கேட்டலும் அறிதலும் – 01

திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர்

வணக்கம் ஐயா..

வணக்கம். என்ன சதீஷ், ரமேஷ் பள்ளிக்கு லேட்டாக வந்திருக்கீங்க..

வர்ற வழியில டிராபிக் ஐயா, வாகனங்கள் ஒன்றுக்கொன்று முந்த பார்த்ததில் நெரிசல், ஹார்ன் சத்தம்.. மன அழுத்தத்தையே ஏற்படுத்திடுச்சு.

இனி லேட்டாக வரக்கூடாது. உள்ள வாங்க. இந்தியாவில் குறைந்த மக்கள் தொகை கொண்ட நகரங்கள் கூடப் போக்குவரத்து நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றன. மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் கட்டுப்பாடும், காத்திருப்பும் கடுமையாகக் கடைபிடிக்கப்படுகின்றன. அங்குப் போக்குவரத்துச் சிக்னலில் பச்சை நிறம் எரியும் வரை காத்திருக்கும்போது ஓட்டுநர்கள் ஹாரன் அடிப்பதில்லை. வாகன உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் பொறுமையாகக் காத்திருப்பதைக் காணலாம். அந்தச் சமயத்தில் கார் இன்ஜினைக் கூட அணைத்துவிடுகிறார்கள். இதற்குக் கண்டிப்போ அல்லது போக்குவரத்து விதிகளைக் கடுமையாக அமல்படுத்துவதோ காரணம் அல்ல. இது மிசோரமின் கலாச்சாரத்தில் உள்ளது. ஒழுக்கம் மற்றும் குடிமைப் பொறுப்பை முக்கிய மதிப்புகளாக அவர்கள் பின்பற்றுகிறார்கள்.

என்னப்பா சசி கையில கட்டுப் போட்டிருக்கிறாய்..?

நேற்று மாலை குளத்தில குளிக்கும் போது பாசி வழுக்கி விழுந்துட்டேன் ஐயா. கை சுளுக்கிடுச்சு. எனக்கு ஒரு சந்தேகம். குளத்தின் படிக்கட்டுகளில் சில நாள்களில் பாசி பிடித்து விடுகின்றன. ஆனால், தண்ணீரிலேயே வாழும் மீன்களின் மீது ஏன் பாசி பிடிப்பதில்லை ஐயா.

பொருள்கள் உயிரற்றவை. ஒரே இடத்தில் இருக்கும்.. தண்ணீரில் சூரிய வெளிச்சம் விழும்போது அவற்றின் மீது பாசி படர்கிறது. ஆனால், மீன்கள் உயிருள்ளவை. ஒரே இடத்தில் அவை இருப்பதில்லை. இயங்காமல் இருந்தால் ஆபத்து என்பதைப் புரிந்து கொண்டாயா? அதுமட்டுமில்லாமல் இப்ப நீ கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய்.

எடை அதிகரிப்பது ஆரோக்கியத்தின் அறிகுறிதானே ஐயா..?

மாறிவரும் வாழ்வியல் முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், குறைவான உடல் உழைப்பு போன்றவை உடல் பருமனுக்கு முக்கியக் காரணிகளாக இருப்பதாகக் கூறும் மருத்துவர்கள், உடல் பருமனானது உடல் நலத்திலும், மன நலத்திலும் நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர். இன்றைக்கு 7.3 கோடி சிறுவர்களும், 5.2 கோடி சிறுமியரும் உடல் பருமன் உடையவர்களாக இருப்பதாகக் புள்ளிவிவரம் சொல்கிறது. உடல் பருமனால் எதிர்காலத்தில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மன அழுத்தம் போன்ற பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இதுக்கு என்னய்யா செய்யலாம்?

பேக்கரி உணவு வகைகள், துரித உணவு வகைகள், கொழுப்பு , சர்க்கரை நிறைந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், சிறுதானியங்கள், நார்ச்சத்து, புரதச் சத்தைக் கொண்ட சரிவிகித உணவு முறைக்கு மாறுவது உடல் பருமனைக் குறைக்க உதவும். ஒரு நாளைக்குக் குறைந்தது 20 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இவற்றைச் சரியாகக் கடைப்பிடிப்பதன் மூலம் உடல் பருமன் குறைந்து நோயற்ற வாழ்வை வாழமுடியும்.

ஐயா, சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடக்குமாமே?

