விண்ணில் ஒரு நண்பன்-07

இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார்

செயற்கைக்கோளின் பாகங்களைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பாக மிதிவண்டியின் பாகங்களை முதலில் சற்று அலசுவோம். தினமும் நம் கண் முன்னே செல்லும் மிதிவண்டி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எந்தவித இயந்திர ஆற்றலும் இல்லாமல் மனிதனின் ஆற்றலைக் கொண்டு இயங்க வைக்கக்கூடிய ஒரு எளிய வாகனம் ஆகும்.

மனிதன் கொடுக்கும் ஆற்றலைக் கொண்டு சக்கரங்களைச் சுற்ற வைக்க வேண்டும். முதலில் காலிலிருந்து கொடுக்கப்படும் ஆற்றல் அல்லது விசை மிதிப்பானுக்குக் கொடுக்கப்பட்டு மிதிப்பானில் இணைக்கப்பட்டுள்ள பற்சக்கரங்கள் சுழல வைக்கப்படுகின்றன. பின்னர் பற்சக்கரங்களில் இருந்து பின் சக்கரத்திற்கு இவை இரும்புச் சங்கிலி மூலம் கடத்தப்படுகின்றன. இரும்புச் சங்கிலியின் வழியாகக் கடத்தப்பட்டுப் பின் சக்கரம் சுழல வைக்கப்படுகிறது.

சக்கரத்தில் இரும்புக் கம்பிகள், டயர், டியூப் என்று நிறையப் பாகங்கள் இருக்கின்றன. சக்கரம் சுழல வைக்க ஒரு அமைப்பும் இருக்கிறது. மிதிவண்டியின் பாகங்களை இணைத்து தேவையான இடத்திற்கு விசையைக் கடத்த நடுவில் ஒரு முக்கோண அமைப்பும் உள்ளது. சைக்கிள் ஓட்டுபவர் அமர்ந்து கொள்ள இருக்கை, டயரில் இருக்கும் சேறு சகதி நம் மீது பட்டு விடாமல் இருக்கக் காப்பு என்று ஒவ்வொரு தேவைக்கும் வேண்டி வெவ்வேறு பாகங்கள் இருக்கின்றன. இந்தப் புரிதலோடு செயற்கைக்கோளில் என்னென்ன பாகங்கள் இருக்கிறது? என்பதைச் சற்று அலசுவோம்.

முதலில் செயற்கைக்கோள் எந்த விதமான சேவையைச் செய்வதற்காக அனுப்பப்படுகிறது என்பதைப் பொறுத்து அதில் பொருத்தப்படும் கருவிகள் மாறுபடுகின்றன. உதாரணத்திற்கு 36,000 கிலோமீட்டரில் தொலைத்தொடர்புக்காக அனுப்பப்படும் செயற்கைக்கோளில் புவியிலிருந்து வரும் செய்திகள் அதாவது அலை வடிவில் வரும் செய்திகளை உள்வாங்கக் கூடிய அலை திரட்டிகளும் அலைவாங்கிகளும் இருக்கும்.

பின்னர் அவற்றைத் திரும்பப் புவிக்கு அனுப்புவதற்கு அலைபரப்பிகள் இருக்கும். இதை நாம் அலைபரப்பி – ஏற்பி (Transponder) அமைப்பு என்று கூறுகிறோம். எவ்வளவு ட்ரான்ஸ்பான்டர்கள் இருக்கிறது என்பதைப் பொறுத்து அது பெரிய செயற்கைக்கோளா? சிறிய செயற்கைக்கோளா? என்று வரையறை செய்யலாம்.

அலை திரட்டிகளில் உள்வாங்கும் அமைப்பு, பரவளைய வடிவில் உள்ள தகடு, பரவளையத்தின் குவியத்தில் படும் கதிர்களை உள்வாங்கிச் செறிவு படுத்தும் அமைப்பு, பின்னர் அதைக் குவிக்க அனுப்ப வேண்டிய வேலையைச் செய்யக்கூடிய அமைப்பு எனப் பல வகை இருக்கும்.

