கானிகல் என்ஜினியரிங் பாடத்துக்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும். இவர்கள் பி.இ. முடிக்கும்போது இந்தத் துைறக்குத்தான் அதிகத் தேவை இருக்கும்.
இந்த வருடம் பத்தாம் வகுப்பு முடிப்பவர்கள் அந்தப் படிப்பை எடுக்கவே வேண்டாம். அவர்கள் ஆறு வருடத்தில் படிப்பை முடிக்கும்போது சிவில் என்ஜினியரிங் தான் அதிகமான வேலை வாய்ப்பைத் தரும்.
இப்படி ஒரு மணிநேரம் வேலைவாய்ப்புகள் பற்றிய எக்கச்சக்கமான கணிப்புகளை மிக நெடிய காலத்திற்கு அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார். அவர் தனது கணிப்பெல்லாம் அறிவியல் பூர்வமானது என்று வேறு உறுதியாகச் சொன்னார்.
ஒவ்வொரு வருடமும் அவர் குறிப்பிட்ட ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் ஏராளமாக உருவானதா? தெரியவில்லை. ஆனால் ஒன்று. அவருடைய கணிப்புக்கும் சோதிடக்காரர்களின் கணிப்புக்கும் வேறுபாடு அதிகமில்லை என்று உறுதியாகச் சொல்லி விடலாம்.
2020 தொடக்கத்தில் இந்த ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்று ஏகப்பட்ட சோதிடங்கள் பற்றிய ஒரு அலைபேசிப் பதிவை நாமெல்லாம் பார்த்திருக்கலாம். ஆகா! ஓகோ! அப்படி! இப்படி என்ற கதைகள். ஒரு குட்டி கொரோனா வைரஸ் நம் எல்லாருடைய வாழ்க்கையையும் எந்த அளவு மாற்றிப் புரட்டிப்போட்டுவிட்டது என்பதையும் நாம் அனுபவப் பூர்வமாகவே பார்த்து வருகிறோம்.
அப்படியானால் வருங்காலத்தைக் கணிக்கவே முடியாதா? முடியும், ஆனால் ஓரளவுக்குத்தான் முடியும். தோராயமாகத்தான் கணிக்க முடியும். சில நாட்கள், சில வாரங்கள், சில மாதங்கள் என்று காலம் நீள நீள நம்முடைய கணிப்புகளின் துல்லியமும் குறையும். எல்லாவற்றுக்கும் மேலாக போர், கொள்ளை நோய், இழப்புகளும் நம் கணிப்புகளை முற்றிலும் தவறானவையாக மாற்றிவிடக்கூடும்.
அப்படியானால் நாம் நம் வருங்காலத்தைப் பற்றித் திட்டமிடவே முடியாதா? நடப்பது நடக்கட்டும் என்று கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிட வேண்டியதுதானா?
இல்லை! இல்லை! நிச்சயம் இல்லை. நாம் நிச்சயம் திட்டமிட வேண்டும். நம்பிக்கையோடு அதைச் செயல்படுத்த முயல வேண்டும். உைழக்க வேண்டும். நல்லவனாகவும் வல்லவனாகவும் வளர வேண்டும்.
ஆனால் நாம் நினைப்பதெல்லாம் எப்போதும் அப்படியே நடந்துகொண்டே இருக்கும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கக் கூடாது. எதிர்ப்புகள், தடைகள், தோல்விகள் பலவற்றையும் நாம் சந்திக்க நேரலாம். சில நேரங்களில் நாம் வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் உருவாகலாம்.
தடைகளும், எதிர்ப்புகளும், தோல்விகளும், மாற்றங்களும் எல்லாருடைய வாழ்விலும் மீண்டும் மீண்டும் வந்துகொண்டேதான் இருக்கும். அவற்றால் துவண்டு போகிறவர்கள் ஆங்காங்கே தோற்றுத் தேங்கிப் போகிறார்கள். மீண்டும் எழுந்து தூசியைத்தட்டிவிட்டுக்கொண்டு போராடுபவர்கள் வெற்றிபெறுகிறார்கள்.
