வெற்றி நமதே – 2

திரு.M.G.இராஜமாணிக்கம் IAS
கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் – உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை

னவை விதையுங்கள் என்று சென்ற தொடரில் சிந்தித்தோம். அதைப்படித்து விட்டு, நிறைய கேள்விகள், போங்க சார், Messi ஐ-போல ஏதாவது ஒன்னு ரெண்டுபேர் கனவு தான், நனவாகுது. எங்களப் போல, சாதாரணமானவர்களுடைய கனவு, கனவாகியே போயிருது. அதனால, கனவு காண்ற எல்லாரும் ஜெயிச்சிடலாம்னு நினைக்கிறது முட்டாள்தனம்னு, சிலர் நினைக்கலாம்.

கடந்த மாதம் பொங்கலுக்காக, எனது சொந்த கிராமத்திற்குப் போயிருந்தேன். அங்க இருக்கிற குழந்தைகளுக்கெல்லாம் ஒரு போட்டி. எல்லாரும் நீங்க என்னவாகப் போறிங்கன்னு, ஒரு பேப்பர்ல எழுதி வாசிச்சா ஒரு பரிசுன்னு சொன்னோம்.

ஒவ்வொருத்தரும், டாக்டர், டீச்சர், போலீஸ், கலெக்டர் – ன்னு ஏதாவது ஒரு கனவைச் சுமந்து கொண்டு இருப்பதை அறிய முடிந்தது.

நம்மளையும் சின்னப்பிள்ளையா இருக்கும் போது, கேட்டா இதெல்லாம் சொல்லியிருப்போம்.

ஆனால், நம்மில் பலரும் நாம் கண்ட கனவிற்குச் சம்பந்தமே இல்லாமல், பல வேலைகளையும் செய்து வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டு இருப்போம்.

அப்படின்னா! கனவு காண்ற எல்லாரும், தமது லட்சியத்தில் வெற்றிபெற முடியாதான்னு கேட்டா, அதுக்குப் பதில்… கண்டிப்பாக முடியும்.

தெளிவாகச் சொல்றேன்… கனவு காண்பதற்கும், கனவை விதைப்பதற்கும், நிறைய வித்தியாசம் இருக்கு.

நம்மில் நிறையப் பேர் அதாகனும், இதாகனும்னு கனவு மட்டும் கண்டிட்டு போயிருறோம். கனவு காண்பது 1st Step தான். அதுக்கு அடுத்த Step தான், நாம் கண்ட கனவை விதைப்பது.

கனவுன்றது, விதையான்னு கேட்டா, ஆமா அது விதை தான். முன்னாடியே சொன்ன மாதிரி, டாக்டர் ஆகனும், கலெக்டர் ஆகனும்னு எழுதுன பிள்ளைகளோட கனவும் விதை மாதிரி தான். ஆனால் விதையை கையிலையோ பையிலையோ வச்சா, மரமாயிடுமா?

அதனால தான் சொன்னேன், கனவை விதைக்க வேண்டும் என்று; கனவை விதைக்கிறதுன்னா என்ன?

நடிகர் கருணாஸ், ஒரு திரைப்படத்தில் “நான் அம்பானி ஆவேன், நான் அம்பானி ஆவேன்னுன்னு” daily எல்லாருடைய தூக்கத்தையும் கெடுத்துக் கூப்பாடு போடுறது போல ஒரு சீன் வரும்…

அதுக்கும், கனவை விதைக்கிறதும் என்ன connection.? அப்படி தனது கனவை மட்டுமே முதலீடாக வைத்துப் பக்கோடா விற்பதில் தொடங்கி, உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்த அம்பானியின் கதையைத் தான் சொல்லப் போகிறேன்.

இன்றைய தலைமுறையினருக்கு, அம்பானி என்றதும் நினைவுக்கு வருவது Jio, Reliance, அப்புறம் மும்பையில் உள்ள சுமார் 15,000 கோடி மதிப்புள்ள, ஆடம்பரப் பங்களா வைத்திருக்கும் முகேஷ் அம்பானியைத் தான்.

