பீனிக்ஸ் மனிதர்கள் -12
கட்டுரை ஆக்கம் : ஆளுமைச் சிற்பி ஆசிரியர் டாக்டர். மெ.ஞானசேகர்
“அன்பின் வழியது உயிர்நிலை” என்பார் திருவள்ளுவர். தான் சார்ந்துள்ள சமூகத்தையும் தன்னைச் சுற்றி உள்ள மனிதர்களையும் நேசித்து அன்பைப் பொழிவது நல்ல இதயங்களின் இயல்பு.
சமூகத்தையும் மனிதர்களையும் நேசிப்பது மட்டும் அன்றி நம்மைச் சுற்றி உள்ள மனிதர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்வது நம்மை உயர்த்திக் கொள்வதற்கான மற்றும் ஓர் வழி. இதையே “ஊருக்கு உழைத்தல் யோகம்” என்கிறார் மகாகவி பாரதியார்.
“இந்த சமூகத்தில் உதவியை நாடி நிற்பவர்களுக்கு உன்னாலான உதவியைச் செய்து பார். நீ இறந்த பின் காணும் சொர்க்கத்தை ஒரு நொடிப் பொழுதிலேயே உன் கண்முன் காண முடியும்” என்கிறது ஒரு பொன்மொழி. இப்படித் தன்னாலான உதவிகளை இந்த சமூகத்திற்கும் மனிதர்களுக்கும் செய்ய வேண்டும் என்கின்ற நல்ல நோக்கத்தில் உருவானதே நம்பிக்கை வாசல் டிரஸ்ட்.
சேலத்தைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் இனிய தொடக்க விழா 2013 ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி நாமக்கல் மாநகரில் நடைபெற்றது.
இவ்வினிய விழாவில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான எழுத்துச் செல்வர் லேனா தமிழ்வாணன் அவர்களின் முன்னிலை வகிக்க சென்னை மாதா ட்ரஸ்ட் நிறுவனர் திரு.வி.கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்கள் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பைத் துவக்கி வைத்தார்.
நிறுவனர் – கவிஞர் ஏகலைவன்
சேலத்தைச் சேர்ந்த கவிஞர் ஏகலைவன் ஓர் மாற்றுத்திறனாளி. கவிஞர், எழுத்தாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர், சமூகநலச் செயற்பாட்டாளர், பதிப்பாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்.
தனது 13வது வயதில் ஏற்பட்ட ரயில் விபத்து ஒன்றில் ஒரு காலையும் இடது கை சுண்டு விரலையும் இழந்த இவர் ஓர் மாற்றுத்திறனாளி. ஆனாலும் தன் மனதில் உள்ள நம்பிக்கையை இழக்காமல் வாழ்வில் எதிர்ப்படும் சவால்களை எதிர்கொண்டு மெல்ல மெல்ல உயர்ந்து தையல் கலைஞராகப் பணி செய்து வந்தார்.
தன்னுடைய தொடர் முயற்சியாலும் ஆர்வத்தாலும் புத்தகங்கள் மீது கொண்ட காதலால், தான் செய்து வந்த தையல் தொழிலை விடுத்து 2004-ஆம் ஆண்டு ‘வாசகன் பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தை தொடங்கினார். இந்தப் பதிப்பகத்தின் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறார்.
ஊனமுற்றோர் என்று அழைக்கப்பட்டு வந்த மாற்றுத்திறனாளிகளை மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கவும் அடையாளப்படுத்தவும் வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டதில் இவரது பங்கும் உண்டு.
சாதனையாளரான கவிஞர் ஏகலைவன் அவர்கள் தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளாக உள்ளவர்களைச் சந்தித்து அவர் தம் சாதனைகளை இந்த உலகுக்கு உணர்த்தப் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். கவிதை நூல்களையும், சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு வாழ்வியல் வழிகாட்ட தன்னம்பிக்கை நூல்களையும் எழுதியுள்ளார்.
இதுவரை 17-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர், பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுத் தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், அறக்கட்டளை நிறுவனராகவும் வலம் வருகிறார்.
தன்னுடைய வாசகன் பதிப்பகத்தில் பல்வேறு படைப்பாளர்களின் நூல்களை வெளியிட்டிருக்கும் இவர், அவற்றுள் மாற்றுத்திறனாளிகளின் நூல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதும், பதிப்பகத்தின் பணி வாய்ப்புகளைக் கூட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிவருவதும் சிறப்புக்குரியது.
