வெள்ளோட்டம் வெல்லட்டும்-11
இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு
கப்பல்கள் கடலின் சீற்றங் களையும் சூறாவளியின் அபாயங்களையும் தாண்டி பாதுகாப்பாகப் பயணித்து கரை சேர வேண்டும். இந்தச் சவால்களைத் தாண்டி, போர்க்கப்பல்கள் எதிரிகளின் இலக்குகளையும் தாக்க வேண்டும். கூடவே, தாக்க வரும் எதிரிகளிடமிருந்து தன்னையும் போர்க்கப்பல் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
போர்க்கப்பலின் உருவாக்கத்தில் அதனுடைய மிதக்கும் தகுதி, கடல் அலைகளை எதிர்கொள்ளும் திறன், இடவலமாகத் திரும்பும் போக்கு என, பல அடிப்படை வடிவமைப்பு சங்கதிகளைத் தாண்டி, அதன் தாக்குதல் திறனும் மறைவுத் தொழில்நுட்பங்களும் (Stealth Technologies) முக்கிய இடம் பெறுகின்றன.
போர்க்கப்பலின் ஆயுதங்கள்
போரில் இலக்குகள் பல வகையானவை. நகரத்து கட்டடங்கள், மின் நிலையங்கள், விமானநிலைய ஓடுபாதைகள், அணைக்கட்டுகள் என முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாகும். இவைகளை ‘நில இலக்குகள்’ (Land Targets) என்பர். வானில் பறக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர், ஆளில்லா விமானங்கள் போன்றவை ‘வான் இலக்குகள்’ (Aerial Targets) எனப்படுகின்றன. கடலில் பயணிக்கும் கப்பல்கள், படகுகளை ‘கடல் இலக்குகள்’ (Sea Target) எனவும், நீர்மூழ்கிக்கப்பலை ‘கடலடி இலக்கு’ (Underwater Target) எனவும் குறிப்பிடப்படுகின்றன.
போர்க்கப்பல் தனது தாக்குதல் பணிக்கேற்ப ஆயுதங்களைச் சுமந்து செல்லும். நில இலக்குகளைத் தாக்க ஏவுகணைகள், பீரங்கிகள் பயன்படுத்தப்படும். கடல் மற்றும் கடலடி இலக்குகளைத் தாக்க ‘நீர் ஏவுகணைகள்’ (Torpedos) பயன்படுத்தப்படும்.
மறைவு தொழில்நுட்பங்கள்
போர்க்கப்பல் இலக்குகளைத் தாக்க ஆயுதங்களை மட்டுமன்றி இலக்குகளைச் கண்டறியும் ரேடார் உள்ளிட்ட உணர் கருவிகளையும் சுமந்து செல்லும். தாக்குதலில் ஈடுபடும் போது எதிரிகளின் பதிலடியும் நிச்சயம் உண்டு. எனவே போர்க்கப்பல் பல தற்காப்புத் தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும். தன்னை நோக்கி வருகிற ஏவுகணையை திசை திருப்பி தப்பிப்பது ஒரு வகை. எதிரியின் ரடார் கருவிகளை குழப்புவது இன்னொரு வகை. இது தவிர போர்க்கப்பல் தனது இருப்பை எதிரியின் கண்களுக்கு மறைப்பதும் தாக்குதலில் இருந்து தப்பிக்க உதவும். இந்த வகை மறைவுத் தொழில்நுட்பங்களோடு போர்க்கப்பல் உருவாக்கப்படும்.
