சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 04

டாக்டர்.மெ.ஞானசேகர்

ந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று கட்சிரோலி. மும்பையிலிருந்து ஆயிரம் கிேலா மீட்டர் தொலைவில் இருக்கும் இம்மாவட்டம்,  மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு பகுதி, 70% வனப்பகுதி கொண்ட இம்மாவட்டத்தில் ‘கோண்ட்’ என்று அழைக்கப்படும் பழங்குடி மக்கள் ஐம்பது சதவிகிதம் வாழ்கின்றார்கள்.

1988ஆம் ஆண்டில் ‘கோண்ட்’ பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களில் குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 121-ஆக இருந்தது. இதே காலக்கட்டத்தில் வளர்ச்சியடைந்த கேரள மாநிலத்தில் இறப்பு விகிதம் 11-ஆக இருந்தது.

இப்படி இருந்த இந்த கட்சிரோலி மாவட்டப் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கினார்கள் டாக்டர் அபய் பங் மற்றும் அவரது மனைவி டாக்டர் ராணி பங். எப்படி, என்ன மாற்றம் நிகழ்ந்தது? இம்மாற்றங்களுக்கு மூலகாரணங்கள் என்ன? இவையெல்லாம் சுவையான மற்றும் அருமையான செய்திகள்.

தாக்கூர் தாஸ் பங்

மகாத்மா காந்தியடிகளின் நண்பர்கள் நாக்பூரில் தொடங்கிய கல்லூரியில் ெபாருளாதாரப் பேராசிரியராக இருந்தவர் தாக்கூர் தாஸ் பங். காந்தியடிகளின் கொள்கைகள் மீது பற்றுக்ெகாண்டவர். விடுதலைப் போராட்ட வீரர். ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்குபெற்று இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தவர்.

இந்தப் போராட்டத்துக்குப் பின்பு ஆங்கில அரசாங்கம் தன் அதிகாரத்தைக் கொஞ்சம் இந்தியர்களுக்குப் பிரித்துக் கொடுக்க ஆரம்பித்த நேரம். விரைவில் இந்தியா விடுதலை பெறும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன. அச்சமயம் அமெரிக்கா சென்று, பொருளாதாரத்தில் மேற்படிப்புப் படிக்க தாக்கூர் தாஸ் பங் அவர்களுக்கு இந்திய அரசின் உதவித் தொகையும், படிக்க அனுமதியும் கிடைத்தது.

இந்த அனுமதிச் சீட்டை எடுத்துக்கொண்டு மகாத்மா காந்தியடிகளைச் சந்தித்தார் தாக்கூர் தாஸ். ‘‘பொருளாதார மேற்படிப்புப் படிக்க உங்கள் ஆசி வேண்டும்’’ என்று வணங்கினார். காந்தியடிகள், ‘‘பொருளாதாரம் பற்றி மேலே படிக்க வேண்டுமென்றால் கிராமங்களுக்குச் செல், ஏழை மக்களுடன் வாழ்ந்து அதைப்படி’’ என்றார். காந்தியின் சொல்லுக்கு மறுப்புச் சொல்லாத தாக்கூர் தாஸ், தன் கையிலிருந்த அமெரிக்க அனுமதிச் சீட்டைக் கிழித்தெறிந்துவிட்டு சேவா கிராமத்துக்கு அருகே ஒரு கிராமத்துக்குச் சென்றார்.

அங்கேயே தங்கி, பூமி தான இயக்கத்தின் முன்னோடி வினோபாவேயுடன் இணைந்து பணிசெய்தார். அவருக்கு இரண்டு மகன்கள். அசோக் பங், அபய் பங். இருவரையும் காந்திய நெறிமுறையில் வளர்த்தார். காந்தியடிகள் காட்டிய வழியில் இவர்கள் கல்வி கற்றனர். அசோக் பங் என்பவர் கிராம வேளாண்மையையும், அபய் பங் கிராம சுகாதாரத்தையும் நோக்கிப் பயணித்தனர். காந்திய நெறியில் வழுவாது நின்று தந்தைக்கு மகன்களும் பெருமை சேர்த்தனர்.

