பண்படுத்தும் நல்மொழிகள்! – 26

டாக்டர் மெ.ஞானசேகர்

 

யூதர்களுக்குத் தங்களது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததற்காக கோரி டென்பூம், பெட்ஸி டென்பூம் என்ற இரண்டு சகோதரிகளையும் நாஜிப்படையினர் 1944-ஆம் ஆண்டு கைது செய்தனர். ஸ்கேவனிங்கள் என்ற இடத்தில் இருந்த சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

சில நாட்கள் கழித்து வடக்கு ஜெர்மனியில் இருந்த ராவன்ஸ்புரைக் என்ற வதை முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அந்த முகாமில் யாரும் பெயர் சொல்லி அழைக்கப்படவில்லை. அவர்களுக்குத் தரப்பட்ட கைதி நம்பர் மட்டுமே அவர்கள் பெயரானது. இந்தச் சகோதரிகளுக்கு கைதி 66729 மற்றும் கைதி 66730 என்று எண்கள் தரப்பட்டு இவர்கள் அறை எண்.28க்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அந்த அறையில் ஏற்கனவே பலரும் அடைக்கப்பட்டிருந்ததோடு, இந்தச் சகோதரிகள் மற்றும் பலரும் புதிதாக அடைக்கப்பட்டனர். அங்கே அடுக்குகளாகப் படுக்கைகள் கொண்ட பலகைகள் உண்டு. ஆனால், ஒரு படுக்கையில் இருப்பவர் எழுந்து உட்கார்ந்தால் அவர் தலை மேலே உள்ள படுக்கையில் மோதும், எனவே தலை நிமிர்ந்து உட்காரவும் முடியாது.

அந்த அறைக்குள் இந்த இரு சகோதரிகளும் நுழைந்த போது ஏற்பட்ட துர்நாற்றம் வாந்தி எடுக்கும் நிலைக்கு இவர்களைத் தள்ளியது. மிகவும் கடினப்பட்டு அதைச் சமாளித்தார்கள். படுக்கையில் நுழைந்த போது மூட்டைப் பூச்சிகள் கடிப்பதை உணர்ந்தார்கள். சுற்றிப்பார்த்த போது எல்லா இடமும் அவற்றின் கொடூரம் தென்பட்டது.

இருவரில் ஒருவரான கோரி டென்பூம் தன் அடுத்த சகோதரியிடம் “இந்தக் கொடுமைகளோடு எப்படி வாழ்வது?, இங்கே எப்படி நாட்களைக் கடத்துவது?” என்று மனம் நொந்து கேட்டாள். அதற்கு பெட்ஸி டென்பூம் “என்ன செய்வது, யூதர்களில் சிலரைக் காப்பாற்ற வேண்டும் என்று உதவி செய்தோம். ஆனால், இக்கொடியவர்கள் கையில் மாட்டிக் கொண்டோம். கடவுள் நமக்குக் கொடுத்துள்ள இந்தச் சூழலுக்கு நன்றி சொல்லி மன்றாடு” என்றாள்.

கோரி கோபமாக ‘இந்தச் சூழலில் நான் எப்படிக் கடவுளுக்கு நன்றி சொல்லுவேன். நீ எப்படிச் சொல்லுவாய், உன்னால் இங்கிருக்கும் எந்த ஒன்றுக்காவது நன்றி சொல்ல முடியுமா?” என்று கேட்டாள்.

பெட்ஸி அவளிடம் “முடியும், முதலில் நாம் இருவரும் சிறைவாழ்விலும் ஒன்றாக அடைக்கப்பட்டுள்ளோமே இதற்கு நன்றி கூறு. கை கால்கள் கட்டப்படாமல் உள்ளோமே இதற்கு நன்றி கூறு. இருட்டறையில் அடைக்கப்படவில்லையே அதற்கு நன்றி கூறு… என்று சொல்லிக் கொண்டே வந்தாள். இறுதியாக இங்கிருக்கும் மூட்டைப் பூச்சிகளுக்கும் நன்றி கூறு” என்று
சொன்னாள்.

