கல்வி-அறிவு-ஞானம்
டாக்டர். ஜாண் பி.நாயகம்
கல்வி – அறிவு – ஞானம் ஆகிய மூன்றும் மூளை சார்ந்த விஷயங்கள். நமது மூளை குறித்த சில அடிப்படையான உண்மைகளைப் புரிந்துகொண்டால் மட்டுமே கல்வி – அறிவு – ஞானம் ஆகியவற்றில் சிறந்து விளங்க முடியும். மூளையின் வெளி அமைப்புக் குறித்து கடந்த இதழில் கண்டோம். இனி, மூளையின் உள் அமைப்பு, அது இயங்கும் விதம் குறித்துச் சுருக்கமாகக் காணலாம்.
நியூரான்
மூளை நரம்பு திசுக்களால் ஆனது. இந்த செல்களுக்கு ‘நியூரான்’ என்று பெயர். ஒரு சராசரி மனித மூளையில் சுமார் நூறு பில்லியன் நியூரான்கள் உள்ளன. ஒரு குழந்தை கருவில் உருவாகும் போது, ஒரு நிமிடத்திற்கு 2,50,000 புதிய நியூரான்கள் உருவாகுகின்றன!
மூளையின் செயல்பாடுகள், நினைவாற்றல், கற்றல், புத்திசாலித்தனம் ஆகிய அனைத்துமே இந்த நியூரான்களின் செயல்பாடுகளே! நியூரான்கள் நலமாக இருக்கும் வரை மூளையின் செயல்பாடுகள் தடையின்றி நடைபெறும். வயது அதிகமாக, அதிகமாக நியூரான்களின் செயல்பாடுகளில் ஒரு மந்தத் தன்மை ஏற்படும். இதுவே நினைவாற்றல் குறைபாடுகளை உருவாக்கும். ஆல்சிமர் எனும் மறதி நோயில் இந்த நியூரான்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து போய் விடுகிறது! இது நினைவாற்றலைப் பாதிப்பதோடு, உடலின் பிற இயக்கங்களிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.
நியூரான்களில் குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கவும், அவற்றின் செயல்திறனை அதிகரிக்கவும் பல எளிய தந்திரயோகவழிமுறைகள் உள்ளன. அவை குறித்துப் பின்னர் விரிவாகக் காணலாம்.
நியூரான்களின் அமைப்பு
ஒரு நியூரானில் மூன்று முக்கியமான பகுதிகள் உள்ளன –
உடல் பகுதி (Body)
வால் பகுதி (Axon)
நுண்ணிய கிளைகள்(Dendrites)
உடல்பகுதி(Body)
ஒரு நியூரானின் மிக முக்கியமான பகுதி இதுவே. இதனுள் சைட்டோபிளாசம் உள்ளது. அதன் நடுவில் நியூக்லியஸ் என்ற மையப் பகுதி உள்ளது. ஒரு நியூரானின் அனைத்துச் செயல்பாடுகளும் இந்த நியூக்லியஸ் பகுதியால்தான் நடைபெறுகின்றன.
வால் பகுதி (Axon)
ஒரு நியூரானின் உடல் பகுதியிலிருந்து வால் போன்ற ஒரு அமைப்பு உருவாகிறது. இவை ஒரு நியூரானை மற்றொரு நியூரானோடு இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறது.
இந்த வால் பகுதியின் நீளம் தேவைக்கு ஏற்ப மாறுபடும். சில மில்லி மீட்டரில் இருந்து ஒரு மீட்டர் வரையில் இது இருக்கலாம்.
அடுத்துள்ள நியூரானோடு இணையும் போது நீளம் மிகக் குறைவாகவும், தொலைவிலுள்ள ஒரு நியூரானோடு இணையும் போது நீளம் அதிகமாகவும் இருக்கும்.
ஒரு நியூரானிலிருந்து வரும் செய்திகள் மற்றொரு நியூரானுக்கு இந்த வால் பகுதியில் மின்காந்த அலைகளாகக் கடத்தப் படுகின்றன.
