வெற்றியோடு விளையாடு! 06


தொழிலதிபர் மனோஜ்

ளைஞர்களுக்கு இன்று பெரும் கனவாக இருப்பது ஒரு நல்ல வேலை.  கை நிறைய சம்பளமும் மனம் நிறைய மகிழ்ச்சியும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. வீடு கட்ட வேண்டும், ஒரு நல்ல வாகனத்தில் அலுவலகம் சென்று வர வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.  இது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.  தீராத முயற்சியும், தனியாக தாகமும், கொண்டிருப்பவர்களுக்குத்தான் வேலை வாய்ப்பு சாத்தியமாகிறது.  இப்படி வேலை தேடும் இளைஞர்களுக்கு வேடந்தாங்கலாக இருக்கிறார் இளம் தொழிலதிபர் மனோஜ். எம்.டெக்., பட்டதாரி. கோயம்புத்தூரில் பூமோ டெக்னாலேஷன் என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

இவ்வளவு பெரிய நிறுவனம் தொடங்குவதற்கான நம்பிக்கை உங்களுக்கு எங்கு கிடைத்தது?

அவநம்பிக்கையில் இருந்து வெளியே வந்த போதுதான் கிடைத்தது.‌ பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பட்டம் முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தேன்.  ஆனால், வெறும் பட்டத்தை வைத்து வேலை கிடைக்காது என்று எனக்கு தெரிந்தது.  ‘‘ஒரு குறிப்பிட்ட துறையில் நடைமுறை அறிவு இருக்கிறதா?’’  என்று கேட்டார்கள். ஒரு வருடம் வேலை தேடி அலைந்த பிறகு கடைசியில் தான் ஞானம் கிட்டியது.  மெக்கானிக்கல் துறையில் வெற்றி பெற வேண்டும் என்றால் மற்ற  பொறியியல் துறை அறிவும் வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.

மெக்கானிக்கல் பட்டதாரிகளுக்கு வேலை தரும் பெரிய நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களுக்குக் கூடுதலாகத் தேவைப்படும் தானியங்கி அறிவை  கற்றுத் தரலாம் என்றால் அந்த நிறுவனங்களுக்கு நேரமில்லை.  சிறிய நிறுவனங்களில் சேர்ந்தால் தானியங்கி அறிவை கற்றுத் தருகிற அளவுக்கு அந்த நிறுவனங்களுக்கு அனுபவ ஆற்றல் இல்லை.‌ இனிமேலும் வேலைக்காக காத்திருந்து காலத்தை வீணாக்க கூடாது என்று முடிவு செய்து, உடனடியாக எலக்ட்ரிக்கல்  மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையின் நுட்பங்களைத் தேடினேன்.  நண்பர்கள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டேன்.  நேர்முகத் தேர்வுக்கு சென்ற இடங்களில் எல்லாம் வெற்றி கிடைத்தது.  அதற்கு பிறகுதான் எனக்கு மட்டும் வேலை கிடைத்தால் பத்தாது, என்னை போன்றே பொறியியல் துறையில் வேலை தேடுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, மாணவர்களுக்கு தேவைப்படக்கூடிய தொழில்நுட்பப் பயிற்சி தரத் தொடங்கினேன்.  இன்று பல பெரிய நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று பயிற்சி அளித்து வருகிறேன். பெரிய நிறுவனங்கள் தன் நிறுவன பணியாளர்களுக்காக பணம் கொடுத்து இந்த பயிற்சியைப் பெற்றுக் கொள்கின்றன.

என்ன விதமான பயிற்சி கொடுக்கிறீர்கள்?

திறன் மேம்பாட்டுப் பயிற்சி அல்லது தொழில்நுட்பப் பயிற்சி என்று சொல்லலாம்.‌ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், கல்லூரி முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படித்தவர்கள், அறிவியல் பட்டதாரிகள் ஆகியோர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம்.  ஒரு கம்பெனியில் ‘இதெல்லாம்’ தெரிஞ்சா உங்களுக்கு வேலை தரும் என்று சொல்கிறார்கள். கம்பெனி ‘இதெல்லாம்’ என்று எதைச் சொல்கிறதோ அதெல்லாம் எங்கள் நிறுவனத்தில் பாடத்திட்டமாக இருக்கிறது.

எங்களிடம் படித்து சான்றிதழ் வைத்திருந்தால் நேர்முகத் தேர்வே இல்லாமல் பல நிறுவனங்கள் வேலை வழங்குகின்றன.  பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். நாங்களே பயிற்சி அளித்து வேலைக்கு அனுப்புகிறோம்.  இளைஞர்களுக்கு என்ன வேலை தேடுவது?  எப்படி வேலை தேடுவது?  என்று தெரியவில்லை.‌ அவர்களுக்கெல்லாம் உரிய வழிகாட்டுதல் வழங்குகிறோம், அதன் மூலமாக அவர்கள் சேரும் முதல் வேலையிலேயே வெற்றியாளர் ஆகிறார்கள்.  பயிற்சி இல்லாதவர்கள் ஆறு மாதத்திற்கு அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை வேலையை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

தொழில்துறையிலும், பயிற்சித் துறையிலும் உங்களுக்கு எப்படி இந்த வெற்றி சாத்தியமானது?

எங்களுக்கு மொத்தம் ஆறு கிளை நிறுவனங்கள் உள்ளன.  சென்னையில் இரண்டு, கோயம்புத்தூரில் இரண்டு, ஓசூரில் ஒன்று, பெங்களூரில்  ஒன்று என்று ஆறு இடங்களில் பயிற்சி நிறுவனங்களை நிறுவி இருக்கிறோம். இது தவிர பாண்டிச்சேரியில் உற்பத்திப் பிரிவு இயங்குகிறது. வாகனங்களுக்கு தேவையான உதிரிப் பாகங்களை நாங்களே டிசைன் செய்து அதை உற்பத்தி செய்து தருகிறோம்.  இங்கு கிடைக்கும் அனுபவங்களை மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறோம்.  படிப்பறிவை சொல்லித் தருவதில்லை.  அனுபவ அறிவை சொல்லித் தருகிறோம். மிக முக்கியமாக இன்டஸ்ட்ரியல் கல்ச்சர் என்பதை சொல்லித் தருகிறோம்.  இதனால் நீங்கள் சொல்கிற வெற்றி சாத்தியமாகி இருக்கலாம்.

இனிவரும் காலம் இளைஞர்கள் காலம்! ‘உங்கள் காலமும் கனவும் வெல்லட்டும்’ என்று தொழிலதிபர் மனோஜ் அவர்களை ஆளுமைச்சிற்பி வாழ்த்துகிறது. l