ஐந்து ஆறைவிடப் பெரியது 10

திரு.முகில்

கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டைப் பறிகொடுத்தால் அது Duck Out. தனது முதல் பந்திலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தால் அது Golden Duck Out. (இரண்டாவது பந்தில் என்றால் Silver Duck Out என்றொரு பதமும் சொல்லப்படுகிறது.) எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேன், எந்தப் பந்தையும் எதிர்கொள்ளாமலேயே ஏதாவது ஒரு விதத்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தால் அது Diamond Duck Out. அந்தச் சம்பவமானது ஆட்டத்தின் முதல் பந்திலேயே நிகழ்ந்தால் அது Platinum Duck Out. அஜித் அகார்கர் என்ற முன்னாள் இந்திய வீரர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஐந்து முறை தொடர்ந்து ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இந்த அரிய நிகழ்வு கிரிக்கெட் வரலாற்றில் Bombay Duck Out என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சரி, வாத்துக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? எந்த வாத்தாவது கிரிக்கெட் ஆடி முட்டை ரன்னில் தொடர்ந்து அவுட் ஆகி ரெகார்ட் வைத்திருக்கிறதா? பேட்ஸ்மேன் முட்டை ரன்னோடு வெளியேறும்போது, வாத்து ஒன்று அழுதபடியே செல்வதாகக் காட்சிப்படுத்துகிறார்களே, ஏன்? ‘ஜீரோ’ என்பது வாத்து முட்டையைப் போலிருப்பதால் Duck Out என்ற பதம் வந்தது என்ற விளக்கம் கொடுத்தாலும் அது சரியானதா? மனிதன் ஏன் வாத்தை அசமந்தமான பறவையாகப் பார்க்கிறான்? ‘வாத்து மடையன்’ என்று சக மனிதனைத் திட்டுவது ஏன்? வாத்து நடை என்று சிலரது நடையைப் பரிகசிப்பது ஏன்? மனிதன் இளக்காரமாகப் பார்க்கும் அளவுக்கு வாத்து என்ன அவ்வளவு மதிப்பற்ற உயிரினமா?

வாத்தோடு வாத்தாக வார்த்தைகளில் வாத்தின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால் வியப்பில் வாய்பிளப்போம், நிச்சயமாக!

வேகமாக நீந்தத் தெரிந்த, நடக்கத் தெரிந்த, ஓடத் தெரிந்த, பறக்கத் தெரிந்த பறவைதான் வாத்து. அதுவும் சில வகை வாத்துகள், நீண்ட தூரம் பறக்கும் திராணி கொண்டவை. அதிக உயரத்தில் பறக்கும் ஆற்றல் கொண்டவை. இப்படி ‘எல்லாம் தெரிந்த’ பறவையினங்கள் குறைவே.

வாத்து நீரில் நீந்துவதைப் பார்த்திருக்கிறீர்களா? அது நீரின் மேற்பரப்பில் மிகவும் சௌகரியமாக, உல்லாசமாக மிதப்பது போன்றே தெரியும். ஆனால், நீர்ப்பரப்பு தெளிவாக இருந்தால் ஒன்றைக் கவனிக்கலாம். வாத்தின் கால்கள் இரண்டும் நீருக்கு அடியில் அவ்வளவு வேகமாக இயங்கும். அந்த இயக்கம் இல்லையென்றால் வாத்தும் நீரில் தத்தளிக்கவே செய்யும். ஆக, இதன் மூலம் மிதந்து வரும் தத்துவம் யாதெனில்…

பார்வைக்கு எளிதாகத் தோன்றுவதெல்லாம் எளிதே அல்ல. ஒவ்வோர் எளிமையான விஷயத்துக்குப் பின்னும் கடினமான உழைப்பு புதைந்திருக்கிறது. ஆக, யாரையும் வெளித்தோற்றத்தை வைத்து எடை போடக்கூடாது. அவரவர் உலகத்தில் அவரவருக்கான கஷ்ட, நஷ்டங்களை நம்மால் உணர இயலாது.