நமது கல்வி வாய்ப்புகள், வேலை வாய்ப்புகளுக்கான போராட்டமும் இப்படிப்பட்டதுதான்.
இந்தப் பாடத்தைத்தான் படிப்பேன். இந்தக் கல்லூரியில்தான் படிக்க வேண்டும். இந்த வேலைக்குப் போனால் மட்டும்தான் கைநிறையச் சம்பாதிக்க முடியும் என்றெல்லாம் ஆசைப்படலாம். ஆசையை நிறைவேற்றத் திட்டமிடலாம், நன்றாக உழைக்கவும் செய்யலாம்.
ஆனால் நினைத்த பாடம் கிடைக்காமல் போகலாம். நினைத்த கல்லூரியில் இடமில்லாமல் போகலாம். நன்றாகப் படித்த பிறகும் நினைத்த வேலை கைகூடாமல் போகலாம். வேறுசில சிறிய பெரிய தடைகளும் வரலாம்.
உடனே நாம் துவண்டு போகிறோம். தற்கொலையை நோக்கிக்கூட சர்வ சாதாரணமாக நகர்கிறோம். இன்றைய இளைய தலைமுறை மனவலிமை குறைந்த, போராடத்தயங்குகிற பலரையும் வளர்த்துக் கொண்டிருக்கிறது. இது வேதனைக்கு உரியது. ஒரு கதவு மூடிக்கொண்டால் பல கதவுகள் திறக்கும். அதுதான் வாழ்க்கை. ஒரு பாதை தடைப்பட்டுப்போனால் வேறு பல மாற்றுப் பாதைகள் இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒரு பாடம் கிடைக்காவிட்டால் வேலை வாய்ப்பைத் தரும் வேறு எத்தனையோ பாடங்கள்.
ஒரு கல்லூரியில் படிக்க முடியாவிட்டால், வேறு எத்தனையோ நல்ல கல்லூரிகள்.
ஒரு தேர்வில், ஒரு போட்டியில் வெற்றி பெற முடியாவிட்டால் உடனே சோர்ந்து போய்விடத் தேவையில்லை. மனம் சோர்ந்து போகாமல் ஏன் தோற்றுப்போனாம் என்பதை ஆராய்ந்து, நம் குறைகளை உணர்ந்து, வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அந்தக் குறைகளைப் போக்கிக்கொண்டு அடுத்த வாய்ப்பைச் சந்திக்க வேண்டியதுதான்.
ஒரே ஒரு வேலையைப் பற்றி மட்டும் கனவு கண்டு, அதே வேலைக்காக முயற்சி செய்து அந்த வேலை கிடைக்காமல் போய்விட்டால் அத்துடன் வாழ்க்கை முடிந்து போய்விடப் போகிறதா என்ன? அப்படி நினைப்பதே கோழைத்தனம் இல்லையா? ஏன் தோற்றோம்? அதே வேலையை மீண்டும் பெற முடியுமா? அதே திறமைகளோடு வேறு சில திறமைகளையும் வளர்த்துக்கொண்டு அதைவிடச் சிறந்த வாய்ப்புகளைத் தேடிப் பயணிக்க முடியுமா? ஏன் முடியாது?
நாம் நினைத்த வேலையே கிடைக்கிறது. அதே வேலைத் திறமைகளை வைத்துக்கொண்டு அதே வேலையில் காலம் தள்ளிவிட முடியுமா? காலம் மாறிவருகிறது. மிகவும் வேகமாக மாறிவருகிறது. அரசுப் பணிகளே இன்னும் எவ்வளவு நாள் நிரந்தரம் என்று தெரியவில்லை. இனி வரும் காலங்களில் அரசுப் பணிகளைவிடத் தனியார் துறைகளில்தான் வாய்ப்புகள் அதிகம் வரும். காலப் போக்கில் பல அரசு நிறுவனங்களே தனியார் கைகளுக்குப் போய்விடும் வாய்ப்புகள் அதிகம்.
