வெற்றி நமதே – 3

திரு.M.G.இராஜமாணிக்கம் IAS
கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் – உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை

னவை விதைத்தால் வெற்றி நிச்சயம்னு எழுதியதை படிச்சுட்டு, என்னுடன் IAS  தேர்வுக்கு  prepare பண்ண என்னுடைய நண்பர் ஒருவர், போன் பண்ணி ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தார்.

‘‘‘என்னது, கனவை விதைத்தால் வெற்றின்னா நான் விதைத்த விதைப்புக்கு, ஆலமரமே வந்திருக்கனும், ஆனால் ஒரு புல் கூட முளைக்காம போயிருச்சேன்னு’’ விரக்தியோட பேச ஆரம்பிச்சார். அவரது விரக்தியில் ஒரு நியாயம் இருந்தது.

ஏன்னா, IAS/IPS தேர்வு எழுதி ஏழு முறை தோற்றவர். இதுல கவலை என்னன்னா, ஒருமுறை கூட Preliminary Exam (முதல் நிலைத் தேர்வு) கூட அவரால clear பண்ண முடியல.

இத ஏன் சொல்ல வந்தேன்னா… சென்ற தொடர்ல பாத்த மாதிரி, கனவை விதைப்பது விதை விதைக்கிறது மாதிரி தான். விதைத்த கனவு முளைத்து வர, விடாமுயற்சி என்ற தண்ணீர் எப்போதும் தேவை.

விடாமுயற்சி எடுத்தும், வெற்றி பெறமுடியாத நிறையப் பேர நம்மளே பாத்திருப்போம்.

NEET Exam படிக்கிற எத்தனையோ மாணவர்களுக்கு, எவ்வளவு முயற்சி செய்தும், MBBS  கிடைக்காமல் போகலாம். போட்டித் தேர்வுக்கு எத்தனை முறை முயன்றும் வெற்றி பெற முடியாத நண்பர்களைப் பார்த்திருப்போம்.

வெற்றி பெறமுடியாமல் போனதற்கு, அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் அவர்களும் விடாமல் முயற்சி செய்து பார்த்தவர்கள் தான். ஆனால் சமூக, பொருளாதார சூழ்நிலையோ அல்லது ஏதாவது சிக்கல்களோ அப்பேற்பட்டவர்களின் முயற்சி முற்றுப் பெற முடியாமலேயே போகிறது.

அப்போ இவங்கெல்லாம் விடாமுயற்சி செய்யலையா. செஞ்சும் என்ன பிரயோஜனம்னு கேட்டா…. விடாமுயற்சி செஞ்சு வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றி பெற முடியாமல் போனவர்களுக்கும் உள்ள ஒரு difference சொல்றேன்.

விடாமுயற்சின்னா… நம்ம நினைக்கிற வரை விடாம முயற்சி செய்றது இல்ல. நம்ம நினைக்கிறது கிடைக்கிற வரை விடாம முயற்சி செய்றது தான்.

ஆனால் நம்மில் பலர் முயற்சி செய்வோம், மீண்டும் முயற்சி செய்வோம். ஆனால், மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய அவர்களுடைய சமூக, பொருளாதார சிக்கல்கள் தடுக்க, அப்பேற்பட்டவர்களின் முயற்சி முற்றுப் பெறாமலேயே தோல்வியை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

“எப்போது நாம் தோல்வியை ஏற்றுக்கொள்ள மனதைத் தயார் படுத்துகிறோமோ, அப்போது நமது முயற்சி முற்றுப் பெறத் தொடங்குகிறது.”

தோல்வியை ஏற்றுக் கொள்ள மனம் தயாராகும் போது, நமது முயற்சி முற்றுப் பெறுகிறது. நமது வெற்றி ஒத்தி வைக்கப்படுகிறது.

