சமூகப் பார்வை

திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர்          

இந்த கட்டுரை எழுதும் நேரத்தில் தலைநகர் டில்லியைக் காற்று மாசு கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. டில்லியில், காற்றின் தரம் மனிதர்கள் சுவாசிக்கத் தகுதியில்லாத அளவுக்கு எகிறியிருக்கிறது. “காற்று மாசு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அலட்சியமாக இருக்கக் கூடாது. காற்று மாசைக் குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால், பொது முடக்கத்தை அமல்படுத்துங்கள்” என டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறும் அளவுக்குக் காற்று மாசு பேசுபொருளாகியிருக்கிறது.

வாழும் நிலம், சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர்.. உள்ளிட்ட நம் வாழ்வாதாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறோம். இவை அனைத்துமே நமது பேராசையால் மாசுகளின் ஆக்டோபஸ் கரங்களுக்குள் சென்று கொண்டிருக்கின்றன.

உலகிலேயே இந்தியாவில் தான் மாசுகளுக்குப் பலியாவோர் எண்ணிக்கை அதிகம். உலக மக்கள்தொகையில் நம் பங்கு 18 சதவிகிதம். ஆனால், உலக அளவில் மாசுகளால் இறப்பவர்களில் 27.47 சதவிகிதத்தினர் நம்நாட்டினர். இந்தியாவில் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஏற்பட்ட உயிரிழப்பானது உயிர்க்கொல்லி நோய்களான எய்ட்ஸ், காசநோய், மலேரியா நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். போர் மற்றும் வன்முறை சம்பவங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட 15 மடங்கு அதிகம்.

காற்று மாசு

காற்று மாசு தான் உலகளவில் ஐந்தாவது பெரிய உயிர்க்கொல்லி. 2019ஆம் ஆண்டில், காற்று மாசுபாட்டால் இந்தியாவில் 16.7 லட்சம் உயிர்கள் பலியாயின. இது மட்டுமல்லாமல், “காற்று மாசுபாட்டால், இந்தியா 2,60,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பையும் சந்தித்துள்ளது. இந்தியாவில் நிகழும் 10.5% மரணம் காற்று மாசு காரணமாக நிகழ்கிறது” என்கிறது பி.பி.சி.

வாகனங்கள் பெருக்கம், கட்டுமானப் பணிகள், சாலைகளை முறையாகப் பராமரிக்காதது, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை போன்ற காரணங்களால் காற்று மாசு தொடர்ந்து ஏற்படுகிறது. மேலும், நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையங்கள், ரசாயன ஆலைகள், சுரங்கங்கள் போன்றவையும் காற்று மாசு ஏற்படுவதற்குக் காரணங்களாகின்றன. காட்டுத் தீயினாலும், விவசாய மற்றும் ஆலைக் கழிவுகளை எரிப்பதனாலும், செங்கல் சூளைகள் மூலமும், கிரானைட் சுரங்கங்களிலிருந்து வரும் துகள்கள் மூலமும் காற்று மாசு ஏற்படுகின்றது. காற்று மாசினை ஏற்படுத்துவதில் பட்டாசு வெடிப்புக்கும் பங்குண்டு.

காற்று மாசால், மனிதர்களுக்கு உடனடிப்  பாதிப்பான மூச்சுத்திணறல், இருமல், கண்ணெரிச்சல், தூக்கமின்மை மற்றும் நீண்டகாலப் பிரச்சனைகளான ஆஸ்துமா, கண்பார்வை மங்குதல், நுரையீரல் புற்றுநோய், மூளை மற்றும் சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. காற்று மாசு அதிகம் உள்ள இடங்களில் வசிக்கும் குழந்தைகள் கருவிலிருந்தே மாசுபட்ட காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதன் காரணமாகவே குழந்தைகள் உயிரிழப்பு, பிறக்கும்போது குழந்தைகள் எடை குறைவாக இருத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக உலகம் முழுவதும் இயங்கும் சுகாதார அமைப்புகள் சுட்டிக்காட்டி வருகின்றன.

