சமூகப் பார்வை – 20

திரு. .திருமலை மூத்த பத்திரிகையாளர் 

யிரைத் தவிர ஏதுமில்லாமல் வாழ்வது உயிருடன் வாழ்வதை விடக் கொடுமையானது. இன்றைக்கு உலகில் கோடிக்கணக்கானோர் அப்படியொரு வாழ்வினை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் அகதிகள்.

நாடுகளுக்கு இடையிலான போர் அல்லது உள்நாட்டுப் போர் அல்லது வாழும் நாட்டில் ஏற்படும் அசாதாரணச் சூழ்நிலை ஆகியவற்றால் உயிர் பிழைக்க வேற்று மண்ணை நாடும் நிலையில் இருப்பவரை அகதி எனலாம். உடை கட்டுப்பாடு, வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மறுப்பு போன்ற காரணத்துக்காக ஒரு பெண் வேறு நாட்டில் தஞ்சமடைந்தாலும் அவரை அகதியாகக் கருதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறது சர்வதேச விதிமுறை.

போர், துன்புறுத்தல் அல்லது தீவிரவாதம் போன்றவற்றிலிருந்து தப்பிக்க, ஒவ்வொரு நிமிடமும் 20 பேர், எல்லாவற்றையும் விட்டு விட்டு உயிரை மட்டும் சுமந்துகொண்டு வாழ்விடத்தைவிட்டு வெளியேறுகின்றனர். உலக அகதிகளில் 86 சதவிகிதத்தினர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். 51 சதவிகித அகதிகள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்கிறது ஐ.நா. அறிக்கை.

தனது சொந்த நாட்டை, இனத்தை, மொழியை, குடும்பத்தை, உடைமைகளை, சொத்துக்களை, உறவுகளை, உத்தரவாதமான வேலையை, கல்வியை, சட்டரீதியான உரிமைகளை இழந்து உயிர்பிழைக்க வேறு நாட்டிற்குத் தஞ்சம் தேடிச் செல்லும் நிலை நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று.

சில ஆண்டுகளுக்கு முன் சிரியா நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரினால் ஐரோப்பாவில் தஞ்சமடையப் படகில் சிலர் பயணித்தார்கள். அப்படகு விபத்திற்குள்ளாகி, பலர் இறந்து போனார்கள். சிவப்பு நிறச் சட்டை அணிந்த மூன்று வயதுக் குழந்தை ஆலன் குருதியைக் கடல் அலை கரையில் ஒதுக்கியது. புரண்டு படுத்த நிலையில் கடற்கரையில் அமைதியாக இறந்து கிடந்தான் ஆலன். இந்தப் படம் பார்ப்போரின் உள்ளத்தை உலுக்கியது, அகதிகளின் வலியை, ஏக்கத்தை, துன்பத்தை, பரிதாப நிலையை, உரிமைகளற்ற சூழலை உலகிற்குப் பறை சாற்றியது அந்தப் படம்.

எண்ணிக்கை

உலகளவில் சுமார் 9.5 கோடி மக்கள் அகதிகளாக இருக்கிறார்கள். மொத்த அகதிகளில் 68 சதவிகிதம் பேர் சிரியா, வெனிசுலா, ஆப்கானிஸ்தான், தெற்கு சுடான் மற்றும் மியான்மர் நாடுகளைச் சார்ந்தவர்கள். இவர்களில் 3.5 கோடிப் பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கிறது ஐ.நா அவை. உலகம் முழுவதும் அகதிகளாக இருப்பவர்களுக்கு 2018 ஆண்டுச் சராசரியாக 2.9 இலட்சம் குழந்தைகளும் 2020ஆம் ஆண்டுச் சராசரியாக 3.4 இலட்சம் குழந்தைகளும் பிறந்துள்ளதாக ஐ.நா. தெரிவிக்கிறது. இப்புள்ளிவிவரங்கள் பெரும் கவலை அளிப்பதாகும்.

உலகில் அதிக அகதிகளைத் தோற்றுவிக்கும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது. சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரால் அண்டை நாடுகளுக்குக் குடிபெயர்ந்தவர்கள் 40 லட்சம் பேர். இந்தியாவில் உள்ள அகதிகளில், திபெத் அகதிகள், பர்மா அகதிகள், இலங்கைத் தமிழர்கள் ஆகியோர் முக்கியமானவர்கள்.

இன்று..

உயிர்பிழைத்தால் போதும் என்ற போர் சூழலில் உக்ரேன் நாட்டை விட்டு தனது குழந்தைகளோடு வெளியேறியவர்கள் சுமார் 54 லட்சம் பேர் என ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவரம் சொல்கிறது. இவர்கள் அகதிகளாகப் போலாந்து, ருமேனியா, ரஷ்யா, ஹங்கேரி, ஸ்லோவேகியா, மால்டோவா, பெலாரசி நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

நமக்கும் சிக்கல் இல்லாமல் இல்லை. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வரும் நிலையில், அங்குள்ள தமிழர்கள் சட்டவிரோதமாகக் கடல்வழியில் உயிரைப் பணயம் வைத்துப் படகுகளில் தமிழகத்திற்கு அகதிகளாக வரத் துவங்கி உள்ளனர். அப்படி வருவோரை இப்போதுள்ள சட்ட நடைமுறையின்படி, சிறையில் அடைக்க இராமேசுவரம் நீதிமன்றம் உத்தரவிட்டு வரும் நிலையில், இந்தப் பிரச்சினையைத் தமிழக அரசு எப்படி அணுகப்போகிறது என்ற கேள்வி எழுகிறது. 54 நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்கின்றனர். உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத் தமிழர்கள் என்று ஐ.நா.வின் யுனிசெப் அறிக்கை கூறுகிறது.

இலங்கை அகதிகள்

இலங்கையில் 1983ஆம் ஆண்டு உள்நாட்டு போர் துவங்கிய போது அந்நாட்டு ராணுவம் மற்றும் சிங்களர்களால் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். இதனால், இலங்கையிலிருந்து அகதிகளாக உலகம் முழுவதும் தமிழ் மக்கள் புலம்பெயரத் துவங்கினர். கடந்த 1983ஆம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 அகதிகள் வந்துள்ளனர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் (UNHCR), தமிழக மற்றும் இந்திய அரசின் மூலமாகச் சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் இலங்கைக்குத் திரும்பிச் சென்றுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள 108 முகாம்களில் 58,843 இலங்கைத் தமிழ் அகதிகள் தங்கியுள்ளனர். மேலும், முகாமிற்கு வெளியே உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து இலங்கை தமிழ் அகதிகள் 34,135 பேர் தங்கியுள்ளனர். மேலும், ஒடிசாவின் மல்கன்கிரியில் உள்ள அகதி முகாமில் 54 பேர் தங்கியுள்ளனர்.

தமிழக முகாம்களில் உள்ள அகதிகளின் குடும்பத் தலைவருக்கு மாதம் 1,500 ரூபாயும், 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000, 12 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ரூ. 500-ம் என உதவித்தொகையும், வருடாந்திர கல்வி உதவி, வீடு, மின்சாரம், குடும்பத்திற்கு மாதம் 20 கிலோ இலவச அரிசியும், மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன. முகாமிற்கு வெளியே கூலி வேலைக்குச் சென்று விட்டு மாலையில் முகாம்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.

