முகமது அலி ஜின்னா!

21.05.2021 அன்று காலையில் கொரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஒருவர் இறந்து விட்டார்.
அன்று மதியமே அவருடன் இதே நோய்க்கான சிகிச்சைக்காக இதே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த அவரது மனைவியும் இறந்து போகிறார்.
இருவரும் அடுத்தடுத்து இறந்ததை நேரில் பார்த்த அதிர்ச்சியைத் தாங்க முடியாத இவர்களின்  24 வயதுடைய ஒரே மகள் உடல் பலவீனமாகி
சிகிச்சைக்காக உடனேயே வேறொரு மருத்துவமனையில்  சேர்க்கப் பட்டிருக்கிறார்.

தாயும் தந்தையும் ஒரே நாளில் மரணம்.
செய்தியைக் கேட்ட அதிர்ச்சியில் அந்த இளம்  பெண்ணின் உடல்நிலை மன நிலை இரண்டுமே எப்படியிருக்கும் யோசித்துப் பாருங்கள்.
இறந்த இருவரின் உடல்களும் மீட்கப்பட வேண்டும்.
மறுநாள் இறுதிச் சடங்குகள் நடைபெற வேண்டும்.
அந்தப் பெண்ணும் வரமுடியாத சூழல்.
என்ன செய்ய முடியும் ? ஊரடங்கு காலத்தில் எப்படி அடுத்தடுத்த காரியங்கள் நடந்திருக்கும் ?
என்ன கொடுமையான சூழல் இது ?

காட்சி 2

22.05.2021. சனிக்கிழமை காலையில் சமூக ஆர்வலரான அந்த இளைஞர் வேறு ஒரு பணிக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வருகிறார்.
ஒரு இளைஞரும் இன்னொரு நடுத்தர வயதுடையவரும் இங்கும் அங்கும் அலைந்து அல்லாடுவதைக் கண்டு அவர்களை அணுகி விஷயத்தைக் கேட்கிறார்.
காட்சி – 1ல் இறந்து போன தம்பதியரின் உறவினர்கள் என்றும், பம்மலில் இருந்து வருவதாகவும் , இறந்த உடல்களை மீட்டு இறுதிச் சடங்குகள் செய்ய என்ன வழி என்று தெரியாமல் தவிப்பதாகவும் அவர்கள் இவரிடம் கூறியுள்ளனர்.

இறந்த உடல்களை அதுவும் கொடிய கோவிட்டினால் இறந்து போன உடல்களை மீட்பதும் இறுதி சடங்குகள் செய்வதும் அவ்வளவு எளிதானதல்ல என்பதை நாம் எல்லோரும் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
இறந்து போனவர்கள் வசித்த இடம் சென்னை திருமுல்லைவாயில்ஆவடி நகராட்சியில் இருக்கிறது.
உடல்கள் இருப்பதோ இராயப்பேட்டையில் சென்னை மாநகராட்சியில் .
சட்டப்படி ஆவடி நகராட்சியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் இவர்கள் இந்தப் பகுதியில் இந்த முகவரியில் தான் வசிக்கிறார்கள் என்று சான்றளித்த பிறகும், இன்னாரிடம் உடலை ஒப்படைக்கலாம் என்று சொன்ன பிறகும்தான் இராயப்பேட்டை மருத்துவமனையிலிருந்து இறந்து போனவர்களின் உடல்களை  வெளியே அனுப்ப இயலும்.
வேறு பணிகளில் இருப்பதால் ஆவடியிலிருந்து உடனடியாக இராயப்பேட்டை வர இயலாது என்று அந்தப் பகுதி சுகாதார ஆய்வாளர் தெரிவிக்கிறார்.
சமூக ஆர்வலரான அந்த இளைஞர் தான் யார் என்பதை அவருக்கு  அறிமுகப்படுத்திக் கொண்டு அந்தக் குடும்பத்தினரின் சூழ்நிலையையும் விளக்கிக் கூறி, உங்கள் லெட்டர் பேட்டில் உங்கள் அடையாள அட்டையுடன் கடிதத்தை வாட்ஸ்அப்பில் அனுப்புங்கள் அப்படியே இவர்களின் உடல்களை என்னிடம் ஒப்படைக்கும் படியும் எழுத்துப் பூர்வமாக சொல்லுங்கள் என்ற ஆலோசனையைக் கூற நல்ல மனது படைத்த அந்த ஆய்வாளரும் சம்மதித்து அவ்வாறே செய்கிறார்.

