மாண்புமிகு ஆசிரியர்கள் -10
முகில்
ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளின் படங்களைத் தெளிவாகப் போட்டு, அறிவியல்பூர்வமாக விளக்கும் கொடுக்கும் குறிப்பிட்ட பாடத்தைக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் ஆசிரியர்களே அதிகம். ‘அதெல்லாம் எக்ஸாம்ல கேட்க மாட்டாங்க. அப்படிக் கேட்டா சாய்ஸ்ல விட்டுருங்க’ என்று அலட்சியமாகச் சொல்லிவிடுவார்கள். உள்ளங்கை மொபைலில் எல்லாமும் எல்லோருக்கும் எளிதாகக் கிடைத்துவிடும் என்ற நவீன சூழலிலும் இந்த தயக்க நிலை, மயக்க நிலை மாறவில்லை. குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலிலும் ‘பாலியல் கல்வி’ குறித்த அவசியம் இந்தியாவில் உணரப்படவில்லை. அதற்கான முயற்சிகள் முழு மூச்சில் முன்னெடுக்கப்படவில்லை. அறிவிக்கப்படும் திட்டங்கள் எல்லாம் ஆரம்பிக்கப்பட்டு சில காலத்திலேயே அஸ்தமனமாகிவிடுகின்றன என்பதே உண்மை.
ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டம் சர்மதுராவைச் சேர்ந்தவர் ராஜூ செய்ன். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்புக்குப் பிறகு இஷ்டப்பட்டு சட்டப்படிப்பு முடித்தார். ஆனால், நீதிமன்றங்களில் நியாயத்துக்காகப் போராடுவதைவிட, கல்வி மூலம் அடுத்த தலைமுறையினரைக் கைதூக்கிவிடுவது மிக முக்கியமானது என்று தோன்றியது. ஆகவே, ஆசிரியர் பயிற்சி பெற்று அரசுப் பள்ளி ஆசிரியராகத் தேர்வானார்.
பணியில் சேரும்போதே ராஜூ தெளிவாக ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டார். மாணவர்களுடன் தோழமையுடன் பழக வேண்டும். படிப்பும் பரிட்சையும் மட்டுமே வாழ்க்கை என்று அவர்கள் உணரக்கூடாது. உலக அறிவை வளர்த்துக் கொள்ளவும், நம்பிக்கையுடன் சமுதாயத்தை எதிர்கொள்ளவும் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் வாய்ப்பு ராஜூவுக்கு அமைந்தது. சவாலான பணிதான். இன்னமும் பிற்போக்குத்தனம் நிறைந்த பகுதி. ரகசியமாக அல்ல, வெளிப்படையாகவே குழந்தைத் திருமணங்கள் அங்கே நடப்பது உண்டு. பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தையை ஏதாவது ஒரு சாதாரணமான காரணத்துக்காக ‘இனி படிக்க வேண்டாம்’ என்று நிறுத்தி விடுவார்கள். அந்த பெண் குழந்தைகளும் ஏதாவது அசௌகரியமாக உணர்ந்தால், தங்கள் தைரியமின்மையால், அறியாமையால் பள்ளிக்கு வராமல் ஒதுங்கிவிடுவார்கள்.
இப்பேர்ப்பட்ட சூழலில், ஓர் ஆசிரியராக, அந்தப் பெண் குழந்தைகளுக்கு கல்வியின் அவசியத்தை உணரச் செய்ய வேண்டிய கடமை ராஜூவுக்கு இருந்தது. பெண் குழந்தைகள் அதை உணர்ந்தால், பெற்றோரிடம் எடுத்துச் சொல்வார்கள். ஏதாவது ஒரு காரணத்துக்காக ‘படித்தது போதும்’ என்று பெற்றோர் முடிவெடுத்தால் அந்தக் குழந்தைகள், ‘பள்ளிக்குச் செல்வேன்’ என்று போராடுவார்கள். அதற்குப் பெண் குழந்தைகளுக்கு படிப்பின் மீது ஆர்வத்தை உண்டாக்க வேண்டும். கற்றலை இன்பமாக்க வேண்டும்.
