விண்ணில் ஒரு நண்பன்-01
இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார்
விண்ணில் ஒரு நண்பன் என்ற இந்தத் தொடரில் செயற்கைக்கோளை ஏன் அனுப்ப வேண்டும்? அதனால் என்ன பயன், அதன் பாகங்கள் என்ன? போன்றவற்றைக் கடந்த சில மாதங்களில் தெளிவாகப் பார்த்தோம். இந்தத் தொடரில் குறிப்பிட்ட உயரத்தில் புவியை வலம் வந்து கொண்டிருக்கும் செயற்கைக்கோளுக்கு எப்படிச் சமிக்ஞைகளை அனுப்புவது என்பதைப் பற்றிச் சற்று அலசுவோம்.
எந்த ஒரு வேலையையும் செவ்வனே செய்வதற்குத் தெளிவாகக் கூற வேண்டியது மிகவும் முக்கியம். உங்களிடம் வேலையாட்கள் பலர் இருந்தாலும், அவர்கள் என்ன வேலையைச் செய்ய வேண்டும் என்று தெளிவாக நீங்கள் விளக்கவில்லை என்றால், உங்கள் வேலை நிச்சயம் நடைபெறாது. நீங்கள் தெளிவாகக் கூறுவது ஒருபுறம் இருந்தாலும், தொலைதூரத்தில் இருப்பவர் நீங்கள் கூறுவதைத் தெளிவாகப் பெற்றுக் கொள்கிறாரா என்பது அடுத்த சிக்கல்.
பண்டைய மனிதர்களின் தகவல் பரிமாற்றம்
பழங்காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத பொழுது செய்கைகள் மூலமாகச் செய்திகள் பரிமாறப்பட்டன. ஒரு கயிற்றில் முடிச்சுகள் இட்டு நல்ல செய்தி, கெட்ட செய்தி என்று ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்குச் செய்திகள் கொண்டு செல்லப்பட்டன. உதாரணத்திற்கு ஒற்றை வரிசையில் முடிச்சுகள் இருக்கும் பொழுது நல்லது என்றும், இரட்டை வரிசையில் இருக்கும் பொழுது கெட்டது என்றும் வைத்துக் கொள்ளலாம். அதில் எத்தனை முடிச்சுகள் இருக்கின்றன என்பதைப் பொறுத்து என்ன செய்தி என்பது தெரிவிக்கப்பட்டது.
வாய் வழியாக ஒரு செய்தியை ஒருவரிடம் தெரிவித்தால் அது பலரிடம் சென்றடையும் பொழுது மாறுதல் அடைய வாய்ப்பு இருக்கிறது. அதுவே எழுத்தில் எழுதும் பொழுது தெளிவாக அனைவருக்கும் போய்ச் சேரும்.
எழுதும் எழுத்திலும் எப்படித் தெளிவாக விளக்குகிறோம் என்பது மற்றொரு சிக்கல். நமக்கு முன்பு நேரே இருக்கும் ஒருவரிடம் நாம் பேசுவதைக் கற்பனை செய்து பார்ப்போம்.
மொழி தெரிந்த இருவர் பேசிக் கொள்கிறார்கள், அவர்கள் இருவருக்கும் தெரிந்த துறையைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். ஒருவர் பேசும்பொழுது மற்றவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது. மனித குரலுக்கு என்று ஒரு அளவு தூரம் இருக்கிறது ஒருவர் அருகில் இருந்தால் மட்டுமே நாம் பேசுவது மற்றொருவருக்குக் கேட்கும். சில மீட்டர் தொலைவுக்கு அப்பால் ஒருவர் நின்றால் நாம் பேசுவது அவருக்குக் கேட்க வாய்ப்பு இல்லை. இன்னும் துருக்கியில் ஒரு கிராமத்தில் சில கிலோமீட்டர் தூரத்திற்குச் செய்திகளை விசில் மூலம் பரிமாறிக் கொள்கிறார்கள்.