நாம் நீருக்குள் இருந்து எழுந்து வந்தால் நம் உடலெங்கும் நீர் சொட்டும். ஆனால், வாத்து கரையேறும்போது அதன் உடலில் ஈரத்தைப் பார்க்கவே முடியாது. ஏனென்றால் இயற்கையாகவே அதன் இறகுகளுக்கு மேல் ஒரு பாதுகாப்புப் படலம் உள்ளது. அதன் மேல் தோலுக்கு அடுத்ததாக இந்த நீர்புகாப்படலம் வாத்தை ஈரமாக்காமல் பாதுகாக்கிறது. ஆக, வாத்தானது நீருக்குள் முழுவதும் மூழ்கி இரை தேடி மேலே வந்து கரையேறினாலும் அது நனைந்திருக்காது. தன்னம்பிக்கைத் தத்துவமாக இதைச் சொற்களால் அலங்கரிக்க வேண்டுமென்றால்…

எப்போதும் நம்மைச் சுற்றி எதிர்மறை விஷயங்கள் நிறைந்திருக்கும். நனையாமல் கரையேறும் வாத்தைப் போல, எதிர்மறை எண்ணங்களில் ஊறிப்போய் மூழ்காமல் கரையேறுங்கள்.

பொதுவாக வாத்துகள் 10 முதல் 60 அடி வரை நீருக்குள் பாயக்கூடிய திறன் கொண்டவை. ஆனால், வட அமெரிக்கா, ரஷ்யா, கனடா, அலாஸ்கா போன்ற குளிர்ப்பிரதேசங்களில் வாழும் கௌபீன் என்ற நீண்ட வால் வாத்தானது, நீருக்குள் 200 அடி வரை பாயும் திறன் கொண்டது. ஆழமாகச் சென்று வளமான இரையைப் பிடித்து வந்து விரும்பி உண்ணும். ஆம், வாத்துகளால் அதிக ஆழத்துக்கும் செல்ல முடியும், அதிக உயரத்திலும் பறக்க முடியும்.

பொதுவாக வாத்தின் பின்பகுதி சற்றே பெரிதாக இருப்பதால் அவற்றால் நீண்ட தூரத்துக்குப் பறக்க முடியாது என்பார்கள். உடலமைப்பில் சற்றே மாறுபாடு கொண்ட, நீண்ட தூரம் பறந்து வலசை போகும் வாத்துகள் உண்டு. அதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது வரித்தலை வாத்து (Bar Headed Goose). கழுத்துப் பகுதியில் இரண்டு கருப்புப் பட்டைகளுடன் இருப்பதால் இந்தப் பெயர். இது ஆசியக்கண்டத்துக்கான அழகிய வாத்து. மங்கோலியா, மேற்கு சீனா, கஸகிஸ்தான், கிர்கிஸ்தான், திபெத், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழ்கின்றன. குளிர்காலங்களில் இந்தியாவை நோக்கி வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் கூந்தன்குளம், கோடியக்கரை போன்ற சரணாலயங்களுக்கு ஆண்டுதோறும் வருகின்றன. அந்த நீ…..ண்ட பயணம் அற்புதமானது, அதிவேகமானது.

வாத்துகள் பொதுவாகவே கூட்டமாக வாழும் இயல்புடையவை. வரித்தலை வாத்துகள் நிலத்தில் ஒரு குழுவுக்கு நூறு போல இருக்கும். ஆனால், வலசை கிளம்பிவிட்டால், ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடிப் பறக்கின்றன. இதன் விரிந்த நீண்ட சிறகுகள், மிக அதிக உயரத்தில் பறக்க உதவுகின்றன. இது பறக்கும் உயரம் அதிகபட்சம் 33,300 அடிவரை என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. மிக உயரமாகப் பறந்து வலசை செல்லும் பறவை என்ற பெருமை இதற்கு உண்டு. இது ஒரு விமானம் பறக்கும் உயரத்தை ஒத்தது.

