வழிகாட்டும் ஆளுமை – 6
திரு. நந்தகுமார் IRS
இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்களை சிறப்பாக வழிநடத்தி, அந்த இளைஞர்களை நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கனவு, ஒவ்வொரு அப்பா, அம்மாவிற்கும் இருக்கும். அந்தக் கனவை நிறைவேற்றி மகிழும் போது அவர்களுக்கு மகிழ்ச்சி கிட்டும்.
“வயிற்றில் இருக்கும் என் குழந்தை வெளியில் வருகின்ற பொழுது சுகப் பிரசவம் ஆக இருக்க வேண்டும்” என்று கடவுளிடம் குழந்தை பிறப்பதற்கு முன்பு நாம் வேண்டுவோம் அல்லவா, அப்போது அந்த ஒரே சிந்தனை தான் கட்டாயமாக இருக்கும். அப்படி இருந்ததால் தான், பிரச்சனையின்றி தாயும், பிள்ளையும் பிழைத்ததால் தான், பலர் இன்று பெற்றோர்களாக இருக்கிறார்கள்.
இந்த வரம் நிறைவேறியதும், அடுத்த தலைமுறை அதாவது உங்களின் பிள்ளைகள் என்ன ஆகப் போகிறார்கள்? என்ற அந்த கனவு. பள்ளி பயிலும் போது உருவாகும். பள்ளி முடிந்ததும் கல்லூரியில் அவர்கள் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள்? என்பதும் மற்றும் கல்லூரி முடித்தவுடன் எந்த வேலையில் சேரப் போகிறார்கள்? என்பதைப் பற்றியும் நாம் வேண்டிக் கொண்டிருப்போம்.
பெற்றோர்கள், உங்கள் உறவினர்களிடம், அக்கம் பக்கத்தினரிடம் எல்லாம் கேட்டு கேட்டு எந்தப் படிப்பை தேர்ந்தெடுக்கலாம்? எந்த கல்லூரியை தேர்ந்தெடுக்கலாம்? என்று ஆராய்வோம். “சரி, இந்த படிப்பை நீ தேர்ந்தெடுத்துக் கொள், இதனைப் படித்தால் உனக்கு இந்த வேலை கிடைக்கும்” என்று கூறி நம் பிள்ளைகளைப் பார்க்கின்ற பொழுது, அதற்கு அவர்கள் நேர் எதிர்மாறாக விடையளிக்கும் போது நமக்கு நிச்சயமாக விரக்தி ஏற்படும்.
என்னுடைய வாழ்க்கையிலும் எனக்கு ஒரு வரம் தேவைப்பட்டது. அதாவது என்னைப் பள்ளியைவிட்டு துரத்திய போது, கடவுளிடம் நான் வேண்டினேன். படிப்பு வரவேண்டும் என்று நான் ஒருபோதும் வேண்டியது இல்லை. முதல் மதிப்பெண் பெற வேண்டும், இரண்டாம் மதிப்பெண் பெற வேண்டும் என்றும் நான் கடவுளிடம் கேட்க வில்லை. மாறாக, “அடுத்து என்ன என் வாழ்க்கையில், என்ற பெரிய கேள்வியை நான் வினவினேன்?.”
ஏற்கனவே, உங்கள் அனைவருக்கும் தெரிந்தது போல, நான் ஒரு மெக்கானிக் கடையில் குழந்தைத் தொழிலாளியாக வேலைக்குச் சென்றபோது இதை நினைத்தேன். கடவுள் நமக்கு ஒரு வேலை பார்க்கின்ற வரத்தை அளித்திருக்கிறார் என்று. இன்றைய இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு மானசீக குரு மிக மிக அவசியம். ‘குரு’ என்று சொன்னால் ஆசிரியர்களை மட்டும் என்று அர்த்தம் இல்லை. நான் வேலை செய்த அந்த மெக்கானிக் கடைக்கு வரும் வண்டிகள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் வந்து சேரும். அதுபோல, சென்னை சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை என்ற இடத்தில் நான் வேலை செய்து கொண்டிருந்த போது எனக்கும் அந்த மெக்கானிக் கடையில் ஒரு குரு அமைந்தார். அவர் பெயர் குணா.
ஒருமுறை ஒரு வண்டி பழுதடைந்து வந்தபொழுது அவர் “நந்தகுமார்” என்றார். நானும் மெட்ராஸ் பாஷையில் “என்ன அண்ணாத்த?” என்று கேட்டேன். அவர் “வண்டியை ஸ்டார்ட் பண்ணுடா” என்றார். நானும் “சரி அண்ணாத்த” என்றேன். அவருக்கு நன்றாகத் தெரியும், அந்த வண்டியை, அந்த மூன்று சக்கர வாகனத்தை ஓடவைப்பது என்பது மிகவும் கடினம். அதுவும் அந்த வயதில் என்னால் அந்த வண்டியை இழுப்பது என்பது மிகவும் கடினம், நானும் ஒல்லியாக இருப்பதாலும் என்னால் நிச்சயமாக அது முடியாது. இருந்தாலும் அவர் அடாவடியாக “என்னை விட நீதான் நல்ல சாப்பிட்டல” என்று கூறினார்.
