ஊடகம் பழகு 03
திரு.மனோஜ் சித்தார்த்தன்
நிமிடத்துளிகள் தோறும் உலகில் எண்ணற்ற நிகழ்வுகள் நிகழ்கின்றன, மனிதர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு அவை நல்லன, தீயன என வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிலர் இவற்றை காலத்தின் கோலம் என்கின்றனர், சிந்தனையாளர்கள் இவற்றை காலச்சக்கரம் என்கின்றனர், இந்தக் கால வெள்ளத்தில் தோன்றியது தான் அச்சு ஊடகங்கள் எனப்படும் பத்திரிகை துறை. தொடர்பியல் முறைகளில் புதிய பரிமாண வளர்ச்சிக்கு இது வித்திட்டது என்றே சொல்லலாம். டிஜிட்டல் உலகமாக மாறிப்போன தற்காலத்தில் உலகில் நடக்கும் நிகழ்வுகள் நேரடியாக உடனுக்குடன் தெரியும் அளவிற்கு தற்காலத்தில் தொழில்நுட்பம் என்பது அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனாலும் அச்சு ஊடகங்களுக்கான வரவேற்பு என்பது இருந்து கொண்டே தான் இருக்கின்றது. அதன்படி இதழ்கள்(வார/மாத) மற்றும் நாளிதழ்கள் மக்களிடம் நிரந்தரத் தன்மையை பெற்று இருக்கின்றது. அதில் நாளிதழ் என்பது மக்களிடம் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பெருநகரங்களில் அச்சிடப்படும் நாளிதழ்கள் அதிகாலை நேரத்தில் மக்களிடம் சென்று விடுகின்றது. அதிகாலை சேவல் கூவுகின்றதோ இல்லையோ மக்களிடம் நாளிதழ்கள் சரியான நேரத்தில் சேர்ந்துவிடும். நாளிதழ் எப்போது வரும் என்ற எதிர்பார்த்தபடி கிராமப்புறங்களில் பெரும் கூட்டம் காத்திருக்கும். நகர்ப்புறத்தில் இருந்து அந்த கிராமத்திற்கு அதிகாலை நேரங்களில் வரும் பேருந்துகள் தான் நாளிதழ்களை கிராமப்புற மக்களிடம் சேர்க்கும் பணியினை இன்றளவும் செய்கின்றன. பேருந்துக்காக காத்திருந்து அதை வாங்கி ஒரு வரி விடாமல் ஊர்ப் பெரியவர்கள் இந்த கிராமத்தின் பொதுவான இடத்தில் வைத்து படித்துவிட்டு ஒருவருக்கொருவர் விமர்சனங்களை வெளியிடுவது மிகச் சாதாரண விஷயம். அதில் முக்கியமாக அந்தக் கட்சி இப்படி, இந்த கட்சிகாரன் இப்படி, அந்த நடிகர் பெரிய பெரிய மனுசனா இப்படி பண்ணிட்டானே, தங்க விலை என்னப்பா இப்படி கூடியிருச்சு, பெட்ரோல் விலை எப்ப குறையுமோ, போர் வருமா வராதா, என்பதைப் பற்றி விவாதங்கள் கிராமப்புறங்களில் மிகச் சாதாரணமாக நடக்கும். இதற்கு முழுக் காரணம் நாளிதழ்களே. அந்த அளவுக்கு கிராமப்புற மக்களின் அறிவுப் பசிக்கு தீனி போடும் வேலையினை நாளிதழ்கள் சிறப்பாக செய்கின்றன.
விமர்சனங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்தும் நடைமுறை என்பது தற்போதும் தொடர்கின்றது. நமது ஊரின் தேநீர் கடைகள் என்பது தேநீர் விற்பனையைத் தாண்டி நாளிதழ்களை மக்களிடம் கொண்டு செல்லும் பணியினைச் செய்து வருகின்றது. எவ்வளவு பெரிய நிகழ்வு நடந்தாலும், அது எவ்வளவு பெரிய செய்தியாக ஆனாலும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்தாலும், இன்னமும் மக்கள் சொல்வது ‘‘போப்பா போ காலையில பேப்பர்ல எல்லாத்தையும் போடுவான், பேப்பர்ல பார்த்து நான் தெரிஞ்சுக்கிறேன்’’ என்பார்கள் கிராமத்து பெரியவர்கள். இந்த அளவிற்கு அச்சு ஊடகங்கள் மக்கள் மனதில் நீங்கா இடத்தினைப் பெற்றுள்ளது. எனவேதான் நாட்டின் நான்காம் தூண் என்றும் குடியாட்சியின் ரத்த நாளங்கள் என்றும் சிறப்பிக்கப்படுவது தான் இந்த அச்சு ஊடகங்கள். சிறந்த தொடர்பியல் சாதனமாக இன்றும் விளங்கி வருகின்றது.