விடா முயற்சிங்கிறது நமக்கு தெரியாத விஷயம் ஒண்ணும் இல்ல. சின்ன வயசுல நம்மெல்லாம் சைக்கிள் ஓட்டப் பழகுறதுக்கு, விழுந்து விழுந்து எழுந்திருப்போமே, அதைவிட ஒரு பெரிய உதாரணம் விடாமுயற்சிக்கு சொல்ல முடியாது.

வாழ்க்கையும் ஒரு சைக்கிள் ஓட்டம் மாதிரி தான். கீழே விழும் போதெல்லாம் அத தட்டி விட்டுட்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்தவர்கள் மட்டுமே வாழ்க்கையிலும் சரி, சைக்கிள் ஓட்டத்திலும் சரி வெற்றி பெறுகிறார்கள், விழுந்துட்டோமே என நினைத்து மீண்டும் எழுந்து ஓடாதவர்களும், விழுந்திடுவோமேன்னு பயந்திட்டு சைக்கிளே ஓட்டாதவர்களும் வாழ்க்கையில் சைக்கிளே ஓட்ட முடியாத மாதிரி தோற்றுவிட்டோம் என்று முயற்சியைக் கைவிடுவதும், தோற்றுவிடுவோமே என்று முயற்சியே எடுக்காதவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெறுவது குறித்து சிந்திக்க முடியுமா?

உலகத்தில், வெற்றியாளர்களின் சரித்திரத்தைப் புரட்டி நோக்கினால், முயற்சி யில்லாமல் வெற்றி பெற்றதாகச் சரித்திரமே இருக்காது. உலகமே முட்டாள்னு முத்திரை குத்தினாலும், தனது விடா முயற்சியால் மட்டுமே வெற்றி பெற்று சரித்திரம் படைத்த ஒரு விஞ்ஞானியின் கதை தான் இது.

நாலு வயசு வரை பேச்சு வரல. எட்டு வயசுல எதையும் கத்துக்க லாயிக்கில்லாத ‘மண்டு’ன்னு School ல இருந்து துரத்திவிட்டாங்க. Dyslexia  என்ற கற்றல் குறைபாடுடைய ஒரு சிறுவன், தானே கற்பித்துக்கொண்டு 1093 காப்புரிமையைப் (Patent) பெற்றான் என்றால், போங்க சார் ரீல் விடாதீங்க நீங்கன்னு சொல்றது கேக்குது…

பொய்யில்லை நண்பர்களே! 20 – ஆம் நூற்றாண்டின் தலைச்சிறந்த விஞ்ஞானியாகப் போற்றப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் தான் அது!.

விடாமுயற்சிக்கு இவரவிட்டா இன்னொரு ஆளு இல்லன்ற அளவுக்கு, வேதாளம் முருங்கை மரத்தை புடிச்ச மாதிரி, எடுத்த காரியத்தை முடிக்காம ஓயாத ஒரு அசாத்தியமான மனுஷன்.

அவரது விடா முயற்சிக்கு ஒரு உதாரணம் மட்டும் சொல்றேன்.

இன்னைக்கு உலகமே கலர் கலர் light-ல இரவா பகலான்னு வித்தியாசம் தெரியாத அளவுக்கு, ஒளிர்ந்துகிட்டு இருக்கிறதுக்கு அடித்தளம் போட்டது எடிசனின் கண்டு பிடிப்பான மின்னிழை பல்புதான்.

1870-களில் எடிசன் தனது பல்பு ஆராய்ச்சியைத் தீவிரமாக மேற்கொண்டிருந்த சமயம். அந்த சமயத்தில் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாயிருந்தார் எடிசன். அதனால, உலகமே இவர் கண்டுபிடிக்க போற பல்பை உற்று நோக்கிட்டு இருந்தது. ஆனால், பல்பு எடிசனுக்கு பல்பு’ கொடுத்துட்டே இருந்தது.

