ஆளப் பிறந்தோம்-16

திரு.இள.தினேஷ் பகத்

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.
தானே தனக்குப் பகைவனும், நண்பனும்
தானே தனக்கு மறுமையும், இம்மையும்
தானே தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே!!

– இது திருமூலர் எழுதிய திருமந்திரம் பாடல் வரிகள். இப்பாடலுக்கான விளக்கம் தன்னை அறிந்திருந்தால் அவனுக்குக் கேடில்லை. மனிதன் எதனாலே கெடுகிறான்? தன்னை அறியாமலே கெடுகிறான். தன்னை அறியக்கூடிய அறிவு மட்டும் அவனுக்கு வந்துவிடுமானால், எல்லாரும் தன்னை அர்ச்சிக்கும் படியும் வளர்ந்துவிடுவான். உனக்குப் பகைவான் யார்? நீயே! உனக்கு மரணம் எது? நீயே! நீ விதைத்த வினைப்பயனை அறுக்க வேண்டியவன் யார்? நீயே! உனக்குத் தலைவன் யார்? நீயே! உனக்கு தொண்டன் யார்? நீயே! எல்லாம் நீயே!

என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம். மேற்காணும் திருமந்திரம் உணர்த்தும் செய்தி, கவியரசர் கண்ணதாசன் அவர்களின் ‘‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’’ என்ற பாடலில் நீங்கள் கேட்டு இருக்கலாம். கேட்காதவர்கள் ஒருமுறை அந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள். தன்னம்பிக்கையின் உச்சம்தான் அந்தப் பாடல்.

உங்களின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை முதலில் நீங்களே உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். பலத்தை அதிகரியுங்கள்; பலவீனத்தைக் குறையுங்கள். நீங்கள் தான் வெற்றியாளர்.

பலவீனமே பலமாக மாறிய ஒரு கதையைச் சொல்கிறேன்.

ஜப்பான் நாட்டில், ஒரு பத்து வயதே நிரம்பிய சிறுவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோவில் சாம்பியன் ஆவது இயலாத காரியம் (மிகவும் கடுமையாகப் பயிற்சி செய்தவர்களே சாம்பியன் ஆகமுடியும்). சிறுவன் பல மாஸ்டர்களிடம் போனான். எல்லாரும் அவனைப் பரிதாபமாய்ப் பாதித்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். பல நிராகரிப்புகளுக்குப் பிறகு குரு ஒருவர் அவனுக்கு ஜூடோ கற்றுத்தர ஒப்புக்கொண்டார். பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார்.

நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எந்தத் தாக்குதலையும் கற்றுக்கொடுப்பதாகத் தெரியவில்லை. சிறுவன் சோர்ந்து போனான். குருவிடம் நேரடியாகக் கேட்டும் விட்டான்.

‘‘குருவே ஜூடோ சாம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?’’ எனக் கேட்டான். அதற்கு குரு, ‘‘இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்’’ என்றார்.

குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது? பையனும், பயிற்சியைத் தொடர்ந்தான்.

சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது. முதல் போட்டி சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி, ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்த சிறுவன். எல்லாரும் ஆச்சரியப்படும் விதமாக சிறுவன் வெற்றி பெற்றான். இரண்டாவது போட்டி, அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான். அதிலும் போராடி ெவற்றி பெற்றான்.

இறுதிப் போட்டி. எதிரே இருப்பவன் பலமுறை சாம்பியன் பட்டம் வென்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும் இருந்தாலும் சிறுவன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது;

முதல் சுற்றில் சிறுவனை அடித்து வீழ்த்தினான். சிறுவனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. ‘போட்டியை நிறுத்திவிடலாமா’ என்கின்றனர் போட்டி நடத்துபவர்கள். ‘‘வேண்டாம், சிறுவன் சண்டையிடட்டும்’’ என்கிறார் குரு.

இந்தச் சிறுவனோடு சண்டையிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாக சிறுவனைத் தாக்க வந்தான். சிறுவன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலைப் பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான்; சிறுவன் சாம்பியனானான்.