பழங்கால தொடர்பியல் முறைகள்
மனிதன் தன் உணர்ச்சிகளை ஒலியாக வெளியிட்டான். அந்த ஒலியில் இருந்து தோன்றியது தான் மொழி. முதல் மனிதன் தன் கண்ணால் பார்த்தவற்றை கையால் படமாக வரைந்தான். செய்கையால் வெளிப்படுத்த முடியாதவற்றை படம் வரைந்து காட்டினான். இவற்றில் இருந்து தோன்றியது தான் எழுத்து மொழி. இதனை வரி வடிவங்கள் என்பார்கள். ஒலி வடிவம் வரி வடிவம் இரண்டில் எது முதலில் தோன்றியிருந்தாலும் தகவல் பரவ, வரி வடிவ எழுத்துக்களே துணையாய் இருந்தன. அக்காலங்களில் மக்களுக்குச் செய்திகளை தந்தவை பல. அவற்றில் கூத்து, பொம்மலாட்டம், நாடகங்கள், முரசறைத்தல், பறையறைத்தல், போன்றவற்றின் மூலம் செய்திகள் மற்றும் தகவல் தொடர்பு என்பது இருந்துள்ளது.
குகைகளையே தன் குடில்களாகக் கொண்டு மலைப் பகுதியில் வாழ்ந்தமையால் தான் கொண்டாடும் திருவிழாவினை பிற இடங்களில் வாழும் மக்களுக்கு தெரிவிக்குமாறு பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். கூடிக்கூவி தனது விருப்பு வெறுப்பினைத் தகவல்களாக தெரிவித்து வந்துள்ளனர். நாகரிகம் அடைந்தவுடன் புறா மற்றும் ஆட்கள் மூலமும் தன்னைச் சார்ந்த மக்களுக்கு வாய்மொழி மூலமும் தகவல்களை எட்டச் செய்தான். பனை ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதி வைத்தான். இதுவும் அக்காலத்தில் தொடர்புகள் முறையில் பெரிதும் பயன்பட்டது. மாற்றம் என்ற சொல் மட்டுமே மாற்ற இயலாதது என கூறுவர் மாற்றம் என்பது மானுட தத்துவம் என்கிறார் கவியரசர் கண்ணதாசன்.
எத்துறையின் வளர்ச்சியும் அதனைத் தொடர்ந்து ஆய்வு செய்து செம்மைப்படுத்துவதைப் பொருத்தே அமைகிறது. என்பதற்கு இணங்க தொடர்பியல் முறையில் ஏற்பட்ட முன்னேற்றமே அதன் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம் ஆகும். கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தான் காகிதம் என்பது சில அரேபியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களுக்குச் செய்திகளைப் பரப்புவதற்கு பல வழிகள் பயன்பட்டது சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்து மட்டுமல்லாமல் கி.மு. 60 களில் இருந்தே செய்திகள் பரப்பப்பட்டுத் தான் வருகின்றன. வாள் முனையால் செய்ய முடியாதவற்றை – எழுதுகோல் முனையால் செய்து விட முடியும் என்ற கூற்றினை மெய்ப்பிப்பது தான் ஊடகங்கள். அதிலும் மின்னல் போன்று தோன்றி மறையும் ஊடகங்களுக்கு இடையில் வானம் போல நிலைத்து நிற்பவை அச்சு ஊடகங்களே.
அச்சு ஊடகங்களின் அறிமுகம் மற்றும் நோக்கங்கள்
கி.பி.13ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களின் முயற்சியாலும், அறிவு வளர்ச்சியாலும் தொடர்பியல் முறையில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. சுவடிகளும் பனை ஓலைகளும் மக்களின் முழுமையான தொடர்பியல் தேவைகளை நிறைவு செய்யவில்லை. அவற்றைப் போக்கி அச்சிடும் முறையினை கண்டுபிடித்தவர் “ஜான் கூடன் பெர்க்”(John Gutenberg) என்னும் ஜெர்மனியர்தான் மரபு அச்சுப்பொறியினை முதன்முதலாகக் கண்டுபிடித்தார். அத்தோடு அச்சுக்கு தேவையான தனித்தனி எழுத்துக்களையும் உருவாக்கினார். இவற்றில் பல புதுமைகளைப் புகுத்தினார். இதுதான் தொடர்பியல் முறைகளுக்கு புதிய களத்தினை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால் தகவல்கள் விரைவாக சென்றடைந்தன. மரபுச் சாதனங்களை விட விரைவாகும் பெரும்பான்மை மக்களிடம் போய் சேர்ந்தது.
