கற்றல் எளிது -03
திரு.நன்மாறன் திருநாவுக்கரசு
நாம் சிறுவயதில் இருந்தே அதிகம் கஷ்டப்பட்டால்தான் பலனை அடைய முடியும் என்று கேட்டு வளர்ந்திருப்போம். கஷ்டப்பட்டுப் படித்தால்தான் பாஸ்ஆக முடியும். கஷ்டப்பட்டு வேலை செய்தால்தான் வெற்றிபெற முடியும். ‘கவனமாகப் படி, எந்த ஒரு காரியத்திலும் கவனம் முக்கியம்’ இதுதான் சான்றோர்கள் வாக்கு. சரி தானே?
நாம் எந்த ஒரு காரியத்தைத் தொடங்கியவுடனும் நம் கவனம் தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் செல்லும். இன்று இந்தப் பாடத்தைப் படித்து முடித்துவிடலாம் என்று உட்காருவீர்கள். ஜன்னல் வழியாகத் தூரத்தில் ஒரு தாத்தா சைக்கிளில் சென்றுகொண்டிருப்பதுகூட மிகச் சுவாரஸ்யமாகத் தெரியும். பாடத்தை விட்டுவிட்டு வேடிக்கை பார்க்க மனம் சென்றுவிடும். நண்பர்களுடன் ஊர் சுற்றியதெல்லாம் நினைவுக்கு வரும். சமைய லறையிலிருந்து வரும் வாசம் பசியைத் தூண்டி ஆர்வத்தைக் குலைக்கும். இப்படி என்னென்னவோ மனதிற்குள் ஓட, பக்கத்தில் இருக்கும் பாடப் புத்தகத்தைத் திறக்க மட்டும் மனம் வராது.
இதுபோல நாம் ஏராளமான விஷயங்களில் கவனத்தைச் சிதறவிடுகிறோம். இதனால் ஒரு வேலையையும் நம்மால் முழு ஈடுபாட்டுடன் பார்க்க முடிவது இல்லை. இதனால்தான் நம்முடைய மதிப்பெண்கள் குறைகிறது. இதனால்தான் நம்மால் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற முடியவில்லை. இதையெல்லாம் தவிர்க்க நாம் கவனத்தைச் சிறிதும் கலையவிடாமல் முழு ஈடுபாட்டையும் படிப்பில் செலுத்துவதுதான் நல்லது இல்லையா? இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்! நாம் நன்றாகப் படிப்பதற்குக் கொஞ்சம் கவனத்தைச் சிதறவிடுவதுதான் சிறந்த பயனை அளிக்கும் என்று வாதிடுகிறார்கள்.
கீழே உள்ள புகைப்படத்தைப் பாருங்கள்.
இரண்டு நபர்கள் செஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா? கூர்ந்து கவனியுங்கள். முக்கியமான செஸ் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இடது பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் அந்தப் பையனைக் கவனியுங்கள். அவன் பெயர் மேக்னஸ் கார்ல்ஸன். அப்போதைய அவனது வயது வெறும் 13. அந்தச் சிறுவனுக்கு வலதுபுறம் உட்கார்ந்திருப்பவர் பலமுறை செஸ் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற காஸ்பரோ. இருவரும்தான் ஒரு போட்டியில் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
மிகப்பெரிய செஸ் ஜாம்பவனுடன் மோதிக் கொண்டிருக்க அந்த 13 வயது சிறுவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் பார்த்தீர்களா? வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்!
செஸ் என்பது அதிகப் புத்திக்கூர்மையும், முழுக் கவனமும் வேண்டிய விளையாட்டு. ஒரு நிமிடம் கவனம் பிசகினாலும் எதிராளி நம்மைத் தூக்கிச் சாப்பிட்டுவிடக்கூடும். இப்படிப்பட்ட விளையாட்டில் கவனமில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் வேலைக்காகுமா?
