சமூகப் பார்வை – 16
திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர்
சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் அடிப்படைத் தேவைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெற்று மாண்புடன் வாழ வழி அமைத்தலும் சமூகநீதியின் ஒரு அங்கமாகும். சமூகத்தில் பொருளாதார ரீதியாக வீழ்ந்து கிடப்போரைத் தூக்கி நிறுத்துதலும், அவர்களுக்கு உதவுதலும் கூட சமூகநீதி என்ற கருத்தாக்கம் உண்டு,
நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்ற சமூக மேம்பாட்டிற்கான உலக உச்ச மாநாடு 1995இல் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகனில் நடைபெற்றது. ‘உலக நாடுகளில் காணப்படும் வறுமையை அகற்றி, முழுநேர வேலை வாய்ப்பை அதிகரித்து அனைத்துத் தரப்பினரும் மனித மாண்போடும் பாதுகாப்போடும் வாழத்தக்க சமுதாயம் உருவாகவேண்டும்’ என்பதுதான் இம்மாநாட்டின் முக்கிய அம்சமாகப் பேசப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் சமூக மேம்பாட்டு ஆணையம் 2005இல் பிப்ரவரி நியூயார்க்கில் கூடிய போது கோபன்ஹேகன் பிரகடனத்தை மேலாய்வு செய்தது. இதன் அடிப்படையில் சமூக வளர்ச்சிக்கான சில செயல்திட்டங்கள் வரையறுக்கப்பட்டன. பிப்ரவரி 20ஆம் தேதியை உலக சமூக நீதி தினமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற ஐ.நா.வின் பொதுச் சபையின் அமர்வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் (சட்டப் பிரிவு 14), ஜாதி, மத, இன, பாலியல் வேறுபாடுகள் அடிப்படையில் பாகுபாடு கூடாது (சட்டப் பிரிவு 15), பொது நிறுவனங்களில் பாரபட்சமற்ற சம வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் (சட்டப்பிரிவு 17) ஆகிய பிரிவுகள் சமூக நீதியை மையப்படுத்தி வரையப்பட்ட சட்டங்கள் ஆகும். ஆனாலும் ஒரு நாட்டின் ஆட்சி மற்றும் நீதி நெறி முறைகளுக்கும், அச்சமுதாயத்தில் பரவலாகக் காணப்படும் வறுமைக்கும் தொடர்பு உண்டு.
இன்றைய சூழலில் பொருளாதாரரீதியாகச் சமத்துவம், சமூகநீதி அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும் மிகுந்து காணப்படுவதைக் காண்கின்றோம். அதிலும் கொரோனாவின் “வருகைக்கு”ப் பின்னர் பொருளாதார சமத்துவம் குறித்தான பேச்சு வலுவாக எழுகிறது. ஒவ்வொரு தனிநபரும், குடும்பமும் இன்று கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் ஏற்படும் உயிர் பயத்தைவிடப் பொருளாதாரம் குறித்தே அதிக அச்சம் கொள்கிறது. சமத்துவத்தை நிலை நிறுத்துவதில் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது.
வேலை வாய்ப்பு
பொருளாதாரத்துக்கு அடிப்படைத் தேவை வேலைவாய்ப்பு. இன்றைய அசாதாரண சூழலில் வேலைவாய்ப்பும் வருமானமும் குறைந்து சமூகநீதிக்குச் சவால் விடுவதைக் காணமுடிகிறது. “நாட்டின் வளங்கள், வருமானம், வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுவதில் சமத்துவமும், பாரபட்சமின்மையும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்” என்று இந்திய அரசியலமைப்பு சாசனம் வலியுறுத்துகிறது. ஆனால், அது சாத்தியமானதாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
‘‘இந்தியாவில் 2021 நவம்பர் மாதம் 7.0 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் டிசம்பர் மாதம் 7.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது’’ என்று மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும், இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தரவுகள் கூறுகின்றன. இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3 விழுக்காடாக இருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தியறிக்கை தெரிவிக்கிறது. ஓமிக்ரான் பாதிப்புப் பரவல், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள், பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றின் காரணமாக பொருளியல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாகவும் அதன் எதிரொலியாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும் இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.
டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் வேலை வாய்ப்பின்மை விகிதத்தில் ஹரியானா மாநிலம் நாட்டிலேயே 34.1 சதவிகிதத்துடன் முதல் இடத்திலிருந்தது. ராஜஸ்தான் (27.1), ஜார்கண்ட் (17.3), பீகார் (16), காஷ்மீர் (15) மாநிலங்கள் வேலை வாய்ப்பின்மை பட்டியலில் அடுத்தடுத்த இடங்களிலிருந்தன.
நகர்ப்புற இளைஞர்களில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட பிரிவினரில் வேலை வாய்ப்பின்மை 19.2 சதவிகிதமாக இருந்தது என்றும் கடந்த முழு முடக்க நிலையின்போது இது 21.1 சதவிகிதமாக அதிகரித்தது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள ஓமிக்ரான் பாதிப்பு பொருளியல் நடவடிக்கைகளைப் பாதித்துள்ளது.
இடைவெளி
வேலைவாய்ப்பின்மை ஒருபுறம் என்றால், கொரோனா பெருந்தொற்று, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கியுள்ளது. மார்ச் 2020க்குப் பிறகு, உலகின் டாப் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக “ஆக்ஸ்ஃபாம்” கூறுகிறது. ஆனால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வறுமையின் கோரப் பிடியில் சிக்கினர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லுகாஸ் சான்செல், தாமஸ் பிக்கெட்டி, இம்மானுவல் சயிஸ், கேப்ரியல் சுக்மென் ஆகிய பொருளாதார வல்லுநர்கள் ஒருங்கிணைந்து ‘வேர்ல்ட் இன்ஈக்வாலிட்டி ரிப்போர்ட் 2022′ (world inequality report 2022) எனும் உலக சமத்துவமின்மை அறிக்கையைத் தயாரித்துள்ளனர். இந்த ஆய்வறிக்கைக்கு நோபல் பரிசு வென்ற பொருளாதார வல்லுநர்களான அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டஃப்லோ ஆகியோர் முன்னுரை எழுதியுள்ளனர்.
உலக அளவில் டாப் 10 சதவிகித பணம் படைத்த மக்களுக்கும் அடித்தட்டில் உள்ள 50 சதவிகித மக்களுக்கும் இடையிலான வேறுபாடு 20 மடங்குக்கு மேல் அதிகமாக உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவும் ஒன்று என அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த இடைவெளி 22 மடங்காக இருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த சொத்து வளத்தில் டாப் ஒரு சதவிகிதத்தினர் 33 சதவிகித வளத்தினை வைத்துள்ளனர்.
உலக சமத்துவமின்மை அறிக்கை 2022இல், இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 90 சதவிகித மக்கள், இந்தியச் சராசரி வருமானமாகக் கணக்கிடப்பட்டுள்ளது ஆண்டுக்கு 7,400 யூரோவை (இந்திய மதிப்பில் சுமார் 6 லட்சம் ரூபாய்) விடவும் குறைவாகவே ஈட்டுகின்றனர். அடித்தட்டில் உள்ள 50 சதவிகித மக்கள் ஆண்டுக்கு 2,000 யூரோவும் (சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம்), நடுத்தர 40 சதவிகித மக்கள் ஆண்டுக்கு 5,500 யூரோவும் (சுமார் 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்) ஈட்டுகின்றனர்.
பட்டினி
வறுமை அகன்றால்தான் அமைதியும் வளர்ச்சியும் சமூகநீதியும் சாத்தியம். இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, ‘சுதந்திர இந்தியாவின் முதற்பணியென்பது, பஞ்சம் பட்டினியில் வாழும் வறியோருக்கு தேவையான உணவும், உடையும் கிடைக்கச் செய்து, தனி மனித வளர்ச்சிக்காக புதிய சிறந்த வாய்ப்புக்களை ஏற்படுத்துவதுதான்’ என்றார்.
