ஐந்து ஆறைவிடப் பெரியது 13

திரு.முகில்

‘ஒட்டகச்சிவிங்கி ஏன் முட்டை போடுறதில்லை தெரியுமா?’

‘ஏன்?’

‘அவ்வளவு உயரத்துல இருந்து முட்டை போட்டா உடைஞ்சிரும்! ’

இது அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட கடி ஜோக். சரி, அவ்வளவு உயரத்தில் இருந்து ஒட்டகச்சிவிங்கி குட்டி போடுகிறதே. அது லேசுப்பட்ட காரியமா என்ன!

சுமார் பதினைந்து மாத கால கர்ப்பம். தாயின் வயிற்றில் இருந்து குட்டி வெளிவரும்போதே நிலம் அதிரக் கீழே விழுகிறது. ஒட்டகச்சிவிங்கியால் நின்றுகொண்டேதான் பிரசவிக்க இயலும். பிறக்கும்போதே சுமார் எட்டு அடி உயரத்தில் இருந்து டமாரெனத் தரையில் கீழே விழுந்து அதிர்ச்சியை அனுபவிக்கிறது அந்தக் குட்டி. ஒன்றும் புரியாமல் உறைந்து கிடக்கும் குட்டியை, தாயானது ஆசுவாசப்படுகிறது. தன் நாவால் நக்கி நக்கிச் சமாதானப்படுத்துகிறது. அதில் ஒரு நோக்கமும் உண்டு.

மகனே / மகளே, இப்போதுதானே பிறந்திருக்கிறோம் என்று தரையில் சும்மா கிடக்காதே. அடுத்த சில நிமிடங்களுக்குள் நீ எழுந்தே ஆக வேண்டும். நடந்தே தீர வேண்டும். ஓடியும் பழக வேண்டும். அப்போதுதான் நீ இங்கே பிழைத்திருக்க முடியும்.

ஆம், சிங்கம், சிறுத்தை, செந்நாய், ஆப்பிரிக்கக் காட்டு நாய்கள் போன்ற கொன்றுண்ணிகளுக்கெல்லாம் ஒட்டகச்சிவிங்கி இறைச்சி என்பது மிக மிகப் பிடித்தமான உணவு. அவற்றைப் பொருத்தவரை ஓர் ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடுவது என்பது எளிதான காரியமல்ல. ஆனால், ஒட்டகச்சிவிங்கிக் குட்டிக்கு ஸ்கெட்ச் போடுவது சுலபம். பெரியதன் கறியை விட, இளங்கறி இன்னும் சுவையாக இருக்கும் என்பதால் அந்தக் கொன்றுண்ணிகள் குறிவைத்துச் சுற்றிச் சுற்றி வரும்.

ஆகவே, குட்டியை ஈன்ற பொழுதிலிருந்தே தாய் ஒட்டகச்சிவிங்கி பதைபதைப்புடனேயே இருக்கும். நான்கைந்து பெண் சிங்கங்கள் அந்த இடத்தைச் சுற்றி வரத் தொடங்கும். முதல் முறையாக தன் குட்டிக்குப் பால்கூட கொடுத்திராத அந்தத் தாய், பதறும். குட்டியை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று அங்கும் இங்கும் திரும்பித் திரும்பி நின்று குட்டியைத் தன் கால்களுக்கிடையில் பதுக்கிக் கொள்ளும்.

ஒட்டகச் சிவிங்கிக்கு இயற்கை கொடுத்த கொடை, அதன் கால்கள். பின்னங்கால்களைவிட முன்னங்கால்கள் சற்றே உயரமானவை. ஒவ்வொரு காலுமே வலிமையானவை. எதிரிகள் பாய்ந்து வந்தால் தங்களது கால்களைக் கொண்டே ஒட்டகச்சிவிங்கிகள் தாக்குகின்றன. ஒட்டகச்சிவிங்கி ஓங்கி உதைத்ததால் மண்டை கலங்கி மரித்துப் போன சிங்கங்களும் உண்டு. அந்த உதைக்குப் பயந்துதான் சிங்கங்களுமே நிதானமாகத்தான் ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடத் திட்டமிடுகின்றன.

ஒட்டகச்சிவிங்கியின் குட்டியை வேட்டையாடுவது என்பது அவ்வளவு கடினமான காரியமல்ல. குழுவிலிருக்கும் சில சிங்கங்கள், தாய் ஒட்டகச்சிவிங்கியைக் குறி வைத்துத் தாக்கி, அதை அங்கிருந்து நகர்த்தி விட்டால் போதும். விலகி நிற்கும் இன்னொரு சிங்கமானது, அந்தப் பிஞ்சு ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தைக் கவ்வி இழுத்துக் கொண்டு போய்விடும். பதினைந்து மாத தவம். சில நிமிடங்களுக்கு முன் கிடைத்த வரம். உடனடியாக சாபமும் ஆகிப்போன சோகம். அந்தத் தாய் ஒட்டகச்சிவிங்கியின் சோகத்தை, தவிப்பை விளக்கும் சொற்கள் எந்த மொழியிலும் இல்லை

மேலும் வாசிக்க ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.