வாழ்வியல் திறன்கள்
முனைவர் திருக்குறள் பா. தாமோதரன்
நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம்
உலகில் உதித்த ஒவ்வொருவருக்கும் ஏதேனும் தனிச் சிறப்பை பெற்றிட வேண்டும் என்ற அவா இயல்பாக இருந்திடும். ஆனால் அவர்கள் தங்களின் வாழ்நாளிற்குள் அந்த அவாவினை செயலாக்குகின்றனரா? என்றால் பலரால் இயல்வதில்லை, சிலரால் செயலாகின்றது. எண்ணங்கள் மிகவும் சக்திவாய்ந்தவையாக உருவாக்கம் பெறும் போது அனைத்தும் ஆக்கங்களாகின்றன. ஆனால் பெயரளவில் அமையும் போது வெற்று நிலையாகின்றன. நினைப்பதெல்லாம் நிகழ்த்த முடியுமா? என்ற ஐயம் எழுவது இயற்கை. நிகழ்த்த முடியும் என்று நினைத்தவண்ணம் நிகழ்த்தி உறுதிசெய்தவர்கள் நம் முன்னே வரலாறாய் வாழ்கின்றனர். நினைத்ததெல்லாம் என்றால் அனைத்துமா? நல்லன, தீயன, சாதரணமான, மிக உயர்வான என அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிப் பார்க்கலாம். அவ்வகையில் ஆழ்ந்து நோக்கும் போது,
- தனிமனித வளர்ச்சி, (கல்வி,அறிவு, உடல்நலம், பொருளாதாரம், குடும்பம்)
- எண்ணங்களின் விரிவு (செம்மாந்தன, சுயநலமற்றன, சமூக அக்கறை சார்ந்தன)
- செயலாக்கச் செறிவு (அணுகுமுறை, வெற்றி, தோல்வி, விடாமுயற்சி)
என்றாக, தனிமனித வளர்ச்சியாக முதலில் தன்னைத் தேர்ந்த கல்வி, பகுத்துப் பார்க்கும் பண்பட்ட அறிவு, உடல் பயிற்சியால் நலமாகத் திகழும் உடல், தூய நெறியில் ஈட்டிய பணம், புரிதலுக்கு உட்பட்ட இணக்கமான குடும்பம் என்ற வகைமையில் உருவாக்கம் செய்ய வேண்டியது முதல்படிநிலை எனலாம். இவ்வாறாக தற்செய்து கொண்ட ஒருவரால் மட்டுமே அடுத்த படிநிலையின் எல்லைகளை இலகுவாக அடையமுடியும்
தற்செய்து கொண்ட ஒருவரின் எண்ணங்களின் உச்சம் என்பது உயர்ந்தவை என்று எண்ணக் கூடியனவாக அமைவது அவசியமாகின்றது.
“உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்” (குறள்.596) என்ற குறள்வழி, மிக உயர்ந்த தரமுடைய எண்ணங்களாக அமைந்திடல் மிக முக்கியமாகின்றது. மேலும் அவ்வுயர்ந்த எண்ணங்களாவன,
“அறத்தான் வருவதே இன்பம்”(குறள்.39) என்ற குறள்நெறிவழி, அறம் சார்ந்தனவையாக இயையும்போதே, சுயநலமில்லாத, சமூக அக்கறையொட்டிய ஆக்கநிறை செயல்களுக்கு உந்து சக்தியாகத் திகழும். இவ்வண்ணம் ஆரோக்யமான எண்ணக் கட்டமைப்புகளே ஒருவற்கு செவ்விய செயல்களுக்கு பாதை சமைக்கின்றன எனலாம்.
“செயற்கு அரிய செய்வார் பெரியர்”(குறள்.26) என்ற குறள்வழி அரிய செயல்களுக்கான நுட்பங்களைத் தருகின்றன. இவ்வழி பண்பட்டவர்கள்,
“ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார்”(குறள்.593) என்றாக தோல்விகளில் மனங்கலங்குவதில்லை, மாறாக, “வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்” (குறள்.661) என்றாக மனவுறுதியில் கோலோச்சி நிற்கின்றார்கள்,
“மெய்வருத்தக் கூலி தரும்” (குறள்.619) வழி முயற்சியை முதன்மையாகக் கொண்டு நினைத்த ஒன்றினை எய்தும் வரை சலியாது போராடும் மனத்தின்மையில் செழித்து நிற்கிறார்கள்.
“பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்” (குறள்.874) என்றாக, எல்லோரிடமும் எளிய செவ்வியுடன் அணுகி, குழுமனப்பான்மையுடன் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தலைமைத் தகைமையில் எழுச்சி பெற்று சிறக்கின்றார்கள். எனவே “நினைத்ததை நிகழ்த்திட” என்பது, முழுமையான மூன்று உட்கூறுகளை உள்ளடக்கியதாகத் திகழும்போது, நினைத்ததை நிகழ்த்தும் போது, நிகழ்த்தியவருக்கும், சார்ந்த நாட்டிற்கும், உலகிற்கும் உன்னதத்தை தப்பாது சேர்க்கிறது. இவவாறு நிகழ்த்தியவர்களின் வெற்றியை உலகமானது தமமுடைய வெற்றியாக எண்ணிப் பெருமிதமுறுகின்றது.
“Try not to be a man of success, try to be a man of value”
என்ற சொல்லாக்கம் தனிப்பட்ட வெற்றிகளைவிட, மதிப்புநிறை மனிதரின் செயல்பாடுகளே சான்றோர்களின் போற்றுதல்களைப் பெறுவதை உணரமுடிகின்றது. இவ்வகையில் எண்ணியதை எண்ணியவாறு எய்திட,
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப” (குறள்.666) என்ற குறள்வழி, மேலாண்மை வழிமுறைகளும். ““SMART” Analysis ” கடைபிடித்து செய்வதற்கு வழிகோலுகின்றது.
Specific: (குறித்த ஒன்றை) இலக்காக ஒன்றினை வைத்து, குறித்த அவ்வொன்றை குறித்த நாட்களுக்குள் எய்திட திட்டமிடுவது.
Measurable: (அளவிடுதல்) குறித்த ஒன்றை எய்துவதற்கான பயணத்தில் எத்துணை திடமாக செய்துகொண்டிருக்கின்றோம் என்பதனைத் தொடர்ந்து கண்காணிப்பது.
Achievable : (நிறைவேற்றக்கூடிய இலக்குகள்) முன்னிறுத்திய இலக்குகள் கடினமாக அமைத்துக்கொண்டாலும். பார்வையிலிருந்து அகலாத ஒன்றாக இருத்தி, அதன்வழி தொடர்ந்து எய்துவதற்கான முயற்சியில் தொய்வின்றி ஈடுபடுவது.
Realistic: (மெய்நிலையினது) கற்பனைக்கு எட்டாததாக இராது, உண்மை நிலையினதாய், எவரும் அதற்குண்டான முயற்சியில் எய்தக்கூடியதாய் இருப்பது. (செல்வம்,கல்வி, உடல்நிலை. பொருளாதாரம் எதுவாயினும் படிப்படியாக எய்துவதற்கு வழிவகை செய்து கொள்வது.
Time Bound: (கால வரையறைக்குள்) குறித்த ஒன்றை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்து அதன்வழி முடிப்பது.
“Inch by inch its clinch, Yard by yard its Hard”
எந்த இலக்கினையும் அங்குலம்கொண்டு முயலும் போது இலகுவாகின்றது. அதுவே அடிகொண்டு முயலும்போது இயலாதது ஆகின்றது.
“அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்” (குறள்.611)
ஆள்வினை உடைமைகொண்டு முயல்பவருக்கும் அனைத்தும் சாத்தியமாகும் என்று திட்பக் கருத்தினை பதிவுசெய்வதை உய்த்துணரமுடிகின்றது. எனவே.
- மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும்
- அந்நோக்கததை அடையும் நெறிகள் தூயதாக இலங்கிடல் வேண்டும்
- இலக்கினை எய்துவதற்கு உகந்த திட்டமிடுதல் உருவாக்கிட வேண்டும்
- திட்டமிட்டதை அவ்வண்ணமே திட்டமிட்டவாறு ஆற்றிட முயற்சி மேற்கொள்ள வேண்டும்
- இடையில் எவ்வித இடர்கள் நேரிடினும், விடாமுயற்சியின் துணைகொண்டு போராட்டக் குணமுடன் நிறைவேற்றிட வேண்டும்.
- எந்நிலையிலும் மனம் சோர்ந்திடாது காலம் பார்த்து எய்துவதற்கான பொறுமை வேண்டும்
- எண்ணியதை நிறைவேற்றிய நிலையில், நிறைவேற்றியவருடன் சேர்ந்து உலகமும் பெருமிதம் கொள்ள வேண்டும்.
அந்தந்த துறையில் இருப்பவர்கள், இவ்வாறாக “தோன்றின் புகழொடு தோன்றுக” என்ற குறள் 236 வழி
- உயர்ந்த நோக்கம்,
- நோக்கத்தை அடைவதில் அசையாத நம்பிக்கை
- அடையும் வரை சோர்விலாத முயற்சி என்று செயல்படும் போது, நினைத்ததெல்லாம் நிகழ்வது மட்டுமல்ல. அந்நிறைவேற்றல்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் உவகை சேர்க்கிறது எனப் பெருமிதத்துடன் உறுதி செய்யலாம்.