எல்லாவற்றையும் பொறுமையோடும், கண்ணீரோடும் கேட்டுக் கொண்டே இருந்தாள் கோரி. ஆனால் தன் சகோதரி மூட்டைப் பூச்சிகளுக்கும் நன்றி கூறு என்று சொன்னபோது பொறுமையிழந்தாள்.

“என்ன சொல்கிறாய் நீ? இங்குள்ள இந்த மூட்டைப் பூச்சிகளைத் தந்ததற்குக் கடவுளுக்கு நான் நன்றி சொல்ல வேண்டுமா? முடியாது. கடவுளே வந்து நன்றி சொல்லச் சொன்னாலும் நான் கூற மாட்டேன். அவரே கூட அப்படிச் சொல்ல மாட்டார்” என்று அங்கலாய்த்தாள்.

பெட்ஸி பொறுமையாக “சகோதரி, என்ன செய்வது நாம் இருக்கும் இச்சூழலில் நம்மைவிடக் கொடுமையாகப் பாதிக்கப்படும் குழந்தைகள், உடல் உபாதையுள்ளவர்கள், முதியவர்கள் போன்ற எல்லோரும் இந்த நாஜிப் படைகளால் இந்த வதை முகாமில் படும் துன்பங்களைப் பார். நாம் நமது இந்த இருப்புக்கு நன்றி கூற வேண்டும்” என்று அவளைச் சமாதானப்படுத்தினாள்.

வாழ்வில் மனிதர்கள் எவ்வளவு பொறுமையாக இருந்துள்ளார்கள் மற்றும் இருக்க வேண்டியிருந்தது என்பதற்கு வரலாற்றில் பல கொடுங்கோலர்களின் செயல்களைப் படித்துப் பாருங்கள். இருபதாம் நூற்றாண்டில் இன்றிலிருந்து 75-ஆண்டுகளுக்கு முன்பு ஹிட்லரின் வதை முகாம்களில் யூத மக்கள் மற்றும் அவர்களைக் காப்பாற்ற முனைந்தவர்கள் எவ்வளவு கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்பதை வாசித்துப் பார்த்தால் நெஞ்சமே வெடிக்கும்.

இன்றும் கூடப் போர்கள் அதன் பின்னணியில் உள்ள தீவிரவாதிகளின் வதை முகாம்கள் இத்தகைய கொடூர முகங்களைக் காட்டிக் கொண்டு தான் இருக்கின்றன. சிறையில் அடைக்கப்பட்ட இந்த இரு சகோதரிகளும் அத்தகைய துன்பத்தைத் தான் அனுபவித்தார்கள்.

அப்போது ஒரு நாள் அவர்கள் அறைக்கு வெளியே இருந்த ஒரு காவலன் ‘இந்த சிறையறைக்குள் செல்லமுடியாது’ என்று தன்னை அடுத்திருந்தவனிடம் பேசிக் கொண்டிருந்தான். ‘ஏன்’ என்று அவன் கேட்டபோது “இங்கே மூட்டைப் பூச்சிகள் அதிகமாக உள்ளது” என்று கூறினானாம். இதைக் கேட்ட பெட்ஸி தன் சகோதரியிடம் “பார்த்தாயா இந்த மூட்டைப் பூச்சிகளால் தான் நாம் காப்பாற்றப்படுகிறோம். இல்லையென்றால் இந்தக் காவலர்கள் உள்ளே புகுந்து நம்மைத் தினம் தினம் தாக்குவார்கள்” என்று வருத்தப்பட்டுக் கொண்டாளாம்.

ஆம், பொறுமையாக உள்ள மனிதர்கள் நல்லதையே பெறுகிறார்கள். கொடுமையானவர்கள் கைகளில் சிக்கிக் கொள்ளும் போது குறிப்பாகப் பொறுமை அதிகம் தேவைப்படுகிறது.