தொடக்க நிலையில் சமயத் தொடர்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட அச்சுக்கலை, நாளடைவில் மக்களிடையே உலக அறிவையும் தேசிய உணர்வையும் வளர்த்தது. இவற்றினை அடிப்படையாகக் கொண்டு அறிவியலில் ஏற்பட்ட வியக்கத்தகு முன்னேற்றத்தால் அச்சுக்கலை மின்சாரத்தின் துணைக் கொண்டு தொடர்பியல் பணியாற்றத் தொடங்கியது. இதனால் மக்களுக்கு செய்திகள் விரைவாகவும் தெளிவாகவும் கிடைத்தன. மனித வாழ்வில் வேகமும் எதையும் விரைவாகச் செய்ய வேண்டும் என்ற உந்துதலும் விரைவானச்
தொடர்பியல் மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்தன. புதிய தொழில்நுட்பங்கள் இவற்றில் அறிமுகம் செய்யப்பட்டு அச்சிடும் முறை, அச்சு இயந்திரம், செய்தி சேகரிக்கும் முறை, போன்றவற்றில் வளர்ச்சி என்பது அடைந்துள்ளது. இதனால் செய்திகளை விளக்கமாக வெளியிடவும் படங்கள் மற்றும் முந்தைய நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுச் செய்திகளை வெளியிடுவதில் இவை முன்னிலை வகிக்கின்றன. எனவே மக்களால் இவை கூர்ந்து கவனிக்கப்படுகின்றன.
இதனால் ஏராளமான அச்சு ஊடகங்கள் தோன்றி தங்களின் பங்களிப்பை நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் செய்து வருகின்றன. அதன்படி 1890 இல் வெளிவந்த சுதேசமித்திரன் தான் தமிழில் முதல் முதலில் வெளிவந்த நாளிதழாகும். அதனைத் தொடர்ந்து பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு வகையான ஊடகங்கள் வந்துள்ளன. அதன்படி தற்போதும் இவற்றின் மூலம் சமூக விழிப்புணர்வுப் பணி என்பது தொடர்கின்றது. நாளிதழ்கள், வார இதழ்கள் மற்றும் மாத இதழ்கள் என, பல்வேறு வகைகளில் கருத்துக்களில் களஞ்சியமாக திகழ்கின்றது. விடுதலைக்கு முன் தோன்றிய இதழ்கள் மக்களிடம் விடுதலை வேட்கையினை ஊட்டியது. விடுதலைக்குப் பின்னரும் ஏன் தற்போது உள்ள காலம் வரை மக்களின் கருத்துக்களை எடுத்துரைப்பதிலும் நாட்டின் முன்னேற்றத்திலும் முக்கியப் பங்காற்றுகின்றது.
உள்ளத்து உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி, மகிழ்ச்சியை வழங்கி, ஓர் உயர்ந்த குறிக்கோளை நோக்கி நம்மை அழைத்துச் செல்வதே இவற்றின் பணி. சிறந்த அச்சு ஊடகங்கள் என்பது, செய்திகள் மட்டுமின்றி பல்துறைத் தகவல்களை, காண்பவர் கண்களை கவர்ந்திழுத்து, படிக்கத் தூண்டி விட வேண்டும். கூறுகின்ற கருத்துகளாலும் செயல்பாடுகளாலும் வாசகர்களை ஈர்க்க வேண்டும். மக்களின் தேவைகளுக்கும் நிறைவுகளுக்கும் ஏற்ப பல பல வகையான ஊடகங்கள் தோன்றியுள்ளன. அவைகள் செய்திகளையும் கருத்துகளையும் பரப்பும் பணியில் ஈடுபடுகின்றன. அதன்படி பத்திரிகைகள் சட்டத்திற்கு உட்பட்டு எவற்றைப் பற்றியும் செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பத்திரிகைகளின் நோக்கம் பலவையாக இருக்கலாம் இதில் பெரும்பாலும் சமூக விழிப்புணர்வுக் காகவே பத்திரிகைகள் துவங்கப்படுகின்றன. சிலர் மட்டுமே இதனை ஒரு தொழிலாகக் கருதுகின்றனர். பலர் இவற்றை சேவையாகக் கருதி இவற்றை நடத்தி வருகின்றனர். சமூக நலன் மற்றும் கலை உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே நல்ல பத்திரிகைகளை நடத்த முடியும். அதற்கு நல்ல உதாரணம் “ஆளுமைச் சிற்பி”. சமூகப் பொறுப்புடன் மற்றும் பொதுநலத்துடனும் சிறப்பாகச் சேவையாற்றி வருகின்றது இதுவே உண்மையான பத்திரிக்கை தர்மம்.