இந்தத் தகவல் பரிமாற்றத்தின் வேகம் தேவையைப் பொருத்து மாறுபடும். சாதாரண வேளைகளில் மணிக்கு நூற்றி ஐம்பது கிலோமீட்டர் வேகத்திலும், அவசர வேளைகளில் மணிக்கு நானூறு கிலோமீட்டர் வேகத்திலும் இது நடைபெறுகிறது.
நுண்ணிய கிளைகள்(Dendrites)
நியூரான்களின் உடல் பகுதியிலிருந்து கேசம் போன்ற பல நுண்ணிய கிளைகள் உருவாகி, அருகிலுள்ள பல நியூரான்களோடு இணைப்பை ஏற்படுத்துகின்றன. நினைவுப் பதிவுகளை உருவாக்குவதில் இந்தக் கிளைகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன.
கிளையா செல்கள்
மூளையின் மிக முக்கியமான பகுதி நியூரான்களாக இருப்பினும், அவற்றைச் சுற்றி உள்ள கிளையா செல்களும் மிக முக்கியமானவை. உண்மையில் மூளையில் நியூரான் செல்களின் அளவைவிட இந்த கிளையா செல்களின் அளவே அதிகமாக உள்ளது.
நியூரான் செல்களின் அளவைவிட கிளையா செல்களின் அளவு பத்து மடங்கு அதிகம்!
நியூரான்களின் வால் பகுதியில் ஒரு உறைபோல் இந்த கிளையா செல்கள் படிந்துள்ளன. இதை மைலீன் உறை என்று அழைக்கிறோம்.
இந்த உறை வால் பகுதிக்கு ஒரு காக்கும் கவசமாகச் செயல்படுவதோடு, நியூரான்களுக்கிடையிலான செய்திப் பரிமாற்ற வேகத்தையும் அதிகரிக்கிறது.
நியூரான்களைச் சுற்றி உள்ள கிளையா செல்களுக்கு வேறு பல முக்கியமான பணிகளும் உள்ளன –
நியூரான் செல்கள் உயிர் வாழவும், நலமாக இயங்கவும் தேவையான சத்துப் பொருட்கள் இந்த கிளையா செல்கள் வழியாகவே நியூரான்களைச் சென்றடைகின்றன.
சேதமடைந்த அல்லது இறந்துபோன நியூரான் செல்களை செரிமானம் பண்ணி, மூளையிலிருந்து வெளியேற்றும் பணியையும் இந்த கிளையா செல்களே செய்கின்றன.
கிளையா செல்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கிளையா செல்களுக்கு மேலும் பல பணிகளும், முக்கியத்துவமும் இருக்கக் கூடும் என்ற கருத்து தற்போது வலுப்பெற்று வருகிறது.
நியூரான்களின் பணி
உடலின் பல பாகங்களிலிருந்து வரும் செய்திகள், குறிப்பாக நமது ஐம்புலங்களிலிருந்து வரும் செய்திகள் உணர் நரம்புகள் வழியாக இந்த நியூரான்களை வந்தடைகின்றன.
நியூரான்கள் அவற்றை அலசி ஆராய்ந்து, ஏற்கெனவே மூளையில் பதிவாகியுள்ள நினைவுப் பதிவுகளோடு அவற்றை ஒப்பிட்டு, என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளையை உடலின் பாகங்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கின்றன.
நமது நினைவுப் பதிவுகள் அனைத்தும் நியூரான்களுக்கிடையே உருவாகும் இணைப்புகளால் தான் உருவாகுகின்றன.
இதுவரையில் மூளையின் அமைப்புக் குறித்து பல செய்திகளைக் கண்டோம். அடுத்த இதழிலிருந்து இந்தப் புரிதலின் அடிப்படையில் நமது அறிவுத் திறனை எப்படி வளர்த்துக் கொள்வது என்பதைக் காணலாம்.
(தொடரும்)