கேட்டலும் அறிதலும் – 01

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்
அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளையும், அதற்கான காரணங்களையும், தீா்வுகளையும் அறிமுகம் ெசய்யும் விதமாக ‘‘கேட்டலும் அறிதலும்’’ என்ற புதிய தொடரை மூத்த பத்திரிக்கையாளர் மதிப்புமிகு ஐயா ப.திருமலை அவர்கள் வழங்குகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட மிகச் சிறந்த நூல்களை எழுதியவர், உயர்ந்த பண்பாளர், சமூக அக்கறை அதிகம் கொண்ட எழுத்தாளர். தனது ஒவ்வொரு கட்டுரையாக்கத்துக்கும் தரவுகளைப் பல மணி நேரம் ஆய்ந்து, அறிந்து வாசகர்கள் நமக்காக வழங்கும் அன்புள்ளம் கொண்டவர். திரு. திருமலை ஐயா அவர்களை வணங்கி வரவேற்கின்றோம்.
வணக்கம் ஐயா..
வணக்கம் பிள்ளைகளா! பிளஸ் 1 சேர்ந்திருக்கீங்க. நல்லா படிங்க.. அன்றாடம் வகுப்பில நடத்துற பாடங்களை அன்றாடம் படிச்சிருங்க. எழுதிப்பாருங்க. பாடங்கள் மட்டுமில்லாமல் நாம இனி தொடர்ந்து பொது அறிவு சம்பந்தமான விஷயங்களையும் பேசலாம். உங்களுக்குச் சந்தேகமான விஷயங்களைக் கேளுங்க. கேள்வி கேட்டுப் பதில் பெறுவதன் மூலம் வகுப்பை உற்சாகமாக, துடிப்போடு வைத்திருங்க. பிளஸ் 2 வில் நல்ல கட்ஆப் மார்க் எடுத்து மருத்துவம், பொறியியல்ன்னு தொழில் படிப்புக்குப் போகணும் சரியா..
சரிங்க ஐயா. கட்ஆப் மார்க் என்றால் என்ன? அதை எப்படிக் கணக்கிடுவாங்க..?
பொறியியல் படிப்புக்குப் பிளஸ் டூ தேர்வில் கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு, இயற்பியல், வேதியியல் ஆகிய இரு பாடப்பிரிவுகளிலும் சேர்த்து 100 மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று பார்க்க வேண்டும்.
இந்த இரண்டையும் சேர்த்து 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதுதான் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் என்று சொல்லப்படும் தகுதி மதிப்பெண்களாகும். இதன் அடிப்படையில்தான் தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
ரேண்டம் எண் என்றால் என்ன ஐயா..?
அதாவது, பொறியியல் படிப்பில் ஒரே மாதிரியான கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்கள் பலர் இருக்கும் சூழ்நிலையில் யார் எந்த ரேங்க் என்று நிர்ணயிப்பதற்குப் பயன்படுத்தப்படும் எண்தான் ரேண்டம் எண். ஒரே விதமான கட்-ஆஃப் மதிப்பெண்களை இரண்டு பேர் பெற்றிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதுபோன்ற சூழ்நிலையில் அந்த இரு மாணவர்களும் கணிதப் பாடத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்று பார்த்து ரேங்கை நிர்ணயிக்கிறார்கள். கணிதத்திலும் அவர்கள் இருவரும் ஒரே மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அதையடுத்து இயற்பியல் பாடத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது பார்க்கப்படும். அதிலும் ஒன்றாக இருந்தால் அதையடுத்து நான்காவது விருப்பப் பாடமாக இருக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது உயிரியல் பாடத்தில் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு என்று பார்க்கப்படும். அதிலும் இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அவர்கள் இருவரது பிறந்த தேதியைப் பார்ப்பார்கள். அதிலும் இருவரும் ஒரே தேதியில் பிறந்திருந்தால் என்ன செய்வது? இதுபோன்ற சூழ்நிலையில், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வருவது ரேண்டம் எண். இது கம்ப்யூட்டர் மூலம் உருவாக்கப்படும் பத்து இலக்க எண்ணாகும். இந்த ரேண்டம் எண் நிர்ணயிக்கப்பட்ட பிறகுதான் கவுன்சலிங்கிற்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
மருத்துவப் படிப்பு சொன்னீங்க ஐயா. மருத்துவக் கல்லூரியில் அறுவைச் சிகிச்சைப் பயிற்சி கொடுக்க உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்தப் போறாங்களாமே ..