ஆனால், முகேஷ் அம்பானி வெறும் பழம் தான்… உலகம் போற்றும் Reliance சாம்ராஜ்யத்தை நனவாக்கிய அந்தக் கனவின் விதை, தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி என்ற திருபாய் அம்பானி தான்.

Reliance நிறுவனத்தின், இன்றைய சந்தை மதிப்பு சுமார் 18 லட்சம் கோடி. நம்மில் பலருக்கு அதுக்கு எத்தனை சைபர் போடனும்னே தெரியாது.

ஆனா, அந்த 18 லட்சம் கோடி வந்தது வெறும் 500 ரூபாயில், 330 ச.அடி அறையும், மூன்று நாற்காலியும் கொண்டு தொடங்கிய Company-ல
இருந்து தான்னு சொன்னா… ஸ்ஸ்ஸ்…. அப்பப்பா… இப்பவே கண்ணக் கட்டுதா…

குஜராத் மாநிலம், ஜுனாகத் மாவட்டத்தில் சோர்வாட் என்னும் குக்கிராமத்தில், ஒரு சாதாரண கிராமப் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர் தான், நம் கதையின் நாயகன் திருபாய் அம்பானி.

‘வாத்தியார் பிள்ளை மக்கு’ என்ற பழமொழி எல்லாருக்கும் பொருந்தலைன்னாலும், நம்மாளுக்கு செம fit.

படிப்பில், பெரிசா நாட்டமில்லாமல் சொந்த ஊர்த் திருவிழாவில், பக்கோடா விற்பதில் தொடங்கியது தான் ஒரு பணக்காரனாக வேண்டும் என்ற கனவு.

எப்படியோ தட்டுத் தடுமாறி, பத்தாவது முடிச்சுட்டு அவரோட அண்ணன் ராம்னிக் பாய் உதவியோடு, ஏமன் நாட்டுக்குப் போய், ஏ.பெஸி & கோ என்ற எண்ணெய் நிறுவனத்தில் Gas Station இல் Attendant வேலை. அப்புறம், பத்தாவது படிச்ச ஆள Company MD ஆகவா ஆக்குவாங்க, என்ற உங்களுடைய mind voice எனக்கு கேட்குது.

நாமெல்லாம் இந்த மாதிரிச் சூழ்நிலையில், வெளிநாடு போனா என்ன செய்வோம்! எப்படியாவது Overtime பாத்து, காசு சேத்து, ஊர்ல வீடுகட்டி, கல்யாணம் காட்சி பண்ணி, Settle ஆயிடலாம்னு நினைப்போம்… ஆனால், நம்ம தலைவர் என்ன நினைச்சார் தெரியுமா? இந்த மாதிரியே ஒரு எண்ணெய் கம்பெனிக்கு முதலாளி ஆயிடனும்னு…

கனவு காணுங்க, அதைப் பெரிசா காணுங்கன்னு நம்ம ஐயா கலாமுக்கு முன்னாடியே, கனவு கண்ட ஆள் தான் நம்ம கதையின் நாயகன்.

ஏமனின் எட்டாண்டு அனுபவமும், எப்படியாவது தொழிலதிபராயிடனும் என்ற கனவையும் சுமந்து கொண்டு, தாய்நாடு திரும்பிய திருபாய் அம்பானி, தனது சொந்தக்காரரான சம்பக்லால் தமானியோட சேர்ந்து “மஜீன்” என்ற நிறுவனத்தைக் கூட்டாகத் தொடங்கி, பாலியஸ்டர் நூல் இறக்குமதியும், மசாலாப் பொருட்கள் ஏற்றுமதியும் செய்யத் தொடங்கினார்.

20 – 20 போல, தொழிலில் அதிரடியா அடிச்சு ஆடனும்னு நினைச்ச அம்பானிக்கு முன்னாடி Test Match ஆடிக் கொண்டிந்த தமானியால், ஈடு கொடுக்க முடியாமல், அப்படியே அப்பீட் ஆக, போனால் போகட்டும் போடான்னு, அம்பானி style இல் தொடங்குன நிறுவனம் தான், Reliance Commercial Corporation அதுவே பின்னர் Reliance Industries Ltd ஆனது.