1802-ஆம் ஆண்டே ஹம்பரி டேவி என்பவர் மின்சார பல்பை கண்டறிந்தாலும், அது அதிக நேரம் எரியும் தன்மை இல்லாததால் பயன்பாட்டுக்கு வரல, அதனால தான் நம்ம ஆளு நீண்ட நேரம் மின்விளக்கு எரிய எந்த மின்னிழை (Filament) suit ஆகும்ன்ற ஆராய்ச்சியில ஈடுபட்டிருந்தார்.

சுமாரா எத்தனை Material ஐ test பண்ணிருப்பார்னு நினைக்குறீங்க, ஒன்று, பத்து, நூறு, இருநூறு….? அவரும் ஒவ்வொரு Material‘்ம் test பண்றாரு. எல்லாத்துலயும் தோல்வி. Filament எரிஞ்சு போகுதே ஒழிய, Bulb எரிய மாட்டேங்குது. 300, 400, 500, 600-ன்னு மனந்தளராம test  பண்ணிகிட்டே இருக்காரு. அப்படியும் result கிடைச்சபாடு இல்ல. 700, 800, 900… கடைசில அவரது Material testing 1000-த்தை தாண்டிருச்சு. உற்று நோக்கிக் கொண்டிருந்த உலகம் கேலி பேச ஆரம்பிச்சிடுச்சு. இனி பல்பு வராதப்பா… வெறும் காத்து தான் வரும்னு…

உலகத்தோட விமர்சனத்தை எல்லாம் மனுஷன் போடா ‘Tomato’-ன்னு தூக்கி எரிஞ்சுட்டு, தன்னுடைய முயற்சியை கைவிடாம ஆராய்ச்சியைத் தொடர்ந்தாரு. அவருடைய பொறுமையும், முயற்சியும் அவர கைவிடல. கடைசில 1879 ல் Carbon Filament Material-லில் நீண்ட நேரம் எரியக்கூடிய பல்பைக் கண்டறிந்து வெற்றி பெற்றார் எடிசன்.

கண்டுபிடிச்சதுக்கு அப்புறம் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், ஒரு அம்மா ஏளனமா கேட்குது, ‘‘ஆயிரம் தடவை தோற்றது எப்படி இருந்தது, உங்களுக்கு போரடிக்கலயான்னு?’’

பொறுமையின் சிகரமான எடிசன் பதில் சொல்றார். நான் 1000 தடவை தோற்கவில்லை. எப்படி மின்சார பல்பு கண்டுபிடிக்க முடியாதுன்ற 1000 வழிகளை கண்டு பிடித்திருக்கிறேன் என்று. அப்புறம், எனக்கு போரெல்லாம் அடிக்கல. என்ன நடந்தாலும், எதை இழந்தாலும் சோர்ந்து போக மாட்டேன். ஏன்னா நான் 1000 வெற்றிகளைப் பார்த்தவனல்ல, 1000 தோல்விகளை வென்றவன் என்று.

மலைடா… அண்ணாமலை… என்ற style-ல dialogue அடிச்சாராம்.

அதுனால தான் நண்பர்களே! வாழ்க்கைல தோல்வியுற்றதாகக் கருதும் நிறையப் பேருக்குத் தெரியுறதில்ல, அவர்கள் வெற்றிக்கு எத்தனை அருகாமையில் வந்து சென்றார்கள் என்று.

நம்முடைய மிகப்பெரிய பலவீனமே பாதில விட்றதுதான். வெற்றி பெற உறுதியான ஒரு வழி, தோல்வியைச் சந்திக்கும் போதெல்லாம் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்வது தான்.

எதையும் கத்துக்க லாயிக்கில்லாத முட்டாள் என்று முத்திரை குத்தப்பட்டவன் இறந்த போது, அமெரிக்காவே இரண்டு நிமிடம் விளக்கை அணைத்து அஞ்சலி செய்தது… எடிசனுக்கு முன் உலகம் இப்படித்தான் இருண்டு கிடந்தது என்று…

உலகை ஒளிரச் செய்த எடிசனின் விடாமுயற்சியை நாம் எல்லாரும் பின்பற்றினால் வெற்றி நமதே!!!. =