இளைஞர் உலகம்
உறவு
பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்
தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588
சென்ற இதழில் அசட்டை முகத்தினரின் ஆளுமையை “ஸ்வோட்” அடிப்படையில் ஆய்வு செய்த போது அவர்களது பலமாகிய நற்பண்புகளில் இரண்டைப் பற்றிப் பார்த்தோம். அதாவது அசட்டை முகத்தினர் மென்மையான மற்றும் சேவை மனப்பான்மை கொண்டவர்கள் எனக் கண்டோம். இப்போது இன்னும் சில நற்பண்புகளை அறிந்து கொள்வோம்.
- நம்பத்தகுந்தவர் (Dependable)
அசட்டை முகத்தினர் நம்பகத் தன்மையுடையவர்களாயிருப்பர். “யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்…” என்பது ஒரு திரைப்படப் பாடல். இன்று வாக்கு நாணயம் அல்லது நம்பகத் தன்மை குறைந்து கொண்டே போவதை நாம் நமது சமூகத்தில் காண்கிறோம். ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பி, நமது சமுதாயத்தில் பலர் வாழ்வில் தங்களையே குத்திக் காயப்படுத்தி சீரழிவதைப் பார்க்கிறோம். நாட்டு வைத்தியம் என்ற பெயரில் யூடியூப்பில் வந்த ஒரு சிகிச்சை முறையால், இன்று காலில் ஒரு விரலை இழந்து நிற்கும் ஒருவரை எமக்குத் தெரியும்.
இவருக்கு சர்க்கரை வியாதி உண்டு. காலில் ஒரு புண் ஒரு விரலில் இருந்தது. அதனால் அந்தக் கால் கரண்டையில் வீக்கம் காணப்பட்டது. இவர் யூடியூப்பைத் திறந்த போது அதில் இத்தகையோர் எருக்கலை இலையை வெந்நீரில் கொதிக்க வைத்து அதன் பிறகு அதை ஆற வைத்து மெல்லிய சூட்டில் வீங்கிய இடத்தில் ஊற்றினால், ஒத்தடம் ெகாடுத்தால் வீக்கமும் சரியாகும்; புண்ணும் சில நாட்களில் ஆறிவிடும் என அதில் போடப்பட்டிருந்தது. வீடியோவில் செயல்முறை ஒருவரால் செய்து காட்டப்பட்டிருந்தது.
மருத்துவரிடம் கால்வீக்கத்தைக் காட்டாமல், இவர் ஒரு வாரமாக இந்த நாட்டு வைத்தியத்தை நம்பி எருக்கலை இலை சிகிச்சை எடுத்துக் கொண்டார். விளைவு? இவரது காலில் வீக்கமும் வற்றவில்லை; புண்ணும் அதிகமாகப் புரையோடியது. அலோபதி மருத்துவரிடம் சென்ற போது, ‘‘ரொம்பத் தாமதமாக வந்துள்ளீர்கள். பெரிய மருத்துவமனைக்குச் செல்லுங்கள்’’ என்றார், இவருக்கு அறிமுகமான மருத்துவர். பெரிய மருத்துவமனை சென்ற போது விரலை, புண் இருக்கும் விரலைத் துண்டித்துவிட வேண்டும் எனக் கூறிவிட்டார்கள். நாட்டு வைத்தியத்தை யூடியூப்பில் வந்த செய்தியை நம்பிய இவர் இன்று கால் விரலை இழந்து நிற்கிறார். எனவே ஊடகங்களில் வரும் செய்திகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. எச்சரிக்கையாக இருக்க அழைக்கப்படுகிறோம். அசட்டை முகத்தவர் இப்படி ‘டுபாக்கூர்’ செய்திகளைப் பரப்புபவர்கள் போல் செயல்படாதவர்கள். இது இவர்களின் மூன்றாவது நற்பண்பு ஆகும்.
- தீவிர விசுவாசிகள் (Intensely Loyal)
அசட்டை முகத்தினர் நம்பகத் தன்மையுடையவர்கள் போல் தீவிர விசுவாசிகளாக அதாவது பிரமாணிக்கமுள்ளவர்களாக இருப்பர்.
ஜப்பானிலுள்ள ஓர் இரயில் நிலையத்தில் ஒரு நாய்க்கு சிலை ஒன்று வைத்துள்ளனர். இதன் பின்னணி நம்மை நெகிழ வைக்கும் தன்மையுடையது.
இந்த நாய் ஒரு தெரு நாய் தான். ஒரு நாள் அந்த இரயில் நிலையத்தில் ஒருவர் தனது அலுவலக வேலை முடிந்து, இரயிலிலிருந்து இறங்கி வீட்டிற்கு புறப்பட்ட போது இந்த நாய் அவரை பின்தொடர்ந்து அவரது வீடு வரை சென்றது. வீட்டின் வாசல் கதவை அவர் திறந்து உள்ளே சென்ற போது இந்த நாய் அவரை வாசலுக்கு வெளியே நின்று ஏக்கத்தோடே பார்த்துக் கொண்டு நின்றதை அவர் கவனித்தார். அதன்மீது இரக்கம் கொண்ட அந்த அலுவலர் அதற்கு சில ரொட்டித் துண்டுகளைப் போட்டார். அவற்றை ஆவலுடன் தின்ற நாய் வாலை ஆட்டி நன்றியை தெரிவித்தது. ஆனால் வாசலுக்கு வெளியேதான் நின்றிருந்தது.