பல நேரங்களில் நாம் பணிபுரியும் இடத்திலும் கூட அதிகாரத் துஷ்பிரயோகம் செய்பவர்கள், பணத்திமிரால் வதைப்பவர்கள், சாதிவெறி பிடித்தவர்கள் பதவிக்கு வந்து பாடாய்ப் படுத்துகின்றார்கள். இவர்களிடம் நாம் எதையாவது நியாயம் பேசுகிறோம் என்று எதிர்த்துப் பேசினால் நம்மை ஒவ்வொரு நாளும் இடம், பார்த்து, சூழல் பார்த்துப் பழி வாங்குவார்கள். வாயை மூடிக் கொண்டு இந்தக் கொடியவர்களின் காலம் முடியும் வரை பொறுமை காப்பது தான் அறிவுள்ள செயலாக இருக்கின்றது. காரணம், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்களது மேலதிகாரிகளையும் இவர்கள் சரிகட்டி விடுகின்றார்கள். இன்னும் சில இடங்களில் மேலதிகாரியும் இவர்களுடன் சேர்ந்து அநீதிக்குத் துணை நின்றால் அது கொடிய காலம் என்பதைத் தவிர வேறு இல்லை. இச்சூழல்களில் நம் பெறுமையைச் சோதிப்பவர்களுக்கு மன்னிப்பையும் நாம் தந்துவிட்டால் மன உளைச்சல் நமக்கு இராது.

பொறுமையின் வலிமை

‘பொறுமை கடலினும் பெரிது’ என்கிறோம். ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்கிறார்கள் நம் பெரியோர்கள் ஆம் இங்கு ‘பூமியைப் போல பொறுமை வேண்டும்’ என்று நாம் காண்கிறோம். பூமியைத் தாய்க்கு நாம் ஒப்பிடுகின்றோம். காரணம் தாயானவள் தன் பிள்ளைகளுக்குப் பொறுமையின் உச்சகட்ட இலக்கணமாகத் திகழ்கின்றாள்.

வரலாற்றில் பெரும்பாலும் தன் பிள்ளைகளுக்கு எதிராகப் பொறுமையிழந்து தீமை செய்த தாயாரை நாம் பார்த்ததில்லை. தன் மகன் தவறே செய்துவிட்டாலும் அவனைத் திருத்திட அல்லது அவனைக் காப்பாற்றிடத் தான் பல தாய்மார்கள் முயன்றுள்ளார்கள், இன்றும் தங்களது பாசத்தின் காரணமாக முயலுகின்றார்கள்.

ஆனால், வரலாற்றில் சில தாய்மார்கள் தவறு செய்யும் தன் மகனை, மகளைக் கண்டித்துத் திருத்தியுள்ளார்கள். சில சமயம் சில தியாகங்களையும் செய்து தம் பிள்ளைகளையே ஒதுக்கியுள்ளார்கள். ஆனால், பொதுவாக தாய்மார்களின் பொறுமை போற்றத்தக்கது.

தன் மகன், மகளிடம் காட்டும் அதே பொறுமையை மற்றவர்களிடம் காட்டுவதில் தாய்மார்களுக்குப் பிரச்சனை உண்டு. அதனால் தான் மாமியார், மருமகள் போராட்டங்கள் சில குடும்பங்களில் மேலோங்குகிறது. பொதுவாகவே, குடும்பங்களில் தான் முதல்முதலில் பொறுமை யென்னும் பண்பினை நாம் பெற்றுக் கொள்கிறோம் மற்றும் கற்றுக் கொள்கிறோம். முன்பு கூட்டுக் குடும்பங்கள் இருந்த போது விட்டுக் கொடுத்தல், அனுசரித்துப் போதல், தாங்கிக் கொள்ளுதல், பகிர்ந்து கொடுத்தல், பங்கு பெறுதல், தாராள மனம் கொண்டிருத்தல், சுயநலமில்லாமல் இருத்தல், பொறுத்துக் கொள்ளுதல் போன்ற பல பண்புகள் வளர்ந்து பெருகின.

