கற்றல் எளிது -06
திரு.நன்மாறன் திருநாவுக்கரசு
ஜோம்பிகளை ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்பீர்கள். இறந்த மனிதர்கள் மீண்டும் உயிரோடு வந்து நடமாடுவதைச் ஜோம்பிகள் என்று அழைக்கிறோம். ஜோம்பிகளுக்குச் சிந்திக்கத் தெரியாது. அவை எல்லாம் சொல்லி வைத்ததுபோல ஒரே ஒரு வேலையை மட்டும் செய்யும்; அது மனிதர்களைக் கொன்று சாப்பிடுவது.
இதற்காக ஜோம்பிகள் மெனக்கெடுவதில்லை. சிந்திப்பது இல்லை. மனிதர்களை எங்காவது பார்த்தால் ஜோம்பிகள் தன்னிச்சையாகவே வேட்டையாடச் செல்கின்றன. வேறு எந்த சிந்தனையும் அவற்றிருக்கு கிடையாது.
இப்போது ஏன் நாம் ஜோம்பிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என யோசிக்கிறீர்களா? நாமும் ஒரு விதத்தில் ஜோம்பிகள்போலத்தான் நடந்துகொள்கிறோம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.
சில விஷயங்களை நாம் சிந்திக்க மாட்டோம், தன்னிச்சையாகவே செய்வோம். நன்றாக யோசித்துப் பாருங்கள், நமக்கென்று சில பழக்க வழக்கங்கள் இருக்கும். அவற்றை நாம் சிந்தித்துச் செய்வதில்லை. சிரமப்பட்டுச் செய்வதில்லை. தன்னிச்சையாகவே அவை நம் செயல்களில் கலந்துவிட்டன. உதாரணமாகக், காலையில் எழுந்தவுடன் முதல்வேலையாக பல் துலக்குவதற்கு நாம் யோசிப்பது இல்லை. அது தானாகவே நடந்துவிடும்.
அதேபோலக் குளித்துவிட்டு தலை வாருவதற்கோ, மாலையில் அலுவலகமோ, பள்ளியோ முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் உடையைகூட மாற்றாமல் போனை எடுத்து ஆராய்வதற்கோ, டிவி பார்ப்பதற்கோ நாம் யோசிப்பதில்லை.
இதற்காக நாம் தனியாக சிந்திக்கிறோமா என்ன? அதுவே தானாக வேலை நடைக்கிறது இல்லையா? இதைத்தான் ஜோம்பிகள்போல நடந்துகொள்ளுதல் என்கிறார்கள் உளவியலாளர்கள். இவ்வாறு நாம் தன்னிச்சையாகச் சில செயல்களைச் செய்வதற்குக் காரணம் அந்தச் செயல்பாடுகள் நமது பழக்க வழக்கங்களில் ஒன்றாகிவிட்டன என்பதுதான்.
இதேபோல ஒரு செயலை ஒத்திப்போடுவதும், காலம் கடத்துவதும்கூட பழக்க வழக்கம்தான் என்கிறார்கள் அறிவியலாளர்கள். அந்தப் பழக்கம் நமக்கே தெரியாமல் நம்முடைய குணங்களில் ஒன்றாகிவிட்டது. காலம் கடத்துவதற்கு நாம் யோசிப்பதில்லை, சிரமப்படுவதில்லை, தன்னிச்சையாகவே அதைச் செய்கிறோம். இதனால் நினைத்த நேரத்தில் நினைத்த விஷயங்களை முடிக்க முடியாமல் தடுமாறுகிறோம். இப்படியாக நமக்கு உள்ளேயே குடிகொண்டு நம்மை அரித்துக்கொண்டிருக்கிறது அந்தப் பழக்கம்.
இத்தகைய ஆபத்தான பழக்கம் நமக்கு உள்ளேயே ஊர்ந்துவிட்டது என்றால் அதை மாற்றவே முடியாதா என்று கேள்விகள் எழலாம். அப்படியில்லை. அதை நிச்சயம் மாற்ற முடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.
ஜோம்பி குணங்கள்
சில விஷயங்களைப் பல வருடங்களாகச் செய்து செய்து அவை ஜோம்பி குணங்களாக (பழக்கவழக்கங்கள்) நம்மிடம் பதிந்துவிடும். நம்மிடம் நல்ல ஜோம்பி குணங்களும் உண்டு. கெட்ட ஜோம்பி குணங்களும் உண்டு.
போனில் டிங்கென்று ஒரு சத்தம் கேட்டவுடனே யார் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள் என்று எடுத்துப் பார்த்துவிடுவோம். காலையில் எழுந்தவுடனே நம்மில் பலர் போர்வையை மடித்து வைக்க மாட்டோம். சிலர் சாப்பிட்டவுடனேயே தட்டை கழுவாமல் நேராக கிச்சனில் வைத்துவிட்டு கையை மட்டும் கழுவிவிட்டுச் சென்று விடுவோம்.
இதெல்லாம் நம்மிடம் உள்ள கெட்ட ஜோம்பி குணங்கள். இவற்றைச் செய்வதற்கு நாம் சிந்திப்பது கிடையாது. பல வருடங்களாக இதைச் செய்திருக்கிறோம். அதனால் இப்போதும் செய்துகொண்டிருக்கிறோம்.
மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.