மூளை என்னும் முதல்வன்


திரு. A.மோகனராஜூ, சேலம்

னிதனின் அறிய கண்டுபிடிப்புகள் பல. அதில் மென்மையான மனதை மகிழ்விக்கும் அற்புதக் கண்டுபிடிப்பு இசை. மனிதன் மகிழ்வாய் இருக்கும்போதெல்லாம் பாட்டுப் பாடுகிறான். டோபொமின் என்ற இன்ப ஹார்மோன் மூளையில் சுரக்கிறது. இசை மனிதனை இன்பத்தை உணரச்செய்கிறது, மனித மூளையின் கொர்டெக்ஸ் என்ற முன் பகுதியை கிளர்வுகொள்ளச்செய்கிறது. வயிற்றில் 24 வாரக்கருவான குழந்தையாக இருக்கும்போதே அம்மாவின் குரல் ஓசையையும் வெளிச்சப்தத்தையும் அது பிரித்து உணர்கிறது, நாம் பிறந்த பின், பிஞ்சுக் குழந்தையாக இருக்கும்போதே, மொழியும் பேச்சும் அறியாத நிலையில் அம்மாவின் தாலாட்டு இசையை ரசிக்கத்தொடங்கினோம் என்பது மனிதர்களுக்கு இசையின்மீது இருக்கும் நேசிப்பை எடுத்துக்கூறுகிறது.

இன்பம் துய்க்கும் மகிழ்ச்சிக்கும், இனிப்பை விரும்பி உண்பதற்குமான விருப்பம் இரண்டும் ஒவ்வொருவரின் மூளையின் அடி ஆழத்தில் பதுங்கி இருந்து தேவையான நேரம் பாய்வதுபோல, இசையைக் கேட்டு மகிழும் பண்பும் மூளையின் ஆழத்தில் மறைவாய் இருக்கிறது. மழலையர் பள்ளியில் குழந்தைகள் படிக்கும்போது அறிவுப் பாடங்களைப் படிப்பதைவிட இசையோடு பாடல்கள் பாடுவதை விரும்புகின்றனர். இசை மனிதமூளையில் அதிகமான ஆதிக்கம் செலுத்துகிறது. பாடகர்கள் இசையுடன் பாட்டுப் பாடும்போது அசாதாரணமான சக்தியைப்பெறுகிறார்கள், மென்மையான உணர்வுகளை மூளையின் எல்லாப்பகுதியிலும் உணர்கிறார்கள்.

இசையைக் கேட்பவர்கள் தங்கள் தலையையும், கைவிரல்களையும், கால்களையும் மென்மையாக அசைத்து எளிதில் மகிழ்ச்சியில் மூழ்கிப்போகிறார்கள். சிலர் எழுந்து நடனம் ஆடி மகிழ்கிறார்கள். இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது, இதயத்துடிப்பு சமநிலையை அடைகிறது, முதுகுத்தண்டில் கூச்சமும் சிலிர்ப்பையும் இசை உண்டாக்கி ஊக்குவிக்கிறது. ஒரு சில நேரம் கண்களில் ஆனந்தம் நீர்த்துளியை உருவாக்குகிறது. உலகம் முழுதும் இசைக்கு மகிழ்வையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறார்கள். உலக சர்வாதிகாரிகளான ஹிட்லரின் நாஜி ஜெர்மனியிலும், ஸ்டாலினின் சோவியத் யூனியனிலும், மயோவின் கம்யூனிஸ்ட் சீனாவிலும் நாட்டுமக்களை ஒருங்கிணைக்கவும், அவர்களிடம் கலையை வளர்க்கவும் இசையை மிகப்பெரும் கருவியாகப் பயன்படுத்தினார்கள்.

மொழி மனித மூளைக்குள், அவன் வாழ்விற்குள் வருவதற்குமுன், இசை சுமார் 45000 ஆண்டுகளுக்குமுன்பே மனித மூளைக்குள் அவன் வாழ்விற்குள் கலந்துவந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எலும்பில் உருவாக்கிய குழல் ஓசையும், மாட்டுக் கொம்பு இசையும் மனிதன் பேசத்தொடங்குமுன்பே அதைப் பயன்படுத்தி இருக்கிறான் என்பதைப் புதைபொருள் ஆய்வுகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