நாம் பார்த்த புகைப்படம் 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘ரெய்ஜவிக் ரேப்பிட்’ ஸ்பீட் செஸ் போட்டியில் எடுக்கப்பட்டது. அந்தப் போட்டியில் 13 வயது சிறுவனான மேக்னஸ் கார்ல்ஸனும், பல முறை செஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஜாம்பவன் கேரி காஸ்பரோவும் மோதினார்கள். கார்ல்ஸன் திடீரென்று எழுந்து உலவிவிட்டு வந்தது காஸ்பரோவை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. காஸ்பரோவ் உலகின் மிகச்சிறந்த செஸ் வீரர்களில் ஒருவர். அவருடன் மோதும் மேக்னஸோ கவனமில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார். அவர் போட்டியில் வெற்றிபெறவே முடியாது அல்லவா?
உண்மையில் அந்தச் செஸ் போட்டியில் ஜாம்பவன் காஸ்பரோவால்தான் வெற்றி பெற முடியவில்லை. அவரால் 13 வயது சிறுவனைத் தோற்கடிக்கமுடியவில்லை. அதேசமயம் அந்தச் சிறுவனும் வெற்றிபெறவில்லை. ஆட்டம் யாருக்கும் சாதகம் – பாதகம் இல்லாமல் சமனில் முடிந்துவிட்டது. ஆனால் முக்கியமான கேள்வி ஒன்றை அந்தப் போட்டி எழுப்பியது. உலகின் மிகப்பெரிய செஸ் ஜாம்பவனால் 13 வயது வேடிக்கை பார்க்கும் சிறுவனைத் தோற்கடிக்கமுடியவில்லையே! ஏன்?
இதற்கான பதில் அந்தச் சிறுவன் வேடிக்கை பார்த்ததில்தான் இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மேலே உள்ள புகைப்படம் எடுக்கப்பட்டதற்குப் பின், கார்ல்ஸன் மீண்டும் விளையாட்டிற்குள் சென்று முழுக் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துவிட்டான். அவன் வேடிக்கை பார்க்கச் சிறிது இடைவேளை எடுத்தது அவன் மீண்டும் ஆட்டத்தில் சிறப்பாகக் கவனம் செலுத்த உதவியது!
ஆம், சில நேரங்களில் தெளிவான சிந்தனையைப் பெறுவதற்கு நாம் கவனத்தைச் சிதறவிட வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? இதைத்தான் நாம் பள்ளிப் பாடத்தைப் பயில்வதிலும் பின்பற்ற வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
நரம்பியல் நிபுணர்கள் மூளையின் உள்ளே நடைபெறும் இயக்கங்களை ஆராய்ந்தனர். இதில் நமது மூளை இரண்டு நிலையில் வேலை செய்வதாகக் கண்டறிந்தனர். இவற்றில் முதல் நிலையை நாம் கவன நிலை (Focus Mode) என்கிறோம். இரண்டாவது நிலையைத் தளர்வு நிலை (Diffuse Mode) என்கிறோம். இந்த இரண்டு நிலையிலும் நாம் மாறி மாறி இயங்கினால்தான் நம்மால் ஒரு விஷயத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று கூறுகின்றனர்.
முதலில் கவன நிலை என்றால் என்னவென்று பார்ப்போம்.
கவன நிலை என்பது முழுக் கவனத்துடன் ஒரு விஷயத்தில் ஈடுபடுவது. அதாவது நமது கவனத்தை ஒரே விஷயத்தில் குவிப்பது. அவ்வளவுதான். உதாரணமாக, பாடம் படிக்கும்போது வேடிக்கை பார்க்காமல், பகல் கனவு காணாமல் அந்தப் பாடத்தில் என்ன இருக்கிறது என்று புரிந்துகொள்ள முயல்வது கவன நிலை. கிரிக்கெட் விளையாடும்போது பள்ளியைப் பற்றி நினைக்காமல் ஆட்டத்தில் கவனம் செலுத்துவது கவன நிலை. இதுதான்.
கவன நிலை நமது கற்கும் செயல்பாட்டில் மிக முக்கியமான பகுதி. நாம் முழுக் கவனத்தைச் செலுத்தி ஒரு விஷயத்தைச் செய்யும்போது நாம் எந்த விஷயத்தில் கவனம் செலுத்துகிறோமோ அது சார்ந்த நம் மூளையின் குறிப்பிட்ட பகுதி வேலை செய்யத் தொடங்கும்.
