வெற்றியோடு விளையாடு – 07

பேராசிரியர் அழகன்

ழகன் என்பது அடைமொழி அல்ல. உண்மையான பெயரே அழகன்தான்.‌ வாழ்க்கையில் போராடி ஜெயித்தவர்.‌ தன்னிடம் பயில வரும் மாணவர்களுக்கும் அந்தப் போராட்ட குணத்தை விதைத்து அவர்களை வீரிய விதையாக்கி  வருகிறார்.‌ திருவாரூர்தான் சொந்த ஊர்.‌ ஆங்கிலப் பாடத்தில் எம்.ஏ.,   எம்.‌ஃபில்., பட்டங்களைப் பெற்ற பிறகு தற்காலிக பேராசிரியராக சில வருடங்கள் பணி புரிந்தார்.  பிறகு திருவண்ணாமலை தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக ஏழு ஆண்டுகள் பணி.‌ தன்னைத்தானே சிலையாக வடித்துக் கொண்ட நாட்கள் அவை.‌ அப்போது அவர் என்.எஸ்.எஸ். அலுவலரும் கூட.‌ மாணவர்களை நாட்டு நலப்பணித்திட்டத்தில் சிறப்பாக ஊக்குவித்ததற்காக அண்ணாப் பல்கலைக்கழகம் வழங்கிய மாநில அளவிலான விருது பெற்றிருக்கிறார்.

பேராசிரியருக்கான தகுதித் தேர்வை வெற்றிகரமாக முடித்திருந்தார். முனைவர் பட்டமும் முடித்திருந்தார். சொந்த ஊரிலேயே அரசுக் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்தார்.‌ இது ஒரு மனிதனுக்கு கிட்டத்தட்ட செட்டில்டு லைஃப்.‌ ஆனால், அதற்குப் பிறகுதான் புது வேகத்துடன் இடைவெளி விட்டிருந்த தன் சேவைப் பணிகளைத் தொடர்ந்தார்.‌ தன்னிடம் படிக்க வரும் மாணவர்களை போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக சொந்த ஆர்வத்தில் பயிற்சிகள் வழங்க தொடங்கினார். 

‘‘இன்றைக்கு ஆசிரியர்கள் வகுப்பறையைத் தாண்டி தொழில்நுட்ப கதவுகளை திறந்து விட வேண்டிய சூழல் இருக்கிறது. மட்டுமல்லாமல் ஓர் ஆசிரியர் என்பவர் தொழில் முனைவோராக ஒரு லெஜெண்டாக இருக்க வேண்டும்.‌ ஆசிரியர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மாணவர்களால் கவனிக்கப்படுகிறது.  ஒவ்வொரு அசைவும் பின்பற்றப்படுகிறது.  ஒவ்வொரு செயலையும் மாணவர்கள் இமிடேட் செய்வார்கள்.‌ அதனால் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் உணர்வுப் பூர்வமாக செயல்பட வேண்டும்’’ என்கிறார் பேராசிரியர் அழகன்.

‘‘1998 ஆம் ஆண்டு திருவாரூரில் ஒமேகா பயிற்சி மையத்தை தொடங்கினேன்.  இதுவரை எங்கள் வழிகாட்டுதலில் 7500  மாணவர்கள் அரசுப் பணியில் சேர்ந்து இருக்கிறார்கள். 

கல்லூரிப் பேராசிரியருக்கான நெட் தேர்வு பயிற்சி,  பள்ளி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு பயிற்சிகளும் இந்த மையத்தில் வழங்கப்படுகிறது.

ஐஐடி நுழைவுத்தேர்வுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன்.

போட்டித் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் நாங்கள் ஆரம்பித்த ‘செண்டம் ஆப்’ 35000 சந்தாதாரர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.’’ என்று  தம் சாதனைகளை விவரிக்கிறார். இது தவிர ஆயிரம் மாணவர்களுடன் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளி தொடங்குவதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். மூன்று மாணவர்கள் முனைவர் பட்டம் பெற வழிகாட்டி  வருகிறார்.‌ தன்னுடைய பயிற்சி மையத்தில்  பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களிடம் கட்டணம் வாங்குவதில்லை என்கிறார்.

‘‘ஒரு சின்ன மோட்டிவேஷன் மாணவர்களின் வாழ்க்கையை மாற்றி அவர்களை வசதியாக மாற்றி இருக்கிறது.  வெற்றி பெற்ற மாணவர்கள் எதிரில் சந்திக்கும்போது என்னைப் பார்த்து ஒரு புன்னகை புரிவார்கள். அது ஆஸ்கர் விருதை விட, நோபல் பரிசை விட பெரிதானது’’ என்கிறார் பெருமிதம் பொங்க.

பேராசிரியர் அழகனின் அழகிய சேவை தொடர ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்துகிறது. l