அறிவியலும் கணிதமும் கற்றுக் கொடுத்த ராஜூ, அந்தப் பாடங்களை எளிமையாகச் சொல்லிக் கொடுத்தார். எண்களையும், ஃபார்முலாக்களையும், தியரிகளையும், டீட்டாக்களையும் செய்முறைகளையும், அறிவியல் விதிகளையும், மாணவிகளின் தோழிகளாக்கினார். ஆக, மாணவிகள் விரும்பும் நல்லாசிரியராக ராஜூவின் பணி தொடர்ந்து கொண்டிருந்தது.
அப்பேர்ப்பட்ட ஒருவர்தான் ‘அந்த ப்ராஜெக்ட்’டுக்குச் சரியானவர்கள் என்று ராஜூவை அந்தப் பள்ளியிலிருந்து தேர்ந்தெடுத்தார்கள். ராஜஸ்தான் அரசின் புதிய திட்டம். மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் கல்வி கற்றுத் தருவது. ராஜஸ்தான் அரசும் Children’s Investment Fund Foundation (CIFF) என்ற பிரிட்டனைச் சேர்ந்த அமைப்பும் இணைந்து 2018-ம் ஆண்டில் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். மாவட்ட வாரியாகப் பள்ளி ஆசிரியர்களுக்கு அதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
பால்வினை நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி, கருத்தடைச் சாதனங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பது குறித்தெல்லாம் பயிற்சியாளர் சொல்லிக் கொண்டிருந்தபோது ஆசிரியர் ராஜூவுக்கு வியர்த்தது. இதையெல்லாம் நான் போய் மாணவிகளிடம் சொல்ல வேண்டுமா? வெளிப்படையாகப் பேச முடியுமா? தப்பாக எடுத்துக் கொள்வார்களே. யாராவது அவர்கள் வீட்டில் சென்று புகார் செய்துவிட்டால், ஊரே திரண்டு அடிக்க வந்து விடுவார்களே? இதனால் ஏதாவது ஒரு மாணவியைப் ‘பள்ளிக்கெல்லாம் போக வேண்டாம்’ என்று பெற்றோர் நிறுத்திவிட்டால்கூட அதற்கு நான் காரணமாகி விடுவேனே. ராஜூவுக்குத் தலைசுற்றியது.
அன்று இரவு வீட்டுக்குச் சென்றார். மனைவி சாதாரணமாகக் கேட்டார். ‘டிரெய்னிங் எப்படி இருந்தது?’ ராஜூவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. பொதுவாக ஏதோ சொல்லிவிட்டு பேச்சை மாற்றினார். தொடர்ந்து அடுத்தடுத்த நாள்கள் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றபோது, ராஜூ தன் அறியாமையை உணர்ந்து கொண்டார். ‘அடச்சே! பாலியல் கல்வி என்றால் வெறும் உடல் உறவு சார்ந்ததென்று நானும் தவறாக நினைத்துக் கொண்டிருந்திருக்கிறேன். முட்டாள்தனமான புரிதல். இது எவ்வளவு முக்கியமானது! இது குறித்து அடுத்தத் தலைமுறைக்கு விழிப்புணர்வை உண்டாக்க வேண்டியது ஓர் ஆசிரியரின் கடமை அல்லவா!’
ராஜூ மனத்தளவில் தயாராகத் தொடங்கினார். முதலில் தன் மனைவியிடம் இருந்தே உரையாடல்களை ஆரம்பித்தார். தயக்கங்களைக் களைந்துவிட்டு வெளிப்படையாகப் பேசினார். கேள்விகள் கேட்கச்சொல்லி, தான் அறிந்து கொண்டவை குறித்து பேசினார். அது உபயோகமானதாக இருந்தது. அடுத்து தனது குழந்தைகளிடம் பேசினார். Good Touch, Bad Touch என்ற பால பாலியல் பாடத்திலிருந்து தொடங்கி பல்வேறு விஷயங்களை எடுத்துச் சொன்னார். அது ராஜூவுக்குத் தெளிவையும் தைரியத்தையும் கொடுத்தது.