கூட்டுக் குடும்பங்கள் அழிந்த பின்பும் அதிகப் பிள்ளைகளைக் கொண்டிருந்த நமது குடும்பங்களில், நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தப் பண்புகள் அதிகம் காணப்பட்டன. ‘பொறுமை’ என்ற பண்பு பெருமையாக நம் பெரியோர்களால் எடுத்தாளப்பட்டது, மேலும் கற்றுக்கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று ஒற்றை மற்றும் இரட்டைப் பிள்ளைகள் கொண்ட சிறு குடும்பங்களில் பொறுமை என்பது மிகவும் புறக்கணிக்கப்படும் அல்லது அரிதாகக் காணப்படும் பண்பாகி வருகின்றது.

இருப்பினும் கூட வீட்டில் இன்றும் பொறுமைக்கு பெரியவர்களிடம் நல்ல இடம் உண்டு. ஆனால் வீட்டில் காட்டும் பொறுமை வெளியில் மற்றவர்களிடம் காட்டும் போது வெறுப்பாக வெடிக்கிறது. இது பெரியவர்கள் பலரிடம் காணக்கூடிய பண்பாகும். அதே சமயம் சிறியவர்கள் வீட்டில் பொறுமையிழந்து காணப்படுகின்றார்கள். ஏனெனில் நமது அப்பா, அம்மா தானே, சகோதரன், சகோதரி தானே என்று உரிமை எடுத்துக் கொண்டு சதா எரிச்சலுடன் பலர் காணப்படுகிறார்கள். ஆனால் இவர்களில் பலர் வீட்டிற்கு வெளியில் பொறுமையோடும், பவ்யமாகவும் நடந்து கொள்கிறார்கள். எப்படியானாலும் ‘பொறுமை’ என்னும் பண்புதான் நமது இல்லங்களின் வலிமையாக உள்ளது. காரணம், நம் இரத்த உறவுகள் அல்லது நாம் எல்லோரும் ஒன்று, ஒரு குடும்பம் என்ற உணர்வு அடிப்படையில் நம்மிடம் மேலோங்கி நிற்கிறது. இது மிகவும் பாராட்டத்தகுந்த மற்றும் ஆரோக்கியமான பண்பாகும்.

இந்தப் பொறுமை என்னும் குணத்தைச் சமூகத்திலும் காட்டிட வேண்டிய கடமை நமக்கு உண்டு. சமூகத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள பலரும், நிறுவன நிர்வாகிகளும் ‘பொறுமை’ என்ற ஒற்றைப் பண்பால் பலவும் சாதித்திருக்கிறார்கள். இவர்களது சிகரங்கள் மிகுந்த வெற்றிக்குக் காரணமான மனிதர்களை இவர்கள் ‘பொறுமை’ என்று அழைக்கும் பண்பின் வெளிப்பாடான நிபந்தனையில்லாத அன்பால் தான் சாதித்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

பொறுமையை மதித்தவர்கள்

உலகெங்கும் கிளை பரப்பியுள்ள வால்மார்ட் நிறுவனத்தின் தலைவர் சாம் வால்டன். அவர் தனது மேலாளர்களிடம் “நீங்கள் முக்கியமான முடிவுகளை மேற்கொள்ளும் போது உங்கள் நாற்காலியில் அமர்ந்து கொண்டு செய்யாதீர்கள்” என்று கூறுவாராம். அவரது இந்தக் கூற்றினை அவரது பல மேலாளர்கள் தங்களது மேஜையில் காணுமாறு எழுதி வைத்துக் கொண்டார்களாம். பல சமயங்களில், சிக்கலான சூழல்களில் முடிவு எடுக்கும் போது இந்த வாசகத்தை வாசித்துப் பார்த்துச் செயல்பட்டதால் நல்ல முடிவுகளையும் அவர்கள் எடுத்தார்களாம்.

ஒரு சமயம் பல கிளைகளுக்குப் பொறுப்பு வகித்த ஒரு மண்டல மேலாளர் ஒரு கிளையில் ஏற்பட்ட தொடர் நஷ்டம் காரணமாக, அந்தக் கிளை மேலாளரைப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று தன் மேலதிகாரிக்குக் கடிதம் எழுதினாராம். பின்பு தொலை பேசியிலும் சில முறை பேசினாராம். அப்போது அந்த மேலதிகாரி “சரி அந்த மேலாளரைப் பதவியிலிருந்து நீக்கிவிடுங்கள்” என்று சொல்ல நினைத்த போது தங்களது நிறுவனர் சாம் வால்டன் கூறிய கூற்றை மேஜையில் கவனித்து விட்டார். உடனே அந்த மண்டல மேலாளரிடம் ‘நான் நேரில் வந்து முடிவு செய்கிறேன்’ என்று கூறிவிட்டார்.

