வாழ்வியல் திறன்கள்

முனைவர் திருக்குறள் பா. தாமோதரன்
நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம்

லகில் வாழ்வதற்குப் பலவழிகளில் வாய்ப்புகளிருக்க. சிலர் தற்கொலை செய்து கொள்வது அண்மைக்காலங்களில் அச்சமூட்டுவதாக உள்ளது.

தற்கொலை செய்துகொள்வதற்குப் பல காரணங்களை முறைப்படுத்தினாலும், தற்கொலை உரிய தீர்வாகுமா? என்பதை வாழ் உலகம் சிந்திக்க வேண்டியது அவசியமாகின்றது. இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனும் தன்னலம் அகற்றி வாழத்தொடங்கும் போது. நமக்குரிய வாழ்நாளே குறைவாக இருப்பதை உணரலாம். ஆனால் தன்மதிப்பும் மனஉறுதியும் அற்றவர்களே பெரும்பாலும் இன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் சிறுமைச் செயல்களில் ஈடுபடுவதை அறியமுடிகின்றது. தற்கொலை செய்து கொள்பவர்கள்,

  1. மனஇறுக்கத்தின் உச்சத்தில் இருப்பது
  2. பிறரின் ஏச்சுகள், பேச்சுகள், இகழ்ச்சிகளுக்கு அதிக அளவில இடம் தந்து குன்றிவிடுவது
  3. எல்லாருமே தங்களுக்கு எதிராக நடப்பது போன்று பாவித்துக்கொள்வது
  4. தங்களுக்கு எந்தச் சிக்கலையும் எதிர்கொள்ளும் திறனில்லை என்று பொறுமையின்றி முடிவு செய்வது
  5. தங்களை மட்டுமே முன்னிறுத்தி எண்ணிப்பார்க்கக்கூடிய குறுநலப்போக்கு
  6. அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு வேண்டும் என்று எதிர்பார்க்கும் அவசரப் போக்கு
  7. தங்களின் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தாத முதிர்ச்சியின்மை.

என மேற்குறித்தக் காரணிகளை இனங்காண முடிகின்றது. வாழ்க்கையில் விரக்தி அடைபவர்கள் கீழ் குறித்த அறிஞரின் கூற்றை எண்ணிப்பார்க்க வேண்டும்.

The Tragedy of Life is not death,
but what we let die inside of us while we live”

வாழ்க்கையின் மிகப்பெரியத் துயரம் இறப்பன்று, அதைவிட வாழும் காலத்திலேயே தன்னிடம் உள்ள அரியத் திறன்களை முழுவதும் அறியாமலே இருப்பதுதான். இன்றைய நிலையில் எத்துனையோ உடல்குறைகள், உள்ளக்குமுறல்கள், இயற்கை இடர்பாடுகள், கடுமையான பொருளாதார நெருக்கடிகள், தொடர் துன்பங்கள் எனப் பல்லாயிர இன்னல்களுக்கிடையேயும் மலர்ந்த முகமுடன் தனக்கும், பிறருக்கும் பயனுள்ள வகையில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய “இடுக்கண்ணிலும் இதயமழியா” உரமிகுச் சான்றோரையும் காணமுடிகின்றது.

இரு கால் கைகளின்றி பிறந்திட்ட ‘நிக் வுஜிசிக் (Nick Vujicic) அவர்களால் தலைசிறந்த மனவூக்கப் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், இசை வித்தகராகவும், நீச்சல் அடிக்கும் திறனாளராகவும் திகழமுடிகின்றது. மேலும் கல்வியிலும் இரு பட்டங்களைப் பெற்றவராகவும் கூடுதல் சிறப்பினையும் பெற்றுள்ளார். கடுமையான வலிகளைப் பொறுக்க முடியாது, பிறரின் இகழ்ச்சிகளில் மனம் வாடி தற்கொலைகளுக்கு முயல்பவர்கள் நிக் அவர்களின் வரலாற்றினை வாசிக்க வேண்டும். எத்துனை மனத்திட்பம் இருந்திருந்தால் அவரால் இத்துணைக் குறைபாடுகளிலும் தொடர்ந்து தன் திறன்களை பன்முக நிலையில் மேம்படுத்திக்கொண்டு தன்னையும் வளர்த்துக்கொண்டு தான் சார்ந்த சமூகத்தையும் தன்னாற்றலால் மகிழ்விக்க முடிகின்றது.