2009இல் போர் முடிவுற்றதால், இலங்கையில் அவரவர் பூர்வீகத்தில் குடியேறத் தேவையான உதவிகளை இலங்கை மற்றும் இந்திய அரசு செய்ய முன்வந்த நிலையில், பலரும் குடும்பத்துடன் செல்ல தயாராக இருந்தனர். 2010 முதல் மார்ச் 2022 வரை 15,952 நபர்கள் தமிழக முகாம்களிலிருந்து இலங்கைக்குச் சென்றுள்ளனர் என இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழகம் கூறுகிறது. இந்தியாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் 37 லட்சம் பேரும், சீனாவில் 36 லட்சம் பேரும் நேபாளத்தில் 26 லட்சம் பேரும் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாத அகதிகளாக உள்ளனர் என்று ஜெனிவாவில் இயங்கும் புலம் பெயர்ந்தவர்களுக்கான கண்காணிப்பு மையம் தெரிவிக்கிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாகத் தமிழகத்திலிருந்து நிரந்தரமாக இலங்கைக்குச் செல்லவிருந்த பல அகதிகள் தங்கள் பயணத்தை ஒத்தி வைத்திருக்கிறார்கள். சிலரோ, “இனி இலங்கை செல்லவேண்டுமா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். “தற்போதுள்ள அரசியல் நிலைமை காரணமாக இலங்கைக்குக் கிளம்பத் தயாராக இருந்தவர்கள் மீண்டும் காத்திருக்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்” என்று இலங்கை அகதிகள் மறுவாழ்வுக் கழகம் தெரிவிக்கின்றது.

ஐ.நா.வின் உடன்படிக்கை

உலகம் முழுவதிலும் உள்ள அகதிகளைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை 1951இல் அகதிகளுக்கான உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கையைக் கொண்டு வந்தது. இவ்வுடன்படிக்கையானது 47 பிரிவுகளில் வெவ்வேறு வகையான உரிமைகளை, பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது. 1967இல் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான நெறிமுறைகளையும் கொண்டு வந்தது. அகதிகள் உரிமை தொடர்பாக உலகளாவிய சட்டமாக இவ்வுடன்படிக்கை உள்ளது. இவ்விதிகளின்படி, வாழ்க்கை அல்லது சுதந்திரத்திற்குக் கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் ஒரு நாட்டிற்கு அகதியைத் திருப்பி அனுப்பப்படக்கூடாது. இவ்வுடன்படிக்கையை ஏற்றுக்கொண்ட நாட்டில் அகதிகள் வேலை செய்வதற்கான உரிமையும், இருப்பிடத்திற்கான உரிமையும், கல்வி பெறுவதற்கான உரிமையும், பொது நிவாரணம் மற்றும் உதவிக்கான உரிமையும், மதச் சுதந்திரத்திற்கான உரிமையும், நீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமையும், அந்நாட்டிற்குள் சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமையும் பெறுகிறார்கள். இன்று வரை இந்தியா இந்த ஐ.நா.உடன்படிக்கையில் கையொப்பம் இடவில்லை.

குடியுரிமை

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில், அகதிகளின் குடியுரிமைக் கோரிக்கைகள் கருணையுடன் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனாலும் 2019ஆம் ஆண்டின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வந்த இந்துக்களைப் போல இலங்கையிலிருந்து வந்த அவர்களுக்குக் குடியுரிமை வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

அண்மையில் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “இலங்கைத் தமிழர்கள் இன்றைக்குப் பல துன்பங்களுக்கு, துயரங்களுக்கு ஆளாகியிருக்கக் கூடிய சூழ்நிலையில், பரிதவித்துக் கொண்டிருக்கக் கூடிய அந்தத் தமிழர்கள், அண்மையில் தமிழகத்திற்கு வந்துகொண்டிருக்கக் கூடிய செய்திகளை எல்லாம் நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதுதொடர்பாக மத்திய அரசிடமும், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் தொடர்புகொண்டு இதை எப்படிக் கையாள வேண்டும் என்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம். எனவே, அதற்கொரு விடிவுகாலத்தை இந்தத் தமிழக அரசு ஏற்படுத்தித் தரும்” என்றார். ஆறுதலான விஷயம்.

வாழ்க்கை சிதைக்கப்பட்ட நிலையில் உயிர் வாழ்தல் ஒன்றைத் தவிர வேறு எந்தப் பலனும் இல்லாத அகதிகளின் மனக்குமுறல்களை வெளி உலகம் கரிசனத்தோடு உணர வேண்டும். அகதிகளுக்கு வாழ்வும் உரிமையும் உரித்தாகவேண்டும்.

(ஜூன் 20 ஆம் நாளினைஉலக அகதிகள் தினம்அனுசரிப்பதற்கான நாளாக 2000ஆம் ஆண்டில் .நா. அவை அறிவித்தது)