தற்போதைய பணிகள்
- மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய வாழ்வில் முன்னேறவும், தங்களின் திறமைகளை கண்டறிந்து வாழ்வை சுயமாக எதிர் கொள்ளவும் உரிய வழிகாட்டல்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவிகள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், காதொலிக் கருவிகள், பிற உபகரணங்கள் போன்றவை வழங்குதல்.
- மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழிலுக்கு உரிய பயிற்சிகள், உதவிப் பொருட்கள் வழங்குதல். அரசின் உதவிகள் பெற வழிகாட்டுதல்.
- அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் மாலை நேரத்தில் தனிப் பயிற்சி பெறப் படிப்பு மையம் ஒன்றை உருவாக்கி வெற்றிகரமாக நடத்துதல்.
- மாற்றுத்திறன் படைப்பாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு பரிசுத்தொகை உடனான விருதளித்து கௌரவித்தல்.
- மாற்றுத் திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் வாழ்வியல் பயிற்சிகளை வழங்குதல்.
- ஏழை மாணவர்கள் உயர்கல்வி பயில நிதியுதவி வழங்குதல்.
- எதிர்காலப் பணிகள்
- மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான டேகேர் சென்டர் அமைத்தல்.
- மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தனிப் பயிற்சிப் பள்ளி ஒன்றை அமைத்தல்.
- மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் கொண்ட சிறப்பு உடற்பயிற்சி மையம் அமைத்தல்.
- மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்புக்கு வழி வகுக்கும் வகையிலான கணினிப் பயிற்சி மையம் அமைத்தல்.
- உடற்குறை இருந்தாலும் மனதால் பலமுடைய மகளிருக்கான தையல் பயிற்சி மையம் அமைத்தல்.
- தவழும் நிலையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு வருவாய் தரும் பேப்பர் கவர் தயாரிக்கும் தொழில் அமைத்துத் தருதல், தொழிற் பயிற்சி தருதல்.
- பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பேப்பர் பிளேட், பாக்குமட்டை பொருட்கள் தயாரித்தல்.
ஒற்றைக்கால் மனிதனின் நம்பிக்கை!
எழுத்துலகிலும், பதிப்புலகிலும் நன்கறியப்பட்ட ஒற்றைக்கால் மனிதரான கவிஞர் ஏகலைவன் தான் கொண்ட நம்பிக்கையை, வாழ்வின் மீதான நேசிப்பை தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் தர வேண்டும் என நினைத்தார். அந்த எண்ணம் மெல்ல உருக்கொள்ள ஆரம்பித்தபோது, அது நண்பர்களால் இன்னும் வார்க்கப்பட்டு “நம்பிக்கை வாசல் டிரஸ்ட்” என்கிற அமைப்பாக உருமாறியது. இதன் முதல் வித்து 2013 ஆம் ஆண்டு நாமக்கல்லில் திரு. லேனா தமிழ்வாணன் அவர்களின் முதல் பங்களிப்பான ரூபாய் பத்தாயிரத்தோடு ஆரம்பமானது. ஊனம் என்பது முடமோ அல்லது முன்னேற்றத்திற்கான தடையோ அல்ல.. அது ஒரு உறுப்புக் குறைபாடு மட்டுமே! என்பதை மாற்றுத்திறனாளிகளின் மனதில் விதைப்பதற்கான ஆரம்பக் கட்ட முயற்சிகளோடு நம்பிக்கை வாசல் டிரஸ்ட் இயங்கத் தொடங்கியது.
அந்தத் தொடக்கமும், சேவையும் ஏழாண்டுகளாக வெற்றிகரமாகத் தொடரும் நிலையில், நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அடுத்தடுத்த முன்னெடுப்புகளோடு நதியாய் நகர ஆரம்பித்து எட்டாம் ஆண்டில் பயணிக்கிறது.
தொடக்கத்தில் வேகப்பாய்ச்சலை மேற்கொள்ளும் அளவுக்கு நம்பிக்கைவாசலின் பொருளாதாரம் இல்லாத நிலையில் நண்பர்கள், நன்கொடையாளர்களின் உதவிகளோடு மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், நடை பழகும் தாங்கு கட்டைகள், பார்வையற்றோருக்கான பிரெய்லி பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டன. இதன்மூலமாக நகர்வதற்கே சிரமப்பட்ட பல மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகளில் முன் நகர்ந்தனர்.