பாலியஸ்டர் நூலிழையை இறக்குமதி செய்து விற்பதை விடத் துணியாக விற்றால், அதிக லாபம் கிடைக்கும் என்று கருதி, ஒரு நூற்பாலையைத் தொடங்கத் திட்டமிட்டு அதை மும்பையில் தொடங்குவதை விட, குஜராத்தில் தொடங்கினால் செலவு குறையும் என்று, அகமதாபாத் அருகில் உள்ள நரோடா என்ற இடத்தில், ஆலையைத் தொடங்குகிறார். அதில் உருவாக்கப்பட்ட துணியோட Brand தான் “Vimal” – Only Vimal னு
70 – 80 காலக்கட்டத்தில் இந்தியாவை ஆட்டிப் படைத்த Brand தான்.

Brand Success ன்னு, அதோடு ஓய்ந்து விடவில்லை. Polyester ல இருந்து Nylonக்கு ஒரு jump. அவரின் அசுர வளர்ச்சியைக் கண்ட அதே துறையில் இருந்தவர்களுக்கு, வயிற்றில் புளியைக் கரைக்க அவருக்குப் பல வழிகளில் நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். அதனால், வங்கிகள் கடன் கொடுக்க மறுக்க, ஐய்யையோ போச்சே என்று தளர்ந்து விடாமல், ஒரு புதுரூட்டைக் கண்டு பிடிக்கிறார். இதுவரை யாரும் போகாத ரூட். தனது முதலீட்டாளர்களையே பங்குதாரர்களாக்கி, பங்குச் சந்தையில் தனது கம்பெனி share ஐ விற்க, தீபாவளிக்குத் துணி எடுக்கப் போன மாதிரி கூட்டம். Reliance இன் பங்கு எதிர்பார்த்ததை விட, ஏழுமடங்கு விற்க பங்குச் சந்தையின் முடி சூடா மன்னரானார் அம்பானி.

கனவுல வாழ்றவனுக்கும், கனவை வாழவைக்கிறவனுக்கும் உள்ள வித்தியாசம் அது தான்.

Nylon,  Polyester னு இறக்குமதி செய்து தொழில் நடத்திய அவருக்கு, அதைத் தானே உற்பத்தி செய்தால் என்ன என்று ஒரு யோசனை. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் ஒரு By Product தான் அது, அன்று ஏமனில் வேலை பார்த்தபோதே, அதன் நுணுக்கங்களை அறிந்து வைத்திருந்த அம்பானியோட மூளையைத் தட்டுது, அவருடைய எண்ணெய் கம்பெனி முதலாளியின் கனவு.

அப்புறம் என்ன…

தொடங்கு ஒரு Petroleum Refinery ன்னு Gujarat Hazira வில், அவருடைய கனவை நனவாக்கத் தொடங்கினார். இன்று எண்ணெய் சுத்திகரிப்பில், கொடிகட்டிப் பறக்கும்  Reliance நிறுவனம், பின்னர் இன்றளவும் உலகிலேயே மிகப்பெரிய Petroleum Refinery ஐ Jamnagar என்னும் இடத்தில் தொடங்கியது.

“Gas Station attendant -ஆ இருந்த திருபாய் அம்பானி, விதைத்த கனவின் விதை இன்று ஆலமரமாய் வளர்ந்து வேரூன்றியிருக்கிறது.

“உன் கனவுகளை நீ நனவாக்கத் தவறினால், பிறர் கனவுகளை நீ நிறைவேற்ற வேண்டியிருக்கும்” என்ற திருபாய் அம்பானியின் வாக்குகள் எத்துணை வலிமையானது.

தன் கனவை வாழ்ந்த, அந்த மனிதரைப் போல், விதைத்த கனவுகளை முயற்சியால் முளைத்து வரச் செய்தால் “வெற்றி நமதே”!