பார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள். அந்த சிறுவனுக்கும் தனது வெற்றியை நம்ப முடியவில்லை. அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான், ‘‘குருவே, நான் எப்படி இந்தப் போட்டியில் வெற்றி ெபற்றேன்? ஒரே ஒரு தாக்குதலை மட்டுமே வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே?’’ என்றான். புன்னகைத்தபடியே குரு சொன்னார், ‘‘உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று, ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய். இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத்தான் இடது கை கிடையாதே! உன்னுடைய அந்த பலவீனம்தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது’’ என்றார்.

குரு சொல்லச் சொல்ல, சிறுவன் வியந்தான். தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து மனம் மகிழ்ந்தான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித்தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது. யார் தன்னை அறிந்துகொண்டு செயல்படுகிறார்களோ, அவர்களே வெற்றிவாகை சூடுகிறார்கள்.

இந்தத் தொடரில் தேசியத் தகவலியல் மையத்தில் விஞ்ஞானி-B (National Informatics Center, Scientist-B) அதிகாரி தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி பார்க்கலாம். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தேசியத் தகவலியல் அலுவலராக நியமனம் செய்யப்படுகின்றனர் என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பெரும்பாலும், இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்ற விஷயம் தெரிந்தவர்கள் மட்டுமே, இந்தத் தேர்வில் கலந்துகொண்டு பணிபுரிந்து வருகின்றனர்.

எனவே, இந்தத் தேர்வு அறிவிக்கைகள் பற்றி அறிந்து கொள்வதற்கு https://recruitment.nic.in என்ற வலைதளத்தில் தேர்வு நடைபெறும் விஷயம் தெரிவிக்கப்படும்.

கல்வித் தகுதி

அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் (UG) இளங்கலைப் பொறியியல் (or) தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். B.E., B.Tech. (Electronics, Electronics and Communication, Computer Science, Computer Networking Security, Computer Application, Software System, Information Technology, Informatics, Computer Management, Cyber Law) போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

பொதுப் பிரிவினர் (GT) 30 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) 33 வயது வரையிலும், பட்டியல் இனத்தோர் (ம) பழங்குடியினர் (SC & ST) 35 வயது வரையிலும் இத்தேர்வினை எழுதலாம்.

தேர்வு முறை

NIC Scientist B தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும்.

  1. Written Test (120 Marks Objective)
  2. Interview

எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1/4 (கால்) மதிப்பெண் தேர்வர்களின் மொத்த மதிப்பெண்ணிலிருந்து குறைக்கப்படும்,

NIC Scientist B Exam Pattern

Section / Subject No.of questions Marks

Duration

Part-1 Computer Science 78 78 3 Hours
Part-2 Logical Reasoning Analytical Reasoning

Capabilities, Quantitative and General Aptitude

42 42

NIC Scientist B தேர்வுக்கு Part-1 தாளுக்குப் படிக்க வேண்டிய புத்தகங்கள்

  1. MCQs on Computer. – Dr. Alok Kumar
  2. Objective Computer Awareness. – R. Pillai
  3. Analog and Digital Communication –
    Dr. Neha Jain

NIC Scientist B தேர்வுக்கு Part-2 தாளுக்குப் படிக்க வேண்டிய புத்தகங்கள்

  1. General Aptitude for Competitive Exams – G.K. Publication
  2. Quantitative Aptitude – R.S. Aggarwal
  3. A Modern Approach to Verbal & Non Verbal Reasoning – R.S. Aggarwal
  4. Reasoning – Rakesh Yadav

எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மதிப்பெண்களின் தர வரிசையின் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுகின்றனர். நேர்காணலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு (ம) மருத்துவப் பரிசோதனை தேர்வுகளுக்குப் பிறகு தேசிய தகவலியல் மையத்தில் விஞ்ஞானியாக பணிநியமனம் செய்யப்படுகின்றனர்.

– நன்றி அடுத்த இதழில் வேறொரு வேலை வாய்ப்புத் தகவலுடன் சந்திக்கிறேன்.