ஆமாம். தமிழகத்தில் முதன் முதலாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த முறையைக் கொண்டு வந்திருக்காங்க. இளம் அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் எளிதாக அனுபவம் பெறுவதற்கான முயற்சி இது.
எல்லா விலங்குகளை வைத்தும் இந்தப் பயிற்சியினைப் பெறமுடியுமா?
முடியாது. மனிதர்களைப் போன்ற உடல் உறுப்புகள் கொண்ட விலங்குகளை வைத்துமட்டுமே இந்தப் பயிற்சியை அளிக்கமுடியும். மனிதர்களைப் போன்ற உடல் அமைப்பை கொண்ட விலங்கு பன்றி. இதற்கு, மனிதனை போலவே இதயம், குடல், பித்தபை, கல்லீரல், ரத்த தமனி, பித்தப்பை, சிறுநீரகம் போன்ற பல்வேறு உடல் உறுப்புகள் அமைந்துள்ளன. அதனால் பன்றிகளைப் பயன்படுத்தி, மனிதர்களுக்கு மேற்கொள்ளும் அறுவை சிகிச்சைகளை, அறுவை சிகிச்சை பயிற்சி பெறும் மருத்துவ மாணவர்கள் மேற்கொள்வர்.
அப்படின்னா பன்றியை வைத்து அனைத்து அறுவைச் சிகிச்சைகளுக்கும் பயிற்சி செய்வாங்களா?
மதுரையில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த ஆய்வகத்தில் முதற்கட்டமாகப் பன்றிகளுக்குக் குடல்வால் அறுவை சிகிச்சை செய்வதற்கு மட்டுமே தற்போது மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. படிப்படியாக, சிறுநீரகம், இதயம், பித்தப்பை, கல்லீரல் போன்ற பிற உறுப்புகளுக்கான அறுவை சிகிச்சை பயிற்சிகளும் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பாங்க. சரி, இன்னும் வெப்பம் விலகல்ல. நீங்க தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கணும்.
ஆமாங்க ஐயா வெப்பம் தாளமுடியல்லை. இதனால விளைச்சல் ஏதாவது பாதிக்குமா?
என்ன அப்படிக் கேட்டுட்ட. சர்வதேச மூலக்கூறு அறிவியல் இதழ் (Journal of Molecular Sciences) ஆய்வு ஒன்றை நடத்தியது. அதிகரித்துவரும் வெப்பநிலை, கோதுமையின் உயிரியல் – வளர்ச்சி செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைத் தூண்டுகிறது என்றும், இந்த மாறுதல்கள் தானிய உற்பத்தி மற்றும் அவற்றின் தரம் குறைவாக இருப்பதற்கு வழிவகுக்கும் என்றும் இந்த ஆய்வறிக்கைச் சொல்கிறது.
அது எப்படிங்க ஐயா..?
அதிகரிக்கும் வெப்பத்தால் ஒளிச்சேர்க்கை, ஆக்ஸிஜனேற்றம் போன்றவை பாதிக்கப்படுவதால் தானியங்களின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும் அதிகவெப்பமானது, கோதுமையில் புரதச்சத்தைக் கூடுதலாக உற்பத்தி செய்து மாவுச்சத்தைக் குறைத்து, கோதுமையைக் கடினமாக்குகிறது. இதன் காரணமாகக் கோதுமையை அரைக்கும்போது தரத்தில் பாதிப்பு ஏற்பட்டு, தானிய எடைக் குறைவு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்றும் இதனால் சந்தையில் விவசாயிகள் விலைக் குறைவைச் சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.