வெற்றியோடு விளையாடு! 08
சிகரம் தொட சிறகடிக்கும் சிகாமணி
சாதிப்பதற்கு ஏழ்மை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் சிகரத்தைத் தொடுவதற்கு கூட எதுவும் தடை இல்லை என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறார் இளைஞர் தெய்வசிகாமணி.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ சன்னாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி விவசாயி. தீவிர திராவிடக் கொள்கைப் பிடிப்பாளர். அம்மா க. சந்திரா இல்லத்தரசி. ஒரு தங்கை. இதுதான் குடும்பம்.
பெரிய வருமானம் ஏதும் இல்லாத நிலை. நடுத்தர குடும்பத்திற்கும் கீழே வறுமைக் கோட்டை தொட்டு உறவாடிக் கொண்டிருந்த சூழல். ஆனால், இவை எதுவுமே தன்னுடைய சாதனைக்கு தடையாக இருக்கக் கூடாது என்பதை, சிறுவயதிலேயே உணர்ந்து இருந்தார் தெய்வசிகாமணி.
படிப்பில் ஒரு சராசரி மாணவர்தான். ஆனால் சாதனை செய்ய வேண்டும் என்ற சிந்தனைத் துடிப்பும் விடாமுயற்சியும் வேகம் பிடித்திருந்தது.
சிறு வயதிலேயே பள்ளி அளவில் நடக்கும் பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றார். அப்போதே அவருடைய திறமை வானம் விரிவடையத் தொடங்கியது.
அப்போதே ஆசிரியர்கள் பலர் பாராட்டினார்கள். ‘எதிர்காலத்தில் ஏதாவது ஒரு திசையில் வெற்றிச் சிறகுகள் முளைத்து சிறகடித்துப் பறப்பாய் சிகாமணி’ என்று உற்சாகமூட்டினார்கள். இந்தப் பாராட்டுகளை எல்லாம் உரமாக எடுத்துக் கொண்டு உற்சாகமாகப் படித்தார்.
வீட்டில் அப்பாவுக்கு உதவியாக இருப்பது, அம்மாவுக்கும் வீட்டு வேலைகளில் உதவி செய்வது, தங்கைக்கு வழிகாட்டுவது என்று பள்ளியில் படித்து முடிக்கும் வரை பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருந்தார்.
பள்ளிப்படிப்பை முடித்ததும், பட்டப்படிப்பிற்கு செல்வதா? அல்லது குடும்பத்தை சுமப்பதா? என்ற ஒரு குழப்பம் குடி கொண்டது. பெற்றவர்களும், உடன் பிறந்தவர்களும் மகிழ்ச்சியாக இருந்தால் தான் தன்னாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டு சிகாமணி தேர்ந்தெடுத்த பாதை வேலை.
இன்னதுதான் என்று திட்டமிடாத பாதை. எங்கே சென்று வெற்றிப் பாதையினை அடைவது என்று திசையை அடையாளம் காண முடியாத ஒரு சூழல். நிறைய இளைஞர்களுக்கு இந்தக் கால கட்டத்தில் இப்படி ஒரு சூழல், குழப்பம் வரும். அதையேதான் சிகாமணியும் எதிர்கொண்டார். எந்த வேலை கிடைத்தாலும் அதில் முதலில் விருப்பத்துடன் ஈடுபடுவோம். பிறகு அதுவாக ஒரு பாதை அமைக்கும் என்று இனம் புரியாத ஒரு நம்பிக்கையில் திருப்பூரில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் சில வருடங்கள் பணி புரிந்தார். சகோதரிக்கு திருமணம் செய்து வைத்தார்.
அப்போது தான் ஒரு உண்மை உரைத்தது. குடும்ப பொறுப்பை மட்டும் பார்த்து தன் குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தால் போதுமா? மற்றவர்களுக்கு பயனுள்ளதாக வாழ்ந்தால்தானே இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைக்கும். நாம் எத்தனையோ பேரிடம் உதவி எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். இனி நாம் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். பிறருக்கு உதவி செய்வது என்றால் பணம் வேண்டுமே. பணம் சம்பாதித்து ஒரு குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் சொந்த ஊரில் இருந்து சில தொழில்கள் தொடங்கி நண்பர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஊருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தவுடன் பல திசைகளிலும் வெற்றிக் கதவுகள் திறந்தன. வெளிநாடு பயணித்தார். உறவினர்களின் உதவியோடு மாலத்தீவில் பணிபுரியத் தொடங்கினர்.
தற்போது மாலத்தீவு இ-சேவை பிரிவில் செயல்பட்டு வருகிறார். வேலைக்காக போனவர் சொந்தமாகவே ஒரு தொழில் தொடங்கி இருக்கிறார்.
‘தான் படித்து வளர்ந்த சொந்த மண்ணை மதிக்க வேண்டும், அங்கு வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும்’ என்ற திட்டத்தோடு திருவாரூரில் தொழில் தொடங்கி நண்பர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறார்.
திட்டமிட்ட பாதையில் மிகச் சரியாக சென்று கொண்டிருக்கும் தெய்வசிகாமணியிடம் உங்கள் வாழ்க்கை லட்சியத்தை அடைந்து விட்டீர்களா என்று கேட்டோம்.
லட்சியம் என்பது அடைவதல்ல அது அடுத்தடுத்து விரிந்து கொண்டே செல்வது. ‘சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு, சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு’ என்பதுதான் என் லட்சியம்.
பத்து பேருக்கு வேலை கொடுப்பது லட்சியம் என்றால் அவர்களுக்கு வேலை கொடுத்த பின் 100 பேருக்கு கொடுக்க வேண்டும்’ என்கிறார் நம்பிக்கையுடன்.
அடையக்கூடிய லட்சியம் என்பது மனிதர்களுக்கானது. அடைய முடியாமல் விரிந்து கொண்டே செல்லும் லட்சியம் என்பது மாமனிதர்களுக்கானது. தெய்வசிகாமணி மாமனிதராக உயர்ந்து கொண்டிருக்கிறார்.
‘ஆளுமைச் சிற்பி’ அவரை வாழ்த்துகிறது.