வெற்றித் திசை

முத்து ஆதவன் வை.காளிமுத்து

‘‘நான் கேள்விப்பட்ட வரையில் மிகப் பெரிய வருமானம் என்பது மகிழ்ச்சிக்கான சிறந்த செயல்முறையாக உள்ளது’’ என்கின்றார் ஜென் ஆஸ்டின் என்ற அறிஞர். நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் அதற்கான விதை நம் செயல்பாடுகளில் தான் அடங்கியுள்ளது. மகிழ்ச்சியை யாரும் நமக்குத் தானமாக வழங்க முடியாது, விலை கொடுத்தும் வாங்க முடியாது. அது நம்மிலே தோன்றி நம்மிலே மலர்ந்து பயனளிக்கக் கூடிய ஒரு அற்புதம். நாம் மகிழ்ச்சியை வாங்கவேண்டும் என்றால் மகிழ்ச்சியை கொடுத்துத்தான் மகிழ்ச்சியை வாங்க வேண்டும். மகிழ்ச்சியை தமக்குள் உருவாக்க தெரிய வேண்டும். அது ஒரு அழகிய கலை; அந்தக் கலை கைவரப் பெற்றவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். வேண்டுவோருக்கு வாரி வழங்குகிறார்கள். மகிழ்ச்சியும் கல்வியைப் போல குறைவற்ற, அள்ள அள்ள குறையாது  வளரக்கூடிய ஒரு செல்வம்.

செயலே விதை:

யாரொருவர் தன்னுடைய வேலையை கடனே என்று செய்யாமல் கடமையே என்று செய்கிறார்களோ அவர்களுக்கு மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. நாம் பணிபுரியும் இடம் அரசு வேலையாக இருக்கலாம், தனியார் வேலையாக இருக்கலாம், அல்லது வியாபாரமாக இருக்கலாம், உடல் உழைப்பு தொழிலாக இருக்கலாம், நுண்கலைத் தொழிலாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் அதில் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்காமல் நம் மனதிற்கு நம் வேலை பிடித்திருக்கிறதா? நம் வேலையில் நமக்கு ஒரு வித ஈர்ப்பு ஈடுபாடு ஏற்படுகிறதா? என்று பார்க்க வேண்டும். அப்படி இல்லை என்றாலும் அது தான் தற்போது நமக்கு கைகொடுக்கிறது என்னும்போது, அது தான் நமக்கு உணவளிக்கின்றது எனும்போது, நாமாக விரும்பி விருப்பத்தையும், ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் நாம் அந்த செயலின் மீது அல்லது தொழில் மீது உருவாக்கிக் கொள்ள வேண்டும். சிறிது காலம் தான் பிறகு அதுவே நம் இயல்பாகவும் பழக்கமாகவும் மாறி விடும்.இவ்வாறு தன் வேலையை, கடமையை நேரம் காலம் கருதாது பணத்திற்காக மட்டும் என்று இல்லாது நம் சொந்த வேலையாகக் கருதி நம் வேலையையே இறைவழிபாடு என்று செய்தோம் என்றால், அதனுடைய விளைவு பணம், புகழ், உயர்வு மட்டுமல்ல விலை கொடுத்து வாங்க முடியாத ஒரு சொத்து அவற்றோடு ஒட்டிக் கொண்டே வந்து சேரும். அது தான் மன மகிழ்ச்சி என்பது.

குடும்பத்தில் மகிழ்ச்சி

உலகம் முழுவதும் இயற்கையாகவே மகிழ்ச்சியால் நிரம்பி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையில் எந்த உயிரினங்களாவது வருத்தமாகவோ, துன்பமாகவோ இருப்பதை நம்மால் காண முடியாது. ஒரு பறவையை எடுத்துக்கொண்டால் கூட அது எப்போதும் ஒருவித மகிழ்ச்சியோடும், புத்துணர்வோடும் சுற்றித் திரிவதை நாம் காணமுடியும். இதற்குத் தேவை பசி உணர்வும், அதை தீர்க்கும் உணவு மட்டுமே! ஆனால் மனிதர்களாகிய நமக்கு அப்படி இல்லை இந்த உலகத்தில் ஆயிரம் ஆயிரம் இன்பங்கள் நம்மைச் சுற்றிலும் நிறைந்து கிடக்கின்றன. நாமும் அவற்றை குறைவின்றி அனுபவித்து வருகின்றோம். ஆனாலும் நம்மிடத்திலே துன்பமும், துயரமும் நிறைந்து கிடப்பதைக் காண்கின்றோம். உண்மையில் மகிழ்ச்சியை நாம் பழக வேண்டும். நாம் இயற்கையாகவே மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்பதை உணர வேண்டும். யாரெல்லாம் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நிறைவாக இருக்கிறேன் என்று அடிக்கடி சிந்திக்கின்றார்களோ, உணர்கிறார்களோ அவர்களிடத்திலே மகிழ்ச்சி நீங்காது நிலைத்திருக்கும். முதலில் மகிழ்ச்சியை நாம் நம் குடும்பத்தில் இருந்து பழக வேண்டும். நாம் நம் குடும்பத்தில் மூத்தவர்களிடமும், இளையவர்களிடமும்,நாம் பெற்ற மக்கள் செல்வங்களிடமும், மனையாளிடமும் இந்த மகிழ்ச்சி ஊடாடுவதை உறுதி செய்ய வேண்டும். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டையும் சச்சரவும் செய்யாமல் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி நல்ல நகைச்சுவைகளை பகிர்ந்துகொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒன்றாக அமர்ந்து உறவாடினால் அங்கு இயல்பாக ஓடி வந்து நிற்பது மகிழ்ச்சிதான்.

