வெற்றித் திசை
ஆதவன் வை.காளிமுத்து
சமுதாயச் சிந்தனைகள் சின்னஞ்சிறு வயதில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பார்க்க நேர்ந்த ‘அரிச்சந்திரா’ நாடகம் தான் இன்று முதல் பொய்சொல்லக்கூடாது என்ற சிந்தனையை அவருக்குள் விதைத்தது.
தென்னாப்பிரிக்காவில், இரயிலில் அவருக்கு எதிராக இழைக்கப்பட்ட நிறவெறிக் கொடுமை தான் நிற, இனம், ஜாதி, மத வேறுபாடு இல்லாத சமதர்ம சமுதாயத்தைப் பற்றி சிந்திக்கத் தூண்டியது.
இம்சையைக் கொண்டு இம்சையை வெல்ல முடியாது. அகிம்சையைக் கொண்டு தான் வெல்ல முடியும் என்ற மகாத்மாவின் மகத்தான சிந்தனைகள் இறுதியில் வென்றே விட்டது.
படைபலத்தை விட மனோபலமே வலிமையானது என்பது காந்தியாரின் அசைக்க முடியாத நம்பிக்கைச் சிந்தனையாக இருந்தது. எனவே தான் தன்னுடைய மனோபலத்தினாலே வெள்ளையரை வெற்றிகொண்டு விடுதலையை வென்றெடுத்தார்.
மகாத்மாவின் சிந்தனைகள் தான் இன்று உலகிற்கே ஒளியாக நின்று வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.
” உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கு ஒரு சுற்றுலாப் பயணியாகச் செல்கிறேன். ஆனால் இந்தியாவிற்குள் மட்டும் ஒரு யாத்ரீகனாகவே நுழைகிறேன்.” என்றார் கருப்புக் காந்தியென்று உலகம் புகழ்கின்ற மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர். காந்தி பிறந்த மண்ணின் மீது அவர் கொண்ட காதல் அது.
மகாத்மாவின் சிந்தனைகள் இந்தியாவின் இதயமாகி என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
எப்போதுமே அசாதாரணமான ஒரு செயலை பற்றியே நம் சிந்தனைகள் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் மிகச்சாதாரண நிலையிலேயே இருந்து விடுவோம்.
எச்.டி.பரேக் உலகின் மிகச்சிறந்த பொருளாதார மேதையாகத் திகழ்ந்தவர். மிகச்சிறந்த சிந்தனையாளர். 1930 காலகட்டத்தில் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்தவர்.
பொருளாதரத் துறையில் சிறப்புப் பெற்று விளங்கிய எச்.டி.பரேக் இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார நிறுவனமான “இன்டஸ்ட்ரியல் கிரிடிட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேசன் ஆஃப் இண்டியா” வில் அதாவது இன்று வங்கித்துறையில் முன்னோடியாகத் திகழும் ‘ஐசிஐசிஐ’ (ICICI) ன் தலைவராக விளங்கியவர் பரேக்.
அந்நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றி அதன் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய பரேக் 1976 ல் அவருடைய 65 வது வயதில் அப்பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஓய்வுக்குப் பின்னர் வீணாகக் கழிந்து போகும் காலத்தை பயனுள்ள காலமாக மாற்ற வேண்டும் என்று சிந்தித்தார்.
அப்போது நாற்பது ஆண்டுகளுக்கு முன் அவர் உள்ளத்தில் உதித்த ஒரு திட்டம் செயலாகாமல் நின்றுவிட்டது அவர் நினைவுக்குள் சுழல ஆரம்பித்தது.
அதாவது லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்த காலத்தில் லண்டனில் கண்ட காட்சிகள் பரேக்கின் சிந்தனையில் விரிந்தன.
லண்டனில் சொந்த வீடு கட்ட கடன் வழங்கும் முறையைக் கண்டார். சொந்த வீடு கட்டுவது சிரமமான காரியமான நிலையில் வீடு கட்ட கடன் தரும் நிறுவனங்கள் மூலம் பணம் பெற்று வீடு கட்டி, சொந்த வீட்டில் சுகமாக குடியிருந்து கொண்டே தவணை முறையில் கடனை திருப்பி செலுத்தும் திட்டம் புதுமையாகவும், வியப்பாகவும் உள்ளதைக் கண்டார்.
