வெள்ளோட்டம் வெல்லட்டும் – 7
இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு
கொதிக்கும் பாத்திரத்திலிருந்து ஒரு சில அரிசிப் பருக்கைகளை அம்மா, கரண்டியில் எடுத்து நசித்துப் பார்த்து சாதத்தின் தன்மையை சோதிப்பதை சிறுவனாக அருகிருந்து பார்த்திருக்கிறேன். ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்ற பழமொழி உண்டு. நசிந்த அரிசிப் பருக்கை மறுபடியும் சாப்பாட்டு தட்டுக்கு வருவதில்லை. ஓர் பருக்கையைச் சோதித்து தியாகம் செய்வதின் மூலம் முழு சாப்பாட்டின் தரம் அளக்கப்படுகிறது. இதை அழிப்புச் சோதனை (Destructive Test) என்று பொறியியல் துறையில் குறிப்பிடுவார்கள்.
வாகனப் பாதுகாப்புச் சோதனைகள் விபத்துகளில் சிக்கினால் எந்த விதமான பாதிப்புகள் வாகனங்களுக்கு ஏற்படுகின்றன? இருக்கைப்பட்டை எப்படி விபத்துகளில் பயணிகளைப் பாதுகாக்கிறது? போன்ற பல கேள்விகளுக்கு விடை தேவை. இதற்கு அழிப்புச் சோதனை பயன்படுகிறது. அரிசி உதாரணத்தைப் போல, ஒரு சில வாகனங்களைச் சோதிப்பதின் மூலம் அதே வகையைச் சேர்ந்த பிற வாகனங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
மோதல் சோதனை வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதாலோ, சாலை தடுப்புகளில் மோதுவதாலோ பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்து நிகழும் முன்பே, வாகனம் எப்படி விபத்துகளை எதிர்கொள்கிறது என்பதை வடிவமைப்பு பொறியாளர்கள் சோதித்துப்பார்ப்பார்கள். இதில் முக்கியமானது மோதல் சோதனை
(Impact Test). சோதனைக்கூடத்தில் வாகனத்தை அதிவேகமாக ஒரு கான்கிரீட் /உலோகத் தடுப்பில் மோத வைத்துச் சோதிப்பார்கள். நேருக்கு நேர் மோதுதல் (Full Frontal Impact), பக்கவாட்டில் மோதுதல் (Side Impact), பின்பக்கமாக மோதுதல் (Rear Impact) எனப் பல வகைகளில் இந்தச் சோதனைகள் நடைபெறும். ஒரு கம்பத்தில், மரத்தில் வாகனத்தின் ஒரு பக்கம் மோதுவதைச் சித்தரிப்பதைப் போல, ஒரு பக்க மோதல் (Offset Frontal) சோதனைகளும் உண்டு . இந்தச் சோதனைகள் சர்வதேச தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி (International Standards) நடத்தப்படும்.
சோதனையில், வாகனம் மோதும் போது ஓட்டுனரை எப்படிக் காப்பாற்றுவது? சோதனை வாகனத்தில் மனித ஓட்டுனர் இருக்க மாட்டார். அவருக்குப் பதில் மனித பொம்மை (Dummy) பயன்படுத்தப்படும். ஓட்டுனரின் உயிரைக் காப்பாற்ற மனித பொம்மையைப் பயன்படுத்துவது சரி தான் ஆனால் மனித பொம்மை எப்படி வாகனத்தை ஓட்டி மோதச் செய்யும்? உங்கள் கேள்வி சரி தான். உண்மையில் மோதல் சோதனையில், வாகனம் இன்ஜினை இயக்கி செலுத்தப்படுவதில்லை. மாறாக, வாகனத்தில் அடியில் ஒரு கொக்கி அமைக்கப்பட்டு, அந்த கொக்கியின் மூலம் வாகனம் வேகமாக இழுக்கப்பட்டு தடுப்பின் மீது மோதும் படி செய்யப்படும். கொக்கியை இழுத்து வருவதற்காக சோதனைக்கூடத்தின் தரைத்தளத்தில் நேர்க்கோடாக ஒரு திறப்பு உண்டு. ஓட்டுனர் மட்டுமின்றி வாகனப் பயணிகள் போல பிற இருக்கைகளிலும் மனிதப் பொம்மைகளே சோதனையில் பயன்படுத்தப்படும். குழந்தைப் பொம்மைகளும் சோதனையில் பயன்படுத்தப்படும்.
சோதனையில் என்ன அளக்கிறார்கள்?
சோதனை முழுவதும் அதிவேக கேமிராவில் பதிவு செய்யப்படும். பின்னர், காட்சிகளைப் பார்த்து, படிப்படியாக வாகனத்துக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பொறியாளர்கள் ஆராய்ந்து அதற்கேற்ப வடிவமைப்பு மாறுதல்களைச் செய்வார்கள். வாகனம் சந்திக்கும் விசையின் அளவு ஏற்படும் அதிர்வுகள் உள்ளிட்டவைகளும் உணரிகளின் (Sensors) மூலம் அளவிடப்படும். சோதனையில் பயன்படுத்தப்படும் மனிதப் பொம்மைகளிலும் உணரிகள் பொருத்தப்பட்டிருக்கும். முதுகுத்தண்டு உள்ளிட்ட உடல் பாகங்களில் உணரிகள் இருக்கும். மூன்று வகையான உணரிகள் பயன்படுத்தப்படும். மோதலினால் ஏற்படும் முடுக்க விசையை
(G Forces) அளக்கும் முடுக்கமானி (Accelero meter), உடல் பாகங்களில் செலுத்தப்படும் விசையை அளக்கும் பளு உணரி (Load Sensors), விசையால் உடல் பாகங்கள் எந்த அளவுக்கு அழுத்தப்படுகின்றன என்பதை அறிய அசைவு உணரிகள் (Motion Sensors) ஆகியவை மனிதப் பொம்மைகளில் பொருத்தப்பட்டிருக்கும்.