இரண்டு நாள் கழித்து அந்த மேலதிகாரி அந்தக் கிளையை நேரில் சென்று பார்வையிட்டார். முதலில் அங்கிருந்த ஊழியர்களிடம் பேசினார். அப்போது அவர்கள் மேலாளரின் மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட்டு வாடுவதையும், அவரது பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ள அவர்களது மேலாளர் சிரமப்படுவதையும் அறிந்து கொண்டார்.

அதன்பிறகு அந்த மேலதிகாரி அந்தக் கிளை மேலாளரை வைத்துக் கொண்டு அக்கிளை ஊழியர்களிடம் பேசினார். கிளை மேலாளர் மனைவி உடல் நலம் தேறும் வரை பொறுப்பில் வேறு ஒருவரை நியமித்தார். சில மாதங்களில் அவரது மனைவி பூரண குணமடைந்தார். மீண்டும் தன் கிளை மேலாளர் பொறுப்பை ஏற்றுப் பல ஆண்டுகள் சிறந்த பணியை ஆற்றினார் என்று குறிப்பிடுகின்றார்.

ஒரு வேளை அந்தக் கிளை மேலாளரைப் பதவி நீக்கம் செய்திருந்தால் அவரது குடும்பம் சீர்குலைந்திருக்கும். ஒரு சிறந்த மேலாளரையும் அந்நிறுவனம் இழந்திருக்கும் இங்கு பொறுமையோடு எடுத்த முடிவு தான் சிறப்பாக அமைந்தது.

நமது ஊரில் விளைநிலங்களில் மழையின்றி விவசாயம் பொய்த்துப்போன போதும் கடன்களைத் திருப்பிக்கட்டுங்கள் என்று வற்புறுத்தித் தற்கொலைக்கு நம் விவசாயிகளைத் தள்ளியவர்கள் பொறுமையில்லாத வங்கிகளின் அதிகாரிகள். பொறுமையில்லாதவர்களின் செயல்களால் வாழ்வில் உருக்குலைந்த குடும்பங்கள், நிறுவனங்கள், தனி மனித வாழ்க்கைகள் என்று பலவற்றை அன்றாடம் நாம் பட்டியல் இடலாம்.

மகாத்மா காந்தியைப் பற்றி ஆங்கிலேயர்களில் பலர் அடிக்கடி கூறிய கருத்து இங்கே நாம் நினைத்துப் பார்க்க வேண்டியதாகும். “காந்தி ஆங்கிலேயர்களை எதிர்த்துத் துப்பாக்கி
கொண்டோ, ஆயுதங்களைக் கொண்டோ, வன்முறை கொண்ேடா போராடியிருந்தால் அவரை
நாங்கள் எளிதில் வென்றிருப்போம். ஆனால் அவர் அஹிம்சை என்னும் மென்முறை கொண்டு போராடுவதால் தான் நாங்கள் கைகள் கட்டப்பட்டு நிற்கிறோம்” என்று கூறினார்கள். உண்மை தானே, அஹிம்சை என்ற பொறுமையான ஆயுதத்தால் அவர் பலம் பொருந்திய ஆங்கிலேயர்களை அடிபணியச் செய்தார். அதனால் தான் ‘மஹாத்மா’ என்ற மகா ஆத்மாவாகக் காட்சி
தருகின்றார்.

பொறுமைக்கு வரும் சோதனைகள்

கொரோனா நோய்த் தொற்று வந்து மக்கள் மடிந்து கொண்டிருக்கிற காலம். மக்கள் தினம் தினம் கொத்துக் கொத்தாக மடிந்த போது பல இடங்களிடம் “கடவுள் எங்கே போய்விட்டார்” என்று புலம்பல்கள் அதிகம் கேட்டது.

