ஆளப் பிறந்தோம் – 33


திரு. இள. தினேஷ் பகத்

‘‘அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்’’

இந்தக் குறளின் விளக்கம், நம்மால் எதுவும் செய்யமுடியாது என்று மனம் தளராமல் தொடர்ந்து அதற்கான முயற்சியைச் செய்கிற போது அச்செயலுக்கான உரிய வலிமையைப் பெறுகிறோம் என வள்ளுவர் கூறுகிறார்.

என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு,

வணக்கம். போட்டித் தேர்வுக்குத் தயாராவது என்பது தொடர்ந்து அதற்கான பயிற்சியைச் செய்யும் போது அப்பயிற்சியே நம்மை வலிமையுள்ளவர்களாக மாற்றி வெற்றியைத் தரும் என்பதில் உறுதியாக இருங்கள்.

எந்த ஒரு வெற்றியாளனுடைய வாழ்க்கையிலும் ஒரு கடினமான காலக்கட்டம் இருந்திருக்கும். அதில் பல அனுமானங்கள், பல நெருக்கடியான தருணங்கள் வந்திருக்கும். தோல்விகள் துவள வைத்திருக்கும், எல்லாவற்றையும் கடந்து தான் வெற்றி பெறுகின்றனர்.

இந்த இதழில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நடத்தும் Probationary Engineer தேர்வு பற்றிப் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்னர், தன்னுடைய கடினமான போராட்ட குணத்தால் பல தடைகளைக் கடந்து 2003 – ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய குடிமைப் பணித்தேர்வில் அகில இந்திய அளவில் 261 ரேங்க் பெற்று தற்போது Controller of Defence Accounts பணிபுரிந்து வரும் T. ெஜயசீலன், IDAS அவர்களின் கதையைத்தான் பார்க்க இருக்கிறோம்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூருக்கு அருகே உள்ள கோவில்பத்து என்ற சிறிய கிராமத்தில் பிறக்கிறார். இவரது பெற்றோர் மிகவும் ஏழ்மையானவர்கள். இவருக்கு 2 அக்கா மற்றும் 2 தம்பிகள். இவரது சிறுவயதிலேயே அவரது தந்தை இறந்துவிட குடும்ப பாரம் முழுவதையும் அவரது தாயார் ஏற்க வேண்டிய சூழல். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மூன்று வேளை உணவு என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. இவரது தாய் விவசாய தினக்கூலி வேலைகளுக்குச் சென்று குழந்தைகளின் பசியினைப் போக்கி வருகிறார்.

ஒரு சராசரி மனிதனின் தேவையினைப் பூர்த்தி செய்யும் காரணியாக அமைவது உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க இருப்பிடம். இவை எவையுமே இவருக்கு கிடைக்கப் பெறவில்லை. சிறிய குடிசை வீடு. அதில் மழைக்காலங்களில் உறங்கவே முடியாத நிலை. வீட்டில் விளக்கு எரிக்க மண்ணெண்ணெய் கூட வாங்க இயலாத கையறு நிலை. சுருக்கமாகக் கூறினால் வறுமையிலும் வறுமை இவரைச் சூழ்ந்து இருந்தது. இச்சூழலிலும் எட்டாம் வகுப்பு மேல்நிலைக் கல்வியை முத்துப்பேட்டையில் உள்ள உறைவிடப் பள்ளிகளில் பயின்றார். தன்னுடைய இளம் அறிவியல் (விலங்கியல்) படிப்பினை ஈ.வெ.ரா. கல்லூரியிலும், முதுநிலை படிப்பினை திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியிலும் படித்தார். பிறகு ஆசிரியர் பட்டயப் படிப்பு தஞ்சாவூரிலும் படித்தார்.

இவர், மாத இதழ்களுக்கு கவிதை எழுதி சன்மானம் பெறுதல், வானொலி நிலையங்களில் கவிதை வாசித்தல் போன்ற பகுதிநேரப் பணிகளை மேற்கொண்டே தன்னுடைய படிப்பை தொடர்ந்தார்.

கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு முழுநேரமாக வேலை தேடுகிறார். முதலில் சொர்ப்ப சம்பளத்தில் இறால் பண்ணையிலும் பிறகு மெடிக்கல் ரெஃப்பாகவும் வேலையில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டே தன்னுடைய இலட்சியக் கனவான IAS தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.
வேலையில் இருப்பதால் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த முடியாது என்பதால் நுழைவுத் தேர்வு எழுதி தமிழக அரசின் இலவசக் குடிமைப் பணி மையத்தில் சேர்ந்தார்.

தொடர்ந்து சென்னையில் படிக்க பணவசதி இல்லாததால் ஊருக்குத் திரும்ப இருந்த இவருக்கு இவரது நண்பர்கள் மற்றும் இவரது சகோதரர் உதவினர். அதன்பிறகு பல போராட்டங்களைச் சந்தித்து தன்னுடைய 4வது முயற்சியில் ேதர்ச்சி பெற்றார். திரு, T. ெஜயசீலன், IDAS அவர்களை நமது ஆளுமைச் சிற்பி இதழ் பாராட்டி மகிழ்கின்றது.