சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 08
‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்
அமெரிக்காவில் அமெரிக்க ஜனாதிபதி மட்டுமே பயணிக்கத் தனி விமானம் உண்டு. அந்த விமானம் பயணிக்கும் போது அதனைப் பறக்கும் வெள்ளை மாளிகை (Flying White House) என்று அழைப்பதுண்டு. அப்படிப்பட்ட விமானத்தில் இந்திய ஜனாதிபதி ஒருவர் விதிகளுக்கு அப்பாற்பட்டு அழைத்து வரப்பட்டார். உடனே அமெரிக்கப் பாராளுமன்றக் கூட்டத்தில் “ஏன், இந்திய ஜனாதிபதி இப்படி விதிவிலக்காக அழைத்து வரப்பட்டார்?” என்று உறுப்பினர்கள் கேள்வி கேட்டார்கள். அப்போது அமெரிக்க ஜனாதிபதி “அவர் மிகச்சிறந்த ஆசிரியர் என்பதற்காகவே அவ்வாறு அழைத்து வரப்பட்டார்” என்று பதில் தந்தார்.
ஆம், அப்படிப்பட்ட பெருமைக்குரிய, இந்திய ஜனாதிபதியாக மட்டுமல்ல, தலைசிறந்த ஆசிரியராக உலகில் கொண்டாடப்பட்டவர் தான் சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன்.
மைசூர் பல்கலையின் மகாராஜா கல்லூரிப் பேராசிரியராக இருந்து கொல்கத்தா பல்கலைக்கழகம் மாற்றலாகிச் செல்ல இரயில் நிலையம் செல்லத் தயாரானார் ராதாகிருஷ்ணன். அவர் பயணிக்க இருந்த குதிரை வண்டியின் குதிரைகளை அவிழ்த்து விட்டுவிட்டு, மலர்களால் அந்தக் குதிரை வண்டியை அலங்கரித்து, தங்கள் மதிப்புமிகு பேராசிரியர் ராதாகிருஷ்ணனை அந்தக் குதிரை வண்டியில் அமர வைத்து இரயில் நிலையம் வரை அந்த வண்டியை இழுத்துச் ெசன்றார்கள் அவரது மாணவர்கள். இந்தச் சம்பவம் ஒரு சிறந்த ஆசிரியருக்கு மாணவர்கள் காட்டிய அன்பை விளக்குவதாக இன்றளவும் பேசப்படுகின்றது.
இளமையும், கல்வியும்
தமிழ்நாட்டின் திருத்தணி நகரில் வசித்து வந்த தெலுங்கு பிராமணக் குடும்பத்தைச் சார்ந்த சர்வபள்ளி வீராசாமி மற்றும் சீதம்மா இவர்களின் மகனாக 1888 – ஆம் ஆண்டு செப்டம்பர் 5 – ஆம் தேதி பிறந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். தனது சொந்த ஊரின் பெயரான “சர்வபள்ளி”யை எப்போதும் தன் பெயரோடு இணைத்துக் கொண்டவர்.
ஆரம்பக் கல்வியை ஹெர்மன்ஸ் பர்க் எவாஞ்சலிக்கல் லுத்தரன் பள்ளியிலும், திருத்தணி அரசு பள்ளியிலும் முடித்தார். தந்தை ஒரு ஜமீன்தாரிடம் கணக்கராக இருந்தார். வறுமை மிகுந்த குடும்பம். ராதாகிருஷ்ணன் படிப்பில் கெட்டிக்காரராகத் திகழ்ந்ததால் புதுமுக வகுப்புக் கல்வியை வேலூர் ஊரிஸ் கல்லூரியில், கல்வி உதவித் தொகை பெற்று முடித்தார்.
