வெற்றியோடு விளையாடு!  10

டாக்டர் தமிழரசன்

சிரியர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை அல்ல அவர்களிடம் கற்பித்த மாணவர்களாலேயே கௌரவிக்கப் படுகிறார்கள். தங்களுக்குள் மாற்றம் கொண்டு வந்து முன்னேற்றத்தையும் கொண்டு வந்த ஆசிரியர்களை மாணவர்கள் எப்போதும் மறப்பதில்லை.  வாழ்க்கை முழுவதும் நினைவு வைத்திருக்கிறார்கள்.  சந்தர்ப்பம் கிடைக்கும் போது அந்த ஆசிரியரை கௌரவித்து வணங்கி வாழ்த்துக்களும் பெறுகிறார்கள்.  அப்படி ஒரு நெகழ்ச்சியான சம்பவம்தான் இது.

தன்னுடைய லட்சியமான மருத்துவ படிப்பை அடைவதற்கு காரணமாக இருந்த ஆசிரியரை அழைத்து வந்து தன்னுடைய கிளினிக் இருக்கையில் உட்கார வைத்து அவருக்கு தான் அணிந்திருந்த ஸ்டெதஸ்கோப்பையும் அணிவித்து அழகு பார்த்திருக்கிறார் ஒரு மாணவர். 

மதுரை நரிமேடு பகுதியில் கிளினிக் வைத்திருக்கிறார் டாக்டர் தமிழரசன்.

இவர்தான் சமீபத்தில் தன்னுடைய ஆசிரியரை அழைத்து வந்து கௌரவ படுத்தியிருக்கிறார்.  அந்த ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார்.‌ இவர் இப்போது திருவாரூர் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறார். கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை உறுப்பினராகவும் இருக்கிறார்.

14 ஆண்டுகளுக்கு மதுரை நேரு வித்யாசாலை மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த போது இவரிடம் படித்தவர் தமிழரசன்.

அந்த நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் தமிழரசன்:

சூரிய குமார் சார் எனக்கு பன்னிரண்டாம் வகுப்பில் பாடம் எடுத்தார்.  ஒரு வருடம் மட்டுமே அவரிடம் படித்தேன்.  ஆனால் அந்த ஒரு வருடத்திற்குள் எனக்குள் இவர் ஏற்படுத்திய மாற்றங்கள் ஆயிரம்.  லட்சிய உணர்வை ஊட்டி வாழ்க்கைப் பாதையில் இலக்கை நோக்கி நடக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப கூறியவர்.  அவர் சொல்லும் ஒவ்வொரு கதையும் உத்வேகம் அளிக்கும்.  அவருடைய வகுப்பை தவற விடக்கூடாது என்பதற்காகவே நான் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்குச் செல்வேன். வகுப்பறையை தாண்டி புதிய உலகத்தை எங்களுக்குள் காட்டியவர்.  நான் மட்டுமல்ல  இன்னும் எத்தனையோ மாணவர்கள் தங்கள் இலக்குகளில் லட்சியங்களில் இவருடைய வழிகாட்டுதலால் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எங்களுக்குள் புதிய கனவை விதைத்து அதை நினைவாக்கும் வழிமுறைகளையும் காட்டியவர். இவரிடம் என்றும் நான் மாணவனாக இருப்பதை பெருமையாக கருதுகிறேன்.  பள்ளியை விட்டு சென்ற பிறகும் எங்களுக்கு தொடர்ந்து வழி காட்டினார். இன்றும் வழிகாட்டி வருகிறார். பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு ஒரு வருடம் திசை மாறி நின்றபோதெல்லாம் இவருடைய வார்த்தைகள்தான் எனக்கு நம்பிக்கைத் தந்தன. அதற்குப் பிறகுதான் நான் மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்து இன்று மருத்துவராக வந்திருக்கிறேன்.  இதற்கு முக்கிய காரணமாக இருந்தால் ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே என்னுடைய நாற்காலியில் அமர வைத்து வாழ்த்து பெற்றேன் என்கிறார் தமிழரசன்.

இது குறித்து ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் கூறியதாவது:

மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவே வருவாய்த்துறையில் கிடைத்த வேலைகளை எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஆசிரியர் பணிக்கு வந்தேன்.  நான் தேர்ந்தெடுத்து சரியான பாதை என்பதைத்தான்  மாணவர்கள் எனக்கு உணர்த்தி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். பல்வேறு துறைகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். வகுப்பறை என்பது வளமான களம் அங்கு தேசத்தின் எதிர்காலத்திற்கான வலிமையான தூண்கள் செதுக்கப்படுவதாகவே நான் கருதுகிறேன். அந்த வகையில் என்னுடைய வழிகாட்டுதலால் வெற்றி பெற்றேன் என்று சொல்லும் மாணவரின் அன்பு பெரு மகிழ்ச்சி தருகிறது.  எந்த ஒரு விருதும் தர முடியாத மகிழ்ச்சி இது என்கிறார் ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் பெருமை பொங்க.

 ஆசிரியருக்கும் மாணவருக்கும் நமது வாழ்த்துக்கள்.