அச்சு ஊடகங்களின் தனித்தன்மை
அச்சு ஊடகங்கள் என்பது பாமரர்களின் பல்கலைக்கழகம் ஆகும். காலை எழுந்தவுடன் படிப்பு என்றார் பாரதியார். அது மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் தான். நாள்தோறும் மனிதன் படித்துக் கொண்டே இருந்தால்தான் புது மனிதனாக இருக்க முடியும். இல்லாவிடில், உலகத் தொடர்பில் இருந்து விடுபட்டு விடுவான். இதற்குப் பெரிதும் துணை நிற்பவை அச்சு ஊடகங்கள். எந்தச் சமூகப் பின்புலமும் இல்லாத நலிந்த மக்கள் பெரும்பாலும் வேறு எங்கு சென்றும் தகவல்களை கேட்பதில்லை, படிப்பதில்லை, குறைந்த விலையில் பாமரர்களுக்கு தகவல்களை தெரிவிக்கும் சாதனமாகவும் உலகை ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்குள் அடக்கிவிடும் வல்லமையும் இதற்கு எப்போதும் உண்டு.
பெரும்பாலும் நாளிதழ்கள் என்பவை அனைத்து வகைச் செய்திகளையும் வெளியிடும், நாம் அவற்றை பொறுமையாகப் படிக்கலாம். இவற்றில் தலையங்கம் என்ற தலைப்பில் வெளியிடப்படும் கட்டுரைகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். தலையங்கம் இதழின் தரத்தினை உயர்த்துகின்றது. இதனால் சமுதாயத்திற்கு தகவல்கள் கிடைக்கின்றன. தற்போதைய சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்டு மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்துகின்றன. என்னதான் காட்சி ஊடகங்களில் ஒலி ஒளி மூலம் செய்திகளைப்
பார்த்தாலும் எழுத்து வடிவில் அச்சு ஊடகங்களில் படிப்பதற்கு தான் மனது ஏங்குகின்றது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அச்சு ஊடகங்களில் தரம் மற்றும் தனித்தன்மை என்பது அதனுடைய ஆசிரியர் கையில் தான் உள்ளது. ஆம் மாணவர்களுக்கு ஒரு நல்ல ஆசிரியர் கிடைத்தால் எவ்வாறு அவர்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்குமோ, அதே போலவே ஒரு ஊடகத்தின் வெற்றி மட்டும் தனித்தன்மைக்கு ஆசிரியர் அவர்களின் திறமை மட்டும் தான் காரணமாக அமைகின்றது.
இப்பொறுப்பினை அனுபவம் வாய்ந்த தலைமை ஆசிரியர் (Chief Editor) எடுத்துக் கொள்கின்றார். இதற்குத் துணையாக இணை ஆசிரியர்கள் (Sub Editor) ஒவ்வொரு பகுதிக்கும் செய்தியாளர் மற்றும் எழுத்தாளர்கள் பணிபுரிவர். இவர்களே அந்த ஊடகத்தின் இதயமானவர்கள். ஒவ்வொரு செய்தியையும் வகைப்படுத்தி அதனைப் பிரித்து தேவை எது? தேவையில்லாதது எது? என மக்கள் விருப்பப்படியான செய்திகளை வழங்குவது இவர்களின் தலையாயப் பணி. ஒருவர் செய்தியின் முகப்பை மட்டும் பார்த்துவிட்டு அவற்றை முழுவதும் படிக்க வேண்டுமா இல்லையா என்பதனை தீர்மானிப்பார். ஒரு நல்ல முகப்பு தலைப்பால் கவரப்பட்ட ஒருவர் அவற்றின் முழு ஈடுபாடு கொண்டு முழு செய்தியையும் படிக்கும் ஆவலை கொண்டு வருவதுதான் இவர்களின் பணி. இவற்றை நாளிதழ்கள் இன்று வரை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு வருகின்றன.