தொடர்ந்து சென்னை கிறித்தவக் கல்லூரி சென்று இளங்கலை தத்துவவியல் படித்தார். தன் உறவினர் ஒருவர் தத்துவவியல் படித்ததால், அவரது புத்தகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ‘தத்துவவியல்’ பாடத்தை எடுத்தார். காரணம் அவரோடு உடன்பிறந்த சகோதர, சகோதரிகளையும் கவனித்துக் கொள்ள வேண்டிய சூழல் அவருக்கு இருந்தது. அந்த வறுமைச் சூழலில் அவர் எடுத்துக் கொண்ட ‘தத்துவவியல்’ படிப்பு அவரது வாழ்வையும் மாற்றியது.
சிறப்பாக இளங்கலை முடித்துவிட்டு, முதுகலைப் படிப்பும் தத்துவவியலில் அதே கல்லூரியில் முடித்தார். மாலை நேரங்களில் வீட்டருகில் இருந்த மாணவர்களுக்குப் பாடம் கற்றுத் தந்து, வந்த பணத்தில் தன் குடும்பத்தையும், படிப்பையும் கவனித்துக் கொண்டார்.
தனது முதுகலைப் படிப்புக்கு ஒரு கட்டுரை ஒன்றை சமர்ப்பித்தார். ‘வேதாந்தத்தில் ஒழுக்கம்’ (Ethics of Vedanta) என்ற அவரது கட்டுரைகளைக் கண்ட பேராசிரியர் ஏ.ஜி. ஹாக் என்பவர் மிகவும் பாராட்டினார். கிறித்தவ மதத்தைச் சார்ந்தவர்கள் நிறைந்த அந்தக் கல்லூரியில் கிறித்தவப் பேராசிரியர்கள் என்ன சொல்லுவார்கள்? என்று பயந்த போது அவரது பேராசிரியர் பாராட்டியதோடு, ராதாகிருஷ்ணனின் தத்துவ ஞானத்தைப் புரிந்துகொண்டு வழிகாட்டினார். அந்தக் கட்டுரைக்கு சில கிறித்தவப் பேராசிரியர்கள் விமர்சனமும் தந்தார்கள்.
அப்போது இந்து மதம் பற்றித் தான் அதிகம் படித்துத் தெளிய வேண்டும் என்பதையும் உணர்ந்தார். கூடவே கிருஷ்ணமூர்த்தி பண்டிதரிடம் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டார். இந்தியாவின் கலாச்சாரத்தோடு தொடர்புடைய இந்து மதத்தின் தத்துவக் கோட்பாடுகளை, சுவாமி விவேகானந்தருக்குப் பிறகு உலக அளவில் எடுத்துச் சென்று புகழ்பெற்றவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவரது வாழ்வின் அனைத்து உச்சநிலையையும் அடைய அவரது தத்துவ அறிவும், சிந்தனையுமே அடித்தளமாக அமைந்தது.
தனது சிறந்த மாணவனுக்கு நல்வாய்ப்புத் தரும் விதமாக சென்னை, மாநிலக் கல்லூரியில் பேராசிரியர் பதவியில் சேர வாய்ப்பை உருவாக்கித் தந்தார் பேராசிரியர் ஹாக். கல்லூரிப் பேராசிரியர் தகுதிக்காக சென்னை, சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உயர்கல்வி பயின்ற சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் அறிவுக்கூர்மை கண்டு பேராசிரியர்களும், மாணவர்களும் புகழ்ந்தனர்.
சைதாப்பேட்டை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர்கள் அனுமதியுடன் ‘உளவியல்’ பற்றி பதிமூன்று சொற்பொழிவுகள் தந்தார் ராதாகிருஷ்ணன். இவை மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திடம் மதிப்பை பெற்றதோடு, 1912 – ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மூலம் “உளவியலின் தேவைகள்” (Essential of Psychology) என்ற புத்தகமாக வெளிவந்த போது, ராதாகிருஷ்ணனின் புகழ் பரவியது. 1917 – ஆம் ஆண்டு வரை சென்னை மாநிலக் கல்லூரிப் பேராசிரியராக இருந்தார். மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.