அபய் பங், ராணி பங்

மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் வளர்ந்த அன்புக் குழந்தை அபய் பங். ஒன்பதாம் வகுப்பு வரை காந்தியடிகளால் வடிவமைக்கப்பட்ட ‘நை தலீபின்’  என்ற கல்விக் கொள்கையைப் பின்பற்றும் பள்ளியில் பயின்றார். காந்தியடிகளின் முதன்மைச் சீடர் வினோபாவேயின் அருகிலிருந்து கற்கும் புண்ணியம் பெற்றார். தனது 13-வயதில், தன் அண்ணன் அசோக் பங்கிடம், தான் மக்களுக்குச் சுகாதாரப் பணி செய்யப் போவதாக உறுதிகொடுத்தார்.

நாக்பூர் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் (MBBS) படித்தார் அபய். படிப்பில் கெட்டிக்காரர். மூன்று தங்கப்பதக்கங்கள் பெற்றார். அங்கேயே பொது மருத்துவத்தில் முதுகலையும் (MD) பெற்றார்.

தன்னோடு பயின்ற ராணி சாரி என்பவரை மணந்தார். அவரும் மருத்துவத்தில் சிறப்பாக மகப்பேறியல் மற்றும் பெண் நோயியலில் முதுகலைப் பட்டம் (MD) பெற்றார். பெண் மருத்துவர் ராணி சாரி சந்திராபூரின் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் பேத்தியாவார். அவரது குடும்பமும் பொதுப்பணி செய்துவந்த மருத்துவக் குடும்பமாகும்.

மருத்துவப் படிப்பு முடிந்ததும், வார்தாவுக்குச் சென்று ‘சேத்னா விகாஸ்’ என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினர். அங்கே கிராம மக்களுக்குத் தரப்படும் ஊதியம் பற்றிய கொடுமைகளை, ஒரு ஆய்வாக வெளியிட்டார் அபய் பங். இதனை ஏற்ற அரசு, அம்மக்களுக்கு ஊதியத்தை உயர்த்தியது.

இச்சூழலில், தன் பதிமூன்று வயதில் உள்ளத்தில் கொண்ட பற்றால், கிராமப்புறங்களில் மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்று இந்த இணையர்கள் முடிவு செய்தனர்.

இந்தியாவில் பொது சுகாதாரம் மேம்படத் தங்களை உருவாக்கிக் கொள்ளும்விதமாக, இருவரும் அமெரிக்காவின் ஜான்சி ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சென்று பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றனர். அங்கேயே தங்கி, சுகமான வாழ்க்கையை அவர்கள் கொண்டு சென்று இருக்கலாம். ஆனால், இந்திய தேசத்தின் கடைக்கோடி மக்களுக்கு உதவ வேண்டும் என்ற பேராவலில் இந்தியாவுக்குத் திரும்பினார்.

இந்தியா திரும்பியதும் கட்சிரோலி மாவட்டத்தில் தங்கள் பணியைத் தொடங்கினர். 1985-ஆம் ஆண்டில் Search (Society for Education, Action and Research in Community Health) என்ற ஒரு அமைப்பைத் தொடங்கினர். பழங்குடி மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்குவதே இதன் தலையாய பணி.

தங்கள் சுகாதாரப் பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்பு களநிலவரத்தை அறிந்தனர். இதன்மூலம் அந்த மாவட்டத்தில் முதல் மாதத்தில் இறக்கும் குழந்தைகள் 39%, நிமோனியாவால் இறப்போர் 20%, வயிற்றுப்போக்கால் 19%, மலேரியாவால் 9% மற்றும் தடுப்பூசி போடாததால் 15% என்ற புள்ளிவிபரங்கள் கிடைத்தது.

இதனடிப்படையில் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் பணியில் கவனம் செலுத்தினர். அவர்களது ஆய்வுப்படி, அக்காலத்தில் ‘கோண்ட்’ பழங்குடியினர் கிராமங்களில் அனுபவம் வாய்ந்த ‘ஆயாக்கள்’ அதாவது படிப்பறிவில்லாதவர்கள், அதேசமயம் குழந்தைப் பிறப்பின் போது வந்து உதவி செய்பவர்கள் எல்லா ஊரிலும் இருந்தார்கள். இவர்கள் தான் பிரசவம் பார்த்தார்கள்.

‘கோண்ட்’ பழங்குடி மக்கள் அரசின் மருத்துவர்களிடம் வருவதில்லை. இந்தப் பெண்கள் பிரசவித்த பின்பு, ஒரு மாதம் குழந்தையோடு இருண்ட அறையில் தங்க வைக்கப்பட்டார்கள். அருகில் ஒரு குழியைத் தோண்டி, அதில் தான் தாய் மற்றும் குழந்தையின் கழிவுகள் கொட்டப்படும். ஒரு மாதம் வரை தாயும் குழந்தையும் அங்கே இருட்டறையில் இருக்க வேண்டும். காரணம், வெளியே வந்தால் ‘கண்பட்டுவிடும்’ என்ற மூடப்பழக்கம்.

இவ்வாறு பிறந்த குழந்தையும், தாயும் பெருநாற்றமெடுக்கும் சூழலில் இருந்ததே, அதிகக் குழந்தை இறப்புக்கும், நோய் தொற்றுக்கும் காரணமானது. இதனைக் கண்டறிந்த மருத்துவர்கள் அபய் பங் மற்றும் ராணி பங், முதலில் சில விழாக்களை நடத்தி பழங்குடியினருடன் நெருக்கமானார்கள். பின்பு, அவர்களிடம் சுகாதாரமான மருத்துவம், அதன் தேவைகள் பற்றி எடுத்துச் சொன்னார்கள்.

உடனே அந்தப் பழங்குடி மக்கள் தங்கள் மருத்துவமனை வீடுபோல இருக்க வேண்டும்; மாடிக் கட்டடங்கள் கூடாது; மேலும் மருத்துவமனை முகப்பில் தங்களின் தெய்வத்தின் கோயிலும் வேண்டும் என்று முன்மொழிந்தார்கள். அவர்களது ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன்படி வீடுபோல அமைந்த மருத்துவமனையின் முகப்பில் ‘மாதந்தேஷ்வரி மருத்துவமனை’ என்று பெயரிடப்பட்டு தொடங்கப்பட்டது. மக்களின் அப்போதைய பிரச்சினைகளாக மலேரியா, குடிப்பழக்கம், குழந்தைகள் இறப்பு, மகப்பேறு சார்ந்த நோய்கள் கண்டறியப்பட்டு, குழந்தைகள் இறப்பைக் குறைப்பதை முதல் இலக்காக எடுத்தனர் அபய் மற்றும் ராணி பங்.

ஆரோக்கியத் தூதுவர்கள்

மருத்துவர்கள் அபய் பங், ராணி பங், கட்சிரோலி மாவட்டத்தில் 39 – பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களைத் தத்து எடுத்தார்கள். அந்த ஒவ்வொரு கிராமத்திலும் சென்று சுகாதாரமான மருத்துவத்தை வழங்கிட 39 – நபர்களைக் கண்டறிந்தார்கள். இந்தப் பெண்கள் ஏற்கெனவே ‘தாதியராக’ இருந்தவர்கள். ஆனால் தங்களுக்குத் தெரிந்த நாட்டுப்புற மருத்துவம் செய்தவர்கள். இவர்களுக்கு மாத ஊதியம் வழங்கி, பயிற்சி கொடுத்து, பிரசவத்துக்கு முன்பு, பிரசவ காலத்தில் சுகாதாரமான முறையில் தாய்மார்களைக் கவனிக்கப் பயிற்றுவிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு ‘ஆரோக்கியத் தூதுவர்கள்’ என்று பெயரிட்டார்கள். இந்த ஆரோக்கியத் தூதுவர்கள், பல ஆண்டு காலம் முறையாக மருத்துவம் பயின்ற மருத்துவர்களைவிட விவேகமாகவும் சிறப்பாகவும் நுணுக்கமாகவும் செயல்பட்டார்கள்.