“நானே இவ்ளோ ஒல்லியா இருக்கேன், என்ன போய் இவர் இழுக்க சொல்கிறாரே” என்று சிந்தித்தேன். ஆனால் அவரோ “ஏன் இவ்வாறு இழுக்கிறாய்? ஏன் அருகில் வைத்து இழுக்கிறாய்? ஏன் தொலைவாக வைத்து இழுக்கிறாய்” என்றெல்லாம் தொடர்ந்து ஊக்கமூட்டி வழிநடத்தி “இழு, இழு” என்றார். ஒருதடவை வரவில்லை என்றாலும் பல தடவை முயன்று அந்த வண்டியை ஸ்டார்ட் செய்ய வைத்தார் என் குரு.
பிறகு தான் யோசித்தேன், வண்டி ஸ்டார்ட் ஆனதோ இல்லையோ! என்னுடைய வாழ்க்கை எனும் வண்டி ஸ்டார்ட் ஆகிவிட்டது. சமூகத்தில் பலரின் வாழ்க்கை பழுதாகி நிற்கிறது. நம்முடைய பிள்ளைகள் எல்லாத் தேர்விலும் ஆளுமையைக் காட்டி 9.9 CGP மதிப்பெண் எடுக்கிறார்கள். ஆனால் வாழ்க்கையில் எதார்த்தமாக நாம் பார்க்கின்ற பொழுது, இந்த மதிப்பெண் எல்லாம் தோற்றுப் போய்விடும். வாழ்க்கையில் ஒரு மாற்று இல்லாத பொழுது, வேறு ஒரு தொடக்கத்தையும் நாம் துவங்க இயலாது.
என் குரு என்னிடம் “அந்த ஸ்பேனரை எடுடா” என்பார். நான் திருதிருவென்று முழிப்பேன். அதற்கு அவரும் என்னிடம் “ஒரு ஸ்பேனரை பார்த்தவுடன் அது எத்தனை இன்ச் என்று மிகத் துல்லியமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டும்” என்பார். பழுதடைந்து வந்த வண்டியை ஆரம்பித்துவிட்டு “சத்தத்தை கேள்” என்பார். “இந்த சத்தத்தை வைத்தே, இந்த இடத்தில் பழுதாகி இருக்கிறது என்று உணர்ந்து கொள்” என்று அந்த வண்டியைக் காண்பித்து பழுதை நீக்க வைத்தார். என்னுடைய முதலாளி அவர்கள் வண்டியில் இருந்த பழுதை நீக்கினார். ஆனால் நான் அதை வைத்து என்னுடைய வாழ்க்கையில் இருந்த பழுதை எல்லாம் நீக்கிக் கொண்டேன்.
அவ்வப்போது பொறியியல் மாணவர்களுக்கும் பயிற்சி வழங்கச் செல்வேன் அப்போது வெப்ப இயக்கவியல் (Thermodynamics) போன்ற பல தலைப்புகளிலும் பயிற்சி செல்லும். அவர்கள் கேட்பார்கள் “நீங்கள் பொறியியல் படித்தவரா?” என்று. இல்லை “நான் இங்கிலீஷ் லிட்ரேச்சர்” என்பேன். அதற்கு அவர்கள் “எப்படி இவ்வளவு நுணுக்கமாக சொல்லுகிறீர்கள்” என்று கேட்பார்கள். “நான் புத்தகத்தில் படித்ததில்லை. ஆனால் நான் வேலை செய்யும் பொழுது வண்டியில் சூடு வாங்கி இருக்கிறேன். எனவே, உங்களுக்கு அது வார்த்தையாக இருக்கலாம். எனக்கோ அது வாழ்க்கையாக இருந்தது” என்று சொல்லுவேன். என் முதலாளி கடையில் இல்லாத போதெல்லாம், புத்தகத்தைக் கிழித்து அவருக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகப் படித்தேன். இந்தக் கல்வியை, சிறிதுசிறிதாக உணர்வால் என் உடலுக்குள் புகுத்தினேன். ஆகையால், என் வண்டி, இன்றும் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கிறது.
“கடவுளிடம் என்ன வேண்டும்?” என்று எழுதச் சொன்னால், நாம் என்ன எழுதுவோம்? கார், வீடு என்றெல்லாம் நாம் எழுதுவோம். மாறாக, கடவுளிடம் ‘ஒரு நல்ல குரு வேண்டும்’ என்று வேண்டுங்கள். வாழ்க்கையின் யதார்த்தத்தை சொல்லித் தரக்கூடிய ஒரு குருவை நீங்கள் அடையாளம் கண்டு, அவரை நீங்கள் சூழ்ந்து கொண்டு அவரைப் பின் தொடருங்கள். எனவே, நீங்களும் உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மானசீக குருவைத் தேர்ந்தெடுத்து, அவர் காட்டுகின்ற வழியில், அந்தப் பாதையில் தொடர்ந்து உங்களுடைய வெற்றி பயணத்தை தொடங்குங்கள். வாழ்த்துகள்!