மனிதக் குரலின் அடிப்படை அதிர்வெண் வரம்பு 85 Hzலிருந்து 255 Hzவரை ஆகும். மனிதக் குரலின் அடிப்படை அதிர்வெண் பாலினத்தைப் பொறுத்தது.பெண்களின் குரலின் சராசரி வரம்பு 165–255 ஹெர்ட்ஸ் ஆகும், இது ஆண்களை விட ஒரு மடங்கு அதிகமாகும். ஆண்களின் குரலின் சராசரி வரம்பு 85–155 ஹெர்ட்ஸ் ஆகும். ஆண்களின் குரல்கள் பொதுவாக ஆழமாக இருக்கும்.
முற்காலத்தில் ஓலையில் அனுப்பி அரசர் செய்தியைப் பக்கத்து நாட்டு மக்களுக்கும், உளவாளி நாட்டு மன்னருக்கும் தெரிவித்தார். இன்று நாம் நம் கைப்படச் செய்தியை அனுப்ப வேண்டும் என்றால் கடிதம் எழுதி அஞ்சல் வழியாக அனுப்பலாம். ஆனால் அதற்குத் தேவையில்லாமல் போய்விட்டது.அனைத்தும் டிஜிட்டல் உலகத்திற்கு மாறிவிட்டதால் கைபேசி வழியாகத்தான் செய்திகள் அனுப்புகிறோம்.
மின்சாதனங்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்
இந்தப் புரிதலோடு மின்னணு சாதனங்களுக்கும் செயற்கைக்கோளுக்கும் எப்படிச் சமிக்ஞைகைகள் கொடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றிப் பார்ப்போம். சில கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் செயற்கைக்கோளுக்கு முதலில் செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும். செய்தி என்பது தரவுகள் என்று இங்கே வைத்துக் கொள்ளலாம். எந்தத் தேவைக்காகச் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதோ அந்தத் தேவையைப் பூர்த்திச் செய்வதற்காகப் பல தரவுகளைப் பெறுவதற்கும் கொடுப்பதற்கும் இந்தச் செய்திகள் கொண்டு செல்லப்பட வேண்டும்.
உதாரணத்திற்கு, ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் புவியை வலம் வந்து கொண்டிருக்கும் செயற்கைக்கோள் இந்தியாவின் மீது பறக்கும் பொழுது புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளலாம். புகைப்படக் கருவியை இயக்கிப் படங்கள் எடுக்க வேண்டும் என்பது செய்தி. இந்தச் செய்தி செயற்கைக்கோளுக்குச் செல்ல வேண்டும். அப்படிச் செய்தி கிடைத்தவுடன் தன்னிடம் இருக்கும் புகைப்படக் கருவி மற்றும் உபகரணங்களைச் செயற்கைக்கோள் இயக்கிப் புகைப்படங்கள் எடுத்து விடும். எடுத்த புகைப்படங்களை மீண்டும் புவியின் கட்டுப்பாட்டறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அதுவே தொலைத்தொடர்பு செயற்கைக்கோளாக இருந்தால், புவியின் ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்ச்சியை உள்வாங்கிப் புவியின் மற்ற பகுதிகளுக்கு ஒளிபரப்ப வேண்டிய வேலையைச் செய்யும். விண்வெளித் தொலைநோக்கி என்றால், தொலைதூரத்தில் உள்ள நட்சத்திரங்களை வேறு வேறு நிறமாலையில் புகைப்படம் எடுத்து அந்தப் புகைப்படங்களை அனுப்பி வைக்க வேண்டும். எப்பொழுது புகைப்படம் எடுக்க வேண்டும், எந்தக் கோணத்தில் எடுக்க வேண்டும், எந்த நட்சத்திரம் இருக்கும் திசையை நோக்கி எடுக்க வேண்டும் போன்ற கட்டளைகள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து செயற்கைக்கோளுக்கு அனுப்பி வைக்கப்படும். மேற்கூறிய அனைத்தும் இங்கே செய்திகள்.
மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.