ஐந்து ஆறைவிடப் பெரியது 15
திரு.முகில்
செல்வத்தின் கடவுள் யார்?
லட்சுமி.
லட்சுமியின் வாகனம் எது?
ஆந்தை.
எனில், வீட்டுக்குள் ஆந்தை வந்தால் அல்லது ஆந்தை முகத்தில் முழித்தால் அல்லது ஆந்தையை வழிபாடு செய்தால் என்ன ஆகும்?
அது லட்சுமியையே வழிபடுவதற்குச் சமம். செல்வம் பெருகும். ஆந்தை வளத்தின் அடையாளம்!
ஆஹா! நம் இந்தியர்கள், குறிப்பாக இந்துக்கள், ஆந்தையை எவ்வளவு உயரிய இடத்தில் வைத்துள்ளார்கள் என்று தோன்றலாம். ஆந்தையின் கண் அளவுக்கு ஆச்சரியத்தில் விரிந்த கண்களைச் சுருக்கிக் கொள்ளவும். அத்தியாயத்தின் இறுதியில் ‘உச்’ கொட்ட வேண்டியதிருக்கிறது.
பண்டைய கிரேக்கக் கடவுள் ஏதென்னா. அவள் அறிவின் கடவுள். ஏதென்னாவின் இன்னொரு வடிவமாக ஆந்தை கருதப்படுகிறது. அவள் பறவைகளுக்கும் கடவுள். ஆந்தை உருவிலும் இருப்பாள் என்று கிரேக்கர்கள் நம்பினார்கள். போர்க்களத்தில் தங்கள் தலைமீது ஆந்தை பறந்தால் அது நல்ல சகுனம். வெற்றி நிச்சயம் என்றே கிரேக்க வீரர்கள் நினைத்தார்கள். வட அமெரிக்கப் பழங்குடிகளான டிலிங்கிட் மக்களுக்கு ஆந்தை என்பது வலிமையின் அடையாளம். போர்களின்போது ஆந்தைபோல ஒலியெழுப்பிக் கொண்டே செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பது அவர்களது நம்பிக்கை. மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான், ஒருமுறை எதிரிகளிடமிருந்து தப்பும்போது, மறைவிடம் ஒன்றில் பதுங்கினார். அங்கே இருந்த மரத்தின் மீது ஆந்தை ஒன்று அப்போது வந்து அமர்ந்தது. ஆந்தை அமர்கிறதென்றால் அங்கே மனிதர்கள் யாரும் இருக்க முடியாது என்று எதிரிகள் நகர்ந்தனர். செங்கிஸ்கானுக்கு நன்மை செய்த ஆந்தையை மங்கோலியர்கள் இப்போது வரை ‘நல்ல பறவையாகவே’ கொண்டாடுகின்றனர்.
அட, உலக மக்களெல்லாம் ஆந்தை மீது பேரன்பு பொழிகிறார்களே என்று உணர்ச்சி வசப்படாமல், தொடர்ந்து வாசிக்கவும்.
சூனியக்காரக் கிழவி களும் ஆந்தைகளும் நகமும் சதையும்போல. சூனியக்காரக் கிழவிகள் ஆந்தை உருவமெடுத்து குழந்தைகளின் ரத்தத்தை உறிஞ்சிவிடுவார்கள் என்பது ரோமானியர்களின் அபாண்ட நம்பிக்கை. ஆந்தைகளெல்லாம் சூனியக்காரக் கிழவிகளின் தூதுவர்கள் என்பது மேற்குலகின் அசைக்க முடியாத எண்ணம். பல்வேறு புனைவுகளிலும் ஆந்தைகள் வில்லத்தனமான பாத்திரங்களிலேயே சித்தரிக்கப்பட்டுள்ளன.
ஜூலியஸ் சீசர், அகஸ்டஸ், அக்ரிப்பா, ஆரேலியஸ் ஆகிய வரலாற்று நாயகர்களின் மரணத்தை ஆந்தைகள் முதலிலேயே கணித்துவிட்டன. அவை மரணத்தின் தூதுவர்கள் என்றே ரோமானிய சாமானியர்களும் நம்பினார்கள். ஆந்தையின் காலை எரித்து, அதை பாம்பு கடித்த இடத்தில் மருந்தாகப் போட்டால் விஷம் முறியும். ஆந்தையின் இதயத்தை எடுத்து, தூங்கும் பெண்ணின் மார்பின் மீது வைத்தால் அவள் தன் மனத்திலிருக்கும் உண்மையை எல்லாம் ஒப்பித்து விடுவாள். இதெல்லாம் தி கிரேட் ரோமானியர்களின் பண்டைக்கால விளங்காத வழக்கம்.
‘நிறைவேறாத ஆசையோட செத்துப்போன அம்புட்டுப் பயலுகளும் ஆந்தையா மாறி அலையுறான்’ என்பதுதான் மத்திய கிழக்கு மண்ணின் மைந்தர்களின் நம்பிக்கை. அவர்களுக்கு ஆந்தை அழிவின் சின்னம். பிரிட்டிஷ்காரர்களும் விதிவிலக்கல்ல. நோய்வாய்ப்பட்ட ஒருவர், தான் படுத்திருக்கும் இடத்திலிருந்து வெளியே ஆந்தையைப் பார்த்துவிட்டார் எனில், மரணம் என்னும் தூது வந்தது, அது ஆந்தை என்னும் வடிவில் வந்தது என்று உடைந்து போவார். வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ராபர்ட் பிளேய்ர் போன்ற பிரபல ஆங்கிலக் கவிஞர்கள்கூட ஆந்தையை அழிவுசக்தியாகக் கருதியே கவி பாடியிருக்கின்றனர்.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கனவுகளின் பலன்களைப் பட்டியலிட்ட ஆர்டிமிடோரஸ் என்ற கிரேக்கர், ‘ஆந்தை கனவுல வந்துச்சுன்னா அம்புட்டுதான். நீ போற கப்பலு கவுந்துரும். இல்லேன்னா, உன் வூட்ல கொள்ளை போயிரும்!’ என்று சக மனிதர்களுக்கு மூடநம்பிக்கை விதைத்திருக்கிறார்.
ஜப்பானியர்கள் ஆந்தைகளை 50:50 நம்புகிறார்கள். யுரேசியக் கழுகு ஆந்தை என்ற வகை பெரிய ஆந்தையை பஞ்சத்தை, நோய்களை விரட்டும் கடவுளின் தூதுவராகப் பார்க்கிறார்கள். அதன் உருவத்தைக் கதவுகளில் செதுக்கி வைக்கிறார்கள். அதேசமயம் ஸ்கீரிச் என்ற வகை ஆந்தைகளை அழிவு சக்தியாக நோக்குகிறார்கள்.
மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.