பலர் முகநூல் பக்கங்களிலும், வாட்ஸ் ஆப் செய்திகளிலும் கடவுளை நம்பியோர் கைவிடப்பட்டார்கள் என்று கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். கொரோனா நோய்த் தொற்றுக்கும், கடவுளுக்கும் நாம் ஏன் முடிச்சுப் போட வேண்டும்? மனிதர்கள் நமது செயல்களால் இயற்கை வாழ்வுக்கும், மனித வாழ்வுக்கும் நாம் பாதகங்களை உருவாக்கிக் கொள்கிறோம். இங்கு கடவுள் காப்பாற்றவில்லை என்று கடவுளை இழுத்து வந்து நமது உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டும்.

கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள், எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் ஆனாலும் அந்த நம்பிக்கைக்கான ஆழமான மற்றும் அழுத்தமான ஒரு உணர்வினை அல்லது பலனைத் தம் வாழ்நாளில் கடவுளிடம் இருந்து பெற்றிருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் தினம் தினம் கடவுள் தரும் நற்பலன்களை, ஆசீர்வாதங்களைப் பெற்றவர்களும், பெற்றுக் கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

சோதனை வந்த சூழலில் தங்களை மறந்து, தங்களது உயிரின் முக்கியத்துவத்தை, குடும்பத்தை மறந்து சமூகப்பணி செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அன்றாடம் உதவிக்கரம் நீட்டி லட்சக்கணக்கான மக்களைக்காத்தவர்களில் பெரும்பாலானோர் கடவுள் பக்தியால் தான் செய்தார்கள். அவரவருக்கு இருந்த கடவுள் பக்திதான் தைரியத்தைக் கொடுத்து அவர்களை இப்பணி செய்திட வைத்தது. எனவே இங்கே சோதனைக் காலத்தில் கடவுளைக் கிண்டல் செய்தது, செய்வது தேவையற்றது.

பைபிளில் பழைய ஏற்பாட்டு நூலில் நீதிமானாக விளங்கிய யோபுவின் வாழ்க்கை நல்லதொரு எடுத்துக்காட்டு. மிகப்பெரும் செல்வந்தராக, சமூகத்தில் மதிப்பு மிக்க மனிதராக, பத்துக் குழந்தைகளின் தகப்பனாக யோபு வாழ்கின்றார். ஆனால், நீதி தவறாதவராகக் கடவுள் பக்தி மிகுந்தவராகத் திகழ்கின்றார். கடவுள் இவரைக் கண்டு பெருமிதம் கொண்ட போது, சாத்தான் கடவுளிடம் “நீர் அவனுக்கு எல்லா ஐசுவரியங்களையும் தந்துள்ளீர், அதனால் அவன் உம்மிடம் இப்படி இருக்கிறான்” என்று கூறியது.

கடவுள் சாத்தானிடம் தன் நேசமிகு பக்தன் யோபுவைச் சோதிக்க அனுமதி தந்தார். “அவன் உயிரை மட்டும் எடுக்கக் கூடாது” என்று கட்டளையிட்டார். சாத்தான் தன் வேலைகளைச் செய்து யோபுவின் செல்வங்களை அழித்தது, அவரது பிள்ளைகளைக் கொன்று போட்டது. எல்லாம் இழந்த யோபு சீழ்வடியும் குஷ்டரோகியானார், அவரது மனைவி வந்து “கடவுளை மறுத்துவிட்டுச் சாகும்” என்று கூறியபோதும் யோபு கடவுளை மறுக்கவில்லை.

தன் சீழ்வடியும் உடலின் வேதனை தாங்காது கடவுளிடம் யோபு புலம்பிப் பிதற்றுகின்றார், அழுது கூக்குரல் இடுகின்றார், அப்போது ஒரு கணம் கடவுள் மீது அவருக்குக் கோபமும் வருகின்றது. உரிமைேயாடு கடவுளிடம் கூக்குரல் இடுகின்றார் யோபு. அப்போது கடவுள் சில ஞானிகள் மூலம் அவருக்கு ஞானத்தைச் சொல்லிய பின்பு, தாமே யோபுவிடம் பேசுகின்றார் என்கிறது பைபிள்.