பூமியை விட்டு மேலே போகப்போக ஆக்ஸிஜன் குறைவாக இருக்குமே! எனில் வரித்தலை வாத்து எப்படி சுவாசிக்கிறது? உயரே போகப்போகக் காற்றின் அடர்த்தி குறைவாக இருக்கும்போது, பறவைகள் தம் இறக்கைகளை வேகமாக அசைக்க வேண்டியதிருக்கும். அதற்கு அதிக ஆக்ஸிஜனும் தேவை. வரித்தலை வாத்தின் நுரையீரல் பெரிது. அதன் சுவாச மண்டலமானது குறைவான காற்றிலும் அதிக ஆக்ஸிஜனை உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. ஆக, கடினமான சூழலிலும் ‘மூச்சுத் திணறாமல்’ முன்னேறுகிறது வரித்தலை வாத்து.

வலசை போகும் திசையும் பிரதேசங்களும் வாத்துகளின் மரபணுவுக்குள்ளேயே பதிந்திருக்கின்றன. ஆக, நூற்றாண்டுகள் கடந்தும் வாத்துகள் வானில் தொலைந்து போவதில்லை. சரியான பருவத்தில், மிகச்சரியான இடங்களுக்கு வந்து சேருகின்றன. வெகு உயரத்தில் பறக்கும் இந்த வாத்துகளுக்கு இடையில் ஓய்வெடுக்கும் வழக்கமில்லை. பெரும்பாலும் இரவிலும் அதிகாலையிலுமே பறக்கின்றன. கிளம்பிவிட்டால் இடைநில்லா எக்ஸ்பிரஸாக எட்டு மணி நேரங்கள் பறந்து ஆயிரம் மைல்களை அநாயசமாகக் கடக்கின்றன.

ஆகப்பெரிய இமயமலைத் தொடரை சில மணி நேரங்களில் கடந்து விடுகின்றன என்பது ஆச்சரியமான விஷயம். அங்கே காற்றில் 10 சதவிகிதம் அளவே ஆக்ஸிஜன் உண்டு. இருந்தாலும், ‘உள்ளது போதும். உறுதியோடு பறப்போம் நண்பர்களே!’ என்று வாத்துகள் வலிமையோடு கடக்கின்றன.

குழுவாகப் பறக்கும் வாத்துகளிடமிருந்து மனிதன் மௌனமாகக் கற்றுக் கொள்ளச் சில பாடங்கள் உண்டு.

வாத்து பறக்கும்போது, வடிவத்தில் ஒன்றன் பின் ஒன்றாகப் பறப்பதைப் பார்க்கலாம். முதலில் பறப்பது தலைமை வாத்து. அதன் பக்கவாட்டில் இரண்டு. அவற்றின் பக்கவாட்டில் இரண்டு என்று வரிசை நீண்டுகொண்டே போகும். இந்த வடிவத்தில் பறக்கும்போது முன்னே என்ன இருக்கிறது என்பது எல்லா வாத்துகளுக்கும் தெரியும். யாரும் யாருக்கும் தொந்தரவில்லாமல் பறக்க முடியும். எல்லோரும் எல்லோருடனும் தொடர்புடன் இருக்கவும் முடியும் என்பது வாத்துகளின் அருமையான கணக்கு.

ஒரு வாத்தானது கவனக்குறைவால் வரிசையிலிருந்து விலகிவிட்டால், உடனே அது சுதாரித்துக் கொள்ளும். தன் பறக்கும் வேகத்தைச் சரிசெய்து வரிசையில் சரியான இடத்தில் தன்னைப் பொருத்திக் கொள்ளும். குழுவின் ஒத்திசைவு தனி ஒருவரால் குலைந்து போகக்கூடாது, குறிக்கோளில் மட்டுமே கவனமாக இருக்க வேண்டும் என்பது இங்கே வாத்து சொல்லும் Quote.

முதலில் பறக்கும் தலைமை வாத்தானது, கொஞ்சம் களைப்பாக உணர்ந்தால், அது சற்றே பின் வாங்கிப் பறக்க ஆரம்பிக்கும். சட்டெனக் கவனிக்கும் இன்னொரு வாத்தானது அந்தத் தலைமைப் பொறுப்பை எடுத்துக் கொள்ளும். ஆம், தலைமைப் பொறுப்பு என்பது ஒருவருக்கானதல்ல. எல்லோருமே அதற்குத் தகுதியுடைவர். குழுவை வழி நடத்திச் செல்லும் பொறுப்பு வரும்போது தயங்கக் கூடாது. தன்னம்பிக்கையுடன் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உரக்கச் சொல்கிறது வாத்து.