அதே நேரத்தில் தொலை நுண்ணுணர்வு செயற்கைக்கோள் புவியின் மேல் உள்ள பாகங்களைத் துல்லியமாகப் படம் பிடிக்க வேண்டிய வேலையைச் செய்யும். அதில் படம் பிடிப்பதற்குத் தேவையான புகைப்படக் கருவி, வேறு வேறு நிறமாலையில் நிலப்பரப்பை ஆராயும் கருவிகள் போன்ற அமைப்புகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்தச் செயற்கைக்கோளில் துல்லியமாகப் படம் பிடிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. நாம் பேருந்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு காட்சியைப் படம் பிடித்தால் அது தெளிவு இல்லாமல் இருப்பதற்குக் காரணம் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பேருந்தில் இருந்து நாம் படம்பிடிப்பது ஆகும்.

ஒரு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் பேருந்தில் அமர்ந்து கொண்டு நம்மால் தெளிவான படத்தைப் பிடிக்க முடிவதில்லை. ஆனால் செயற்கைக்கோள் மணிக்கு சுமார் 25000-30000 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த வேகத்தில் பயணம் செய்யும் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள புகைப்படக் கருவிகள் துல்லியமாகப் படம் பிடிக்க வேண்டும். அதுவும் ஒரு சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தால் அது எந்தக் கார்? அந்தக் காரின் பதிவு எண் என்ன? என்பது தெளிவாகத் தெரியும் அளவுக்கு அதன் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும்.

இது போன்ற ஒரு சூழ்நிலையைச் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள புகைப்படம் எடுக்கும் கருவிக்குக் கொடுக்கப்பட வேண்டும். அதாவது விண்வெளியில் வெப்பநிலை மாறுபடுகிறது. செயற்கைக்கோள் வேகமாகச் செல்வது மட்டுமில்லாமல் வெப்பநிலையும் மாறுபடுகிறது. வெப்பநிலை மாற்றத்தால் செயற்கைக்கோளின் பாகங்கள் விரிவதும் சுருங்குவதுமாக இருக்கும். இந்த அளவு மாற்றம் புகைப்படக் கருவியைப் பாதிக்காத வண்ணம் செயற்கைக்கோளின் பாகங்கள் இருக்க வேண்டும்.

நமது செயற்கைக்கோள், விண்வெளித் தொலைநோக்கி என்று வைத்துக் கொள்வோம். கண்ணாடிகள் மற்றும் லென்சை பயன்படுத்தித் தொலைநோக்கிகள் உருவாக்கப்படுகின்றன.

இந்தத் தொலைநோக்கிகள் தெளிவாக வேலை செய்யத் துல்லியமான ஒரு அமைப்பு முக்கியம். இப்படியாகச் செயற்கைக்கோள் எந்தப் பணியைச் செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது, அந்தப் பணியைச் செய்யும் உபகரணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள சூழலில் அதன் பாகங்கள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

செயற்கைக்கோளில் குறிப்பிடத்தக்க அளவு கருவிகள் மின்சாரக் கருவிகள் தான். இந்தக் கருவிகள் வேலை செய்ய மின்சாரம் கண்டிப்பாகத் தேவைப்படும். அதற்குத் தேவையான மின்சாரத்தைச் செயற்கைக்கோளுக்கு எப்படிக் கொடுக்க முடியும்? தரையில் இருந்து மின்சார இணைப்பை கொடுக்க முடியுமா? அது சாத்தியமில்லை. அதற்குப் பதிலாகச் சூரியனிலிருந்து கிடைக்கும் ஆற்றலை உள்வாங்கி அதை மின்சார ஆற்றலாக மாற்றக்கூடிய சூரிய மின் தகடுகளை நாம் செயற்கைக்கோளின் இரு புறங்களிலும் காணலாம்.

செயற்கைக்கோளின் அளவைப் பொருத்தும், அதில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் அளவைப் பொருத்தும் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பது வரையறை செய்யப்படுகிறது. அதை உற்பத்தி செய்வதற்குத் தேவையான மின்சாரத் தகடுகள் செயற்கைக்கோளின் இரண்டு பக்கங்களிலோ அல்லது ஒரு பக்கமாகவோ பொருத்தப்பட்டு இருப்பதைக் காணலாம். ஆனால் இந்த மின்சாரத் தகடுகள் ராக்கெட்டில் செல்லும் பொழுது மடித்து வைக்கப்பட்டிருக்கும். செயற்கைக்கோள் குறிப்பிட்ட உயரத்தில் செலுத்தப்பட்டவுடன் மடித்து வைக்கப்பட்டிருக்கும் இந்தச் சூரியத் தகடுகள் விரிந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும். இப்படியாக மின்சாரத் தகடுகளை விரிக்கும் கருவிகளும் இதில் இருக்கும். மேலும் வாசிக்க…

ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.