நிலம் மாசு

மனிதனுக்குத் தேவையான உணவில் 90 சதவிகிதத்துக்கும் மேல் மண்ணிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கிடைக்கின்றன. பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயன உரம், நவீன ஆலைக் கழிவுகள், சாக்கடை கழிவுகள், நகர்ப்புற குப்பைகள் போன்றவை நிலத்தைத் துவம்சம் செய்கின்றன. இந்தியாவில் ஆண்டுதோறும் 1.65 கோடி டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. மொத்த பிளாஸ்டிக் உற்பத்தியில் 80 சதவிகிதம் பயன்பாட்டுக்குப் பின்னர் வீசப்படக்கூடியவை. இவை நிலத்தில் விழுந்து பெரும் தீங்கு உண்டாகிறது.

பெரும்பாலான விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். ரசாயன உரங்கள் பயன்பாடு 1991-92இல் சராசரியாக 69.8 கி.கிராம். அதுவே பதினைந்து ஆண்டுகளில் 113.3 கி.கி. ஆக அதிகரித்தது. இதனால், நிலம் பாழானது.

அண்மைக்கால ஆய்வுகள், பாதரசத்தால் ஏற்படும் நில மாசுபாட்டினையும் சுகாதாரக் கேடினையும் பற்றி ஆழமாகப் பேசுகின்றன. 1984ஆம் ஆண்டுக் கொடைக்கானலில் தொடங்கப்பட்ட தெர்மா மீட்டர் தொழிற்சாலையால் நிலம், நீர் பாழ்பட்டதோடு பதினேழு பேரை அது காவு வாங்கியது. இதனால் அந்தத் தொழிற்சாலை மூடப்பட்டாலும் அதன் சோகங்கள் இன்றும் தொடர்வதாகச் சுற்றுச்சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.

பூமியிலுள்ள உயிரினங்களுக்கு நீரைப் போன்று நிலத்திலுள்ள மண்ணும் அவசியமாகத் தேவைப்படும் பொருள். இரண்டரை செ.மீ. உயரத்துக்கு மண் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மண்ணானது மழை நீரை உள்வாங்கி நிலத்தடி நீர் அதிகரிக்க வழிவகுக்கிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதையும் குறைக்கிறது. நிலம் மாசுபட்டால் இதெல்லாம் சாத்தியமில்லாமல் போகும்.

மண் மாசுபாட்டினால் விளைச்சலில் குறைவு ஏற்படும். இந்தியாவில் பெருகிவரும் மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டால் 2030ஆம் ஆண்டில் 330 மில்லியன் டன் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும். தற்போது 230 மில்லியன் டன் உணவுப்பொருட்கள் மட்டுமே உற்பத்தியாகின்றன. நிலம் நன்றாக இருந்தால்தான் இது சாத்தியம்.

நில மாசால் தாவரங்கள் மண்ணின் நச்சுத் தன்மையை உறிஞ்சி உணவுச் சங்கிலி வரை அதன் நச்சுத்தன்மையைக் கொண்டு செல்லும். சிறிய விலங்குகள் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன உணவுகளை உட்கொள்ளும்போது இந்த உணவுச் சங்கிலி, பெரிய விலங்குகள் வரை பாதிக்கிறது. இதனால் இவற்றின் மரணங்கள் அதிகரிக்கிறது.

நீர் மாசு

இயற்கை நமக்கு வழங்கிய அருட்கொடை தண்ணீர் என்னும் உயிர்நீர். மழைநீரானது நதிகள், அருவிகள் எனப் பல வடிவங்களில் கடந்து வரும் போது தன்னைத் தூய்மையாக்கிக் கொண்டே தான் வருகிறது. ஆனால், நாம்தான் அதனை மாசு நிறைந்ததாக மாற்றுகிறோம். தொழிற்சாலைகள், வேளாண் நிலங்கள், நகர்ப்புறக் கழிவுகள் முதலியவற்றிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருட்கள் ஆறுகளிலும், வடிகால்களிலும், வேறு நீர்நிலைகளிலும் கலந்துவிடுவதால் நீரின் தரமும், நீர் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. நிலப்பரப்பில் உள்ள தண்ணீர் வளங்கள் 80 சதவிகிதம் மாசுபாடு அடைந்துள்ளது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வீடுகளில் இருந்து வெளியேறும் டிடர்ஜென்டுகள் உள்ளிட்டவை கலந்த நீர், மனிதக்கழிவுகள், வாகனங்களைச் சுத்தம் செய்த நீர் போன்றவை பல இடங்களில் சுத்திகரிக்கப்படாமலேயே நீர் நிலைகளில் விடப்படுகின்றன. இவை நீரினை மாசுபடுத்துகின்றன.