ஒரு இரவு, தரையில் அல்லது மொட்டை மாடியில் நின்று கொண்டு வானத்தை நோக்கிப் பார்த்து அதிலுள்ள நட்சத்திரக் கூட்டத்தையும், வான்வெளியையும் காணும் போது இந்த அரிய படைப்புகளைக் கொண்ட இவ்வுலகம் விடைகாண முடியாத பல கேள்விகளைக் கொண்டுள்ளது என்பதை நாம் உணர முடியும். பகலில் கண்விழித்து இயற்கையின் ஒவ்வொரு படைப்பினையும், ஒவ்வொரு பூக்களின் வண்ணங்களையும், இதழ்களையும், கனிகளின் சுவையையும் தனித்தன்மையையும் காணும் போது நாம் கடவுளைக் காணலாம் என்பது தான் எம் போன்றோரின் தெளிவு.

எனவே துன்பகாலங்களில் யோபு போலப் புலம்பினாலும் யோபுவும கடவுளால் இறுதியில் நலமாக்கப்பட்டு, முன்பு பெற்றிருந்த செல்வத்தைவிட இருமடங்கு அதிகம் பெற்றார் என்பது தான் நம்பிக்கையாகும். யோபு பெற்றது கடவுள் தந்த சோதனை, நாம் பெறுவது நாமாக இழுத்துக் கொண்ட சோதனைகள் தான். இயற்கைக்கு எதிராக, மனித குலத்திற்கு எதிராக நாம் செய்த தவறுகளுக்கான பாடம் ‘கொரோனா’ என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளத் தானே வேண்டும். ஆனால், சிலரது செயலால் பல அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டது தான் பெருத்த வேதனை. இந்தக் காலத்தில் பொறுமைக்கான சோதனை தினம் தினம் நம்மில் பலருக்கு உருவானது. ஆயினும், இதனையும் நமது முறையான முயற்சிகளால் வென்றோம், வெல்கிறோம் என்பது வரலாறு. அதே சமயம் இது போன்ற சோதனைகளை வராது காக்கவும், வரும் என்ற நிலையில் தற்காப்போடு வாழவும் எதிர்காலத்தில் நாம் பயிற்சி பெறவும் வேண்டியுள்ளது.

பூமியைப் போல பொறுமை வேண்டும் ஏன் என்றால், நாம் செய்யும் இயற்கைக்கு எதிரான அத்தனை தவறுகளையும் மன்னித்துப் பூமியானது இன்றும் செடியாகக் கொடியாக மலர்ந்து மணம் வீசித் தன் வளங்களைத் தருகிறது. மரங்களின் வேர்களுக்குப் பிடிமானம் தந்து காற்றையும், நீரையும் தருகின்றது. நாம் வாழ எண்ணற்ற உயிர்களை நமக்காகப் பூமியில் வளர்த்து நமக்கு உணவும், உடையும், உறைவதற்கு இடமும் தருகின்றது. இந்தப் பொறுமை மிக்க பூமித்தாயின் மக்கள் அதனிடமிருந்து நிபந்தனையற்ற அன்பினை வெளிக்காட்டும் பொறுமையைக் கற்றுக்கொள்வோம். பொறுமையால் இவ்வுலகில் புத்துணர்வு பெறுவோம். சக மனிதர்களைப் பொறுப்போடு அரவணைப்போம்.

தத்துவ அறிஞர் பிரசெரிக் நீட்சே கூறுவது போல “வாழ்வதற்கு ஒரு வலுவான காரணத்தைக் கொண்டிருப்பவனால் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ள முடியும்” என்ற வாக்கியம் பொறுமையின் எல்லையைச் சொல்லுகின்றது வாழ்வதற்கான வலுவான காரணங்கள் இவ்வுலகின் உயிரினங்களுக்கு நல்லது செய்வதாக அமைந்தால் அதற்காக நாம் பொறுமையோடு செயல்படலாம், பெருமை மிக்க வரலாற்றிலும் இடம் பெறலாம்.