சோதனையின் முடிவில் இந்தக் காரணிகளை எல்லாம் ஆராய்ந்து, பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் வாகன வடிவமைப்பில் மாறுதல்களைப் பொறியாளர்கள் செய்வார்கள்.
நொறுங்கும் பகுதிகள்
இரு சக்கர வாகன ஓட்டிகளைக் காக்கும் தலைக்கவசம், மோதலின் போது சேதமடையும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. மோதலினால் ஏற்படும் விசையை, சேதமடைவதன் மூலமாக அது உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் வாகன ஓட்டியின் தலை பாதுகாக்கப்படுகிறது. இதைப்போல், கார், பேருந்து போன்ற வாகனங்களிலும் நொறுங்கும் பகுதிகள் (Crumble zones) வடிவமைக்கப்படுகின்றன. விபத்தில் வாகனங்கள் சிக்கும் போது, இந்தப் பகுதிகள் உடனடியாக சேதமாகி விசையை வாகனத்தின் மற்ற பகுதிகளுக்கும் பயணிகளுக்கும் கடத்தாமல் தடுக்கின்றன.
இருக்கைப் பட்டைகள் விபத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்பவை இருக்கைப் பட்டைகள் (Seat Belts). இருக்கைப் பட்டைகள் எப்படி நடைமுறையில் பயனளிக்கின்றன என்பது சோதனைகளின் மூலம் உறுதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு முறையும் வாகனத்தை மோதவிடாமல் தண்டவாள அமைப்பில், இருக்கைகளுடன் நகரும் மேடைகள் அமைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்படுகின்றன. இருக்கைப்பட்டை அணிந்த மனிதப் பொம்மைகள் இந்த நகரும் மேடையோடு அதிவேகத்தில் உந்தப்பட்டு சடுதியில் நிறுத்தப்படுவார்கள். உடனடி நிறுத்தத்தினால் ஏற்படுகிற விளைவுகள் ஆராயப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இந்தச் சோதனைக்கு எதிர்முடுக்க இழுப்பு (Deceleration sled Test) சோதனை என்று பெயர்.
காக்கும் காற்றுப்பைகள்
விபத்தில், இருக்கைப்பட்டையோடு கூடுதல் பாதுகாப்பு அரணாக பயணிகளின் உயிர் காப்பவை காற்றுப்பைகள் (Air Bags) காற்றடைத்த பையடா என்று பாடப்பட்ட மனித உடலின் சுவாசக்காற்றைக் காப்பாற்றுவது காற்றுப்பைகள் தான்! விபத்தில் சிக்கும் வாகனம் சடுதியில் வேகம் குறையும். இதை உணரிகளின் மூலம் அறிந்து காற்றுப்பை செயல்படத்துவங்கும். இதன் மின்னணு மூளை, வெடிபொருளை (Pyro) உசுப்பும். இதனால் மடித்து வைக்கப்பட்ட காற்றுப்பை நைட்ரஜன் வாயுவினால் சடுதியில் நிரப்பப்பட்டு விரிவடையும். விரிவடைந்த காற்றுப்பை ஓட்டுனரின் தலை ஸ்டியரிங் வீலில் மோதாமல் தாங்கிப்பிடிக்கும். பையின் பின்புறமுள்ள துளைகளின் வழியாக வாயு வெளியேறுவதால், வெடித்து விடாமல் மெத்தை போல ஓட்டுனரைத் தாங்கிப்பிடிக்கும். பிறகு படிப்படியாக வாயு வெளியேறிய பிறகு காற்றுப்பை சுருங்கிவிடும். கண்ணிமைக்கும் நேரம் ஏறக்குறைய 300 மில்லி வினாடிகள். ஆனால் காற்றுப்பை ஏறக்குறைய 50 மில்லி வினாடிகளுக்குள் செயல்பட வேண்டும். பல சோதனைகளின் மூலம் காற்றுப்பைகளின் செயல்பாடு ஆராய்ந்து உறுதிப்படுத்தப்படுகிறது.
பருக்கை சோற்றைப் போல, சோதனைக்கு உள்ளாகும் வாகனத்தையும் கருவிகளையும் மறுபடியும் பயன்படுத்த முடியாது. ஆனால் அவைகளால் தான் பிற வாகனங்கள், பாதுகாப்பு உத்தரவாதத்துடன் சாலைகளில் பயணிக்கின்றன. சிலரின் தியாகங்கள் பலரை வாழ வைக்கும் என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி வாகனங்களுக்கும் பொருந்தும்.
ஒன்றிய அரசின் கனரக தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தானூர்தி ஆராய்ச்சி கூட்டமைப்பு (Automotive Research Association of India) இந்தியாவில் வாகனப் பாதுகாப்பு சோதனைகளை நிர்வகிக்கிறது.
வாகனத்தில் பெட்டி உள்ளிட்ட சாமான்களை ஏற்றிக் கொண்டு பயணம் செய்கிறோம். அந்தப் பெட்டிகளால் ஏற்படும் ஆபத்துகளை ஆராயவும் சோதனை உண்டு என்ன சோதனை?
(சோதனை தொடரும்)