சுரங்கங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில், அங்கு வெட்டி எடுக்கப்படும் தாதுகளின் மூலப்பொருட்கள் நீரில் கலந்து நீரினை மாசடையச் செய்கின்றன. கடல்களில் கப்பல்கள் மூலம் எண்ணெய் கசிவு நிகழ்கிறது. இதனால் கடல்நீர் மாசுபடுவதோடு ஆக்சிஜன் மற்றும் சூரிய ஒளி கிடைக்காமல் கடல் வாழ் உயிரினங்கள் இறக்கின்றன. ஒவ்வொரு நாளும் 2 மில்லியன் டன் கழிவுகள், நீர்நிலைகளில் கொட்டப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

வீட்டுக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் நாடு முழுவதும் 275 ஆறுகள் மாசடைந்து உள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கைப்படி காவிரி, பவானி, பாலாறு, சரவங்கா, தாமிரபரணி, மணிமுத்தாறு, வசிஷ்டா நதிகள் மாசடைந்துள்ளன.

உலகின் தலைசிறந்த மருத்துவ இதழான ‘லான்செட்’ தமிழகத்தில் மிக மோசமான நீர் மாசு ஏற்படுத்தும் ஆதாரமாகத் திருப்பூர் சாயப்பட்டறைகள் திகழ்வதாகவும், அவற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் நொய்யலாற்றில் கலக்கவிடப்படுவதால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தனது ஆய்வறிக்கையில் கூறியிருக்கிறது.

மாசடைந்த நீரினைப் பயன்படுத்துவதால் டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இந்தியாவில் மாசடைந்த நீரினைப் பருகுவதால் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் வயிற்றுப்போக்கு நோயால் மரணமடைகின்றனர். உலகளவில் மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நம் நாட்டில் 7 கோடிக்கும் அதிகமான பேருக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என்கிறது ஒரு புள்ளிவிவரம். இருக்கும் நீரை, கிடைக்கும் நீரைப் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டியது இன்றைய அவசரமும். அவசியமும் ஆகும்.

ஒலி மாசு

தினமும் குறிப்பிட்ட நேரம் தொடர்ந்து அதிகச் சத்தத்தைக் கேட்கும்பட்சத்தில், கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படும். அதுபோல் தூக்கக் குறைபாடுகள், செரிமானக் கோளாறுகள், சுவாசக் கோளாறுகள், இரத்த அழுத்தம், குரலில் பாதிப்பு, மனச்சோர்வு, நரம்பு மண்டலத்தில் பாதிப்பு போன்ற குறைபாடுகள் ஏற்படும். குழந்தைகளுக்குக் கற்கும் திறனிலும், பழக்க வழக்கங்களிலும் பாதிப்பு வரலாம். தற்போது இந்தியாவில் ஆயிரத்தில், 35 பேருக்குக் காது இரைச்சல் நோய் உள்ளதாகவும், புறநகர்ப் பகுதிகளில் வசிப்போரில் 10 சதவிகிதத்தினரும், கிராமப்புறங்களில் வசிப்போரில் 7 சதவிகிதத்தினரும் ஒலியுணரும் திறன் குறைந்தவர்களாகவே உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

என்ன செய்யலாம்

மக்கள்தொகைப் பெருக்கத்தாலும், அறிவியல் தொழில் நுட்பத்தாலும் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிப்படைந்து வருகிறது. பள்ளிகளில் சூழல் மன்றங்களை அமைத்து மாணவர் மனதில் சுற்றுச்சூழல் குறித்த சிந்தனைகளை விதைக்க வேண்டும். நில மாசுபாட்டினைக் குறைக்கப் பூச்சிக் கொல்லிகள், ரசாயன உரங்களின் பயன்பாட்டினைக் குறைக்க வேண்டும். நீர்நிலைகளைக் குப்பைத்தொட்டிகளாக்கக்கூடாது. அவை பராமரிக்கப்படவேண்டும். காற்று மாசினைக் குறைக்கப் பொதுப் போக்குவரத்தினை அதிகரிக்கவேண்டும். மரம் வளர்த்தலும், இயற்கையோடு இயைந்த வாழ்க்கைக்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்ளுதலும் நம்மை வாழவைக்கும்.

(1984 – போபால் விஷவாயு பேரிடரில் உயிரிழந்த மக்களின் நினைவாக இந்தியாவில் டிசம்பர் 2 ஆம் தேதி தேசிய மாசு தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது)