மூளை என்னும் முதல்வன் – 01
திரு. A.மோகனராஜூ, சேலம்
விலங்குகள் தாயின் மடியில் இருந்து பூமியில் விழுந்தவுடன் எழுந்து நிற்கின்றன; நடந்து தன் உணவைத் தேடி உண்கின்றன; ஐந்தறிவு விலங்கு அது. ஆறறிவு மனிதன் பிறந்து மண்ணில் விழுந்ததும் எழுந்து நிற்க, நடக்க 10 மாதங்கள். அம்மா என அழகிய தமிழில் அழைக்க 20 மாதங்கள். உலகை உணர 30 மாதங்கள். ஏன் இந்த தாமதம்? ஆய்வுகள் பல நடந்தன. அதில் சிறந்த பதில் நமக்குக் கிடைத்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
மூளை நரம்பியல் ஆய்வாளரும் ‘‘தெ பிரைன்’’ (The Brain) என்ற புத்தகத்தை எழுதிய ஆசிரியருமான டேவிட் ஈகில்மேன் (David Eagleman) என்ன சொல்கிறார் என்றால், ‘‘மனித மூளையானது பிறக்கும் போது முழுமையடையாமல் (unfinished) பிறக்கிறது’’ என்று. அதே கருத்தைத்தான் பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
உலகில் உள்ள அனைத்து விலங்குகளையும் போல மனிதனும் உடல் முழுமையடைந்த பிறகே பிறக்கிறான். தலைசிறந்த சிந்தனைக்குரிய அவன் மூளை மட்டும் ஏன் முழுமையடையாமல் பிறக்கிறது? காரணம் விலங்குகளின் உலகம் உணவு, தண்ணீரை அடிப்படையாகக் கொண்டது. அவைகள் பேசும் மொழியும் உலகெங்கும் ஒரே மொழிதான். ஒரு சிங்கம் கர்ஜிக்கிறது என்றால், உலகம் முழுவதும் ஒரே கர்ஜனைதான். ஒரு யானை பிளர்கிறது என்றால் உலகெங்கும் ஒரே மாதிரி பிளிரல்தான். ஒரு விலங்கை அமெரிக்காவில் விட்டாலும், ஆஸ்திரேலியாவில் விட்டாலும், இங்கிலாந்தில் விட்டாலும் ஈரானில் விட்டாலும் உலகின் ஊரில் எந்தப் பகுதியில் விட்டாலும் உணவும் தண்ணீரும் கிடைத்தால் போதும்; மகிழ்வுடன் வாழ்ந்துவிடும்.
ஆறறிவு மனிதனின் வாழ்வு அப்படியல்ல. மனிதனின் வாழ்வு அறிவை அடிப்படையாகக் கொண்ட அறிவுலகம். இவனுக்கு ஐந்து கண்டங்கள், 195 நாடுகள், 7017 மொழிகள், பல ஆயிரம் இனங்கள், எதை எடுத்தாலும் ஆயிரம் ஆயிரம் பிரிவுகள். இதில் மிகவும் முக்கியமாக அறிவியல் வளர்ச்சி. மனித மூளையின் கற்பனைக்கு எட்டாத உயரத்திற்கு இந்த 21ஆம் நூற்றாண்டில் வளர்ந்து, உயர்ந்து இருக்கிறது. இவ்வளவு உண்மைகளையும் அடிப்படையாகக் கொண்ட அவன் மூளை எப்படி 10 மாதங்களில் முழுமையடையச் செய்து பிறக்க வைக்க முடியும்?