ஆமாம். 2026 – ஆம் ஆண்டு முதல், ஆண்டுக்கு இரண்டு முறை 10 – ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகளைச் சி.பி.எஸ்.இ., அங்கீகரித்துள்ளது. முதல் கட்டத் தேர்வுகள் பிப்ரவரியிலும், இரண்டாவது கட்டத் தேர்வுகள் மே மாதத்திலும் நடைபெறும். மாணவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த நடைமுறை இருக்கும். முதல் கட்டப் பொதுத்தேர்வு முடிவு ஏப்ரலிலும், இரண்டாம் கட்டப் பொதுத்தேர்வு முடிவு ஜூனிலும் வெளியிடப்படும்.

இதனால் மாணவர்களுக்கு என்ன பயன் ஐயா?

முதல் தேர்வில் கலந்து கொள்வது கட்டாயம். இரண்டாம் தேர்வில் விருப்பமிருந்தால் கலந்து கொள்ளலாம். முதல் பொதுத்தேர்வில் குறைவாக மதிப்பெண்கள் எடுத்தாலும் கூடுதல் மதிப்பெண்கள் பெற முடியும். கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மொழிப்பாடம் ஆகியவற்றில் ஏதேனும் மூன்றில் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

ஐயா, ஹிந்தி படிக்கணுமா, வேண்டாமா என்றெல்லாம் கேட்கவில்லை. உலகில் அதிக அதிகாரப்பூர்வ மொழிகளைக் கொண்ட நாடு எது?

பொலிவியா நாடு. 37 அதிகாரப்பூர்வ மொழிகளுடன் உலகில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா மற்றும் ஜிம்பாப்வே முறையே 22 மற்றும் 16 அதிகாரப்பூர்வ மொழிகளுடன் அடுத்தடுத்து உள்ளன. சுரேஷ் எந்திரிப்பா.. நீ நேற்று கிராமத்தில் இரத்ததானம் குறித்துப் பிரச்சாரம் செய்தாயாமே வாழ்த்துகள்..

ஆமாங்க ஐயா.. இரத்ததான தினத்தை முன்னிட்டு இரத்ததானம் செய்யலாம்னு நினைத்தேன். ஆனால் எனக்கு இன்னும் 18 வயதாகாததால் ரத்ததானம் செய்யமுடியாதுன்னுட்டாங்க. அதனால விழிப்புணர்வுப் பரப்புரை செய்தேன். உலகில எல்லா உயிரினங்களின் இரத்தமும் சிவப்பு நிறமாகத்தான் இருக்குமா?

நல்ல கேள்வி. குதிரை லாட நண்டுகள் என்னும் ஜீவராசியின் மதிப்பு மிகுந்த இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். இது டைனோசர்களுக்கு முந்தைய காலத்தில் இருந்தே வாழ்ந்து வருகிறது.

மதிப்புமிக்க இரத்தம் என ஏன் சொல்கிறீர்கள்..

அனைத்து உயிரினங்களின் இரத்தமும் மதிப்புமிக்கதுதான். ஆனால், குதிரைலாட நண்டுகளின் (horseshoe crab) இரத்தம் உலக அளவில் விலை உயர்ந்த இரத்தமாகக் கருதப்படுகிறது. இது ஒரு லிட்டருக்கு 12 – லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ரத்தத்திற்கு அதிகப்படியான மருத்துவப் பண்பு இருப்பதால் இந்த விலை. இரத்தத்தில் உள்ள எண்டோடாக்சின்களைக் கண்டுபிடிப்பதற்கு உதவும் லிமூலஸ் அமீமோசைட் லைசேட் (LAL) என்ற ஒரு புரதம் இந்த நீல இரத்தத்தில் காணப்படுகிறது. எண்டோடாக்சின்கள் என்ற பாக்டீரியா இறப்பைக் கூட ஏற்படுத்தக் கூடியவை.

ஏன் இந்த இரத்தம் நீலநிறமாக இருக்கிறது?

மனிதர்கள் மற்றும் பல விலங்குகளின் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்(hemoglobin) என்ற இரும்பு மூலக்கூறு ஆக்ஸிஜனுடன் பிணைக்கப்படும்போது சிவப்பு நிறமாக மாறுகிறது அல்லவா அதுபோல இந்த நண்டின் இரத்தத்தில் உள்ள ஹீமோசயனின் (hemocyanin) என்ற செப்பு (காப்பர்) மூலக்கூறு ஆக்ஸிஜனுடன் பிணைக்கப்படும் போது நீல நிறமாகவும், ஆக்ஸிஜன் பிரியும் போது நிறமற்றதாகவும் மாறும்.

மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.