உதாரணமாக, நீங்கள் புதிதாக ஒரு மொழியைக் கற்பதற்காகக் கவனம் செலுத்தினால், நமது மூளையில் மொழிகள் குறித்த தகவல்களைப் பரிமாற்றம் செய்யும் பகுதி செயல்படத் தொடங்கும். இதுவே கவனத்துடன் ஓர் இசைக்கருவியை வாசிக்கத் தொடங்கினாலோ அல்லது கணக்குப் பாடத்தைப் பயிற்சி செய்தாலோ அதற்கேற்ற மூளையின் பகுதிகள் செயலாற்றத் தொடங்கும்.
இவ்வாறு நாம் செய்யும் செயலுக்கு ஏற்ப குறிப்பிட்ட பகுதியைத் தூண்டுவது அதனைச் சிறப்பாகச் செய்ய உதவும் இல்லையா? அதனால்தான் பாடம் படிக்கும்போதும் முதலில் கவனம் செலுத்திப் பயில வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இப்படியாக, பாடத்தில் முழுக் கவனம் செலுத்தியவுடன், அடுத்ததாக நாம் செய்ய வேண்டியது கவனத்தைக் கொஞ்சம் சிதற விடுவது. இது தான் தளர்வு நிலை (Diffuse Mode).
தளர்வு நிலை என்றால் என்ன?
தளர்வு நிலை என்பது உங்கள் மனதைத் தளர்வாக (relaxed) விடுவது. எந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்திலும் கவனத்தைச் செலுத்தாமல் மனம் செல்லும் பாதையிலேயே அதைப் போக அனுமதிப்பது. நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்போதே எதையாவது நோட்டில் கிறுக்குவீர்கள் அல்லவா? அது ஒரு தளர்வு நிலை. முக்கியமான வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது நேற்றுப் பார்த்த படத்தை நினைத்து பகல் கனவு காண்பீர்கள் அல்லவா? இதுவும் தளர்வு நிலைதான்.
இவ்வாறு நீங்கள் ஒரு விஷயத்தை முழுக்கவனத்துடன் செய்துவிட்டு, பின் வேண்டுமென்றே நம் கவனத்தைத் தளர்வாக விடும்போது உங்கள் மூளையின் வேறு ஒரு பகுதியைச் செயல்பட வைக்கிறீர்கள்.
தளர்வுநிலைப் பகுதி என்பது மூளையின் முக்கியமான பகுதி. இந்தத் தளர்வு நிலையில்தான் உங்கள் கற்பனைத் திறன் அதிகரிக்கிறது. தளர்வு நிலையில்தான் நமது மூளையின் படைப்பாற்றல் திறன் வெளிவருகிறது. நீங்கள் மூளையைத் தளர்வாக விடும்போது இதற்கு முன் கவனத்துடன் கற்றுக்கொண்டிருந்த விஷயங்களையெல்லாம் உங்களை அறியாமலேயே உங்கள் மூளை இணைக்கத் தொடங்குகிறது. பின் எளிதாக அந்த விஷயங்களை உங்களுக்குள் பதிய வைத்துவிடுகிறது.
இதனால் ஒரு விஷயத்தை நாம் சிறப்பாகக் கற்றுக்கொள்வதற்கு நம் மூளையைக் கவன நிலையிலும், தளர்வு நிலையிலும் மாற்றி மாற்றி செலுத்த வேண்டியது அவசியம் என ஆய்வுகள் கூறுகின்றன. கவன நிலையில் படிக்கும்போது அந்தப் பாடம் குறித்த தகவல்கள் உங்களுக்குப் புரியும். பின் தளர்வு நிலையில் அந்தப் பாடத்தின் தகவல்கள் உங்கள் மனதில் பதியும். இதுதான் விஷயம்.
இது எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விரிவாக அடுத்த பகுதியில் பார்க்கலாம்.=