சில குடும்பங்களில் பார்க்கிறோம், கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் எந்த உரையாடலும் இருக்காது. குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இடையில் எந்த உரையாடலும் இருக்காது. அவரவர்கள் அவரவர்கள் வழியிலே தான்தோன்றித்தனமாக சென்று கொண்டிருப்பார்கள். எந்த வித புரிதலும் இல்லாமல் கடனே என்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை எதற்காக? எதற்காகப் பிறந்திருக்கிறோம்?என்று சிந்தித்தால் இயற்கை நமக்கு வழங்கியுள்ள இந்த அற்புதமான வாய்ப்பிற்காக மட்டுமே மகிழ முடியும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப்பேசி ஒருவர் கருத்தை மற்றவர் பகிர்ந்துகொண்டு முக்கியமான நிகழ்வுகளில் அனைவருடைய கருத்துக்களையும் கேட்டு ஒருமித்த கருத்தை உருவாக்கி செயல்பட வேண்டும். முக்கியமாக மூத்தோர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்க வேண்டும், கவனத்தில்கொள்ள வேண்டும். இளையோருக்கு நல்ல வழிகாட்டியாகவும், அவர்கள் நல்ல வழியில் நடப்பதற்கு நாமே முன்மாதிரியாகவும், நடந்து காட்டக் கூடியவராக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட குடும்பங்களில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

குடும்பமும் தொழிலும் இரு கண்கள்:

நம் குடும்பம் தான் நமக்கு ஆதாரம். அந்தக் குடும்பம் நிலைகுலையாமல் காப்பது நம் தொழில். நாம் தொழில் செய்து வேலைபார்த்து உடலால், அறிவால் உழைத்து பொருளீட்டுவது நமது குடும்பத்திற்காகத்தான்.  குடும்பமும் தொழிலும் பிரிக்கமுடியாத அம்சங்களாகும். எனவே நம் குடும்பம் என்ற படகு நேர்த்தியாக நகர துடுப்பாக இருப்பது நமது தொழில். அந்த தொழிலை, அந்த வேலையை உண்மையோடும், நேர்மையோடும் செய்து வந்தால் இயற்கையாக வரவேண்டிய உயர்வும், புகழும், செல்வமும் தானாக வந்து சேரும். இவற்றின் சாரமாக பாவினில் ஊடு போல இன்பம் இயல்பாக வந்து சேரும்.

மகிழ்ச்சியை விரும்பத் தகுதியற்றவர்கள்

சுயநலவாதிகள், பொறாமை குணம் கொண்டவர்கள், நானே பெரியவன் என்ற ஆணவம் கொண்டவர்கள், எனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதை கொண்டவர்கள், யார் சொல்வதையும் நான் கேட்க முடியாது என்ற எண்ணம் கொண்டவர்கள், எப்போதும் மற்றவர்களை தாழ்த்தி தன்னை மட்டுமே உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள், இந்த கூலிக்கு எவ்வளவு உழைப்பு போதும் என்று எண்ணுபவர்கள், அதிகமாக உழைப்பு ;அதனால் நமக்கு ஆவது என்ன? என்று நினைப்பவர்கள் இவர்கள் எல்லாம் மகிழ்ச்சியை விரும்ப தகுதியற்றவர்கள்.

மகிழ்ச்சிக்கு தகுதியானவர்கள்

 என் குடும்பமே சிறந்தது, என் மனைவியே சிறந்தவள், என் குழந்தைகளே சிறந்தவர்கள், என் நண்பர்கள் மிகச் சிறந்தவர்கள், என் உறவுகள் மிகச் சிறந்தவர்கள், என் தொழில் சிறந்தது, நான் என் தொழிலை நேசிக்கிறேன். விருப்பத்தோடு முழு ஈடுபாட்டோடு என் வேலையைச் செய்கிறேன், எனக்கு வேலை வழங்கிய என் வேலைக்கு ஆதாரமாக இருப்பவர்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன். எல்லோரிடமும் நிறையும் உண்டு, குறையும் உண்டு. யாரிடமும் அவர்களின் நிறையை மட்டுமே கவனத்தில் கொள்வேன். அவருடைய குறைகளை பெரிது  படுத்த மாட்டேன் என்று எண்ணுபவர்கள், நாமும் நன்றாக இருக்க வேண்டும் மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டும் இவ்வாறு சிந்திப்பவர்களே மகிழ்ச்சியை விரும்ப தகுதியானவர்கள்.

இயற்கை நியதி

* தன் உழைப்பால் அறிவின் திறனால் பெற்ற எப்பொருளும் தனக்கு உரிமை என்பது தான் நியதி. பின்னும் அதை துய்க்கலாம் பிறருக்கு உதவி செய்யலாம். பிறர் பொருளை தம்பொருள் போல் மதித்தல் உயர் பண்பு.

வேதாத்திரிய ஞானக்களஞ்சியம்

மேற்கண்ட இந்த வேதாத்திரிய கவியை ஒவ்வொருவரும் சங்கற்பம் ஆக எடுத்துக்கொண்டு தம் வாழ்க்கையில் கடைப்பிடித்தால் எந்தநாளும் மகிழ்ச்சியே! மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றும் இல்லை. மகிழ்ந்திருப்போம்!