ஐந்து ஆறைவிடப் பெரியது 14
திரு.முகில்
ஒரு காலத்தில் எமதர்மனும், தேவர்களைப் போல பேரழகுடன் இருந்தார். அவர் பூலோகத்துக்கு வந்து, இங்கே பெண்களை மயக்கி, சந்தோஷமாகத் திரிந்தார். ‘உயிரை எடுக்க’ வேண்டிய தனது கடமையை மறந்தார். இதனால் கடுப்பான பூமாதேவி, சிவனிடம் பிராது கொடுத்தார். கோபமுற்ற சிவன், எமனை கருப்பாக, கொடூரமாக, கொம்புள்ளவனாக மாற்றினார். எமன் தவித்துப் போனார். பூமியில் ஒரு மலைக்குச் சென்று விஷ்ணுவை நோக்கிக் கடும்தவம் புரிந்தார். அங்கே தோன்றிய விஷ்ணு, எமனை மன்னித்து, அவனது கொடூர உருவத்தை மாற்றினார். பதிலாக, அதேபோல பயங்கரமான உருவம் கொண்ட எருமையை அவனது வாகனமாக்கினார்.
இது புராணம் புனைந்த எமன் – எருமை கனெக்ஷன் கதை. எமன் செய்த குற்றத்தால் விளைந்த சாபம் நீங்க, போனால் போகிறதென்று கண்டிஷன்ஸ் அப்ளை நிவர்த்தியாக, அசிங்கமாகக் கருதப்படும் எருமையை வாகனமாகக் கொடுத்தார்களாம். இன்னொரு புராணக்கதையும் உண்டு. நவராத்திரி பண்டிகைக்குக் காரணமாகச் சொல்லப்படும் மகிஷாசுரன் வதம். பிரம்மனிடம் வரம் பெற்ற மகிஷாசுரன், தேவர்களையும் மற்றோரையும் துன்புறுத்த, துர்கா தேவி விரதமிருந்து அவனைக் கொல்கிறார் என்கிறது தேவி மகாத்மியம் புராண நூல். ஆம், இதிலும் கெட்டவரான மகிஷாசுரன் எருமைத் தலை கொண்டவர் என்ற கற்பிதமே மேலோங்கி நிற்கிறது.
எருமை என்ன அவ்வளவு தாழ்ந்த பிறவியா? கரிய நிறத்தில் பிறந்த உயிரினங்களெல்லாம் அசிங்கமானவையா? எருமையை ஏன் திட்டுவதற்கும், கேலி செய்வதற்கும், கொடூரத்தை எடுத்துக்காட்டுவதற்குமான விலங்காகப் பயன்படுத்துகிறார்கள்? பசு உயர்வாகக் கருதப்படும் நாட்டில் எருமைக்கான இடம் என்ன? நம் மண்ணில் எருமையின் கலாசார வரலாறு எப்படிப்பட்டது?
இவற்றுக்கான பதில்களை இன்னொரு புனைகதையிலிருந்து ஆரம்பிப்போம். இது மேற்படிக் கதைகளுக்கு அப்படியே நேர்மாறானது.
நீலகிரி மலைகளில் வாழும் பழங்குடிகளான தொதுவர் என்ற தோடர்கள் வழிபடும் பிரதானக் கடவுள் ஆன். பிதி என்பவர் ஆனின் தந்தை. பிதியே தோடர்களின் மிகவும் பழமையான கடவுள். பிதியும் அவர் மனைவியும், ஒருநாள் குந்தா மலையின் உச்சிக்குச் சென்றார்கள். ஒரு நீண்ட இரும்புச் சட்டத்தை அந்த உச்சியின் மேல் குறுக்காக வைத்தார்கள். அதன் ஒரு முனையில் பிதியும், மற்றொரு முனையில் அவர் மனைவியும் நின்று கொண்டார்கள். பிதி அங்கிருந்தபடி பூமியின் அடியிலிருந்து 1800 எருமைகளை மேலே கொண்டு வந்தார். பிதியின் மனைவி, மற்றொரு முனையில் நின்றபடி 1600 எருமைகளைக் கொண்டு வந்தார். பிதி கொண்டு வந்த எருமைகள் புனிதமானவை. இப்போதும் தோடர்கள் வளர்க்கும் எருமைகள் எல்லாம் அந்தப் புனித எருமைகளின் சந்ததிகளே. பூமிக்கடியிலிருந்து பிதியினால் கொண்டு வரப்பட்ட கடைசிப் புனித எருமையின் வாலைப் பிடித்துக்கொண்டு தோடர்களின் முன்னோன் வந்தான். அவன் தன் மார்பு எலும்புகளில் ஒன்றை எடுத்து, தோடர்குலத்தின் முதல் பெண்ணை உருவாக்கினான். இப்படித்தான் தோடர் மக்கள் உருவானார்கள். அவர்கள் தங்களை ‘எருமைகளின் குழந்தைகள்’ என்று பெருமையாக அழைத்துக் கொள்கிறார்கள்.
உலகில் எருமையும் எருமை சார்ந்த வாழ்க்கையை கறாராக வாழும் ஒரே இன மக்கள் தோடர்களே. பொதுவாக அவர்கள் பயிர்த் தொழில் செய்வதில்லை. காலையில் எழுந்ததும் சூரியனை வணங்குகிறார்கள். பின்பு ‘மந்து’ என்றழைக்கப்படும் எருமைத் தொழுவத்திற்குச் சென்று பால் கறக்கிறார்கள். முதல் நாள் பிரையிட்டு உறைந்த தயிரைக் கடைகிறார்கள். உணவு உண்டபின் எருமைகளை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு செல்கிறார்கள். மாலை நேரத்தில் எருமைகளை மந்துவில் அடைத்துவிட்டு, வீட்டில் விளக்கு ஏற்றி வணங்கிவிட்டு, உண்டு உறங்குகிறார்கள். அவ்வளவு எளிய வாழ்க்கை அவர்களுடையது. வழிபாட்டுச் சடங்குகள், திருமணத்தில் சீர், இறுதிச் சடங்கு என்று அவர்களது வாழ்க்கை முழுக்க எருமையின் காலடித் தடங்களே நிறைந்துள்ளன.
தோடர்களின் வீடுகள் போலவே அவர்களது கோயில்களும் அரைநீள்வட்ட வடிவில் இருக்கின்றன. கோயில் வாசலில் இருக்கும் கல்லில் எருமையின் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. கோயில் செலவுகளுக்கென புனித எருமைகள் நேர்ந்து விடப்பட்டிருக்கின்றன. தங்களைப் போலவே கடவுளும் எருமைகளை மேய்த்துக்கொண்டு மலையுச்சியில் வாழ்வதாகத் தோடர்கள் எண்ணுகிறார்கள்.
மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி இதழைப் படியுங்கள்.