அந்த நகர்வு அவர்களுக்குள் நம்பிக்கையைத் தந்தது. அந்த நம்பிக்கையைத் தாங்களும் பெற வேண்டும் என இன்னும் சில மாற்றுத்திறனாளிகள் விரும்பியபோது, நம்பிக்கை வாசல் டிரஸ்ட் உலகம் முழுக்க இருக்கின்ற உதவும் மனம் கொண்ட மனிதர்களையும், அமைப்புகளையும் நாடி அத்தகைய உதவிகள் கிடைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. காலவோட்டத்தில் எப்பொழுதும் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை முட்டுக் கொடுத்து தூக்கி விட முடியும் என்பது சாத்தியமில்லை என்கிற யதார்த்தத்தை உணர்ந்து, அதற்கேற்ப தனது உதவிகளிலும் மாற்றங்களைச் செய்து கொண்டது நம்பிக்கை வாசல். உதவி தேவைப்படுவோரையும், உதவும் மனம் கொண்டவர்களையும் இணைத்து வறியவர்கள், பொருளாதாரத்தில் நசிந்து நிற்போர், மாற்றுத்திறனாளிகள், வறுமையில் இருப்பவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் போன்றோருக்கு தையல் மிஷின், இஸ்திரி பெட்டி ஆகியவைகளை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை அவர்களே உருவாக்கிக் கொள்ள வாசல் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளின் மனதில் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை அகற்றுவதிலும், தனிமனித உதவிகளிலும் தொடர்ந்து அக்கறை காட்டியதோடு, அடுத்தடுத்த ஆண்டுகளில் சமூகம் சார்ந்த செயல்பாடுகளிலும் தனது பங்களிப்பைச் செய்ய ஆரம்பித்தது. அத்தகைய பங்களிப்பு என்பது வெறுமனே, ஒன்றுகூடி கலைதலாக மட்டும் இல்லாமல் அறிவு சார்ந்த வகையில் இருக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் நம்பிக்கை வாசல் மிகுந்த உறுதி கொண்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, தேவையுள்ள நூலகங்களுக்கு நூல்கள் இலவசமாகத் தரப்பட்டன. வாசகன் பதிப்பகம் பதிப்பித்த, பதிப்பிக்கும் புத்தகங்களோடு நண்பர்கள், படைப்பாளர்களிடமிருந்து இரவலாகப் பெறப்பட்டும், பல்வேறு நூலகங்களுக்கு வருடந்தோறும் தலா ரூ 8,000 மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொடுக்கக் கொடுக்க குறையாத கல்விச் செல்வத்தை ஒருவன் பெற்று விட்டால், அவனுடைய குடும்பம் மட்டுமல்ல, சமுதாயமும் ஒளிபெறும் என்பது நியதி. அந்த நியதிக்குத் தன்னை உடன்படுத்திக் கொண்ட நம்பிக்கை வாசல் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கான உதவித் தொகைகளை வழங்க ஆரம்பித்தது.
இதன் வழியாக பல மாணவர்கள் பயன் பெற்று வரும் நிலையில், இன்னுமொரு முன்னேற்றமாய் அரசுப் பள்ளி மாணவர்களுக்கென இலவச மாலை நேர வகுப்புகள் (FREE TUTION CENTRE) ஆரம்பிக்கப்பட்டன. மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவமணிகள் பயிலும் இவ்வகுப்புகளில், அவர்களின் தனித்திறன்கள் மேம்படுத்தப்படுவதோடு, பல் துறை வல்லுனர்களோடு கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளும் உருவாக்கித் தரப்படுகின்றன.
இதுதவிர மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் கல்வியாளர்களாலும், துறை சார்ந்த நிபுணர்களாலும் நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கும், அரசுத் தேர்வுகளுக்கும் தயார் செய்யப்பட்ட வினாத்தாள்கள் சேகரிக்கப்பட்டு நம்பிக்கை வாசலின் முகநூல், வாட்ஸ்அப் பக்கங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.