அடுத்து ராஜூ, தன் மாவட்டத்தைச் சேர்ந்த சக ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டியதிருந்தது. பாடங்களை ஆரம்பித்தார். ‘என்னடா இது, விடுமுறை நாளிலும் டிரெய்னிங் என்று பாடாய்ப்படுத்துகிறார்களே!’ என்ற சலிப்புடன்தான் பெரும்பாலான ஆசிரியர்கள் அங்கே அமர்ந்திருந்தார்கள். கவனமின்றி ஏதோ யோசனையில் இருந்தார்கள். கொட்டாவி விட்டார்கள். தூங்கி வழிந்தார்கள். இருந்தாலும் ராஜூ, அவர்கள் கவனத்தைக் கவரும்படி கேள்விகள் கேட்டார். அவர்களைக் கேள்விகள் கேட்க வைப்பதன் முதல் உரையாடலை வளர்த்தார். போகப் போக, பெரும்பாலான ஆசிரியர்கள் உரையாடலில் கலந்து கொண்டார்கள்.
சில ஆசிரியர்கள், மிகச் சாதாரண விஷயத்தில்கூட தெளிவின்றி இருப்பது ராஜூவுக்கு அதிர்ச்சியளித்தது. பலரையும் உரையாட வைத்தார். தயக்கங்களைக் களையச் செய்தார்.
‘பாலியல் கல்வி என்றால் உடற்கூறு அமைப்பினைச் சொல்வது. அவற்றைப் பாதுகாக்கும் வழிகளை தெளிவுபடுத்துவது. நம் உடல் மீது நமக்கிருக்கும் உரிமையைச் சொல்லி, இந்த உரிமைக்குள் அந்நியர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை எதிர்கொள்வது எப்படி என்று எடுத்துச் சொல்வது. இப்படிப்பட்ட தேவையான விஷயங்களை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வினை ஏற்படுத்தும் உளவியல் சார்ந்த அடிப்படைப் பாடம் அவ்வளவுதான்’ என்று எடுத்துச் சொன்னார்.
‘ஒவ்வொரு மாணவனும் மாணவியும் பாலியல் சார்ந்த விழிப்புணர்வு பெறும்போது சமூகத்தில் குற்றங்கள் குறையும். பருவ வயதில் பாலியல் இச்சைகள் சார்ந்து அவர்களுக்கு உண்டாகும் கவனச்சிதறல் குறையும். ஆண் – பெண் நட்புறவு மேம்படும். மேன்மையும் பக்குவமும் நிறைந்த வருங்கால சமுதாயம் உருவாகும்’ என்று அதன் அவசியத்தை உணர வைத்தார்.
ராஜூவுக்கும் முதல் முதலாகத் தன் மாணவிகளின் முன்பு சென்று நின்று பாலியல் கல்வி வகுப்பு எடுக்கும்போது நாக்கு வறண்டது. வயிற்றில் பயப் பட்டாம்பூச்சிகள் பறந்தன. எப்படி ஆரம்பிப்பது என்று தடுமாறினார். இருந்தாலும் ஆசிரியர்களைவிட அடுத்த தலைமுறை மாணவிகளுக்குப் பல்வேறு விஷயங்கள் தெரியும் என்ற நம்பிக்கையுடன் உரையாடலைத் தொடங்கினார்.
மாதவிடாய் நாள்கள், அது குறித்த அறிவியல்பூர்வமான விளக்கம், அதில் பெண்களுக்கான பிரச்னைகள், தவறான புரிதல்கள், தேவையற்ற பயம், மூட நம்பிக்கைகள், சானிடரி நாப்கின் பயன்படுத்துவதன் நன்மைகள் – இவை பற்றியெல்லாம் விரிவாகப் பேசினார். ஆரம்பத்தில் நெளிந்த, தலையைக் குனிந்து கொண்ட, ரகசியமாகச் சிரித்த மாணவிகள், பின்பு காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தனர். தாங்கள் மாதந்தோறும் எதிர்கொள்ளும் வலி குறித்து, புரிதலோடு ஓர் ஆசிரியர் பேசுகிறார் என்பது அவர்களது தயக்கத்தை உடைத்தது.
