சமூகப் பார்வை – 8

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

நகரச் சாலைகளில் பரபரப்பான போக்குவரத்துள்ள பகுதிகளில் சிக்னல் விழுந்தவுடன் குழந்தையும் கையுமாகச் சிலர் திடீரென முளைப்பார்கள். அல்லது குழந்தைகளே கையேந்தி நிற்பார்கள். மூடப்பட்ட காரின் கதவுகளைத் தட்டுவார்கள். நமக்கு எரிச்சல் எட்டிப்பார்க்கும். இந்தக் குழந்தைகள் எப்படிப் பிச்சையெடுக்க வந்தன என நாம் நொடிப்பொழுதும் யோசிப்பதில்லை. அப்படியே யோசித்தாலும் “வறுமையால் வந்திருப்பார்கள்” என்ற முடிவுக்கு வந்துவிடுவோம். இந்தக் குழந்தைகள் கடத்தப்பட்டுப் பிச்சையெடுக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என நமக்கு உறைக்க நாளாகலாம். குழந்தைகள் மட்டுமல்ல. பெண்கள், பெரியவர்கள் என எவரும் கடத்தப்படலாம். ஒவ்வொருவரும் வேறுவேறு காரணத்துக்காகக் கடத்தப்படுகிறார்கள். அல்லது காணாமல் போகிறார்கள்.
‘கடத்தப்படுவோர் அல்லது காணாமற்போவோர்’ என்பது இன்று உலகளாவிய ரீதியில் ஒரு முக்கியப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மனிதாபிமானம் பற்றி, மனித உரிமைகள் பற்றி எத்தனை அமைப்புகள் பேசினாலும் செயற்பட்டாலும் கூட இப்பிரச்சனைக்கு இன்றும் தீர்வு காண முடியவில்லை.

நாடுகளுக்கிடையே ஏற்பட்ட யுத்தங்கள், இனங்களுக்கிடையில் ஏற்பட்ட கலவரங்கள் போன்ற காரணங்களால் 20ஆம் நூற்றாண்டில் காணாமற் போனோர் எண்ணிக்கை மிக அதிகரித்தது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஹிட்லரின் கொடூரமான நடவடிக்கையின் காரணமாகப் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட யூத இனத்தவர் காணாமற் போனார்கள். அதேநேரத்தில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் சுவீடனைச் சேர்ந்த ரஓல் வொலண்பேக் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காணாமற் போனோரை மீட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. 1945ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி ரஓல் வொலண்பேக் ரஷ்யப்படையினால் அழைத்துச் செல்லப்பட்டார். இவர் என்ன ஆனார் என்பது இன்னும் புலனாகவில்லை.
போர், இனக்கலவரம் தவிர்த்து சுனாமி, பெருவெள்ளம் போன்றவற்றால் காணாமல் போனவர்கள் ஏராளம். 2004ஆம் ஆண்டுச் சுனாமியின் போது இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் காணாமல் போனவர்கள் பல்லாயிரக்கணக்கானோர். இதற்கு அடுத்தகட்டமாக, பாலியல் நோக்கத்திற்காகவும், விற்பனை நோக்கத்திற்காகவும், வேலை வாங்குவதற்காகவும், உடல் உறுப்புகளுக்காகவும், பழிவாங்குவதற்காகவும் கடத்தப்படுவது கடந்த இருபதாண்டுகளாக அதிகரித்திருக்கிறது, இதில் அதிகம் பாதிக்கப்படுவோர் சிறுமிகளும் பெண்களும்.

