வெற்றியோடு விளையாடு! 04
இயற்கை விவசாயி கோவி.திருவேங்கடம்
இந்த மண்ணையும், மனிதர்களையும் நேசிப்பவர்கள் இயற்கை விவசாயத்தைத் தவிர செயற்கை உரத்தை கைகளால் கூடத் தொட மாட்டார்கள். செயற்கை உரங்களைத் தொடுவதன் மூலம் மனித குலத்திற்கு தீங்கு இழைக்கப்பட்டு வருகிறது. அந்த செயற்கை விவசாய முறைகளை ஒதுக்கி வைத்து விட்டு இயற்கையான முறைகளைக் கையாள வேண்டும். என்பதற்காகத் தொடர்ந்து விழிப்புணர்வு முகாம்களை நடத்திப் போராடி வருகிறேன்’ என்கிறார் கும்பகோணம் அருகே இரண்டாம் கட்டளை கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி திருவேங்கடம்.
அவரைச் சந்தித்தோம். 1960-களில் நமக்கு இந்தியாவில் உணவுப் பஞ்சம் நிலவியது. உண்மைதான். பசுமைப் புரட்சி மூலமாகவே இந்தியா முழுவதும் நெல் உற்பத்தியும், கோதுமை உற்பத்தியும், அதிகமானது. விளைச்சல் அதிகரித்தது. உணவு தானிய உற்பத்தியில் பசுமைப் புரட்சியின் மூலமாகவே நாம் தன்னிறைவு அடைந்தோம். ஆனாலும், விவசாயம் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக நாம் பயன்படுத்திய உரங்கள் மண்ணைப் பாழ்படுத்தி விட்டன. பூச்சி கொல்லிகள் பயிர்களை காப்பாற்ற மட்டும் பயன்படவில்லை. மனிதர்களுக்கு அதிக தீங்குகளை கொண்டு வந்து சேர்த்து விட்டன. இது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் மேலும் மேலும் தெளித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில், நமக்கு பசுமை புரட்சி தேவைப்பட்டு இருக்கலாம். ஆனால், இப்போதைக்கு நமக்கு தேவை பாதுகாப்பான உணவே, அதற்கு இயற்கை விவசாய முறைகளையே நாம் கைக்கொள்ள வேண்டும். உலகில் மனிதர்களின் சராசரி வயது குறைந்து கொண்டிருப்பதை எல்லோரும் அறிந்து இருக்கிறார்கள். அதற்கு காரணம், நம்முடைய உணவில் கலந்து இருக்கும் நச்சுத் தன்மை தான். எனவே இனியாவது விழித்துக் கொண்டு நாம் இயற்கை விவசாயத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும்’’ என்கிறார் ஆதங்கத்துடன்.
இயற்கை உரங்களைப் போடுவதன் மூலம் அதிகமான மகசூல் கிடைப்பது இல்லையே?
இயற்கை நமக்கு எவ்வளவு தேவையோ அதனைக் கொடுக்கிறது. அது நமக்குப் போதுமானது. விதைகளைத் தெளிப்பதும் வேடிக்கை பார்ப்பது மட்டும்தான் நம்முடைய வேலையாக இருக்க வேண்டும் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியிருக்கிறார்.
குறைவாக விளைந்தாலும் அவை உடல் நலனுக்கு உகந்தவை, கேடு விளைவிக்காதவை. நோய் நொடிகளை உண்டு பண்ணாதவை. ஆனாலும், இயற்கை உரங்கள் மூலம் அதிகம் விளைச்சலையும் நாம் கொண்டு வர முடியும். மீன் அமிலங்கள் பயன்படுத்துவது, பஞ்சகவ்யத்தை உரமாக பயன்படுத்துவது, வேப்பிலை சாற்றினை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துவது மூலம் இயற்கை விவசாயத்தில் அதிகமாக மகசூலைப் பெறலாம்.
நீங்கள் தனி ஒரு மனிதராக இந்தச் சாதனையை நிகழ்த்தி விட முடியும் என்று நினைக்கிறீர்களா?
தனி ஒரு மனிதனாக இல்லை. இளைஞர்கள் இப்போது நிறைய அளவில் இயற்கை விவசாயத்தை நோக்கி முன்வருகிறார்கள். அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அதனால், கிராமங்கள் தோறும் சென்று இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
விழிப்புணர்வு முகாம் என்றால், அங்கு என்ன மாதிரியான நிகழ்ச்சி நடத்துகிறீர்கள்?
இயற்கை விவசாயம் செய்வது எப்படி என்ற அடிப்படை சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மீன் அமிலம், பஞ்சகவியம், மண்புழு உரம், தேன் மோர் கரைசல் போன்றவை தயாரிப்பது எப்படி என்பதையும் சொல்லிக் கொடுக்கிறோம். பயிற்சி முழுமையாக இளைஞர்களைச் சென்று சேருகிறது. எந்த விதக் கட்டணமும் வாங்குவதில்லை.
இயற்கை உணவு, இயற்கை விவசாயம் என்ற பெயரில் அதிகமாக விலை வைக்கப்படுகிறதே?
‘உயிர்காக்கும் உணவு என்பதால் விலை கூடுதலாக இருக்கலாம். உண்மையில் சொல்லப் போனால் இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் உணவுப் பயிர்கள் விலைமதிப்பற்றவை. இயற்கை விவசாய உணவு என்று வெறுமனே போலியாக லேபிள்களை ஒட்டிக்கொண்டு சிலர் வியாபாரத்தை தொடங்கி இருக்கிறார்கள். மக்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு கைப்பிடி யூரியாவைக் கூடத் தெளிக்காத பயிர்தான் உண்மையான இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் பயிர்’ என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இயற்கை விவசாயம் மூலம் நீங்கள் சாதித்தது என்ன?
‘இந்த மண் பயனுற வாழ வேண்டும்’ என்பதே என் நோக்கம். ஆரோக்கியமான, உடல் வலிமை மனவலிமையுடன் கூடிய சமுதாயத்தை படைப்பது அவசியம் என்று நான் கருதுகிறேன். அதற்கு இயற்கை விவசாயம்தான் தீர்வு என்றும் நான் நம்புகிறேன். எனவே இயற்கை விவசாயப் பணிகளை முன்னெடுத்துச் செல்கிறேன். என்னுடைய தனிப்பட்ட வெற்றி என்று எதுவும் சொல்ல முடியாது. ஆனால், இந்த சமூகத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக எனக்கு ஆழமான நம்பிக்கை இருக்கிறது’’ என்கிறார் திருவேங்கடம் நம்பிக்கையுடன்.
இயற்கை விவசாயத்தில் சாதிக்க ஆளுமைச் சிற்பி வாழ்த்துகிறது. =