விண்ணில் ஒருநண்பன்-01
இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார்
தொலைதூரம் பயணப்படுவதாலும் செய்திகளைக் குறைந்த அதிர்வெண்ணில் அனுப்புவதாலும் இரைச்சல்கள் போன்ற பல பிரச்சனைகளால் இப்படி ஒளிபரப்பப்பட்ட வானொலி நிகழ்ச்சிகள் முன்பெல்லாம் சற்றுதெளிவு குறைவாக இருந்தது.
ஆனால் இன்று நகரங்களில் நாம் கேட்கும் பண்பலை வானொலி எனப்படும் ஒளிபரப்புகள் அதிக அதிர்வெண்ணில் ஒளிபரப்பப்படுகின்றன. 88 – MHz முதல் 108 – MHz வரை உள்ள அலைவரிசைகளில் வானொலி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இவை வானொலி நிலையத்திற்கும், பயனாளர்களுக்கும் இடையே நேரலையாக இவை ஒளிபரப்பப்படுவதால் தொலைதூரம் பயணப்படுவதில்லை. சில கிலோ மீட்டர்கள் மட்டும்தான் பயணப்படுகின்றன. அதனால் ஒரு நகரம், ஒரு பெருநகரம் முழுவதும் கேட்கும் வகையில் இந்த வானொலி நிலையங்கள் செயல்படுகின்றன. ஆனால், நிகழ்ச்சிகளைத் துல்லியமாகவும், தெளிவாகவும் ஒளிபரப்பாக இந்த வானொலி நிலையங்கள் உதவியாக இருக்கின்றது.
ஊர்தி அலையிலிருந்து செய்திகளை எப்படிச் சேர்க்கிறோம், பிரிக்கிறோம் என்ற முறையில் இருக்கும் வித்தியாசம் தான் பண்பலை வானொலி நிலையம் தெளிவாகக் கேட்பதற்கு உதவியாக இருக்கிறது .
கோயம்புத்தூர் மாநகரத்தில் உருவாக்கப்படும் பண்பலை, ஏன் ஈரோட்டிற்குக் கேட்பதில்லை என்பது இப்பொழுது புரிந்திருக்கும். ஆனால் இங்கே கொடைக்கானலில் உருவாக்கப்படும் பண்பலை வானொலி, ஏன் தமிழகத்தின் பல பாகங்களுக்கும் தெளிவாகக் கேட்கிறது என்ற சந்தேகமும் சிலருக்கு எழும். 6000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம், அதன் உயரம் காரணமாகக் கீழ்ப்பகுதியில் உள்ள நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் தெளிவாகக் கேட்கிறது. அதே நேரத்தில் வானொலி நிலையமும் நகரங்களும் ஒரே உயரத்தில் இருக்கும் பொழுது 30, 40 கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டுமே பண்பலை ரேடியோவின் நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும் என்பதை நினைவில் கொள்க.
தொலைபேசி எப்படி வேலை செய்கிறது?
இனி அடுத்து தொலைபேசி எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம். வீட்டில் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசிகள் ஒளியிழை என்று அழைக்கப்படும் ஃபைபர்-ஆப்டிக் கேபிள்கள் மூலம் இணைக்கப்பட்டுச் செய்திகள் அனுப்பப்பட்டன.
முதலில் இந்தச் செய்திகள் எப்படிச் செல்கின்றன என்பதைப் பற்றிப் பார்ப்போம். வீட்டில் டயல் செய்யக்கூடிய தொலைபேசி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தொலைபேசி எடுத்து தேவையான எண்களை அழுத்துகிறீர்கள், எதிர் முனையில் இருப்பவரிடம் பேசுகிறீர்கள். நீங்கள் பேசும் செய்தி ஒரு மின்சமிக்ஞை இல்லாத ஒரு செய்தி.
இது போன்ற மின்சமிக்ஞை இல்லாத செய்திகளை மின்சமிக்ஞைகளாக மாற்றுவது மின்மாற்றியின் (transducer) வேலையாகும். இங்கே உதாரணத்திற்கு நான் பேசுகிறேன் என்று கூறினேன். அப்படி இல்லாமல் ஒரு இடத்தின் வெப்பநிலையைக் கண்டறிகிறோம் அல்லது குளிர் நிலையைக் கண்டறிகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
நுண்கருவிகள் மூலம் எதை வேண்டுமானாலும் கண்டறியலாம். அந்தச் செய்திகள் அனைத்தும் முதலில் மின்சமிக்ஞைகளாக மாற்றப்படுகின்றன. அப்படி மாற்றப்பட்டுப் பின்னர் அவை டிஜிட்டல் பரிவர்த்தனையில் 0,1 என்று மாற்றப்படுகின்றன. அவை தான் ஊர்தி அலைகளுடன் சேர்க்கப்பட்டுப் போக வேண்டிய இடத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது. மின்மாற்றி உதவியுடன் மாற்றப்படும் செய்தி ஒளியிழைகள் மூலமாக நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் மற்றொரு நபரின் வீட்டில் உள்ள தொலைபேசிக்குச் செல்கிறது. அங்கே மின்சமிக்ஞைகளாகக் கிடைப்பது மீண்டும் பிரிக்கப்பட்டு பேசும் செய்தியாக மாற்றப்பட்டு அவர் அதைக் கேட்டுக்கொள்கிறார்.
இப்பொழுது தொலைபேசிக்கு பதிலாகக் கைபேசியில் பேசுவதைச் சற்று யோசனை செய்து பார்ப்போம். பழைய கைபேசி ஃபோன்களில், ஆண்டெனா போன்ற நீட்டி கொண்டிருக்கும் ஒரு சாதனத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இப்பொழுது அது இல்லையே என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக நாம் பேசும் செய்திகளை மாற்றி அமைக்கக்கூடிய மின்மாற்றிகளும் அலைபேசி கோபுரங்களில் இருந்து வரும் செய்திகளை உள்வாங்க கூடிய ஆண்டெனாக்களும் நுண்ணிய அளவில் மாற்றப்பட்டுள்ளதால் அவை கைபேசியின் உள்ளே அடக்கமாக இருக்கின்றன, வெளியே நமக்குத் தெரிவதில்லை.
மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.