தவிர, மகளிர் தினம், சுதந்திர தினம், உடல் ஊனமுற்றோர் தினம் போன்ற குறிப்பிட்ட நாட்களில் மாணவர்களோடு பெரியவர்களும் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் அத்துறை சார்ந்த வல்லுநர்களின் துணையோடு கருத்தரங்குகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
நதியாய் நகரும் நம்பிக்கை வாசலின் செயல்பாடுகளை இன்னும் மேம்படுத்தும் வகையில் சரியான வழிகாட்டுதலும், ஆலோசனைகளும் பெறுவதற்காக கலைமாமணி திரு. லேனா தமிழ்வாணன், கலைமாமணி திரு சுகி.சிவம் ஆகியோரை கொளரவ ஆலோசகர்களாகவும், ஆக்கப்பூர்வமான செயல்பாட்டிற்குத் தேவையான அனுபவப் பூர்வமான ஆலோசனைகளைத் தரும் பல்துறைச் சான்றோர்களை வழிகாட்டிகளாகவும் பெற்ற பின்னர், நம்பிக்கை வாசல் டிரஸ்ட் என்கிற ஒற்றைப் புள்ளி மெல்ல மெல்ல வட்டங்களாய் விரிய ஆரம்பித்தது.
2013ல் தொடங்கி ஏழு ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கித் தருவதிலும், வறியவர்களின் வாழ்வில் உயர்வைத் தருவதிலும், ஏழைக் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிலும் கவனம் கொண்டிருந்த நம்பிக்கை வாசல் சமீபகால பேரிடர் சமயங்களில், சமூகப் பங்களிப்புகளில் தன்னை இன்னும் கூடுதலாக ஈடுபடுத்திக் கொண்டது.
கொரோனா தாக்குதலில் ஒட்டு மொத்த உலகமே ஒடுங்கி நிற்க, சாலையோரங்களில் வாழநேரிட்ட உறவுகளால் கைவிடப்பட்டவர்கள், வயது முதிர்ந்தவர்கள், மனநிலை பாதித்தவர்களின் நிலையோ இன்னும் பரிதாபத்திற்கு உரியதாகிப் போனது. தங்களது வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள கையேந்தி நிற்கக் கூட வழியில்லாத சூழலில் வாழுகிற அவர்களைக் கைவிட்டு விடக்கூடாது என்று நினைத்த நம்பிக்கை வாசல், தனது உதவிக்கரங்களை அவர்களை நோக்கியும் தயங்காமல் நீட்டியது கூடுதல் சிறப்புக்குரியது.
நல்லெண்ணம் கொண்ட மனித மனங்கள் இன்னும் மரித்து விடவில்லை என்பதை உண்மையாக்கும் விதமாக, மாதந்தோறும் நன்கொடையாளர்கள் கொடுக்கும் சிறு தொகைகளைச் சேர்த்து உணவாகவும், உணவுப் பொருளாகவும் மாற்றி, ஒவ்வொரு வாரமும் இருபத்தைந்து முதல் ஐம்பது நபர்களின் வயிற்றுப் பசியைத் தீர்த்து வருகிறது. பட்டினியால் வாடிக் கிடப்போர்களின் எண்ணிக்கை எல்லையற்று நீண்டிருப்பதால், அவர்களுக்கான இந்த உதவியை ஓராண்டு முழுக்க செயல்படுத்தும் திட்டத்தை தனது சமூகக் கடமையாகச் செய்ய நம்பிக்கை வாசல் உறுதி கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் தன் அடுக்களையின் கடைசிச் சேமிப்புகளைக்கூட அடுப்பிலேற்றி விட்டு, அடுத்த வேளை உணவுக்குக்கூட வழியின்றி முடங்கிக் கிடக்கும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு உதவ வேண்டியதை உணர்ந்து நம்பிக்கை வாசலே அவர்களின் வாசலுக்குச் சென்று, நாளை நலமாகும் என்கிற நம்பிக்கையையும், அரிசி, மாவுப்பொருட்கள், காய்கறிகள், மளிகைச் சாமான்கள் மற்றும் அத்தியாவசியமான பொருட்கள் உள்ளிட்டவை அடங்கிய ஒரு பையையும் இலவசமாக வழங்கியது.