தனியார் நிறுவனங்களில் திறமைக்கேற்ற, உழைப்புக்கேற்ற ஊதியம் என்கிற முறைதான் இருக்கும். இங்கே இப்போதே வேலைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நம்முடைய தொழிலாளர் நலச் சட்டங்கள் வரும் காலங்களில் முதலாளிக்குச் சாதகமாக மாறும் நாட்கள் தொலைவில் இல்லை.
எனவே, நமக்கு எந்த வேலை கிடைத்தாலும் அந்தவேலை என்றும் சோறுபோடும் என்று மிதப்பான வாழ்க்கையைத் தொடங்கிவிடக்கூடாது. அந்தத் துறையில் நாம் நன்றாக உழைக்க வேண்டும், அனுபவத் திறமைகளைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும். அதைவிடச் சிறந்த வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.
தேங்கி நிற்கும் பொருளாதாரச் சூழலில் போட்டியும் பொறாமையும் குறைவாக இருக்கும். வேலை வாய்ப்புகளும் ஓரளவு பாதுகாப்பாக இருக்கும். ஆனால் வளரும் தொழில்நுட்பங்களும், பண பலமும் இந்தச் சூழலைத் தலைகீழாக மாற்றிப் போட்டுவிடும். அத்தகையப் போட்டிச் சூழலை நோக்கி உலகமே நகர்ந்து கொண்டிருக்கிறது. நம்நாடும் இதற்கு விதிவிலக்கில்லை. இந்தத் தலைகீழ் மாற்றங்களை இந்த ஆண்டு (2020) நாம் கண்கூடாகவே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஒரு காலத்தில் மென்பொருள் துறைதான் வாய்ப்புகளின் உச்சம் என்றோம். இன்று படித்துவிட்டு வேலையில்லாமல் தவிக்கும் பலரும் இந்தத் துறையை நம்பிப் படித்தவர்கள்தான்.
எரிசக்தி வளம் மிகுந்த அரபு நாடுகளில் வேலை வாய்ப்பைப் பெறுவதுதான் நம்மில் பலருக்கும் கனவாக இருந்தது. அந்தக் கனவுக்கோட்டை இன்று மிகமிக வேகமாகச் சரிந்து கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கிருந்து திரும்பி வந்துகொண்டிருக்கிறார்கள், இன்னும் வருவார்கள்.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வேலை கிடைப்பதைப் பெரும் கனவாக நம் இந்தியர்்்கள் வளர்த்துக்கொண்டோம். அங்கேயே எல்லாரும் இன்று கடன் தொல்லையில் முழ்கிக்கொண்டிருக்கிறார்கள். கொரோனாத் தொற்று நிலையை இன்னும் மோசமாக்கிக்கொண்டிருக்கிறது. பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அங்கிருந்து பலர் இங்கே திரும்பி வரக்காத்திருக்கிறார்கள்.
வண்டி ஒரு நாள் ஓடத்தில் ஏறியது.
இன்று ஓடம் வண்டியில் ஏறித் திரும்புகிறது.
இங்கே நம்நாட்டில் என்ன நடக்கிறது என்றே புாியவில்லை. கூலித்தொழிலாளர்கூட லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் வேலையை இழந்துகொண்டிருக்கிறார்கள்.
இது நிச்சயம் ஒரு தற்காலிக மாற்றம்தான். செயற்கையும் இயற்கையும் சேர்ந்து உருவாக்கிய மாற்றம்தான். பல தலைமுறைகளும் சந்தித்து வெற்றிபெற்ற மாற்றம்தான். நாமும் உறுதியாகச் சந்தித்து வெற்றிகொள்ளப் போகிற தற்காலிகமாற்றம்தான்.
– தொடரும்…