ஆம், இந்த 39 – கிராமங்களில் இறப்பு விகிதம் குறைந்தது. அரசு மருத்துவமனைகள் இருந்த பகுதிகளைவிட இங்கே இறப்பு சதவிகிதம் குறைந்தது உலகளாவிய செய்தியாகியது.

இந்தியாவின் புகழ்பெற்ற AIIMS – மருத்துவமனையைச் சார்ந்த குழந்தை நல மருத்துவர்களின் தலைமை மருத்துவர் மெஹர்பான் சிங் ‘‘சாதாரண பெண்களைப் போல நடமாடும் கட்சிரோலியின், ஆரோக்கியத் தூதர்கள் எங்கள் கல்லூரி மருத்துவர்களைவிட குழந்தை நலனை அறிந்து வைத்துள்ளார்கள்’’ என்று புகழ்ந்தார்.

குழந்தை நல வல்லுநர்களான AIIMS – மருத்துவக் குழுவைச் சார்ந்த மருத்துவர்கள் இந்த கட்சிரோலி மாவட்ட ‘ஆரோக்கியத் தூதர்கள்’ தொடர்ந்து செயல்பட அனுமதி தந்தார்கள். இதன் மூலம் இத்திட்டமும் விரிவுபடுத்தப்பட்டது.

1995ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2003ஆம் ஆண்டில் மிகப்பெரிய மாற்றத்தின் வெளிச்சத்தைக் காட்டியது. 121-ஆக இருந்த இறப்பு விகிதம் முப்பதுக்கும் கீழாகக் குறைந்தது. குறைப்பிரசவ மரணங்கள் 31.5%லிருந்து 10.1%ஆகக் குறைந்தது. ஒரு மாதக் குழந்தைகள் இறப்பு விகிதம் 60%லிருந்து 20% ஆகக் குறைந்தது.

இச்சாதனைகளைப் பாராட்டி இங்கிலாந்திலிருந்து வெளிவரும் புகழ்பெற்ற மருத்துவ இதழ் LANCET-தனது 180ஆம் ஆண்டுச் சிறப்பு மலரில் ஆரோக்கியத் தூதுவர்களின் சாதனை ‘உலகை மாற்றிய மருத்துவக் கட்டுரைகள்’ என்ற தலைப்பில் வெளியிட்டது. உலகின் தலைசிறந்த மருத்துவ மாற்றங்களான மலேரியா நோய்க்கு மருந்து கண்ட ரொனால்ட் ராஸ், இன்சுலின், பென்சிலின் கண்டவர்கள் பற்றிய முக்கியக் கட்டுரைகளின் பட்டியலில், அபய் பங் மற்றும் ராணி பங்கின் சமூகம் மற்றும் மருத்துவப் பங்களிப்பு இடம்பெற்றது.

உலகளவில் அங்கீகாரம்

‘ஆரோக்கியத் தூதுவர்கள்’ மூலம் கிராமப்புறப் பெண்களைக் கொண்டே, சுகாதாரத்தை மேம்படுத்தலாம் என்ற முயற்சி நேபாளம், வங்கதேசம் மற்றம் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.

1990-ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் டி-ெஜனிரோவில் நடந்த மாநாட்டில் முதன்மைப் பேச்சாளர்களில் ஒருவராக ராணி பங் பங்கேற்றார். சர்வதேச தொற்று நோயியல் இணையத்தின் ஆலோசகராகப் பணிசெய்தார். ஐந்தாண்டுகள் சர்வதேச மகளிர் சுகாதார ஆலோசகராகப் பணிசெய்தார். மகாராஷ்டிரா அரசின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துக் குழு உறுப்பினராக இருந்தார். 2003ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற ஆயிரம் பெண் உறுப்பினர்களில் ஒருவராக முன்ெமாழியப்பட்டார்.

இவர்களது அமைப்புக்கு மகாத்மா காந்தி விருது, மகாராஷ்டிரா பூஷன் என்ற அம்மாநிலத்தின் உயர் விருது, இந்திய மருத்துவக் கவுன்சிலின் தேசிய விருது என்று 60-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 2005-ஆம் ஆண்டில் டைம் (TIME) இதழால் ‘‘உலகளாவிய ஆரோக்கியக் கதாநாயகர்கள்’’ (The Global Health Heroes) என்று வாழ்த்துப் பெற்றார்கள். 2018ஆம் ஆண்டில் இந்திய அரசால் பத்ம விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்.

பிறக்கும் குழந்தைகளைப் பேணிக் காக்கும் மருத்துவ சிகிச்சையில் மருத்துவர்களோடு இந்தியா முழுவதும் 8,00,000 (எட்டு இலட்சம்) கிராமப் பெண்கள் ‘கட்சிரோலி’ மாதிரி அடிப்படையில் இன்று பயிற்சி பெறுகின்றார்கள். இவர்கள் ‘ஆஷா’ பணியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

‘ஆரோக்கியத் தூதுவர்கள்’ திட்டம் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் WHO (உலக சுகாதார நிறுவனம்), UNICEF (ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம்) மற்றும் USAID (உலகளாவிய முன்னேற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு) அமைப்புகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

2012-ஆம் ஆண்டு சந்திராபூர் மாவட்டத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் குழுவில் அபய் பங் உறுப்பினராக இருந்தார். மது மற்றும் புகையில்லாத சமுதாயத்தை உருவாக்கும் அவசியம் பற்றித் தன் ஆய்வுகளை வெளியிட்டுள்ளார். மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்ததைப் பாராட்டினார். முன்னதாக கட்சிரோலி மாவட்டத்தில் அபய் பங் மற்றும் ராணி பங் பணியாற்றிய 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூரண மதுவிலக்கை நிலைநாட்டினர்.

‘இன்றைய காந்திகள்’ என்ற நூலை திரு. பாலசுப்ரமணியம் முத்துசாமி என்பவர் எழுதியுள்ளார். தன்னறம் – குக்கூ காட்டுப்பள்ளி என்ற இடத்திலிருந்து ெவளியிடப்பட்டுள்ள இந்நூலில் ஏராளமான காந்திய வழி நடந்து சாதனை நிகழ்த்தும் மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். வாசித்துப் பயன்பெற பகிர்ந்துகொள்ள நல்ல நூல். இக்கட்டுரையாக்கத்துக்கு உதவியமைக்கு நூலாசிரியருக்கு நன்றிகள்.

2006ஆம் ஆண்டில், 18 முதல் 28 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை ‘நிர்மான்’ என்ற அமைப்பு மூலம் உருவாக்கினர். இத்தம்பதிகள், இந்த அமைப்பை இவர்களின் இளைய மகன் ‘அம்ருத்’ மிகத் தீவிரமாக எடுத்துச் செயல்பட்டு வருகின்றார்.

இந்திய தேசத்தில் பொது சுகாதாரம் இன்றும் பல இடங்களில் பேணப்படாமலே உள்ளது. ஆயினும், பழங்குடி மக்களிடம் மாபெரும் மாற்றத்தை உருவாக்கி மகத்தான சாதனை புரிந்துவரும் இத்தம்பதியர்களை வாழ்த்துவோம். நாற்பது ஆண்டுகளாக அளப்பறிய சமூகப் பணியை ஆற்றிவரும் இவர்கள், மிகச்சிறந்த முன்மாதிரிகள்.