இசையின் பெருமை

ஒரு ஆங்கில அறிஞர் மிகவும் அழகானக் கேள்வியை நம்முன் வைக்கிறார், “இசை உழுவதுமில்லை, விதைப்பதுமில்லை, நெய்வதுமில்லை, உணவளிப்பதும் இல்லை, பின் ஏன் இசையை மனிதர்கள் பூமியெங்கும் பிரபஞ்ச உயரம் மகிழ்ச்சிக்கானதாக வைத்திருக்கிறார்கள்’’ என்று. அதற்கான பதிலை ஒர் அறிஞர் சொல்கிறார், ‘‘இசையானது மனிதனிடம் மறைந்திருக்கும் மென்மையான நுண்ணுர்வுகளைத்தூண்டும் அபரிமிதமான சக்தியைக் கொண்டிருக்கிறது’’ என்று. இன்பம் துய்க்க உயிரினங்கள் துடிக்கும்போது, தன் தகுதியை உறுதிப்படுத்தவும், தன்

இணையைத் தேர்வு செய்யவும், குரல் ஓசையையும் நடனத்தையும் பயன்படுத்துகின்றன.
மரமும் செடியும்கூட, இசையை நாம் இசைக்கும்போது அதிகமான பழங்களையும் காய்களையும் கொடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புல்லாங்குழல் இசைக்கு கல்லும் உருகிப்போனதாக கதைகள் பல சொல்லப்படுகின்றன. கல் உருகுகிறதா இல்லையா என்பது நமக்குத்தெரியாது, ஆனால் மனம் உருகி மகிழ்ந்து போவது உறுதி. எப்போதெல்லாம் நீங்கள் இசையோடு பாட்டுப்பாடுகிறீர்களோ அப்போதெல்லாம் நீங்கள் நிகழ்காலத்தில் மகிழ்வில் மனதை வைத்திருக்கிறீர்கள். மகிழ்வாய் இருக்கும் ஒருவர்தான் அடுத்தவர்களை மகிழ்வாய் வைத்திருக்கமுடியும்.

கூட்டமாகப்பாடும்போதும், ஒன்றாக, இணைந்து இசைக்குழுவாக இசைக்கும்போதும், ஆக்சிடோசன் என்ற ஹார்மோன் மூளையில் சுரந்து இரத்த ஓட்டத்தில் கலக்கிறது, இதனால் அடுத்தவர்களை நேசிக்கும் அன்பும், உலகோடு ஒன்றிணைந்து வாழும் பண்பும், பிறர் நலம் பாதுகாக்கும் கருணையும் மூளையில் உருவாகிறது என்று அறிவியல் தெரிவிக்கிறது. நாம் துன்பத்தில் இருக்கும்போது இசையைக்கேட்டால் மூளையில் மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல் சுரப்பது கணிசமான அளவு குறைகிறது. நாம் இசையை விரும்பிக் கேட்கும்போது மனதில் அமைதி நிலவுகிறது என்று மான்ரீல் இசைக்குழு தெளிவுபடுத்துகிறது. நீங்கள் இசையை ரசிக்கும்போது, மூளையில் உருவாகும் டோபோமின் என்ற இன்ப ஹார்மோன், நம் உணர்ச்சியின் உச்ச கட்டத்தில் வெடித்து மூளையின் பிற பகுதிகளுக்கும் பரவி, உங்களை இன்பத்தில் மூழ்கடிக்கிறது, அது உங்களை உற்சாகப்படுத்துவதும், கூர்மையாகக் கவனிப்பதும், ஆழமாகச் சிந்திப்பதுமான செயல்களைச் செய்யத் தூண்டுகிறது.

இசையை ரசிப்பதற்கு வயதுவரம்பு கிடையாது, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இசையை ரசிக்கலாம். இசையில் மூழ்கி இன்பத்தில் மிதக்கலாம். இசை இசைப்பவர்களும் அதற்கேற்ப நடனம் ஆடுபவர்களும் தங்களை முழுவதும் மறந்துவிடுகிறார்கள். இசையும் நடனமும், பார்வையாளர்களின் மூளையில் நுழைந்து தங்களை மறந்து ரசிக்க வைத்து, மனதால் முழுவதும் இன்பத்தில் நனைய வைக்கிறது. எப்போதெல்லாம் உங்களை நீங்கள் மறக்கின்றீர்களோ அப்போதெல்லாம் உங்கள் துன்பத்தையும், பிரச்சனைகளையும் மறந்துவிடுகிறீர்கள். இசை ஒரு இயற்கை வலி நிவாரணி, இசை காதுவழியே மூளைக்குள் நுழையும்போது ஓப்பியேட்(Opiods) போன்ற நியுரோகெமிக்கல்ஸ் உருவாகிறது அது வலியை எளிதில் குறைத்துவிடுகிறது. பெண்களின் பிரசவ வலியைக்கூட இசை கணிசமாகக் குறைப்பதாக ஹாலந்து நாட்டு காதலீன் என்ற பெண் மருத்துவர் கூறுகிறார்.