கற்றல் எளிது -05

திரு.நன்மாறன் திருநாவுக்கரசு

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கொலைக்காரர்களுக்கு ஆர்செனிக் (arsenic) என்றால் அவ்வளவு விருப்பம். ஆர்செனிக் என்பது ஒரு வகையான விஷம். யாரையாவது கொடூரமாகக் கொலை செய்ய வேண்டும் என்றால் கொஞ்சம் ஆர்செனிக்கை உணவில் கலந்து கொடுத்துவிட்டால் போதும். ஆள் துடிதுடிக்க இறந்து விடுவான். அவன் எப்படி இறந்தான் என்று கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் எல்லாம் அப்போது இல்லை. அதனால் கொலைக்காரர்களுக்கு வசதி.

1875ஆம் ஆண்டு. ஒரு மரத்தடி. மக்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தனர். அவர்களுக்கு முன்னே இரண்டு பேர் மேடையில் நிற்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் கையில் ஆர்செனிக் விஷம் இருந்தது. அது கொலை எல்லாம் இல்லை. தண்டனை, ஒரு குற்றத்திற்காக இருவருக்கும் மரண தண்டனை. என்ன குற்றம், எதற்காகத் தண்டனை என்பது எல்லாம் இப்போது முக்கியமில்லை.

அந்த இருவரும் கூடியிருக்கும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு முன்னிலையில் ஆர்செனிக்கைக் குடித்தனர். கூடியிருந்த மக்கள் இன்னும் சிறிது நேரத்தில் அவர்கள் மரணிப்பதைப் பார்க்க ஆவலுடன் காத்து நின்றனர். நேரம் போனது. 10 நிமிடம் ஆனது. 20 நிமிடம் ஆனது. ஒரு மணி நேரம் ஆனது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. அவர்கள் இறக்கவில்லை. மறுநாள் அவர்கள் உயிருடன் மீண்டும் அதே மரத்தடியில் வந்து நின்றனர். அனைவருக்கும் ஆச்சரியம். இது எப்படிச் சாத்தியம்? எப்படி அவர்களால் சாவில் இருந்து தப்ப முடிந்தது? கையில் இருப்பது கொடூர விஷமாயிற்றே, அந்த விஷம் இவர்களை ஒன்றுமே செய்யவில்லையா?  எல்லோருக்கும் புதிராகவே இருந்தது.

பிறகு என்ன ஆனது? கொஞ்சம் பொறுங்கள். இந்தக் கதையைப் பிறகு பார்ப்போம். இப்போது வேறு ஒரு விஷயத்திற்குச் செல்வோம். நீங்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு அடுத்தவாரம் பரீட்சை தொடங்குகிறது.  எந்தப் பாடமும் சுத்தமாகத் தெரியாது. ஆனால் படிக்க ஒரு வாரம் லீவ் இருக்கிறது. எப்படிப் படிப்பீர்கள்?

நிச்சயமாகத் தினமும் படிக்க மாட்டோம். ஒரு வாரத்தில் 6 நாட்களையும் வீணடித்துவிட்டு கடைசி நாளில் உட்கார்ந்து மாங்கு மாங்கு என்று படிப்போம் இல்லையா?  இதே பழக்கம்தான் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் ஊடுருவி இருக்கும். வீட்டு வேலை ஏதாவது இருக்கும். நாளை பார்த்துக்கொள்ளலாம் என விடுவோம். அலுவலகத்தில் முடிக்க வேண்டிய வேலைகள் கிடக்கும். நாளை, நாளை எனக் கடத்துவோம். இதற்கு பெயர்தான் Procrastination. அதாவது ‘காலம் கடத்துதல்’ என்கிறார்கள் உளவியலாளர்கள். ‘காலம் கடத்துதல்’ மாணவர்களிடம் மட்டுமல்ல பல பெரியவர்களிடமும்கூட இருக்கும் பழக்கம். இந்தப் பழக்கம் நம் கற்றலைப் பெரிதும் பாதிக்கிறது.

நாம் காலம் கடத்துவதற்குச் சோம்பேறித் தனம் மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. நமக்கு இருக்கும் குறைவான தன்னம்பிக்கையும், பயமும்கூடக் காரணங்கள்தான். இந்தத் தள்ளிப்போடும் பழக்கத்தை எப்படி வெல்லலாம் என்பதைதான் இப்போது பார்க்கப்போகிறோம்.

தள்ளிப்போடாதே..

காலம் கடத்துதல் இயற்கையான ஒன்றுதான். எதற்காக நாம் ஒரு செயலைப் பிறகு செய்யலாம் எனத் தள்ளிப்போடுகிறோம்? முதலில் நமக்கு ஏன் அப்படித் தோன்றுகிறது?  நண்பர்கள் வந்து கிரிக்கெட் விளையாடக் கூப்பிடுகிறார்கள். நாளை பார்த்துக்கொள்ளலாம் எனத் தள்ளிப்போடுவோமா? நிச்சயம் மாட்டோம்.

….மேலும் வாசிக்க ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.