இதுபோன்று பெயர் தெரியாத பலர் தங்களிடம் எதுவும் இல்லாத நிலையிலும் வாழ்ந்து காட்டியுள்ளனர். குறைநிலையிலும் பிறந்ததற்கான நோக்கத்தை “உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல்” (குறள்.596) என்ற செம்மாந்த நிலையில் நிரூபித்துக் காட்டிய செயல்வீறுகளையும் செய்திகள் வாயிலாக அறியமுடிகின்றது. “வாழ்க்கை வாழ்வதற்கே என்று சிங்கநோக்குத் தகைமையுடன் வாழ்பவர்களுக்கு ஒரு விழுமிய நோக்கத்தை உயிர்ப்பாகக் கொண்டு செயல்படுகின்றார்கள். என்ற மந்திரச்சொல் எனலாம். மேலும்,

அதாவது “முடியாததெல்லாம் முயலாததே”

  1. ஒரு உயர்ந்த வாழ்க்கைக்கான நோக்கில் தெளிவு
  2. எந்த நிலையிலும் குற்ற மனப்பான்மைக்கு ஆளாகாது இருப்பது
  3. தங்களை அனைத்து நிலைகளிலும் வளர்த்துக்கொள்வது
  4. தன்மதிப்பில் சற்றும் குறையாது, பிறரையும் மதித்து வாழும் பெற்றிமையுடன் திகழ்வது
  5. தங்களின் வளர்ச்சி என்பது தங்களுக்காக மட்டுமின்றி சார்ந்த உலகப் பயன்பாட்டிற்கும், என்ற பரந்த நோக்குடன் வாழ்கின்ற வகைமை
  6. எல்லாம் எதிராக இருக்கும் நிலையிலும், மனந்தளராது எதிர்கொள்ளும் ஊக்க மனப்பான்மையுடன் வாழுகின்ற வல்லமையுடன் இருப்பது
  7. எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு குழுமனப்பான்மையுடன் வாழக்கூடிய விசால அறிவுடன் செயல்படுவது.

என்றாகத் திகழ்பவர்கள் வாழ்க்கைக்கு பொருண்மை சேர்ப்பதை உணர்ந்து கொள்ளமுடியும். மேலும், ஒவ்வொரு வாழ்க்கைக்கும் ஒரு நோக்கமிருக்கின்றது.

தானுண்டு, தன் சுற்றமுண்டு என மட்டுமே சுருங்கிடாது, தங்களின் வாழ்க்கை என்பது விரிந்த நிலையினது என்ற விசால மனப்பான்மையுடன் வாழ்பவர்கள் மனஇறுக்கங்களுக்கு ஆளாவதில்லை.

“ஊழி பெயரினும் தாம் பெயரார்” (குறள்.989) என்ற திடச் சிந்தனையுடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர்கள், வாழ்க்கைக் கோட்பாடுகளைத் திறப்படுத்திக்கொண்டு வாழ்க்கைக்குப் பெருமிதம் கூட்டுகின்றார்கள்.

இயற்கை அழைப்பு வரும் வரை அவர்கள் அவசரப்பட்டு தற்கொலைகளில் முடிந்து போவதில்லை. நெரிக்கும் இன்னல்களிலும் இற்றுவிடாது இரும்பு இதயமுடன் எதிர்கொண்டு சாதித்துக்காட்டுகின்றார்கள்.

மாறாக,

“இடும்பைக்கு இடும்பை படுப்பர்” (குறள்.623) என்ற குறட்தொடரை தற்கொலைக்கு முயல்பவர்கள் அனைவரும் ஆழமாகக்கற்று உள்வாங்கி “நிற்க அதற்குத் தக” என்று முயல்பவர்கள், துன்பங்களுக்கே துன்பத்தை தரக்கூடிய வல்லாண்மை பெற்று, மனிதப்படைப்பிற்கு பெருமிதம் சேர்க்கின்றார்கள்.

‘திடம் கொண்டு வாழ்ந்திடுவோம் தேம்பல் வேண்டாம்

தேம்புவதில் பயனில்லை, தேம்பி தேம்பி இடருற்று

மடிந்தவர்கள் கோடி, கோடி

எதற்கும் இனி அஞ்சாதீர் புவியிலுள்ளோர்’!

என்ற மகாகவியின் மந்திரச்சொல்லை நாளும் நவின்று வாழ்வோம். உள்ளத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்பவர்கள் சாதிப்பது உறுதி.

“உள்ளியது எய்தல் எளிது” (குறள்.520)

என்று குறளும்,

“மாய்ந்திடாத நிறைந்த விருப்பமே, கதிகள் யாவும் தரும்”

என்ற பாரதியின் வீறு சொல்லையும் உள்ளிருத்திச் செயல்படுபவருக்கு யாவும் சாத்தியமாகும். =