சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 07

‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

னக்கென்று சொந்த வீடோ, காரோ, சொத்துக்களோ எதுவும் இல்லை. அனைத்தும் நிறுவனத்தின் பெயரில்தான் உள்ளது. நிறுவனம் செயல்படும் அலுவலக மாடியில் தான் எனது குடும்பமும் வாசம் செய்கிறது.நானும் சரி, எனது பிள்ளைகளும் சரி எங்கு சென்றாலும் கால் டாக்ஸியில் தான் செல்கிறோம். வாழ்வில் கஷ்டத்தை மட்டுமே பார்த்துப் பார்த்து அடிபட்டு மேலே வந்தவன் நான். அந்தக் கஷ்டம் எப்படிப்பட்டது என்பதைப் பிள்ளைகளுக்கு உணர்த்தி வளர்க்க வேண்டும். இப்போதிருக்கும் செல்வத்திற்கு உலகின் விலை உயர்ந்த கார்களையும், பிரம்மாண்டமான அரண்மனையையும் கூட வாங்கிவிட முடியும். ஆனால், அது பகட்டையும், ஆணவத்தையும் தந்துவிடும். எளிமை தான் நம்மை என்றும் உயர்த்தும். அதற்காகத்தான் இந்தக் கொள்கையைப் பின்பற்றுகிறேன். என் பிள்ளைகளும் பின்பற்றுகிறார்கள்’’ என்று ஒரு நேர்காணலில் பதில் தருகிறார் தைரோகேர்
(THYROCARE) டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் ஆரோக்கியசாமி வேலுமணி அவர்கள்.

இவரது நிறுவனத்தின் சந்தை மதிப்பு இன்று 5000 – கோடிக்கு மேல் என்கிறது சில தரவுகள். இவ்வளவு சொத்துக்களுக்கு அதிபதியாக திகழும் இவரின் பேட்டியில் சொல்லப்பட்ட வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்ப்போம். ஆம், இந்தக் கட்டுரைக்குத் தந்துள்ள தலைப்பான “வறுமை, உழைப்பு, எளிமை, ஏற்றம்’’ இந்த அனைத்தும் அந்தப் பேட்டியின் பதிலில் தெரியும்.

சென்னை, பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள  “இப்படித்தான் ஜெயித்தார்கள்’’ என்ற நூலில் இருபது முத்தான தமிழ் ஆளுமைகளின் வாழ்க்கைப் பாதைகளின் நேர்காணல்கள் தொடுக்கப்பட்டுள்ளது. வாலு டிவியின் நிறுவனர், கவிஞர், எழுத்தாளர் மோ.கணேசன், சிறப்பாக தமிழகம் மதிக்கும் பல ஆளுமைகளைப் பேட்டி கண்டு எழுதியுள்ளார் படிக்க, தெளிவு பெற அருமையான  புத்தகம்.

டாக்டர் வேலுமணி

அன்றைய கோயம்புத்தூர் மாவட்டம், இன்றைய திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிலுள்ள அப்பநாயக்கன்பட்டி என்னும் கிராமத்தில் ஆரோக்கியசாமி, சாயம்மாள் தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்தவர் வேலுமணி. இரண்டு தம்பிகள், ஒரு தங்கை என்றமைந்த குடும்பம்.

அந்தக் கிராமத்தில் ஒருவரின் எருமை மாடுகளைக் குத்தகைக்கு எடுத்து வளர்த்து, பால் கறந்து, அந்தப் பாலில் ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் பெற்றுக் கொண்டு, அந்தப் பணத்தில் தன் குடும்பத்தைச் சிறப்பாக நடத்தியவர் சாயம்மாள்.

அப்பநாயக்கன் பட்டியிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வாரம் ஒரு முறை சூலூர் சந்தையில் வீட்டுக்கான பொருட்களை வாங்கி வருவார். நடந்தே செல்லும் அவர், பொருட்களை வாங்கித் திரும்பும் போது கனமான பொருட்களை ஏற்றிக் கொண்டு மாட்டு வண்டியில் வரலாம். ஆனால், அதற்கு ஒரு ரூபாய் தர வேண்டுமே  என்று, அந்த ஒரு ரூபாயில் தன் நான்கு பிள்ளைகளுக்கு தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு மீண்டும் நடந்தே வருவார். ஆம், இப்படிப்பட்ட வறுமையில் வாடியது அந்தக் குடும்பம்.

பெருந்தலைவர் காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட ஊரிலிருந்த ஒரே வகுப்பைக் கொண்ட, ஒன்று முதல் ஐந்து வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், ஒரே ஆசிரியரைக் கொண்ட பள்ளியில் தான் இந்தக் குழந்தைகள் படித்தனர். அந்தப் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் மதிய உணவு தருகிறார்கள், அது போதும் என்று சட்டையில்லாத டவுசர் மட்டுமே போட்டுக் கொண்டு, வெறும் உடம்புடன், கையில் ஒரு சிலேட்டும், மதிய உணவு சாப்பிட ஒரு தட்டும் எடுத்துக்கொண்டு நான்கு பிள்ளைகளும் பள்ளி சென்றார்கள்.

விடுமுறை நாட்களில் பருத்திக் காட்டுக்குச்் சென்று பருத்தி எடுத்து, அதில் கிடைத்த 25-பைசாக்களைச் சேமித்து (ஒரு ரூபாயில் நான்கில் ஒருபகுதி 25-பைசா) அந்தப் பணத்தைக் கட்டி, தினமும் எட்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று படித்து உயர்நிலைக் கல்வி கற்றார் வேலுமணி.

….மேலும் வாசிக்க ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.