வாழ்த்துக் கட்டுரை

மாணவி ஹிரண்யா

கொரோனா வைரஸ் தொற்று காலமாக மாறிக் கொண்டிருக்கையில் இந்த நேரங்களைத் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக மாற்றிய எண்ணிலடங்கா இளைஞர்களின் திறமைகள் வெளிச்சமிட்டு காட்டுகின்றன.

அந்த வரிசையில் இசையால் வசப்படுத்தி மகிழ்விக்க முடியும், என்கிற இதயநோய் மருத்துவ மாணவியின் சாதனைப் பயணம் மற்றவர்களுக்கும் பாதையாயாக நீள்கிறது.

தமிழகத்தில் கடந்த மாதங்களில் சிங்கப்பூர் வாழ் எஸ்.ஹிரண்யா 18, தன்னுடைய குரலைத் தமிழ்நாடு காவல் துறையுடன் இணைந்து விழிப்புணர்வுக்காக ஒலிக்கச் செய்திருக்கிறார். அந்தப் பாடல் பட்டித்தொட்டியெங்கும் பரவி பலரது பாராட்டைப் பெற்று சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள நாச்சியாபுரத்தைப் பூர்வீகமாக கொண்ட ஹிரண்யாவின் பெற்றோர் தற்போது சிங்கப்பூரில் வசிக்கிறார்கள். தந்தை சுரேஷ் நாச்சியப்பன் தனியார் கணினி நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார்.

தாயார் நாகம்மை சுரேஷ் கணினி நிறுவனத்தை நடத்திய அனுபவம் கொண்டவர். சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்த ஹிரண்யா முறைப்படி கர்நாடகா இசை கற்றுக் கொண்டவர். தமிழிசையையும் கற்றுக்கொண்டு தனது தனித்துவப் பாணியால் இளம் இசைப் பாடகியாக தரணியெங்கும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குழந்தைப் பருவத்திலேயே பொம்மைகளுடன் இசையையும் கைத்தலம் பற்றிக் கொண்டு மூன்று வயதில் திருக்கோயில்களில் மேடையில் அமர்ந்து அனாசயமாகப் பாடல்கள் பாடிப் பக்தர்களைப் பரவசப்படுத்திருக்கிறார்.

ஆறுவயதில் “..மழலைக் குழந்தையின் மங்கலக் குழலோசை..” என்ற தலைப்பில் நான்கு வேதங்களைப் பற்றிய ஆல்பத்தில் ஒன்பது பஜனைப் பாடல்கள் பாடி “..இளம் வயதில் ஆல்பம்..” வெளியிட்ட சாதனையாளர்.

சிங்கப்பூரின் பிரபல இசை வெளியீட்டு நிறுவனம் ஹிரண்யாவின் திறமையை அங்கீகரித்து அந்த “..இளமை ஜாலி ஜாலி..” என்ற ஆல்பம் புகழின் உயரத்திற்கு இட்டு சென்றிருக்கிறது.

சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயில் நிர்வாகமும் இணைந்து தயாரித்து வெளியிட்ட “..மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்ரம்..” பக்திப் பாடல்கள் ஆல்பத்தில் ஹிரண்யாவின் குரல் ஆன்மிகத்திலும் தழைத்தோங்கியிருக்கிறது.

“..சிங்கப்பூர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்..” என்ற புத்தகத்தில் ஹிரண்யாவின் சாதனைகள் இடம் பெற்றிருக்கின்றன. இங்குள்ள தமிழ்நேசன் நாளிதழ் உள்ளிட்ட பல்வேறு பத்திரிக்கைளும் செய்தி வெளியீட்டுப் பாராட்டியிருக்கின்றன.

சிங்கப்பூர் செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலி, பண்பலையிலும் பலமுறை பாடியிருக்கிறார். அத்துடன் “..தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல்..” பாடுவதற்காக சிங்கப்பூர் அரசு அழைப்பின் பேரில் கல்வித் துறைக்காகப் பாடிய பாடல் அங்கிகரிக்கப்பட்டு இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மலேசியாவின் பிரபல மாரியம்மன் திருக்கோயில் மற்றும் அங்கிருக்கும் பெரும்பாலான திருக்கோயில்களில் நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் இறை பக்தியுடன் ஹிரண்யாவின் குரலில் இசை பக்தியையும் கேட்டு ரசிக்கலாம்.

சிங்கப்பூரில் உள்ள அரசு அமைச்சர்கள், பிரபலங்கள் தவிர தமிழகத்தின் பி.சுசீலா, சுதாரகுநாதன், நித்யமஹாதேவன், உஷாஉதுப் போன்ற பிரபல பின்னணிப் பாடகர்கள், மற்றும் பட்டி மன்ற நடுவர்கள் சுகிசிவம், சாலமன் பாப்பையா, திரைப்பட இயக்குனர்கள் ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.பாண்டியராஜன் பாராட்டுக்களுடன் மிகவும் முக்கியமாக இந்தியாவின் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பாராட்டையும் பெற்று வளர்ந்திருக்கிறார்.