புதியதொரு வாத்தானது தலைமைப் பொறுப்பை ஏற்கும்போது, மற்ற வாத்துகள் சத்தம் எழுப்புகின்றன, அதனை உற்சாகப்படுத்த. இலக்கை அடைய வேண்டும் எனில், எல்லோரும் சேர்ந்து இயங்க வேண்டும். இங்கே போட்டி, பொறாமை, பகைக்கெல்லாம் இடமில்லை. பற! பற! விடாமல் பற! குவாக்! குவாக்!

பறக்கும்போது ஏதாவது ஒரு வாத்துக்கு மட்டும் உடல் நலம் சரியில்லை அல்லது அது காயமடைந்துவிட்டது என்றால் அது கூட்டத்தை விட்டு விலகும். அதனுடன் மேலும் இரண்டு வாத்துகளும் விலகும். காயமடைந்த வாத்து தரையிரங்கும். சகாக்கள் இரண்டும் கூடவே தரையிரங்கும். காயமடைந்த வாத்து குணமாகும் வரை அல்லது இறந்துபோகும் வரை சகாக்கள் உடனிருக்கும். பின் அந்த இரண்டு அல்லது மூன்று வாத்துகளும் தம் கூட்டத்தை நோக்கிச் செல்லும். குழுவின் நோக்கம் முக்கியம். அதேசமயம் குழுவின் ஒவ்வோர் உறுப்பினரும் முக்கியம். ஒருவருக்கு ஆபத்து எனில் அவரை அப்படியே கைவிடுவது நியாயமில்லை. தோள் கொடுப்பதே மனிதநேயம். அல்ல, வாத்துநேயம்!

வாத்தின் சில தனித்துவமான தன்மைகளையும் தெரிந்து கொள்வோம். வாத்து இரண்டு கண்களையும் மூடித் தூங்காது.அது தூங்கும்போது ஒரு கண் திறந்தே இருக்கும். அதன் ஒரு பக்க மூளை விழிப்புடனேயே இருக்கும். காரணம் எதிரிகளால் ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்ற விழிப்புணர்வு. தம் குஞ்சுகளைப் பாதுகாப்பதில் தாய் வாத்துகளே அதிகம் பொறுப்புடன் செயல்படுகின்றன. கழுகு, பருந்து, பாம்பு, மனிதன் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் எதிரிகள். ஆக, வாத்து ஒரு கண்ணை மூடுவதே இல்லை. கனடா கீஸ் எனப்படும் வகையில் ஆண் (தந்தை) வாத்துகளும் பொறுப்புமிக்கவையே. பெண் வாத்தானது முட்டை போடுவதில் தொடங்கி, குஞ்சுகள் வளர்ந்து பறக்கத் தொடங்கும் வரை, கனடா ஆண் வாத்துகள், தனது குடும்பத்தைப் பாதுகாக்கக் கடுமையாகப் போராடுகின்றன. ஆம், இங்கே மட்டும் தாய்ப்பாசத்தை மிஞ்சும் தந்தைப்பாசம்!

வாத்துக் குஞ்சுகளுக்கிடையேயான பாசமும் அற்புதமானது. உடன்பிறந்தோர் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுப்பதில்லை. அவற்றுக்கான பிணைப்பானது அவை முட்டையில் இருக்கும்போதே தொடங்கி விடுகின்றன என்று ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

முந்தைய நாள் ஒரு தாய் வாத்தை ஏழெட்டுக் குஞ்சுகளோடு பார்த்தோமானால், அடுத்த நாளில் ஒன்றிரண்டு குஞ்சுகள் குறைந்து போயிருக்க வாய்ப்பு உண்டு. எதிரிகளுக்கு உணவு. கடைசிக் குஞ்சை இழந்தாலும் வாத்துகள் தன் முயற்சியைக் கைவிடுவதில்லை. உடைந்து போகாமல் சோகங்களைக் கடந்து போகின்றன. தம் கூட்டை எதிரிகள் கலைத்துப் போட்டாலும் வாத்துகள் களைத்துப் போவதில்லை. மீண்டும் கூடுகளை உருவாக்குகின்றன. முட்டைகள் போடுகின்றன. அடைகாத்து குஞ்சுகள் பொரித்து, அவற்றுக்கு இறக்கைகள் முளைக்கும் வரை பாதுகாக்கவே முற்படுகின்றன.