மறுநாள் இந்த நபர் அலுவலகம் செல்ல இரயில் நிலையம் சென்ற போது இந்த நாயும் அவரோடு இரயில் நிலையம் சென்றது. அவர் இரயிலில் ஏறியதும் இரயில் நிலையத்தில் ஓரிடத்தில் படுத்துக் கொண்டது. அவர் எப்போது வருவார் என எதிர்பார்த்துக் கொண்டே படுத்திருந்த நாய், மாலையில் அவர் வந்ததும், முந்தின நாளைப் போல் அவரை வீடுவரை பின்தொடர்ந்தது. இந்த முறை அலுவலர் நாயை தனது வீட்டுக் காம்பவுண்டிற்குள் அனுமதித்தார். இப்படி காலையில் அவரோடு இரயில் நிலையம் செல்வதும், மாலையில் அவரைப் பின்தொடர்வதும் சில மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஒரு நாள் மாலை வெகுநேரமாகியும் எஜமானை காணாததால் அவர் வருகைக்காக நாய் இரயில் நிலையத்தை விட்டு அகலாது அங்கேயே தங்கிவிட்டது. இந்த நபருக்கு நடந்தது என்ன என்பது இந்த வாயில்லா ஜீவனுக்கு எப்படி தெரியும்? அவரது அலுவலகத்தில் இந்த நபர் பணிசெய்து கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனை கொண்டு ெசன்ற போது சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். எனவே ஆம்புலன்சில் இவரது உடலை வீட்டிற்குக் கொண்டு சென்றுள்ளனர். அவர் இரயில் நிலையத்திற்கு வராததால ஏமாந்த நாய், நாளை வருவார், நாளை மறுநாள் வருவார் என எதிர்பார்த்தபடி எதுவும் உண்ணாமல் இரயில் நிலையத்திலேயே படுத்திருந்தது. ஒவ்வொரு நாளும் அந்த குறிப்பிட்ட இரயிலில் அவர் வருவார் எனப் பார்க்கச் சென்றுவிட்டு மீண்டும் பழைய இடத்தில் படுத்துக் கொள்ளும்.
இப்படி பல வாரங்கள் தனது எஜமானுக்காக காத்திருந்த நாய் எதுவும் உண்ணாததால் எலும்பும் தோலுமாகி பட்டினி கிடந்தே இறந்துவிட்டது. இதை கவனித்த இரயில் நிலையத்தினர் அந்த பிரமாணிக்கமுள்ள நாயை நல்லடக்கம் செய்தனர். தன்னுடைய எஜமானுக்காகக் காத்திருந்த நாய்க்கு அந்த இரயில் நிலையத்தில் சிலை ஒன்று வைத்தனர். 2-ஆம் உலகப் போரின் போது அந்த சிற்பம் உடைந்த நிலையில் போருக்குப் பின் அந்த நாய்க்கு அந்த இடத்தில் சிலை ஒன்றை திரும்பவும் வைத்தனர். அது இன்றுவரை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாக உள்ளது. இதுபோன்ற பிரமாணிக்கம் அசட்டை முகத்தினரிடம் உள்ள நாலாவது நற்பண்பாகும்.
- கடவுளின் அன்பை, அக மகிழ்வை, அமைதியை உணரக் கூடியவர்கள்
கடவுளின் அன்பை உணரும் உளப்பாங்கு கொண்டவர்கள் அசட்டை முகத்தினர்.
கடவுளின் அன்பை ஒருவர் சூரியனுக்கு ஒப்பிடுவார். சூரியனிலிருந்து வெப்பம், ஒளி, கதிர்வீச்சு யாவும் வெளியே அதாவது பிறருக்கு, பிற பொருள்களுக்கு, தாவரம், செடி, கொடிகளுக்கு, மிருகங்களுக்கு செல்கிறதே தவிர அது தனக்கென்று எதையும் வாங்கிக் கொள்வதில்லை. உண்மையான அன்பும் இத்தகையதே. அன்புக்கு வரையறை கொடுக்கும் ஹாரி சுலிவன் என்பவர்,
“தன்னைப்போல், ஏன் தன்னைவிட அதிகமாக இன்னொருவரை வாழ வைக்க, வளர வைக்க, மகிழ்விக்க, நிறைவாக்க ஒருவர் விரும்பி செயல்படுவது” என்கிறார். சுருங்கச் சொன்னால் ஒருவர் சுயநலம் தாண்டி பிறர்நலம் பேணுதலை நாம் அன்பு என்கிறோம்.
ஒருவர் ஒரு குருவிடம் சென்று ஐயா நான் உங்கள் சீடனாக விரும்பினால் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டார். அதற்கு குரு அவரைப் பார்த்து, “நான் சாகவேண்டும்” என்றாராம். இவர் இறந்தால் நாம் எப்படி இவரது சீடராக முடியும் என புரியாது முழித்த சீடரைப் பார்த்து, ‘நான்’ என்பது உனது சுயம் அல்லது சுயநலம் என விளக்கினாராம் குரு.