‘யாருக்காவது சந்தேகம் இருந்தா கேட்கலாம்’ என்று ராஜூ சொன்னதும் நான்கைந்து கைகள் சட்டென உயர்ந்தன. கேள்விகளுக்குப் புன்னகையுடன் பதில் சொன்னார். பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ரூபி எழுந்து நின்றாள். அவளது குரல் நிம்மதியாக ஒலித்தது. ‘இவ்வளவு நாள் நான் ஏதோ பாவம் செஞ்சிட்டதாலதான் மூணு நாள் ரத்தமா வருதுன்னு பயந்து கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன் சார். மாதவிடாய் இயல்பானதுன்னு இப்ப தெரிஞ்சுக்கிட்டேன். தாங்க்யூ சார்!’
ராஜூவின் முகத்தில் நெகிழ்ச்சிப் புன்னகை. ஓர் ஆசிரியராகத் தான் நிச்சயம் செய்ய வேண்டிய சமூகக் கடமை இது என்று உணர்ந்து கொண்டார். பெண் குழந்தைகள் தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், வெளியாள்களோ, வீட்டிலிருப்பவர்களோ பாலியல் தொல்லைக்கு ஆளாக்க நினைத்தால் எப்படி அதிலிருந்து தப்பிக்க வேண்டும், எதையும் எதிர்த்துத் தைரியமாகக் குரல் எழுப்ப வேண்டியதன் அவசியம் என்ன என்பதை எல்லாம் தெளிவுபடுத்தினார்.
‘நீங்கள் ஏற்கெனவே தெரிந்தோ, தெரியாமலோ பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருந்தால் அதில் உங்கள் தவறு எதுவுமில்லை. நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. அதில் இருந்து மீண்டு வருவது முக்கியம்’ என்று புரிய வைத்தார். பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கினார். பருவ வயதில் ஒரு பெண்ணின் உடல் குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவுக்குத் தயாராக இருக்காது, குழந்தைத் திருமணம் எவ்வளவு பெரிய தவறு என்று எடுத்துச் சொன்னார். பெண் குழந்தைகள் வீட்டுக்குச் சென்று தங்கள் பெற்றோரிடம் உரையாடினர். இப்படியாக தோல்பூரில் ‘சமூக மாற்றம்’ நிகழத் தொடங்கியிருக்கிறது.
ராஜூவால் பாலியல் கல்வி குறித்த பயிற்சி கொடுக்கப்பட்ட சுமார் 350 ஆசிரியர்கள், ராஜஸ்தானில் பல பள்ளிகளில் மாணவர்களுடன் உரையாடுகின்றனர். வகுப்புகள் எடுக்கின்றனர். விழிப்புணர்வு விதைக்கின்றனர். ராஜூவின் மாணவிகள் இப்போதெல்லாம் பெண் உறுப்பையோ, ஆண் உறுப்பையோ படம் வரைந்து, பாகம் குறித்து, அவை குறித்த அறிவியல்பூர்வமாகப் பேசுவதற்குத் தயங்குவதே இல்லை. அவர்களிடம் ‘தெளிவு’ பிறந்திருக்கிறது. தைரியம் நிறைந்திருக்கிறது.
‘அரசியல், சமூக, பொருளாதார அடிப்படையில் நடைபெறும் முக்கிய சமூக பிரச்சினைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பாலியல் தொடர்பான சின்ன விசயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால்தான் பல்வேறு சமூக பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பல்வேறு மண முறிவுகள் உண்டாகக் காரணம் அதுதான். எது உடல் சார்ந்த இச்சை, எது காதல், எது உண்மையான அன்பு என்றெல்லாம் உணர்ந்து கொள்ள பாலியல் கல்வி அவசியம்’ என்று ஆசிரியர் ராஜூ, தன் கடமையைத் தொடர்ந்து வருகிறார். ராஜஸ்தானில் வருங்காலத்தில் ஆரோக்கியமான சிந்தனைகள் கொண்ட இளைய சமுதாயம் உருவாகும் என்ற நம்பிக்கையை இந்த நல்லாசிரியர் விதைத்திருக்கிறார். l