ஆளப் பிறந்தோம் – 20
திரு.இள.தினேஷ் பகத்
கடந்த மாதம் TNPSC தேர்வாணையத்தில் TNPSC Group I தேர்வு நடத்தப்பட்டது. இந்த முறை குரூப்-1 வினாத்தாள் மிகவும் சிறப்பாகவும் விரிந்த பரவலான அறிவுக்கு ஏற்றவாறும் அமைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல வினாக்கள் சற்று கடினமாகவும், அனுபவத் தேர்வர்களுக்குச் சற்றே சாதகமாகவும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்வில் விடையளிக்க தனக்கு நேரம் போதவில்லை என்றே வகுப்புகளில் (ம) நூலகங்களில் போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்கள் தெரிவித்தனர். நடந்து முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும். இனிவரும் காலங்களில் நடக்கும் ேதர்வுகளில் காலத்தைச் சரியாக நிர்வகித்து போட்டித் தேர்வுகளில் வென்று அரசுப் பணிகளில் நீங்கள் அமர்ந்திட வாழ்த்துகிறேன்.
என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம். இந்த உலகிலேயே மிகப்பெரிய நீதிமான் யார் என்றால் காலமே ஆகும். காலத்தைச் சரியான முறையில் பயன்படுத்துபவர்களே வெற்றியாளர்களாக வலம் வருகின்றனர். மாறாக, காலத்தைத் தவறான வழியில் செலுத்துபவர்கள் அதலபாதாளத்தில் தன் வாழ்க்கையை தொலைக்கின்றனர். இதைத்தான் நம் திருவள்ளுவர் ‘காலம் அறிதல்’ என்ற அதிகாரத்தில் இந்த குறளில் தனக்கே உரிய பாணியில் ஒன்றே முக்கால் அடியில் சொல்லியுள்ளார்.
“ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்” (குறள் எண்.484)
இந்தக் குறளுக்கான விளக்கம் காலத்தை அறிந்து, தகுந்த இடத்தில் (தேர்வு நாளில்) செயலைச் (தேர்வு) செய்பவர், இவ்வுலகம் முழுவதையும் பெற நினைத்தாலும் வெற்றி பெறுவர் (போட்டித் தேர்வில் வெற்றி பெற்றால் சாமனியனும் சக்கரவர்த்தி ஆகலாம்).
இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் விலை மதிப்பிட முடியாத ஒரு பொருள் இருக்கிறது என்றால் அது காலமே ஆகும். அம்பானிக்களாக இருந்தாலும் சரி, அமெரிக்காவின் அதிபர்களாக இருந்தாலும் சரி, சாதாரண சாமானிய மனிதர்களாக இருந்தாலும் அனைவருக்குமே பொதுவாக ஒரு நாளில் 24 மணிநேரம்தான் இந்த இயற்கை (இறையிர்) படைப்பில் வழங்கப்பட்டுள்ளது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
இந்த இதழில் இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) Assistant, Administrative Officer தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆவது என்பதை பார்க்க உள்ளோம். அதற்கு முன்னர் சாமானியனும் சக்கரவர்த்தி ஆன கதை ஒன்றை பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் தான் படிக்கின்ற காலங்களில் கிடைக்கின்ற வேலைகள் எல்லாம் செய்து சிறுக, சிறுக பணம் சேர்த்து ஒரு கை கடிகாரத்தை வாங்குகிறார். எப்போதும் அந்த கை கடிகாரம் அவர் கையிலேயே இருக்கும். காலையில் இருந்து, இரவு வரை என்ன பணிகள் செய்ய வேண்டும் என்பதை அவர் நாட்குறிப்பில் குறித்துக் கொள்வார். அதன்படி அந்தந்த நாட்களுக்குரிய அனைத்துப் பணிகளையும் திட்டமிட்ட நேரத்தில் முடித்துவிடுவார். இதனால் இவர் குறுகிய நேரத்தில் மிக அதிகமான வேலைகளைச் செய்யக்கூடிய ஆற்றல் மிக்கவராக மாறினார். இவ்வாறு நேர நிர்வாகத்தை சரியாகப் பின்பற்றியதால் அமெரிக்காவின் அதிபராகவும் ஆனார்.
ஒருமுறை அமெரிக்காவின் அதிபராக லிங்கன் உரை நிகழ்த்தும் போது, அவரை மட்டம் தட்டும் நோக்கத்தில் எதிர்தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து, “ஆபிரகாம், உங்கள் தந்தை தைத்துக் கொடுத்த செருப்பு இன்னும் என் காலை அலங்கரித்துக் கொண்டு இருக்கிறது” என்று கூறினாராம். அதற்கு லிங்கன் அவர்கள், “நண்பரே என் தந்தை இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் அவர் தைத்து கொடுத்த செருப்பு உங்கள் கால்களை அலங்கரித்துக் கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு சிறப்பாகத் தைக்கப்பட்டுள்ளது என்றுதானே அர்த்தம்? இருப்பினும் அவர் தைத்த செருப்பில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தால், அதை என்னிடம் கொடுங்கள், நான் அதை சரிசெய்து தருகிறேன். எனக்கு செருப்புத் தைக்கவும் தெரியும்; நாட்டை ஆளவும் தெரியும்” என்றாராம். லிங்கனை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்த மனிதர்க்கு சிறப்பான பதிலடி கொடுத்தார் லிங்கன். சாமானியராகப் பிறந்தாலும் அமெரிக்காவின் சக்கரவர்த்தியாக (அதிபர்) மாற்றிக் கொண்டவர் ஆபிரகாம் லிங்கன்.
இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) Assistant Administrative Officer (உதவி நிர்வாக அலுவலர்) பதவியில் சேர்வதற்கு வழிமுறைகள் என்ன என்பதை பார்க்கலாம். மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.