அந்த வகையில் ஆசிரியர் தலையங்கம் (Editorial Page/Option Page) கட்டுரைகள் (Articles) கருத்துப்படம் (Cartoon) ஆசிரியர் கடிதங்கள் (Letters to the Editor) மற்றும் சிறப்புப் பேட்டிகள் முதலியவற்றை வெளியிடுகின்றனர். இதனால் மக்களிடத்தில் நல்ல வரவேற்புக் கிடைக்கின்றது. மேலும் தொடர்ந்து படிக்கும் வாசகர்களுக்கு மனச்சோர்வு ஏற்படாமல் இருக்க இடையிடையே சிரிப்புப் படங்கள், நகைச்சுவைத் துணுக்குகள், திரைப்படச் செய்திகள், ஜோதிடக் குறிப்புகள், சமையல் குறிப்புகள், முதலியவற்றை இவைகள் வெளியிடுகின்றன. செய்திகளை வெளியிடும் ஒவ்வொரு நாளிதழும் தன்னுடைய நிலைப்பாட்டிற்கு ஏற்பவும் கால சூழலுக்காகவும் தனது மனநிலைக்கு ஏற்ப செய்திகளை வெளியிடுகின்றன.
என்னதான் அச்சு ஊடகங்கள் பரிமாண வளர்ச்சி காரணமாக மின்னிதழ்கள் (E-Paper) வந்தாலும் அவற்றுக்கான வரவேற்பு என்பது மிகக் குறைவு தான். ஏனென்றால் நம்மில் பலரின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்றால் எதையும் தொட்டு உணர்ந்து பார்ப்பது மற்றும் படிப்பதில் தான் ஆர்வம் இருக்கும். எனவே மின்னிதழ்களுக்கான வரவேற்பு என்பது குறைவாகவே உள்ளது. ஒரு கடைக்குச் சென்று ஒரு நாளிதழ் வாங்கி, பக்கம் பக்கமாய் புரட்டிப் பார்க்கும் சுகம் மின்னிதழ்களில் வருவதில்லை.
மாநில, தேசிய, உலக அரசியல் நிகழ்வுகளை அலசுவதில் நாளிதழ்கள் தனிக் கவனம் செலுத்துகின்றன. பெரும்பாலும் தேர்தல் நேரங்களில் நாளிதழ்களில் வெளியாகும் அரசியல் கட்டுரைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. எனவே தான் இதற்கு தற்போதும் வரவேற்பு இருந்து கொண்டே இருக்கின்றது. கிராமப்புற பாமர மக்களின் வாழ்வின் இவ்வகை ஊடகங்கள் பெரும் தாக்கத்தினை ஏற்படுகின்றன. எனவே தான் காட்சி மற்றும் மின்னணு ஊடகங்களின் ஹிமாலய வளர்ச்சிக்கு மத்தியில் அச்சு ஊடகங்கள் இன்றளவும் தனித்தன்மையுடனும் செயல்படுகின்றது. இவ்வாறு இருக்கையில் அச்சு ஊடகங்களில் ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன.
ஆம், ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்வுகள் உடனுக்குடன் அச்சிட்டு செய்தியாக வெளிவருவதில் சிக்கல்கள் உள்ளன. மேலும் ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கு என்று ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு செய்திகளில் பாரபட்சம் காட்டுவது தற்போது அதிகரித்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும். மக்களின் கருத்தினை பிரதிபலித்து நல்லவற்றைப் பாராட்டி தவற்றை சுட்டிக்காட்டி நாட்டு நடப்பு செய்திகளை சரியான முறையில் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்வதே சிறந்த ஊடகமாகும். உண்மையான செய்திகளை உண்மை மாறாமல் பத்திரிக்கை தர்மத்தின் அடிப்படையில் கொடுப்பதில் பாரபட்சம் ஒளிவு மறைவு அவசியமே இல்லை, ஆண்டியையும் அரசனையும் ஒன்றாக பாவிப்பது தான் பத்திரிக்கைத் துறை, எனவே ஊடகங்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் நாட்டிற்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நலம் கிடைக்கும்.