இதைக் கொண்டு இராயப்பேட்டை மருத்துவமனை அதிகாரிகளிடம் பேசி போராடி உடல்களை அங்கிருந்து பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை அந்த இளைஞர் மேற்கொண்டார்.
(ெகாரோனாவால் இறப்பு என்பதால் மாநகராட்சி நிர்வாகம்தான் அரசு வழிகாட்டுததுடன் இறுதி சடங்குகளுக்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் )

மறுபடியும் சிக்கல் ஏற்பட்டது.
இறந்து போனவர்களை புதைக்கவும் அல்லது எரிக்கவும் அதன் பின்பு இறப்புச் சான்றிதழ் பெறவும் சம்மந்தப் பட்டவர்களின் ஆதார் அட்டையின் நகல் தேவை. வந்திருந்த உறவினர்களுக்கு இது பற்றி எதுவும் தெரியவில்லை. அதிர்ச்சியில் சிகிச்சையில் இருந்த சொந்த பெண்ணுக்கும் தன் அப்பா அவற்றை வீட்டில் எங்கே வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை .
மீண்டும் அந்த இளைஞரே களம் இறங்கி …. நண்பர்கள் உதவியுடன் மற்றும் உறவினர்கள் உதவியுடன் திருமுல்லை வாயிலில் உள்ள இவர்களின் வீட்டிலிருந்து சம்மந்தப்பட்ட அடையாள அட்டைகளைப் பெற்று வருவதற்குள் நேரமாகிவிட்டதால் அன்று எதுவும் செய்ய முடியாமல் போனது.

காட்சி 3

23.05.2021 ஞாயிறு காலை சற்றும் சுணங்காமல் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்த அந்த இளைஞர் அவர்களின் உடல்களை சவக்கிடங்கில் இருந்து பெற்று பெசன்ட் நகர் மின் மயானத்திற்குச் செல்வதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.

இளைஞரின் உதவியுடன் அரசின் மருத்துவத்துறை வழிகாட்டுதல்
களின் படி பெசன்ட் நகர் மின் தகன மயானத்தில் அனுமதிக்கப்பட்ட இரண்டே இரண்டு உறவினர்கள் முன்னிலையில் கடைசி நேரச் சடங்குகள் நடைபெற்றன.

“ஒரே பெண் உயிருடன் இருந்தும் தாய் தந்தையின் முகத்தைக் கடைசியாகப் பார்க்க முடியாத கொடூரம் உலகில் யாருக்குமே இனி ஏற்படக் கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டேன்” என்றார் அந்த இளைஞர்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை. “அந்த அம்மாவின் உடலை முதலில் தகனம்
செய்யுங்கள் … அவங்க வழக்கப்படி தீர்க்க சுமங்கலியாகப் போகத்தான் ஆசைப்படுவார்கள்” என்றிருக்கிறார்.

அவரது வேண்டுகோளின் படியே தகனம் நடந்தேறியிருக்கிறது.
ஒன்றாக இருந்த போது சுமங்கலியாக வாழ்ந்த உயிர்.. ஒன்றாக இறந்தாலும் கணவருக்கு முன்னால் எரிந்து  சுமங்கலியாகப் போக வேண்டும் என்று நினைத்த அந்த இளைஞரின் உயர்ந்த பண்பாட்டை எப்படிப் பாராட்டுவது ?

எழுதும் போதே கண்கள் நீரால்  பனிக்கின்றன.
ஆம்!இறந்து போனவர்கள் பிரமாண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
எங்கிருந்தோ வந்து, இடையில் நுழைந்து, எவருக்கோ பெற்றோரானவர்களுக்கு இறுதி யாத்திரையை நிம்மதியாய் நடத்தி முடித்த அந்த இளைஞனின் பெயர் முகமது அலி ஜின்னா.

தனியார் வங்கியொன்றில் பணியாற்றிக் கொண்டு. பல உயிர்களை இது போன்று அடக்கம் அல்லது தகனம் செய்யும் சேவையில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இவர் இந்த கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் இந்நோயினால் இறந்த பலரை அரசின் வழிகாட்டுதலின்படி அடக்கம் செய்ய அல்லது தகனம் செய்ய முன் நின்று உதவி வருகிறார்.

“இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை” என்ற பாடல் வரிகள் பொய்யில்லை. சத்தியம்தான் என்பதற்கு இதைவிடவாச் சான்று வேறு வேண்டும் ?
ஜின்னா போன்று மதங்களைத் தாண்டிய மனிதநேய முள்ளவர்களைப் பார்க்கும்போது தான் இறைவன் இருக்கின்றான்
என்கிற நம்பிக்கையே வருகிறது.

ஜின்னாவுக்கு கைகளை உரத்துத் தட்டுவோம்.
ஒன்று தெளிவாகிறது. பாமர மக்களிடம் மத பேதமில்லை, மதம் என்பது அரசியலிலும், அதிகாரம் தேடி அலையும் அரக்கர்களின் கரங்களிலும் பகடைக்காயாக  உள்ளது.  வலைப்பூவில் இச்செய்தியைப் பகிர்ந்து கொண்ட நல்ல உள்ளத்துக்கு நன்றிகள். மானிட நேயம் கொண்ட முகமது அலி ஜின்னாவின் நற்பணிகளுக்கு ‘ஆளுமைச் சிற்பி’ மாத இதழ் நெஞ்சார நன்றி கூறுகின்றது.