ஒலி அளவு
கப்பலின் எஞ்சின் உள்ளிட்ட கருவிகளின் இரைச்சல், கப்பலை எதிரிகளுக்கு காட்டிக்கொடுக்கும் காரணிகளுள் ஒன்று. ஏனெனில், சோனார் கருவி ஒலியலைகளைக் கொண்டு கப்பல் அல்லது நீர்மூழ்கியின் இருப்பிடத்தைக் கண்டறியும். இருப்பிடம் கண்டறியப்பட்டால், தாக்குதலுக்கு உள்ளாவது உறுதி. போர்க்கப்பலை உருவாக்கும் போது, அதனுடைய எஞ்சின் உள்ளிட்ட உபகரணங்கள் எழுப்பும் ஒலியை அளவீடு செய்யும் சோதனைகளும் நடைபெறும். இதற்கென ஒலி புகாத சோதனை அறையும் (Anechoic Chamber) உண்டு. சோதனையின் முடிவுகளின் அடிப்படையில் ஒலி தடுப்பு/குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வெப்ப அளவு
நமது உடலின் வெப்பநிலை ஆரோக்கியத்தின்
அடையாளமாக திகழ்கிறது. வெப்பநிலையை அளந்து அதன் மூலம் உடல் நிலையைத் தீர்மானிக்கலாம். அதே போல கப்பலின் வெப்பநிலை, அதன் இருப்பைக் காட்டிக் கொடுக்கும் காரணியாக விளங்குகிறது. கப்பலில் எஞ்சின் உள்ளிட்ட கருவிகள் உயர்ந்த வெப்பநிலையில் இயங்கும். எனவே, வெப்ப நோக்கு (Heat Seeking) ஏவுகணைகளின் இலக்காகி தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம். வெப்ப நோக்கு ஏவுகணைகள் வெப்பமுள்ள இலக்கை நோக்கிப் பாயும். ஒரு குறிப்பிட்ட தொலைவில் இலக்கோடு ஏவுகணை தன்னைப் பொருத்திக்கொள்ளும் (Lock On). தப்புவதற்காக கப்பலை எத்திசையில் திருப்பினாலும் வெப்பம் மாறாது.
எனவே, வெப்ப நோக்கு ஏவுகணையின் தாக்குதலில் இருந்து தப்புவது சிரமம். எனவே, போர்க்கப்பலை உருவாக்கும் போது அது ஏற்படுத்தும் வெப்பத்தை அளப்பதும் அவசியம். வெப்பமான கப்பல் பாகங்கள் உமிழும் அகச்சிவப்புக்கதிர்களை (Infra Red) அளப்பதின் மூலம் அவைகளின் வெப்ப அளவை (Heat Signature) அறியலாம். கணினியில் கப்பலின் வெப்ப அளவை அனுமானிக்கும் ஒப்புருவாக்க (Simulation) மென்பொருள் சோதனைகள் உள்ளன. இது தவிர நேரடியாக கப்பலின் வெப்பத்தை அளக்கும் சோதனைகளும் உண்டு. அளவில் பெரிய போர்க்கப்பலினை இயங்க வைத்து அதன் வெப்ப அளவை அளக்க வேண்டும். ஆய்வுக்கூடத்தில் இது சாத்தியமில்லை. இதற்காக கடலில் கப்பலை இயங்க வைத்து, ஒரு ஹெலிகாப்டரில் அகச்சிவப்பு கதிர்களை அளக்கு கருவியை சுமந்து கப்பலைச் சுற்றி வட்டமிட்டு அதன் வெப்ப நிலையை முழுவதுமாக அளப்பார்கள்.
வெப்பநிலையை அளப்பதின் மூலம் கப்பலின் எந்தப்பகுதி அதிக/குறைந்த வெப்ப நிலையில் உள்ளது போன்ற விபரங்கள் தெரிய வரும். எவ்வளவு தொலைவில், வெப்ப நோக்கு ஏவுகணை கப்பலோடு பொருத்திக் கொள்ளும் என்பதையும் இந்த சோதனைகளின் மூலம் அறிந்துகொண்டு, அதை நிவர்த்தி செய்யும் வகையில் தற்காப்பு நடவடிக்கைகள், தொழில்நுட்பங்கள் வடிவமைக்கப்படும்.
காந்த அளவீடு
வெப்பத்தை அளந்து கப்பலை வடிவமைப்பு மாறுதல் செய்வது போல, கப்பலின் காந்த அளவினை (Magnetic Signature) அளந்து அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்படுவதும் உண்டு. கப்பலின் மின் கருவிகளால் ஏற்படும் காந்த அளவை அளக்க ஒப்புருவாக்க (Simulation) மென்பொருள் சோதனைகள் உள்ளன. காந்த அளவைக் குறைக்கவும் தவிர்க்கவும் சில செயல்முறைகள் உள்ளன. இந்த செயல்முறைகளுக்கு காந்தப்பதிவு நீக்கம் (Degaussing) என்று பெயர்.
கப்பலுக்கு மட்டுமல்ல அது சுமந்து செல்லும் ஆயுதங்களுக்கும் பல்வேறு சோதனைகள் செய்யப்படும். ஆயுதங்களுக்கே சோதனையா? அவை என்ன?