2021 அக்டோபரில் வெளியான 2021ஆம் ஆண்டுக்கான பட்டினிப் பட்டியலில் இடம் பெற்ற 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் உள்ளது. இதன் பொருள் இந்த 116 நாடுகளில் 15 நாடுகள் மட்டுமே இந்தியாவை விட மோசமான நிலையில் உள்ளன என்பதாகும். ஆனால், ‘‘இந்தப் பட்டியல் அறிவியல் பூர்வமாகவோ கள எதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டோ தயாரிக்கப்படவில்லை’’ என்று இந்தியா கூறியுள்ளது. இந்தப் பட்டியலானது ஜெர்மனியைச் சேர்ந்த Welt hunger hilfe மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த Concern Worldwide ஆகிய அமைப்புகளால் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
பெண்
‘வளர்ச்சிப் பாதையில் இந்தியாவின் இன்றைய நிலையினைக் கவனித்தால் வறுமை ஒழிப்பு, கொடிய நோய்கள் பரவாமல் தடுத்தல், ஆரம்பக் கல்வி கிடைக்கச் செய்தல் போன்ற இலக்குகளில் வரவேற்கத்தக்க மாற்றங்களைக் கண்டிருக்கிறது. ஆனால், பெண்களுக்கு அரசியல் பங்களிப்பு, வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு முழு அளவில் உரிமைக் கிடைத்ததாகச் சொல்வதற்கில்லை.
சர்வதேச அளவில் சமூகம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளியை ஆய்வு செய்து, உலகப் பொருளாதார மையம் ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. உலகப் பொருளாதார மையம் (டபிள்யூ. இ.எஃப்) வெளியிட்ட பாலின இடைவெளி குறியீட்டில் இந்தியா 140ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டுக்கான குறியீட்டுடன் ஒப்பிடுகையில், இந்தியா 28 இடங்கள் சரிவைச் சந்தித்துள்ளது. மொத்தம் 156 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கடந்த ஆண்டில் இந்தியா 112ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.
அரசியல் சார்ந்த விவகாரங்களில் பெண்களின் பங்கேற்பும் அவர்களுக்கான வாய்ப்பும் 13.5 சதவிகித அளவுக்குக் குறைந்துள்ளதே இந்தியாவின் குறியீடு சரிவடைந்ததற்குக் காரணம் என்று உலகப் பொருளாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2019-ஆம் ஆண்டில் பெண் அமைச்சர்களின் சதவிகிதம் 23.1 ஆக இருந்தது. இது 2021ஆம் ஆண்டில் 9.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
நாட்டில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதோடு நிர்வாகம், தொழில்நுட்ப விவகாரங்களில் பெண்களின் பங்களிப்பும் மிகவும் குறைவாகவே உள்ளது. நாட்டிலுள்ள 8.9 சதவிகித நிறுவனங்களில் மட்டுமே தலைமை மேலாளர்கள் பொறுப்பில் பெண்கள் உள்ளனர். ஆண்களின் வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கை மட்டுமே பெண்கள் பெறுகிறார்கள். சுகாதார விவகாரத்தில் பெண்கள் தொடர்ந்து பாகுபடுத்தப்படுகின்றனர்.
‘நாட்டில் பிறப்பு பாலின விகிதத்திலும் இடைவெளி காணப்படுகிறது. எழுத்தறிவில்லாத ஆண்களின் சதவிகிதம் 17.6ஆக உள்ளது. எழுத்தறிவில்லாத பெண்களின் சதவிகிதம் 34.2-ஆக உள்ளது. கருக்கொலை மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தில் திருப்திகரமான மாற்றங்கள் இன்னும் கொண்டு வரப்படவில்லை.’ என ஐ.நா.வின் வளர்ச்சித் திட்ட நிபுணர் குழுவின் அறிக்கை சொல்கிறது
உலகளவில் மக்களிடையே சமத்துவமின்மை அதிகமாக இருக்கும் நாடுகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதில் ஏழைகள் நிரம்பிய, சமத்துவமற்ற நாடாகவும், செல்வந்தர்கள் உயர்ந்து தனித்துவமாகத் தெரியும் நாடாகவும் இந்தியா காணப்படுகிறது.
ஒவ்வொரு நாடும் தன் மக்களின் சம உரிமையை மதித்து, அவர்களுக்கு சமூக, பொருளாதார, அரசியல் தளத்தில் சம வாய்ப்பை அளித்தால்தான் சமூகநீதி நிலைநாட்டப்படும். அவ்வாறு சமூகநீதி நிலைநாட்டப்படும்போது தான் ‘அனைவரும் ஒரே சமுதாயம்’ என்ற ஐ.நா.வின் இலக்கை அடைவது சாத்தியமாகும். சாத்தியமாக்குவோம். சமூகநீதி படைப்போம்.