எப்படியாவது இந்த திட்டத்தை நாம் இந்தியாவிலே செயல்படுத்த வேண்டும் என்ற வேட்கையில் இருந்தார்.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கனவுத் திட்டமாக அதை மனதில் வைத்திருந்த பரேக் அவர்கள்,
ஐ.சி.ஐ.சி.ஐ-ல் இருந்து பணி ஓய்வு பெற்றபின் தன் கனவுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த முனைந்தார்.
அதன் விளைவாக எச்.டி.பரேக் அவர்களால் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் எச்.டி.எஃப்.சி (HDFC) (ஹவுசிங் டெவலப்மெண்ட் பைனான்ஸ் கம்பெனி) என்ற வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனம்.
இன்று சர்வ சாதாரணமாக தனியார் நிறுவனங்கள், அரசுத் துறை நிறுவனங்கள் (வங்கிகள்) என ஏராளமான நிறுவனங்கள் வீட்டுக்கடன் வாங்க கூவிக் கூவி அழைக்கின்றார்கள்.
ஏனென்றால், இலட்சக்கணக்கான சாமான்ய மக்களும் சொந்த வீட்டில் குடியேறி மகிழ்ச்சியாக தனக்கு சொந்த வீடு இருக்கின்றது என்ற நிறைவோடு வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு ஆதாரமானவர்தான் எச்.டி.பரேக்.
வாத்து முட்டைகளை அடைக்காத்த ஐந்து வயது சிறுவனைப்பற்றி உங்களுக்கு தெரியுமா?
தன் தாய் தந்தைக்கு சமைப்பதற்காக வைத்திருந்த வாத்து முட்டைகளை எடுத்துச் சென்று தமது வீட்டுத் தொழுவத்தில் வைக்கோலைப் பரப்பி அதில் வாத்து முட்டைகளை பரப்பி வைத்து அதன் மேல் தான் அமர்ந்து அடை காத்தான் அந்தச் சிறுவன்.
அவன் செயல் அனைவருக்கும் நகைப்பைத் தந்தது. ஆனால் அச்சிறுவனின் தாய் நான்சி எலியட்டுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.
அச்சிறுவனை வாரி அணைத்துக் கொண்டு அவன் தாய் சொன்னாள் ” என் மகன் பெரிய விஞ்ஞானியாக விளங்கப்போகிறான்” என்று.
சிறுவனான எடிசன் அடைகாத்தது வெறும் வாத்து முட்டைகளையல்ல. அவனுக்குள் முகிழ்ந்தெழுந்து கொண்டிருந்த அவனது சிந்தனைகளை.
பிறரால் நகைக்கப்பட்ட அச்சிறுவன் தான் தன் வாழ்நாளில் 1368 அற்புதமான கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கினான்.
ஆல்வா எடிசன் கண்டுபிடிப்புகளில் மணி மகுடம் தான் மின் விளக்கு. எடிசன் மறைந்து விட்டார்.
ஆனால் அவரின் புகழ் உலகத்தை ஒளிமயமாய் வைத்திருக்கிறது.
மாலையில் விளக்குப் போட்டவுடன் கன்னத்தில் போட்டுக் கொள்ளும் பழக்கம் பெரும்பாலும் நம் அனைவரிடத்திலும் உள்ளது. அது இறைநம்பிக்கையை பின்புலமாகக்கொண்டது.
ஒரு முறை பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்கள் இதே போல் கன்னத்தில் போட்டுக்கொள்வதைக் கவனித்த ஒருவர்,
” ஐயா பகுத்தறிவுவாதியான நீங்கள் விளக்குப் போட்டவுடன் கன்னத்தில் போட்டுக் கொள்கிறீர்களே ஏன்?” என்று கேட்டாராம்.
அதற்குப் பெரியார் ஒவ்வொரு நாளும் விளக்குப்போட்டவுடன் விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனை நினைத்துப் பார்த்து அஞ்சலி செய்கிறேன் என்றாராம்.
(இன்றைக்கும் தாமஸ் ஆல்வா எடிசனின் நினைவு நாளன்று உலகம் முழுவதும் ஒரு நிமிடம் விளக்கை அணைத்து அந்த உயரிய மனிதருக்கு அஞ்சலி செலுத்துகிறது.)
” ஒரு சிந்தனையைப் பிடித்துக்கொண்டு அதை வெற்றிகரமாக அடைபவனை நான் மதிக்கிறேன். ஆனால் ஆயிரம் சிந்தனைகளை மனதில் வைத்துக் கொண்டு எதையும் செயல்படுத்தாதவனை நான் மதிப்பதில்லை ”
என்ற தாமஸ் ஆல்வா எடிசனின் மணிமொழி என்றென்றும் சிந்திக்க வேண்டியதே!