கடத்தலும் காணாமல் போதலும்

‘அமெரிக்கா உள்ளிட்ட உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் ஆள் கடத்தல் வியாபாரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் இக் கொடுமைக்கு உள்ளாகின்றனர். இவ்வாறு நாடு விட்டு நாடு சட்ட விரோதமாகக் கடத்திச் செல்லப்படுபவர்கள் வீட்டு வேலைகளைச் செய்வதற்கோ, பாலியல் தொழிலிலோ பலவந்தமாக உட்படுத்தப்படுகிறார்கள். குழந்தைகளைக் கடத்தி வந்து ராணுவத்தில் சேர்ப்பது அல்லது ஆலைகளில் மற்றும் சிறு வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்யுமாறு நிர்ப்பந்திப்பதும் நடக்கிறது. உண்மையில் சொல்லப் போனால், இவையெல்லாம் நவீன யுக அடிமைத்தனம்தான்’ என்று முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் முதுநிலை ஆலோசகரும், ஆள் கடத்தலுக்கு எதிரான உலகளாவிய கண்காணிப்பு மற்றும் ஒழிப்பு அலுவலகத்தின் இயக்குனருமான மார்க் பி. லகான் என்பவர் ஒரு அறிக்கையில் கூறியிருந்தார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் செயலாளர் கொண்டலீசா ரைஸ், ‘ஆள் கடத்தல் என்பது மனிதர்களின் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பறிக்கும் குற்றம்’ என்று ஆள் கடத்தல் தொடர்பான அமெரிக்காவின் எட்டாவது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருந்ததுடன் இதற்கு எதிரான சர்வதேச செயல்பாட்டை ஊக்குவிப்பதன் அவசியத்தையும் உணர்த்தியிருந்தார்.

இந்தியாவில் தேசிய குற்ற ஆவணத்தின் (என்.சி.ஆர்.பி) அறிக்கையின் படி 2019ஆம் ஆண்டு இந்தியாவில் 3,80,526 பேர் காணாமல் போயுள்ளனர், அவர்களில் 2,48,397 பேர் பெண்கள். காணாமல் போனது தொடர்பாக அதிக வழக்குகள் மகாராஷ்டிராவில் பதிவானது. அங்கு மொத்தம் 66,478 பேர் காணாமல் போயுள்ளனர், இரண்டாவதாக மத்தியப்பிரதேசத்தில் 47,452 பேரைக் காணவில்லை. மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கம் (47,337) உள்ளது.
காணாமல் போன பெண்களின் எண்ணிக்கையிலும் மகாராஷ்டிரா முன்னணியில் உள்ளது, மகாராஷ்டிராவில் 38,506 பெண்கள் காணாமல் போயுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 33,893 பெண்களைக் காணவில்லை. 31,299 வழக்குகள் பதிவானதன் வாயிலாக மேற்குவங்கம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் 2007ஆம் ஆண்டில் மட்டும் 2 லட்சம் பெண்கள் பாலியல் தொழில், ஒப்பந்தத் தொழிலுக்காக மாநிலங்களுக்கிடையே கடத்தப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

குழந்தைகள்

இந்தியத் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கருத்துப்படி, ஒவ்வொரு ஆண்டும், 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். இதில் 25 சதவீதம் பேர் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளனர். இந்தியா முழுவதும், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் போதைப்பொருள், வன்முறை அச்சுறுத்தல்களால் பிச்சை எடுக்க வைக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் ஒவ்வொரு 8 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை காணாமல் போவதாகத் தேசிய குற்ற ஆவணம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 200 குழந்தைகள் காணாமல் போகிறார்கள். இதில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் உள்ளது. 2016ஆம் ஆண்டில் 65 சதவீதமாகவும், 2017ஆம் ஆண்டில் 67.4 சதவீதமாகவும், 2018இல் 70.3 சதவீதமாகவும் இருந்தது. இந்தப் புள்ளிவிவரங்கள் பெண் குழந்தைகள் அதிகப் பாதிப்புக்கு உள்ளாவதைக் காட்டுகிறது.

