சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 07
‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்
நாற்பது வயது இளம் தொழில் வித்தகர் ஒருவர் தனது ஜவுளி ஆலைகளின் வளர்ச்சிக்காக, புதிய இயந்திரங்களை வாங்க இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகருக்குச் சென்றிருந்தார்.
அங்கே சிறந்த பேச்சாளரும், தொழில் முனைவோர் ஆலோசகருமான தாமஸ் கார்லைல் நடத்திய கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி அந்த நாட்டின் இரும்பு உற்பத்தியையும், பயன்பாட்டையும் சார்ந்திருக்கிறது என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துச் சொன்னதைக் கூர்ந்து கவனித்தார். அது 1880ஆம் ஆண்டு, ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த நேரம். இந்தியாவில் பல வளங்கள் இருந்தும் வளர்ச்சியின்றி, எல்லாத் தொழில்நுட்பத்திற்கும் வெளிநாடுகளை நம்பியிருந்த காலம். கருத்தரங்கில் கலந்துகொண்ட அந்த தொழில் முனைவு கொண்ட மனிதருக்கு தாமஸ் கார்லைலின் வார்த்தைகள் மனதில் ஆழமாகப் பதிந்து தாக்கத்தை ஏற்படுத்தின.
நமது இந்திய தேசத்தில் எஃகுத் தொழிலை நாமே தொடங்கி வளர்த்தால் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தலாம் என்று சிந்தித்துச் செயல்படுத்தினார். இன்று உலகமெங்கும் பரவி, பல ஆயிரம் ஊழியர்களைக் கொண்டு சாதனை படைத்துவரும் ‘டாடா’ குழுமத்தின் நிறுவனர் ‘ஜாம்ெஷட்ஜி டாடா’ தான் அந்த மனிதர்.
‘டாடா’ நிறுவனம் இன்று வாகனத் தொழில், ஆடை உற்பத்தி, கடிகாரம், தங்க நகை மாளிகைகள், ேஹாட்டல்கள், அலைக்கற்றைகள், கல்வி நிறுவனங்கள், விமானப் போக்குவரத்துகள், கணிப்பொறித் தொழில்நுட்ப மையங்கள், ஊடகங்கள் என்று எல்லாத் தொழில்களிலும் கோலோச்சிச் சிறந்து விளங்கிட அடித்தளம் அமைத்தவர்தான் ஜாம்ெஷட்ஜி டாடா என்னும் சாதனை மனிதர்.
பார்சி இன மக்கள்
ஈரான் நாட்டில் ஜோராஸ்டர் என்ற தீர்க்கதரிசி தொடங்கிய ஒரு மதப் பிரிவு தான் ‘ஜாதுராஸ்டிரா’ என்பதாகும். இந்த மதப்பிரிவைப் பின்பற்றியவர்கள் பாரசீக தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ‘பார்சிகள்’ என்றும் ‘பாரசீகர்கள்’ என்றும் அழைக்கப்பட்டனர்.
இசுலாமிய மதம் வேகமாக வளர ஆரம்பித்த காலத்தில் இந்த பார்சி மக்களையும் இசுலாமியத்தைத் தழுவுமாறு வற்புறுத்தினார்கள். இந்த வற்புறுத்தலை விரும்பாத பார்சி மக்கள் அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் குடியேறினார்கள். விவசாயம் செய்தும், தங்கள் மதச் சடங்குகளை நிறைவேற்றும் அர்ச்சகர்களாகவும் விளங்கினார்கள்.
இன்று மும்பை நகரின் சில பகுதிகளிலும், மும்பைக்கு வடக்கே சில நகரங்களிலும், பெங்களூரு அருகில் சில இடங்களிலும் அதிகமாக வாழ்கின்றார்கள். சிலர் பாகிஸ்தான் நாட்டின் கராச்சியிலும் வசிக்கின்றார்கள்.
இந்த பார்சி குடும்பத்தைச் சார்ந்த நுசர்வாஞ்சி மற்றும் ஜீவன்பாய் டாடா ஆகியோருக்கு மகனாக குஜராத்தில் உள்ள நவ்சாரி நகரில் 1839 – ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3-ஆம் தேதி பிறந்தவர்தான் ஜாம்ஷெட்ஜி டாடா.
இவர்களது குடும்பம் ஜாதுராஸ்டிரா என்று சொல்லப்படும் மதத்தின் வழிபாட்டுத் தலங்களில் அர்ச்சகர் பணியை ஆற்றி வந்தது. இந்தப் பணியைச் செய்ய, குழந்தைப் பருவத்திலிருந்தே ஜாம்ஷெட்ஜி விருப்பப்படவில்லை. மேலும் தனித்திறன் வாய்ந்தவராகத் தன் மகன் திகழ்வதைக் கண்ட பெற்றோர்கள் மகனுக்கு நல்ல கல்வி தந்து ஊக்கமூட்டினர். மும்பையிலிருந்த எல்பின்ஸ்டன் கல்லூரியில் படிப்பை முடித்தார் ஜாம்ஷெட்ஜி.
கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு, 1858 – ஆம் ஆண்டு மும்பையில் தனது தந்தையின் ஏற்றுமதி வர்த்தக நிறுவனத்தில் சேர்ந்து கொண்டார் டாடா. நுசர்வாஞ்சி டாடா தன் மகனை சீன நாட்டுக்கு அனுப்பி அங்குள்ள வணிகத்தையும், குறிப்பாக ‘அபின்’ வணிகத்தையும் தெரிந்து வருமாறு அறிவுறுத்தினார். ஜாம்ஷெட்ஜி டாடா சீன நாட்ைடச் சுற்றி வந்த போது அங்கே பருத்தித் தொழிலுக்கு நல்ல ஊக்கமும், வளர்ச்சியும் உள்ளதைக் கண்டு கொண்டார்.
அவரது தந்தை ஜப்பான், சீனா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலுள்ள கிளைகளைக் கவனிக்கும் பொறுப்பையும் ஒப்படைத்தார். அந்தக் காலத்தில் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் ‘கடற்பயணம்’ மேற்கொள்வது சமய வழக்கத்துக்கு எதிரானது என்றும் ‘கடவுள் குற்றம்’ என்றும் சொல்லப்பட்டு வந்தது. ஆகையால் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் கடல் கடந்து சென்று வியாபாரம் செய்யத் தயங்கினார்கள்; மற்றும் முன்வரவும் இல்லை.
ஜாதுராஸ்டிரா மதத்தைப் பின்பற்றியவர்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை என்பதால், அவர்கள் கடல் கடந்து வியாபாரம் செய்தனர். ஐரோப்பிய நாடுகளில் அவர்களது முன்னோர்கள் சிலர் வசித்து வந்ததும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. எனவே பார்சிகள் கடல்கடந்து சென்று தொழில் வளர்த்தனர். அதேசமயம் இந்தியாவில் தொழிலை விருத்தி செய்வதில் பல தடைகளை ஆங்கிலேயர்கள் தந்தனர். ஆங்கிலேயர்கள் பொருட்களை வாங்கி ஏற்றுமதி செய்ய மிகக்குறைந்த வரியும், இந்தியர்கள் அதைச் செய்தால் அதிக வரியும், கப்பலில் சரக்குகளை ஏற்றிச் செல்ல பல தடைகளையும் தந்து முட்டுக்கட்டையாக இருந்தனர்.
மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி இதழைப் படியுங்கள்.