எதிர் நீச்சலடித்துக் கொண்டே இருந்ததால்தான் பூமியில் எந்த இனமும் நிலைத்து இருக்க முடியும்.

பல சமயங்களில் வாத்துகளின் உடல்மொழியில் சந்தோஷத்தை நாம் உணரலாம். நல்ல சூரிய ஒளி இருக்கிறதா! காற்று இதமாக இருக்கிறதா! நீந்தி மகிழ நிறைய தண்ணீர் இருக்கிறதா! இந்த நாளை அனுபவி. இந்த நொடியில் மகிழ்ந்திரு. பழைய கவலைகளும், புதிய தேவைகளும் இருந்துகொண்டேதான் இருக்கும். அதற்காக இப்போது கிடைக்கும் இன்பத்தை ஏன் தவற வேண்டும் என்பதே ஒவ்வொரு மகிழ்ச்சியான வாத்தும் எழுப்பும் கேள்வி.

பொதுவாகவே வாத்துகள் மனிதர்களுக்கு இணக்கமான பறவைகளே. ஆனால், மனிதன்? சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை அமெரிக்காவில் ஒரு போட்டி இருந்தது. ஒரு கம்பத்தில் உயிருடன் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருக்கும் வாத்து. மனிதன், குதிரையில் வேகமாக வந்து வாத்தின் கழுத்தைப் பிடித்து இழுத்து அதன் தலையைத் தனியாகப் பிய்த்தெடுக்க வேண்டும். இப்படி விதவிதமாக வாத்தைக் கொண்டு கொடூர விளையாட்டுகள் விளையாடி இருக்கிறான் மனிதன். துப்பாக்கி கையில் கிடைத்தபோதெல்லாம் மனிதன் அதிகம் வேட்டையாடியது வாத்தைத்தான் என்று ரத்தத்தில் பதிவு செய்திருக்கிறது வரலாறு. ஆனால், வாத்தானது பதிலுக்கு மனிதனுக்கு முட்டையாகவும் இறைச்சியாகவும் உணவளித்துக் கொண்டே இருக்கிறது. அப்படிப் பார்த்தால், மனிதர்களைவிட வாத்துகளே உயர்ந்தவை.

கிரிக்கெட் உலகின் பிதாமகன் என்றழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனின் வாழ்வில் நடந்த சம்பவத்தோடு வாத்தை வழியனுப்பி வைப்போம். 1948. டான் பிராட்மேன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பான கடைசி மேட்ச். இங்கிலாந்துக்கு எதிராக. ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் டான் பிராட்மேன் டக் அவுட் ஆனார். அப்போது 101.39 என்ற கணக்கில் இருந்த அவரது ரன்ரேட், அந்த டக் அவுட்டால் 99.94-ஆகக் குறைந்தது. சரி, அடுத்த இன்னிங்ஸில் அடித்து விட்டதைப் பிடித்துவிடுவார் என்ற ஆஸ்திரேலியர்களின் நம்பிக்கையை இங்கிலாந்து சிதைத்தது. அவர்கள் படுமோசமாக விளையாடி, ஆஸ்திரேலியாவை இன்னிங்ஸ் வெற்றி பெறச் செய்தனர். ஆக, இன்னொரு முறை டான் பிராட்மேன் மட்டையைத் தூக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. மேற்சொன்னதெற்கெல்லாம் பிராயச்சித்தமாக வரலாற்றுச் சிறப்புமிக்க Duck Out என்று இந்தப் பெருமையை வாத்துக்குச் சமர்ப்பிக்கலாம். =