காணாமல்போன குழந்தைகளின் எண்ணிக்கையில் 2019ஆம் ஆண்டில் மத்தியப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் (11,022) உள்ளது. மேற்கு வங்கம் இரண்டாவது இடத்திலும் (8,205) மூன்றாவது இடத்தில் (7,299) பீகாரும் உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 2016இல் 4,632 குழந்தைகள், 2017இல் 4196 குழந்தைகள், 2018இல் 4071 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இது தினசரி சுமார் 12 குழந்தைகள் காணாமல் போவதைக் காட்டுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் சென்னையில் காணாமல் போன 7,994 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் பெற்றோருடன் ஒப்படைக்கப்பட்டதாகச் சென்னைக் காவல்துறை தெரிவித்துள்ளது. காணாமல் போய்க் கண்டுபிடிக்க முடியாமல் போன 118 குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் சொல்கிறது. காணாமல் போன குழந்தைகளை மீட்பதற்கும் மறுவாழ்வு செய்வதற்கும் ‘ஆபரேஷன் ஸ்மைல்-2021’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிறார் நீதி பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் – 2000ன் பிரிவு 24(1)படி, எவர் குழந்தைகளைப் பிச்சை எடுப்பதற்காகப் பயன்படுத்துகிறாரோ, அவர் மூன்று ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார். அபராதமும் விதிக்கப்படும். ஆனால் இதுவரை எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்?

பெண்கள் காணாமல் போவதில் 6வது இடத்திலும், குழந்தைகள் காணாமல் போவதில் 5வது இடத்திலும் தமிழகம் உள்ளது.

என்ன செய்யலாம்

பெரியவர்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கும், கண்காணாத இடம் சென்று பிச்சையெடுக்கவும், கூலி வேலை செய்யவும் முக்கிய காரணம் குடும்பத்தில் கண்ணியமாக வந்துகொண்டிருந்த பொருளாதாரம் திடீரென முடங்கிப் போவது தான். எனவே, முதலாவதாகக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வறுமை முகாமிட்டிருக்கும் குடும்பத்திலிருப்பதை எவரும் விரும்புவதில்லை.
பெண்கள் காணாமல் போவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் குடும்ப வன்முறை பிரதானக் காரணம். குடிகார கணவன், வேலைக்குச் செல்லாத குழந்தைகள், குடும்பத்தைச் சமாளிக்கப் பொருளாதார நிலை இல்லாதது போன்றவையும் காரணங்களாக அமைகின்றன. குடும்ப வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் அவசியம். பெரும்பாலான குடும்பங்களில் கணவனின் குடியால் பிரச்சனை ஏற்படுகிறது. பூரண மதுவிலக்கு குடும்ப வன்முறையைப் பெருமளவு குறைக்கும். இதைத் தவிர்த்து பிரச்சனை இருக்குமேயானால் கவுன்சிலிங் மூலம் ஆற்றுப்படுத்திட மையங்கள் ஏற்படுத்தவேண்டும்.
அதேபோலப் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு இணக்கமான சூழல் உருவாகவேண்டும். பாடசுமையோ, ஆசிரியர்களின் அழுத்தமோ, பள்ளி நிர்வாகத்தின் கெடுபிடியோ இருக்கக்கூடாது.

குழந்தைகளுக்குத் தங்கள் குறைகளைக் கொட்டுவதற்கு வழியேற்படுத்திட வேண்டும். மனநல ஆலோசனை வழங்குவதற்கு ஒவ்வொரு பள்ளிகளிலும் தேவைக்கேற்ப ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்.

குழந்தைகளை வீட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கவும் பள்ளிகளில் தொடர்ந்து கல்வி பயில வைப்பதும் முக்கியம். அதற்குக் கிராமங்களில் கிராம குழந்தைகள் பாதுகாப்புக் குழு மற்றும் ஊராட்சி பிரதிநிதிகளை ஈடுபடுத்திக் குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டும். போதிய நிதி வசதி, உட்கட்டமைப்பு, மனிதவளம் போன்றவற்றுடன் செயல்படும் ஆணையமாக மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முழுமையாகச் செயல்பட வேண்டும்.

குழந்தையோ, பெரியவர்களோ, பெண்களோ, ஆண்களோ யாராக இருந்தாலும் கடத்தப்பட்டுச் சித்ரவதைக்குள்ளாகும் பாதிக்கப்பட்ட மனிதர்களின் கண்ணியத்தை மீட்டெடுப்பதில் அனைவரும் ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டும். இது மனித உரிமையின் பார்ப்பட்டது மட்டுமல்ல. மனித நேயத்தை ஆதாரமாகக் கொண்டது.

(ஆகஸ்ட் 30ஆம் தேதி அனைத்துலகக் காணாமற்போனோர் தினம்)