வெற்றியோடு விளையாடு! 09
அஞ்சல் துறை முதல் ஆட்சிப் பேரவை உறுப்பினர் வரை
அரசுப் பள்ளி ஆசிரியையின் சாதனைப் பயணம்
பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு அஞ்சல் துறை அலுவலகத்தில் தபால் பிரிப்பாளராக வேலையை தொடங்கியவர் ரேணுகா. பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை குழு உறுப்பினர் வரை உயர்ந்திருக்கிறார். இந்த உயரம் எப்படி சாத்தியமாயிற்று? என்பதை அவரிடமே கேட்டோம்.
என்னுடைய பூர்வீகம் மதுரை. அப்பா திருப்பூர் சாயப்பட்டறையில் மாத சம்பளத்திற்கு வேலை செய்தார். அம்மா குடும்பத்தை நிர்வகித்தார். வறுமையான சூழல் தான். அதனால் நானும் என் தங்கையும் பெரியப்பாவிடம் வளர்ந்தோம்.
பெரியப்பாவின் வழிகாட்டுதல்தான் எனக்கு பெரிய பலம். பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தேன். 12ஆம் வகுப்பில் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றேன். குடும்ப சூழ்நிலையை நினைத்து பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் ஏதாவது ஒரு அரசு வேலைக்கு சென்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நன்றாகப் படித்ததால் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று வீட்டில் வலியுறுத்தினார்கள். ஒரு வழியாக சமாதானமாகி ஆசிரியர் பயிற்சி சேர்ந்து இரண்டு ஆண்டு பட்டய படிப்பு முடித்தேன். அதற்கு மேலும் சமாதானமாகாமல் அரசு வேலைக்கு செல்வது என்று தீவிரமாக முடிவெடுத்து விட்டேன், என்றவர் திறமைகளை வளர்த்துக் கொண்டு படிப்படியாக முன்னேறிய விதத்தை விளக்கினார்.
ஒரு வருடம் சரியாக திட்டமிட்டு டைப்ரைட்டிங் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சீனியர் கிரேடு முடித்துவிட்டு கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்தேன். அதற்குப் பிறகு பல போட்டித் தேர்வுகளை எழுத ஆரம்பித்தேன். குரூப்-4 தேர்வு, அஞ்சல் துறை தேர்வு, ரயில்வே தேர்வுகள் என்று எல்லாத் தேர்வுகளும் எழுதினேன். பல முயற்சிகளுக்குப் பிறகு அஞ்சல் துறை நடத்திய தேர்வில் மதுரை மாவட்டத்தில் முதல் ரேங்க் பெற்று வெற்றி பெற்றேன். சார்ட்டிங் அசிஸ்டன்ட் வேலையில் சேர்ந்தேன். என்றவருக்கு வேலையுடன் சேர்த்து குடும்ப பொறுப்புகளும் கிடைத்தது. ஆசிரியரை மணம் முடித்தார்.
வாழ்க்கை பற்றிய உயர்ந்த லட்சியங்களுடன் கனவுகளுடன் வந்து சேர்ந்த என் கணவர் அதற்கு பிறகு என் வாழ்க்கை வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தார். அவரது உந்துதலால்தான் பணியாற்றிக் கொண்டே தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றேன். புலவர் பயிற்சியும் முடித்தேன். ஆசிரியராகப் பணியாற்றி வரும் என் கணவர் எழுத்தாளரும் கூட. அவர்தான் எனக்கு ஆசிரியர் பணி தேர்வுக்காக பயிற்சி கொடுத்தார் அந்த தேர்வில் வெற்றி பெற்று தமிழ் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன்’ என்றவர் ஆசிரியர் பணி மூலம் மாணவர்களுக்கு பல வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார். நான் விரும்பியது ஆசிரியர் பணிதான். அதனால் தான் மாணவர்களுடன் எனது வாழ்க்கை அழகாக மாறியது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் வறுமையை அறிந்தவள் நான், எனவே படிக்கும் போதே மாணவர்களுக்கு பகுதி நேரமாக கைத்தொழில் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். எம்ப்ராய்டரி, மெஹந்தி டிசைனிங் போன்ற சிறுசிறு பயிற்சிகள் கொடுத்து அவர்கள் பகுதிநேரமாக சம்பாதிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து வருகிறேன். இதற்கிடையில் எம்.ஏ, எம்.ஃபிஎல் பட்டங்களையும் முடித்தேன்.
மூன்று நூல்களை எழுதி இருக்கிறேன் முக்கியமாக ‘இனி ஒரு கல்வி செய்வோம்’ என்ற நூல் தமிழகத்தில் பரவலான வரவேற்பை பெற்றது. தொல்காப்பியத்திற்கு எளிய முறையில் உரை எழுதி வருகிறேன்’ என்றவரை கௌரவ பொறுப்பு தேடி வந்திருக்கிறது.
அது பற்றி விவரிக்கிறார் ‘என்னுடைய இலக்கிய முயற்சிகளும் மாணவர்களுக்கான பணிகளும் ராஜ்பவன் வரை எட்டி இருக்கிறது, அதனால்தான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2019 முதல் 2022 வரை ஆட்சிப் பேரவை உறுப்பினராக நியமிக்கப்பட்டேன். அந்த மூன்று வருட கௌரவப் பணியில் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தை போதிக்க வேண்டும் என்பதற்காகவும் காலத்திற்கு ஏற்ப வேலை வாய்ப்பு தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அறம் சார்ந்த வேலை வாய்ப்பு மன்றம் தொடங்க தீர்மானம் கொண்டு வந்தேன். என்று விடைபெற்றார்.
ரேணுகா தற்போது திருவாரூர் மாவட்டம் தென்குவளவேளி அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
ஆசிரியை ரேணுகா அவர்கள் இன்னும் பல உயரங்களைத் தொட ஆளுமைச் சிற்பி வாழ்த்துகிறது. l