இதன்விளைவாக இல்லாமையாலும், இயலாமையாலும் முடங்கிக் கிடந்த அவர்களுக்குக் கிடைத்த இந்த உதவிகள் மிகப்பெரிய ஆறுதலையும், நம்பிக்கையையும் கொடுத்திருப்பதால், அந்த ஆறுதல் தரும் அறப்பணிகளின் தேவை கருதி இன்றளவும் நீண்டு கொண்டே இருக்கிறது. மெழுகுத் திரியின் உதயமானது இருளைக் கிழித்து வெளிச்சத்தை தருவதைப் போல அமைந்திருக்கும் நம்பிக்கை வாசல் டிரஸ்ட், தனது இப்போதைய செயல்பாடுகளிலிருந்து விலகிவிடாத நிலையில், எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வில் நம்பிக்கையையும், வாழ்தலின் மீதான பிடிமானத்தையும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுக்கக்கூடிய தனது அடுத்த கட்ட நகர்வைச் செய்ய முனைகிறது.
அதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகளின் உடல் ரீதியான செயல்பாடுகளை இலகுவாக்க, ஒரு பிசியோதெரபி சென்டர் (PSYCHOTHERAPY CENTRE) மற்றும் அவர்களை சுயசார்பு உடயவர்களாக வாழச்செய்ய ஒரு தொழிற்பயிற்சி நிலையம் (TRAINING CENTRE) என்கிற இரண்டு தளங்களையும் அமைப்பதை தனது எதிர்காலத் திட்டமாகக் கொண்டிருக்கிறது.
“மீன் பிடித்துக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தலே மிக அவசியமானது’’ என்கிற நற்கொள்கையுடைய அந்தத் தொலை நோக்குத் திட்டங்களுக்கு மிகப்பெரிய ஆதரவுக் கரங்கள் தேவை என்கிற நிலைமையில், நண்பர்கள், நன்கொடையாளர்கள், பிற அறக்கட்டளைகள் ஆகியவைகளின் ஆதரவினால் இதுவரை தன்னாலியன்ற வரை பயனாளிகளுக்கு உதவிக்கரங்களை நீட்டி வந்த நம்பிக்கை வாசல் டிரஸ்ட் இம்முறையும் உங்களையே நம்பியிருக்கிறது. உங்களின் ஆதரவுக் கரங்கள் மட்டுமே இந்த மிகப்பெரிய திட்டத்தை எட்ட வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
எனவே, இந்த நல்முயற்சிக்கான உங்களின் பங்களிப்பைப் பணமாக மட்டுமல்ல. நல்ல ஆலோசனைகளாகவும், வழிகாட்டல்களாகவும் கூட தாருங்கள் என்பதை நம்பிக்கை வாசலின் கோரிக்கையாக முன் வைக்கிறோம். இவர்களின் செயல்பாடுகளைப் பார்வையிட… NAMBIKKAI VAASAL TRUST என்கிற முகநூல் பக்கத்தைத் தொடரலாம், தொடர்புக்கு – கவிஞர் ஏகலைவன் 98429 74697, 86829 94697
நன்கொடைகள் வழங்க வங்கி விபரம்
AIC NAME – NAMBIKKAI VAASAL TRUST
A/C NO – 1186115000019668
IFSC NO – KVBL0001186
BANK – KARUR VYSYA BANK –
SALEM MAIN
வாழ்த்துச் செய்தி
1 மனிதர்களுக்கு நம்பிக்கை அவசியம். மனித வாழ்வை சாதனையை நோக்கி இட்டுச்செல்லும் மூலமந்திரம் நம்பிக்கை. அந்த நம்பிக்கையோடு நாம் வாழ்வை அணுகினால் நம் வாழ்வில் வெற்றி நிச்சயம். உடலியல் தடைகளைத் தாண்டி மாற்றுத்திறனாளிகள் சாதிக்க முயற்சி செய்ய வேண்டும். அத்தகைய சாதனைகள் தான் அவர்களது அடையாளங்களாக விளங்கும். தன் உடலியல் தடைகளைத் தாண்டி படைப்பாளராக, பதிப்பாசிரியராக, பத்திரிக்கையாளராக நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் கவிஞர் ஏகலைவன் அவர்கள். அவரது அரிய முயற்சியில் உருவானதுதான் நம்பிக்கை வாசல் டிரஸ்ட். வலியறிந்த மாற்றுத்திறனாளி ஒருவரால், சக மாற்றுத்திறனாளர்களுக்காக நடத்தப்படும் அமைப்பு என்பதால், அவர்களின் மனநிலை, தேவைகளை அறிந்துணர்ந்து செயல்படுகிறது நம்பிக்கை வாசல்.