தமிழ் மொழி கடந்து கன்னடம், தெலுங்கு மலையாளம், இந்தி, ஆங்கிலம் பிரெஞ் மொழிகளிலும் ஹிரண்யாவின் குரல் அரங்கேறியிருக்கிறது. கர்நாடகா இசை மற்றும் தமிழிசையில் திருவருட்பா, திருப்புகழ் தமிழ் சுவையை உணர்த்துகிறார்.

கீபோர்ட் பிளேயர், செஸ் மற்றும் பாட் மிண்டன் விளையாட்டுகளிலும் கைதேர்ந்தவர். மிக இளம் வயதில் கற்பனைகளைத் தூண்டிலிட்டு வெப்டிசைனரில் கண்களுக்கு விருந்தளிக்கிறார். குழந்தைப் பருவம் முதல் இன்று வரை பெற்ற விருதுகள் பட்டியல்களைக் கணக்கிட்டுக் கொண்டேயிருக்கலாம்…?

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, மியான்மர், துபாய், இந்தியா ஆகிய நாடுகளுக்கு இசைக் கச்சேரிகளுக்காக சென்றிருக்கி றார். தற்போது ஜூம் செயலி மற்றும் பேஸ்புக், யுடியூப், ஸ்மூல், மூலமாகவும் பங்கேற்று இசையால் சுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

WEBINAR மூலம் மருத்துவர்களுக்காகவும் பேசி வருகிறார். கொரோனா நோயாளிகளை நாம் எப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்ற மருத்துவர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார்.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள புனித ஜார்ஜ் பல்கலைக்கழகத்தில் M.D., முதலாமாண்டு மருத்துவம் படிப்பு தேர்வில் உயர் மதிப்பெண் பெற்றவர். அதற்காக “..லெகசி ஆப் எக்ஸ்லென்சி..” விருது அவரை ஊக்கப்ப டுத்திருக்கிறது. இதனிடையே இரண்டாமாண்டு படிக்க கொரோனா காத்திருக்கச் செய்திருக்கிறது.

இசைத் தென்றலாக வீசும் ஹிரண்யாவை வாட்ஸாப் காலில் அழைத்தோம்… ஒரு ஆல்பம் ரெக்கார்டிங்கில் இருக்கிறார் என்று பதில் அடுத்த நிமிடங்களில்… ஹலோ ஹிரண்யா பேசுகிறேன்….,

கொரோனா விழிப்புணர்வு பாடல் எப்படி சாத்தியமாயிற்று..? அந்தப் பாடல் எப்படியிருக்கும்..?

“…தப்பிக்க வழியுண்டு கேளுங்க கேளுங்க கொரோனா தாக்கத்திலே வைரஸ் கொரோனா தாக்கத்திலே..” என்று பாடுகிறார். ஆமாம் சரிதான் என வீடியோ பார்ப்பவர்கள் மட்டுமல்ல காலமும் செவிமடுக்கிறது.

“நான் அப்போது அமெரிக்கா கல்லூரியிருந்து சிங்கப்பூரில் உள்ள என் வீட்டிற்கு கொரோனா காரணமாக வந்திருந்த பொழுது இந்த வாய்ப்புக் கிடைத்தது.

தமிழகத்தின் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் யானிதேஷ் எனக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார்கள். வீடியோவில் பாடி அனுப்பிவைத் தேன், எனக்கும் நல்ல பெயர் கிடைத்தது. தமிழகத்திலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட பாடல் வரிகள் நம்மை எப்படிப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகிறது ஈரோடு காவல் துறை சார்பாக வெளியிட்டுள்ள விழிப்புணர்வுப் பாடலை அம்மாவட்ட டி.எஸ்.பி., திரு.சேகர் எழுதித் தயாரித்திருக்கிறார்.

மேலும் தினமும் எப்படிப் பாடம் படிக்கிறேனோ அதேபோல இசைப் பயிற்சியும் எடுத்துக்கொள்கிறேன். ஆகவே இசையும் மருத்துவமும் எனக்கு இரு கண்களாகவே பாவிக்கிறேன்.

ஒரு கனவு நனவாக வேண்டும் என்றால் அதற்குப் பாடுபட வேண்டும்; மன உறுதியுடன் கடின உழைப்பும் வேண்டும்; என் லட்சியம், பார் போற்றும் பலருக்கும் உதவும் மருத்துவர் ஆவது, நல்ல பாடல்கள் மூலம் மக்களை மகிழ் விப்பது, நான் தலைசிறந்த இதயமருத்துவராகி நாட்டுக்கும் சேவை செய்வேன்.

என்னால் முடிந்த அளவு கஷ்டப்படும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவையும் நிச்சயம் செய்வேன். இவை இரண்டையும் அடைவதே என்னுடைய குறிக்கோள். அந்த வெற்றிப் பாதையை நோக்கி நான்
பயணிக்கிறேன்…” என்கிறார் ஹிரண்யா.

இசையாலும், இதய மருத்துவத்தாலும் மக்கள் பணியாற்றிப் புகழ்பெற ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்துகிறது.