இவை அனைத்தையும் மூளையில் பதிவிட்டு, முழுமையடையச் செய்து பின் பிறக்க வைக்க வேண்டுமானால், இரண்டு ஆண்டுகளுக்குமேல் குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வளர வேண்டும். இதிலும் ஒரு பிரச்சினை என்ன என்றால், மூர்ஸ் லாவின் படி (Mr. Gordon Moore’s Law) அறிவியல் வளர்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இரண்டு மடங்கு வளர்ச்சி அடைகிறது என்று சொல்கிறது. அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த உலகம் இப்போது இல்லை. முழுமையாக மாற்றம் அடைந்து இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் இந்த மாற்றம் முழுமாற்றம் தொடர்கிறது. அப்படியானால் மனித மூளை எப்போது முழுமை அடையும் என்று எப்படி முடிவெடுப்பது. மேலும் உலகம் வேகமாக மாறி வருவதால் மாற்றங்களுக்கு ஏற்ப மனித மூளையும் பல மாற்றங்களை அடைய வேண்டியிருக்கிறது.
அதனால்தான் இளமைக்காலத்தை கல்விக்கூடங்களில் இருந்து பயில வேண்டியிருக்கிறது. அதற்காகத்தான் அரசாங்கம் அளவிற்கு அதிகமான பணத்தை ஒவ்வொரு வருடமும் கல்விக்கு ஒதுக்குகிறது. பெற்றோர்களும் பல இலட்சங்களை கடின உழைப்பாலோ அல்லது கடன் பெறுவதாலோ, இல்லையென்றால் எதையாவது விற்பதாலோ, குழந்தைகளைக் கல்லூரி பல்கலைக்கழகங்களுக்குப் படிக்க அனுப்பி வைக்கிறார்கள்.
கல்விக் கூடங்கள் இளமைப் பருவம் முடிந்து வாழ்வை தனியே ஆரம்பிக்கும்போது தன்னம்பிக்கையுடன் தனக்குத் தேவையான அனைத்தையும் தன் கைக்குள் வைத்துக் கொண்டு மகிழ்வுடன் வாழ வழிவகுக்கிறது. இந்தக் கல்விக்கூடங்கள் மனித மூளையை மிகச்சிறப்பாக வடிவமைக்கிறது. அதுவே, வருங்கால மனிதச் சமூகம் அன்பும், கருணையும், வளமும் நிறைந்ததாக இருக்கச் சிறந்தப் பாதை அமைக்கிறது. இந்த நிலையில்தான் மனித மூளையை நாம் முழுமை பெறச் செய்ய முடியும்.
புத்தகம், நோட்டு, பேனா, பென்சில் போன்ற அறிவு உபகரணங்களை கையில் எடுத்த பிறகே குரங்கு என்ற விலங்கு மனிதன் என்ற உயர்திணைக்கு மாறினான். அதைத்தான் வள்ளுவர் கற்க வேண்டியதை கசடறக் கற்று, அதற்குத்தகுந்தபடி வாழ்வில் நடக்க வேண்டும் என்று சொன்னார். கல்விக்கூடங்களில் தான் இதையெல்லாம் கற்கமுடியும்; அதுவும் வாழ்வை ஆரம்பிக்கும்முன், இளமைக்காலத்தில்தான் மூளையை வளப்படுத்தி முழுமையடையச் செய்ய முடியும். அதனால்தான், ‘‘இளமையில்கல்’’ என்று நம் மூதாதையர்கள் சொன்னார்கள். அப்போதுதான் எல்லாம் நல்லபடி நடக்கும். எல்லோருக்கும் மகிழ்வான வாழ்வும் கிடைக்கும்.
உண்மையில் கற்றவன் வாழ்வில் தோற்பதில்லை; வாழ்வில் தோற்றவன் உண்மையில் கற்கவில்லை என்ற வரிகளின்படி, பள்ளிப்பாடங்கள் பயிலுமிடம் கல்விக்கூடங்கள்தான் அறிவின் இருப்பிடம். அதில் இளமையில் கல்வி இன்றியமையாதது. இளமையில் கற்போம்; எல்லையில்லாத மகிழ்வில் புதிய அறிவியல் உலகைக் கட்டமைப்போம். =