வெற்றியோடு விளையாடு! 05
தன்னம்பிக்கையோடு தமிழ் வளர்க்கும் ஆசிரியர்
முனைவர்.கலாநிதி
எந்த ஒரு நாடும் வகுப்பறையில் தான் தீர்மானிக்கப்படுகிறது என்பார்கள். வகுப்பறைகள் வலிமையாக வடிவமைக்கப்பட்டால் நாடும் வலிமை பெறும். வகுப்பறையை வலிமையாக மாற்றுவது என்பது ஆசிரியர்களின் கைகளில்தான் இருக்கிறது. தேசத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சிற்பிகள் ஆசிரியர்களே! அப்படி ஒரு சிற்பியாக இருந்து சீரிய சிந்தனைகளை மாணவர்களிடம் விதைத்து வருகிறார் ஆசிரியர் கலாநிதி. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ராஜ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆசிரியர் பணியில் 15 ஆண்டு கால அனுபவம். தான் போதிக்கும் தமிழ் பாடத்தில் மாணவர்களைத் தொடர்ந்து அதிக பட்ச மதிப்பெண்கள் பெற வைத்து வருபவர்.
அவரைச் சந்தித்தோம்.
மாணவர்களுக்கு எந்த மாதிரியான நம்பிக்கைகளை விதைத்து வருகிறீர்கள்?
வானுயர கனவு காணும் பருவம் மாணவப் பருவம். நாம் அந்தக் கனவுகளுக்கு எண்ணெய் வார்த்தால் போதும். அது பிரகாசமாக சுடர் விட்டு எரியும். அதாவது நாம் அவர்களுடைய வாழ்க்கையின் கனவுகளுக்கு ஆதார ஸ்தானமாக இருக்க வேண்டும். மாணவர்கள் என்ன லட்சியம் வைத்திருக்கிறார்களோ அந்த லட்சியத்தை அவர்களால் எட்ட முடியும் என்ற நம்பிக்கை தந்தால் போதும். அதைத்தான் நான் செய்து வருகிறேன். அது மட்டுமல்ல அந்த லட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் வகுப்பறையில் வழங்குகிறேன். உதாரணமாக, கப்பல் துறையில் ஒரு மாணவர் சாதிக்க வேண்டும் என்று விரும்பினால் கப்பல் துறையில் இருக்கும் அனைத்து விதமான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களைத் திரட்டித் தருகிறேன். கப்பல் துறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, படிப்பு முடிந்தவுடன் பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வு ஆகியவை பற்றிய தகவல்களை முழுமையாகச் சொல்கிறேன். இது அவர்களின் கனவுகளுக்கு உரமூட்டி உற்சாகம் சேர்க்கிறது.
இலட்சியம், குறிக்கோள், வேலைவாய்ப்பு போன்ற தகவல்களை பள்ளிப் பருவத்திலேயை எப்படி மாணவர்களால் உள்வாங்கிக் கொள்ள முடியும்?
நிச்சயமாக முடியும். ஒரு மாணவன் தன்னுடைய வாழ்க்கையில் இப்படித்தான் வரவேண்டும் என்ற எண்ணம் பதினான்கு வயதுக்குள் உருவாகி விடுவதாக உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். பதினான்கு, பதினைந்து வயதில் மாணவர்களின் மனம் உருகிய மெழுகுப் பதத்தில் இருக்கும்.அந்த நிலையில் மாணவர்களை அவர்கள் விரும்பிய அச்சில், வடிவத்தில் வார்க்க முடியும். அப்படி பார்த்தால் ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தப் புரிதல் இருக்கும். மேலும் இந்த வயதில் சொல்லப்படும் வார்த்தைகள் அவர்கள் ஆழ்மனதில் மிக அதிகமாக ஊடுருவிச் சென்று பதிந்துவிடும். இந்த உளவியல் உண்மையை உணர்ந்து கொண்டு செயல்படுத்துவதால் என் மாணவர்கள் ஜெயிக்கிறார்கள்.
தங்கள் தமிழ் பணியை பற்றியும் சொல்லுங்களேன்!
பண்டையத் தமிழ் இலக்கியங்கள் உலகிற்கே வழிகாட்டுபவை. அந்த வகையில் தமிழ் மேடைகளில் சொற்பொழிவு ஆற்றி வருகிறேன். பிரபலமான வார, மாத இதழ்களில் கட்டுரைகளும் எழுதி வருகிறேன். செம்மொழி என்ற பெயர் பெற்ற நம் மொழியில் உள்ள இலக்கியங்கள் ஆழ்ந்த பொருள் பொதிந்தவை. சொற்சுவை, இலக்கணச் சுவை நிறைந்தவை. குறிப்பாக நான் தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களில் ஆர்வம் உள்ளவன். அவற்றின் சந்தச்சுவை மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் சிற்றிலக்கியங்களின் பொருளை எளிமையாக மாணவர்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். பாடல்களைப் பாடியும் கற்பிக்கிறேன். இது மாணவர்களுக்கு பிடித்திருக்கிறது. லயித்து, ரசித்து கேட்கிறார்கள். அதனால் தமிழ் மீது ஈடுபாடும் அதிகரிக்கிறது, என்கிறார் உற்சாகத்துடன்.
ஆசிரியர் கலாநிதி ஐயா அவர்களின் கல்விப் பணி சிறக்க ஆளுமைச் சிற்பி வாழ்த்துகிறது.