எல்லா வயது மாற்றுத்திறனாளிகளின் தேவைகளையும் அறிந்து, அவர்களது எதிர்காலத்திற்கு உகந்தவாறு செயல்திட்டங்களை வகுத்து, அதற்கேற்ப செயல்பட முனைவதே இந்த அமைப்பின் தனிச்சிறப்பு.
மாற்றுத்திறனாளிகளுக்கான செயல்பாடுகளுடன், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இலவச மாலை நேர படிப்பு மையம் நடத்தி வருவதும், அம்மையத்தில் கல்வியைத் தாண்டி மாணவர்களின் பல்துறை வளர்ச்சியையும் மேம்படுத்தும் வண்ணம் செயல்பட்டு வருவதோடு, கொரோனா காலத்தில் உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசுப்பள்ளி குழந்தைகளின் குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்களின் தொகுப்பையும், சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவையும் வழங்கி அறப்பணியாற்றி வருகிறது.
இப்படி பல்துறை சார்ந்து நற்பணிகளைச் சமூகத்துக்கு செய்தபடி, மாற்றுத்திறனாளிகளையும் ஊக்குவிக்கும் நம்பிக்கை வாசல் அமைப்பை வாழ்த்துகிறேன்.
சொல்வேந்தர் சுகிசிவம்
2 கவிஞர் ஏகலைவன் என் பார்வையில் ஒரு அரிய மனிதர். செல்வந்தர் அல்லர்.. ஆனாலும், பிறருக்கு உதவுவதில் இவருக்கு அப்படியொரு மகிழ்ச்சி. தாம் பலம் பெறவேண்டும்.. தம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.. என்பதை விட, தம் பார்வையில் படுகிற இயலாதவர்கள் வளம்பெற வேண்டும் என்பதில் கடந்த எட்டு ஆண்டுகளாக இவர் காட்டும் ஆர்வம் வியக்கத்தக்கதாக இருக்கிறது.
வறுமைகளின், இயலாமைகளின் வலிகளை அவர் நன்கு உணர்ந்திருந்ததால், எப்படியெல்லாம் பிறருக்கு உதவலாம் என்பதைப்பற்றியே எப்போதும் சிந்திக்கிறார்.
பொருளுதவி, இலக்கியப்பணி, நூலகத்திற்கு நூல்கள் அளிப்பு, இயங்கு கருவிகள், இயலாதோருக்கு உணவளித்தல் ஆகியவற்றினைத் தாண்டி, இப்போது கல்விப் பணியிலும் இறங்கியிருக்கிறார். தற்போது இவரது நம்பிக்கை வாசல் அமைப்பின் கவனம் கொரோனா நிவாரணப் பணிகள் மீது திரும்பியிருப்பது சேலத்தினர் செய்த பேறு.
இவரது நற்பார்வைகளையும், நோக்கங்களையும் உணர்ந்து கொண்டு, இவரைச் சுற்றி ஒரு இளைஞர் பட்டாளம் இவரை அச்சாணியாகக் கொண்டு இயங்குவது இவரது பலம். நான்கு வாக்கியங்கள் பேசினாலும், அடுத்தவர்களுக்கு உதவுவது பற்றி ஓரிரு வாக்கியங்களாவது பேசாமல் இருக்க மாட்டார். இவர் என் சீடர் என்பதில் எனக்குப் பெருமை. விடுவேனா உங்களை? என மனித இனத்தைத் துரத்தும் கொரோனா காலத்தில் நிவாரண மற்றும் அறப்பணிகள் பலவற்றை மேற்கொண்ட துணிச்சலை என்னவென்று பாராட்ட! போதாக்குறைக்கு தன்னம்பிக்கைப் பயிற்சிகளும் உண்டு.
மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றவர்கள் மனம் இரங்குவது இயல்பு. ஆனால், ஒரு மாற்றுத்திறனாளி இவர்கள் அல்லாதவர்களுக்கு உதவ நினைப்பதால்தான் இவரை அரிய மனிதர் என்கிறேன். இவரும், இவரது கனவுகளை நனவாக்கும் நம்பிக்கை வாசல்
அமைப்பும் வாழ்க!
கலைமாமணி
லேனா தமிழ்வாணன்